குறளமுதக் கதைகள் வரிசையில் மனிதனுக்கு உரிய அங்கங்கள் இருந்தால் மட்டும் போதாது. அதைவிட முக்கியம் சிறந்த பண்புகள் என்று எடுத்துச் சொல்கிறது இக்கதை.
உள்ளடக்கம்
ஆனந்தனின் சந்தேகம்
ஆனந்தன் அவசரமாக தர்மநாதரிடம் ஓடி வந்தான். தாத்தா ஒரு குறட்பாவுக்கு எனக்கு சரியான அர்த்தம் தெரியவில்லை. சொல்ல முடியுமா? என்று கேட்டான்.
சரி… அந்த குறளை முதலில் சொல் என்றார் தாத்தா.
உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
(குறள்- 993)
ஆனந்தா… திருவள்ளுவர் இந்த குறட்பா மூலம் நமக்கு ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்.
சிறந்த பண்புகள் இல்லாதவர்களை அவர்களின் உடல் உறுப்புகளை மட்டுமே ஒப்பிட்டுப் பார்த்து நம் இனத்தவர் என மக்களாக பொருத்தி பேசுவது பொருந்தாது. நற்பண்புகள் கொண்டு ஒத்திருப்பவர்களே மக்கள் எனப்படுவார்கள் என்று கூறுகிறார்.
அதாவது உடலால் மற்றவர்களைப் போல் தோற்றமுடையவன் மனிதன் அல்ல. சிறந்த பண்புகள் கொண்ட குணமுடையவனாக யார் இருக்கிறார்களோ அவர்களே மனிதர் என்று சொல்லியிருக்கிறார்.
உதவி கோரிய அந்தணன்
அளமுகன் என்னும் அந்தணன் நிலத்தை உழுவதற்குச் சென்றான். அங்கே குருதத்தர் என்னும் முனிவரை பார்த்தான்.
முனிவரே… எனக்கு ஒரு உதவி புரிய வேண்டும் என்றான் அளமுகன். அதைக் கேட்ட முனிவர் சம்மதம் தெரிவித்து தலையசைத்தார்.
நான் நின்ற நிலம் பதமாய் இல்லை. அதனால், மேற்குப் பக்கத்து நிலம் நோக்கிச் செல்ல நினைக்கிறேன்.
என் மனைவி எனக்காக உணவு கொண்டு வருவாள், அவள் என்னை இங்கே சுற்றி தேடுவாள்.
அவள் இங்கு வரும்போது, நான் மேற்குப் பக்கத்துக்கு கழனிக்கு சென்றிருப்பதாக அவளுக்கு வழி காட்டினாள் நன்றாக இருக்கும் என்றான் அளமுகன்.
நண்பகல் நேரம் வந்தது. அந்தணனின் மனைவி அங்கு வந்தாள், சுற்றிலும் அவனை தேடிப் பார்த்தாள். அவனை காணவில்லை.
அந்தப் பகுதியில் அமர்ந்திருந்த முனிவரை கண்டாள். சரி.. அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என முடிவு செய்து அவருகே சென்றாள்.
தியானத்தில் ஆழ்ந்த முனிவர்
முனிவர் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவருடைய தவத்தை களைப்பதா என யோசித்துக் கொண்டிருந்தாள்.
அவர் நீண்ட நேரம் ஆகியும் கண் திறக்கவில்லை. அதனால், நான் இந்தப் பகுதி கழனியை பார்த்துக் கொள்ளும் அந்தணனின் மனைவி. அவரை தேடி வந்தேன். அவரை நீங்கள் பார்த்தீர்களா? என்று கேட்டாள்.
முனிவர் அவளுடைய பேச்சை காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. பல முறை முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.
இதனால் அப்பகுதியில் மாலை நேரம் வரை காத்திருந்துவிட்டு, தன்னுடைய கணவர் பசியோடு இருப்பாரே என்ற கவலையோடு வீடு திரும்பினாள்.
