செங்கோட்டையன்

கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது ஏன்?

84 / 100 SEO Score

சென்னை: அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்திருக்கிறார்.
இது தமிழக அரசியல் களத்தில் ஒரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட அரசியல் அனுபவம், பலமுறை அமைச்சரவையில் பதவி வகித்த பெருமைக்குரிய அவர் புதிதாக வளரும் கட்சியில் சேர்ந்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் செய்தி வெளியானதில் இருந்து, தமிழக அரசியல் பார்வையாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பான விவாதங்கள் தொடங்கிவிட்டன.

இது ஒரு சாதாரண கட்சி மாற்றம் அல்ல, இது அதிமுகவுக்கு விழுந்த ஒரு பலத்த அடியாகவே கருதப்படுகிறது. அதேசமயம், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்காலத்தை மாற்றி எழுதக் கூடிய ஒரு முக்கிய நகர்வாகவும் இது பார்க்கப்படுகிறது.

மனதில் ஒரு கணக்கை போட்டுத்தான் அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்திருக்கிறார் என்பதை மறுப்பதற்கில்லை.

தவெகவில் இணைவதற்கான பின்னணி

இவ்வளவு செல்வாக்கு மிக்க ஒரு மூத்த தலைவர், முதல் தேர்தலைச் சந்திக்கவிருக்கும் ஒரு புதிய கட்சியான தவெக-வில் ஏன் சேர வேண்டும்?
இதுதான் இப்போது அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்திருக்கும் கேள்வி.
அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார்? அவரது அரசியல் வரலாறு என்ன?

இந்த முடிவு தவெக தேர்தல் வியூகத்தை எப்படி மாற்றும்? இதனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு ஏற்படப்போகும் பாதிப்புகள் என்ன? என்பதை விரிவாகப் பார்ப்போம்.

கொங்கு மண்டலத்தின் தூண்

வெறும் பெயரளவில் அதிமுகவின் மூத்த தலைவர் அல்ல அவர். கொங்கு மண்டல அரசியலின் மிக முக்கிய தூண்களில் ஒருவராகக் கருதப்பட்டு வந்தவர்.

ஈரோடு மாவட்டத்தில் இருந்து, பலமுறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டவர். ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சிகளில் முக்கிய அமைச்சரவை பொறுப்புகளையும் ஏற்றவர்.
கொங்கு மண்டலத்தில் அவருக்கு தனி செல்வாக்கு உண்டு. இதனால் அவருக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா காலங்களில் ஒரு நிரந்தர முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது.

திடீர் முடிவுக்குக் காரணம் என்ன?

நீண்ட அரசியல் அனுபவம் உள்ள அவர் தவெக-வில் இணையும் திடீர் முடிவை எடுக்க என்ன காரணம்?

அவர் இந்த முடிவை திடீரென எடுக்க வாய்ப்பில்லை. நீண்ட யோசனைக்குப் பிறகுதான் எடுத்திருப்பார் என்பதுதான் அவரை அறிந்தவர்கள் சொல்வது.

அதேபோல் அவரது முடிவுக்கு பின்னால் கொள்கை சார்ந்த காரணங்களை விட, உட்கட்சி அரசியல் அழுத்தங்களே அதிகம் இருந்தது என்பதுதான் உண்மை.

அங்கீகாரம் மறுப்பு என்பதே உண்மை

அதிமுகவில் தொடர்ந்து நிலவும் உட்கட்சிப் பூசல்கள், தலைமைக்கான போட்டி. எடப்பாடி பழனிச்சாமியின் தன்னிச்சையான முடிவுகள்.

இது காரணமாக கட்சிக்குள் அதிருப்தி. தனக்கு கட்சிக்குள் உரிய அங்கீகாரம் மற்றும் அதிகார வரம்புகள் மறுக்கப்படுவது போன்ற காரணங்கள் அவரது தலைமைக்கு எதிரான குரலுக்கு காரணமாக அமைந்தது.
அவர் அதிமுகவை ஒன்றிணைத்தால்தான், கட்சி முந்தைய பலத்தை பெறும் என்ற யோசனையை முன் வைத்தார். ஆனால் அந்த காரணத்தை வைத்தே அவரது அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட பறிக்கப்பட்டன.

