குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதை 6 – சிறந்த அறம் எது என்பது தொடர்பான கதையும், அதற்கான குறள் விளக்கத்துடன் இடம்பெறுகிறது.
உள்ளடக்கம்
துறவியர் இருவர்
இரு துறவியர் ஆற்றங்கரையோரமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தை கடந்து செல்லும்போது, இளம்பெண் ஒருத்தி ஆற்றில் தவறி விழுவதைக் காண்கிறார்கள்.
இதைக் கண்ட இளம் துறவி ஆற்றில் குதித்து அவளை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.
இளம் துறவியின் இச்செயலை பார்த்து மற்றொரு துறவி கண்டித்தார். இளம் துறவி தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.
இருவரும் தங்கள் குருவைச் சந்தித்தனர். அப்போது தான் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை கண்டதும், எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தேன்.என்னுடைய தவறை குரு மன்னித்தருள வேண்டும் என்றார் அந்த இளம் துறவி.
ஆனால், உடன் வந்த துறவியோ அந்த பெண்ணை இந்த இளம் துறவி தூக்கி வந்ததை பார்த்தேன். அவளோ மிகவும் அழகாகவும், இளமையாகவும் வேறு இருந்தாள். இந்த சூழலில் இந்த இளம் துறவி செய்தது தவறுதான் என்று குருவிடம் சொன்னார்.
திருக்குறள் சொல்வது என்ன?
இருவரின் பேச்சையும் கேட்ட குரு, லேசான புன்னகை தவழ சொன்னார். “இளம் துறவி தாம் செய்தது தவறு என்று சொல்லி வருத்தம் தெரிவித்துவிட்டார். ஆனால் நீரோ, அவள் அழகாய் இருந்தாள். இளமையாகவும் இருந்தாள் என்று சொல்லி இன்னமும் அவள் நினைவை மனதுக்குள் சுமந்து கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றார் குரு.
தன்னுடைய பேச்சை அத்துடன் குரு நிறுத்திக்கொள்ளவில்லை. மனதளவில் குற்றமற்றவராக இருப்பதே சிறந்த அறம். மனதில் தூய்மை இல்லாமல் இருப்பது அறமல்ல.
இதைத் தான் வள்ளுவர் இப்படி தன் குறள்பா மூலம் சொல்லியிருக்கிறார்.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
(குறள் – 34)
மனதளவில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுதான். மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.
பிறர் செய்த தவறை பெரிதுபடுத்த வேண்டாம். அதுவே, சிறந்த அறம் என்றார் குரு.