பொழுது சாயும் வேலையில் அந்தணன் களைப்பாக வீடு திரும்பினான். மனைவியிடம் நீ கழனிக்கு ஏன் வரவில்லை? என்று கோபப்பட்டான்.
உடனே அவள், வழக்கம்போல கழனிக்கு சாப்பாடு எடுத்து வந்தேன். உங்களை காணவில்லை. அங்கு தியானத்தில் இருந்த முனிவரிடம் கேட்டுப் பார்த்தேன். அவரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை.
அதனால் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு சற்று முன்புதான் வீடு திரும்பினேன் என்றாள் அவள்.
முனிவர் மீது கோபம் கொண்ட அந்தணன்
பசியால் வாடியிருந்த அவனுக்கு எல்லை மீறிய கோபம் வந்தது. அந்த முனிவரிடம் சொல்லிச் சென்ற பிறகும் அவர் தன் மனைவி கேட்டதற்கு பதில் சொல்லாமல் இருந்திருக்கிறாரே என்ற ஆத்திரம் வந்தது.
நேராக முனிவர் இருந்த இடத்துக்குச் சென்றான். அப்போதும் அவர் தியானத்தில் இருந்தார்.
அவரை வாய்க்கு வந்தபடி திட்டினான். அப்போதும் அவரிடம் எந்த அசைவும் ஏற்படவில்லை.
இதனால், இன்னும் அவனுக்கு ஆத்திரம் அதிகரித்தது. சுற்றிலும் விறகுக் கட்டைகளை வைத்து தீ மூட்டினான். அத்தீயில் அவர் கருகி சாம்பலாகிவிடுவார் என நினைத்தான்.
அவர், மனம், மொழி, மெய்களை அடக்கி அற ஒழுக்கோடு தியானத்தில் உயர்ந்து நின்றதால் அந்த தீ அவரிடம் இருந்து விலகியே நின்றது.
முனிவரை வணங்கிய தேவர்கள்
இதை வானத்தில் உலா வந்த தேவேந்திரனும், தேவர்களும் கண்டார்கள். முனிவரின் தவ வலிமையை போற்றி அவரை வந்து வணங்கத் தொடங்கினார்கள்.
இதைக் கண்ட அளமுகன் தன்னுடைய தவறை உணர்ந்தான். அவன் உடனடியாக தீயை அணைத்து அவரது காலடியில் விழுந்து தன்னை மன்னித்தருளும்படி வேண்டினான்.
அவனின் செயலை பார்த்த முனிவர் எந்த கோபமோ, வருத்தமோ இன்றி அவனை ஆசிர்வதித்தார்.
திருக்குறள் கதை சொல்வது என்ன?
ஒழுக்கநெறி தவறாத முனிவர்கள் மட்டுமல்ல, ஒழுக்கநெறி தவறாத மனிதர்களும், பிறரின் இழிமொழிகளையும், சுடுமொழிகளையும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இது சிறந்த பண்புகள் கொண்டவர்களிடமே காணப்படுவது.
திருவள்ளுவர் சொன்ன கருத்து
ஆனந்தா, முனிவரிடம் இருந்த உறுப்புகள்தான் அந்த அந்தணனிடமும் இருந்தது. ஆனால் அவனிடம் நல்ல பண்புகள் இல்லை. முனிவரிடமோ, பிறர் துன்பம் விளைவித்தாலும் அதை பொறுத்துக் கொள்ளும் மனம் இருந்தது.
இதனால் மனிதனுக்குரிய அனைத்து உறுப்புகளும் இருப்பதாலேயே அவனை மனிதனாக நினைக்க முடியாது. பண்பில் உயர்ந்தவனாகவும் இருத்தல் வேண்டும்.
இந்த நிலையான பண்பே ஒருவனுக்கு வேண்டும் என்கிறார் திருவள்ளுவர் என்று கதையை சொல்லி முடித்தார் தாத்தா.