மூன்று வாய்ப்புகள்

பழனிச்சாமியால் புறக்கணிக்கப்பட்ட அவர் தான் யார், தன்னுடைய அனுபவம் என்ன என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு இப்போது ஆளாகியிருக்கிறார்.
அத்துடன், பழனிச்சாமி அதிமுக தலைமையில் இனியும் இருக்கக் கூடாது.

அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறார்.
இதற்கு அவர் தேர்வு செய்வதற்கு மூன்று வழிமுறைகள் இருந்தன.

முதல் வாய்ப்பு – சசிகலா, தினகரன், ஓபிஎஸ் ஆகியோருடன் இணைந்து செயல்படலாம்.ஆனால் அதனால் அதிமுக தலைமையை பலவீனப்படுத்துவது கடினம். காரணம் அதிமுக தலைமைக்கு ஆதரவாக மத்திய பாஜக இருக்கிறது.

இதனால் வரும் 2026 தேர்தலில் ஒருவேளை பழனிச்சாமி பலமான கூட்டணியை அமைக்கும் நிலை கூட ஏற்படலாம். இப்படி ஒரு நிலை ஏற்படுவதை செங்கோட்டையன் விரும்பவில்லை.
இரண்டாவது வாய்ப்பு: திமுகவில் சேருவதற்கான வாய்ப்புகள் அவருக்கு இருந்தது. ஆனால் கடந்த 54 ஆண்டுகளாக திமுக எதிர்ப்புணர்வோடு குரல் எழுப்பி வந்த அவர், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திமுகவுக்கு வர விரும்பவில்லை.
திமுகவில் ஒருவேளை இணைந்தால் எதிர்காலம் இருக்கலாம். ஆனால் பழனிச்சாமி தலைமை அதிமுகவில் தொடர்வதற்கான வாய்ப்பையும், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை திரும்பவும் எடப்பாடி பழனிச்சாமி 2026 தேர்தல் மூலம் பெற்றுவிடும் சூழலும் ஏற்பட்டு விடும் என்பதை உணர்ந்திருக்கிறார்.

அதனால் அவரது பழனிச்சாமிக்கு எதிரான தன்னுடைய அரசியல் பழிவாங்கல் நிறைவேறாமல் போய்விடும் என்று நினைத்திருக்கிறார்.
மூன்றாவது வாய்ப்பு: இறுதி வாய்ப்பாக, புதிதாக ஒரு நடிகர் தொடங்கிய கட்சி, இப்போது அவருக்கு பெரிய இளைஞர் பட்டாளத்தின் ஆதரவு அதிகமாக இருப்பது போன்ற தோற்றம் இருக்கிறது.
அந்த கட்சியில் இன்னமும் நீண்ட அரசியல் அனுபவம் உள்ளவர்கள் யாரும் இணையவில்லை. இந்த சூழலில் நாம் அந்த கட்சியை தேர்வு செய்தால், நமக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம்.
அது மட்டுமல்ல, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதன் மூலம் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நிர்வாகிகள் பலரையும் அக்கட்சிக்கு இழுக்க முடியும்.
போதாக்குறைக்கு அதிமுகவில் அதிருப்தியில் உள்ள தொண்டர்கள் பலரையும் தமிழக வெற்றிக் கழகத்துக்கு கொண்டு வர முடியும்.
இதனால் மூலம் பழனிச்சாமியில் அதிகார மமதையை அழிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கூட அவர் வைத்திருக்கலாம்.

அரசியல் கணக்கு

அவர் தமிழக வெற்றிக் கழகம் எடுத்த உடனேயே ஆட்சியில் அமர முடியாது என்பதை தெரிந்திருந்தாலும் கூட, வரும் 2026 தேர்தலில் குறைந்தபட்சம் எதிர்க்கட்சி வரிசையில் அமரும் வாய்ப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கலாம்.

காரணம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஒரு கணிசமான வாக்கு வங்கி இருக்கிறது. அதுவும் இளம் தலைமுறையின் வாக்கு வங்கி.

அத்துடன் இக்கூட்டணியில் அதிருப்தி தலைவர்கள் டிடிவி தினகரன், புதிதாக கட்சித் தொடங்கும் ஓபிஎஸ் போன்றவர்களை இணைத்துக் கொள்வதோடு, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளையும் கூட இழுக்க முயற்சிக்கலாம். இதன் மூலம் அதிமுகவை விட பலமான அணியை உருவாக்க முடியும் என்று செங்கோட்டையன் நம்புகிறார்.

விஜய் கட்சிக்கு கிடைத்த பலம்

நடிகர் விஜய் அரசியலுக்கு புதியவர். அக்கட்சியில் உள்ள பலரும் புதியவர்களே. இந்த நிலையில், செங்கோட்டையன் இணைந்திருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் சதுரங்கத்திற்கு தேவையான முக்கியமான ஆட்டக் காயாக கருதப்படுகிறார்.
இதனால், அவரது நீண்ட கால அரசியல், நிர்வாக மற்றும் தேர்தல் அனுபவம் புதிய கட்சியான தவெகவுக்கு நிச்சயமாக கைக்கொடுக்கும்.
கட்சிக்குக் கள அளவில் ஆட்களைத் திரட்டுவது, தேர்தல் கூட்டணிகளை அமைப்பது, தொகுதிப் பங்கீட்டை சிக்கல் இன்றி கையாள்வது என அனைத்திலும் இவரது அனுபவம் தமிழக வெற்றிக் கழகத்துக்கு உதவும் என்பதில் சந்தேகமில்லை.

கொங்கு மண்டலத்தில் தவெக கால் ஊன்ற முடியும்

கொங்கு மண்டலம் நீண்ட காலமாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. அங்கு அவரது தனிப்பட்ட செல்வாக்கு, குறிப்பாக கவுண்டர் சமூக வாக்குகளில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியைப் பிரித்து, அதிமுகவின் வாக்கு வங்கியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தவெக-வில் உரிய மரியாதை கிடைக்குமா?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையாக இருக்கும் விஜய், இப்போதே ஜெயலலிதா போல் நெருங்க முடியாதவராக இருக்கிறார். அத்துடன் அக்கட்சியில் உள்ள உயர்மட்ட நிர்வாகிகள் செங்கோட்டையன் அவ்வளவு எளிதில் கட்சித் தலைமையோடு நெருக்கமாக இருப்பதை விரும்பவும் மாட்டார்கள்.

கட்சியில் செங்கோட்டையன் இணைந்த கையோடு பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தாலும், தலைவர் விஜய் அதில் பங்கேற்கவில்லை.

இதில் இருந்தே அவர் செங்கோட்டையனை எப்படி நடத்தப் போகிறார்? செங்கோட்டையனுக்கு மற்றவர்கள் என்ன மரியாதை கொடுக்கப் போகிறார்கள்? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

செங்கோட்டையன் அதிமுகவில் இருந்தபோது, ஜெயலலிதாவிடமும், சசிகலாவிடமும் பல அவமானங்களை சந்தித்தவர். அத்தகைய அவமானங்களை புதிய கட்சியிலும் அவர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்கும் வரை அவருக்கு பாதுகாப்பு.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் சந்தித்த சோதனைகள்

செங்கோட்டையன் தவே-வில் இணைவு ஏன் – விடியோ

84 / 100 SEO Score

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

More From Author

யக்சால் - yakhchal

Yakhchal – பாலைவனத்தில் ஒரு இயற்கை குளிர் கிடங்கு

Leave a Reply