கூட்ட நெரிசல் பலி: பக்தி சொற்பொழிவில் நடந்தது என்ன?

சோக நிகழ்வு நடப்பதற்கு முன் நடந்த ஆன்மிக கூட்டம்
82 / 100

சென்னை: உத்தரபிரதேச மாநிலம், ஹத்ரஸ் மாவட்டத்தில் நடந்த (up stampede) ஆன்மிக சொற்பொழிவுக் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 121 பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள்.

ஹத்ரஸ்-எடா மாவட்டங்களின் எல்லைப் பகுதியான புல்ராய் என்ற கிராமத்தில் திறந்தவெளிப் பகுதியில் இந்த ஆன்மிக கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.

போலே பாபா ஆன்மிக கூட்டம்

ஆன்மிக குருவாக போற்றப்படும் போலே பாபா தலைமையில் இந்த ஆன்மிக கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் ஏராளமான பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.

போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ்பால் உத்தரபிரதேச காவல்துறையின் உளவுத் துறையில் காவலராக பணிபுரிந்தவர்.

உபி கூட்ட நெரிசல் சம்பவம் நடப்பதற்கு முன் பேசிய போலே பாபா

17 வருட பணிக்குப் பிறகு அவர் 1990-இல் காவலர் பணியில் இருந்து விடுபட்டு தனது மனைவியுடன் இணைந்து ஆன்மிக சொற்பொழிவு ஆற்றத் தொடங்கியவர்.

அவர் வெள்ளை நிற சூட் மற்றும் டை அணிந்து சொற்பொழிவு ஆற்றுவது வழக்கம்.

அவர் பாட்டியாலியின் சாகர் விஸ்வ ஹரி பாபா என்றும் அழைக்கப்படுகிறார். அவர் செவ்வாய்க்கிழமைதோறும் சத்சங்கம் நடத்துவது வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இவருக்கு லட்சக்கணக்கான ஏழை, எளிய பக்தர்கள் இருக்கிறார்கள். கூட்டங்களுக்கான பாதுகாப்பை போலே பாபா தரப்பினரின் பாதுகாவலர்களே மேற்கொண்டு வந்திருக்கின்றனர்.

உ.பி. கூட்ட நெரிசல் ஏன்?

நிகழ்ச்சி முடிந்ததும் மைதானத்தை விட்டு மக்கள் புறப்பட்டார்கள். அப்போது பாபா வெளியேறத் தொடங்கியதும், போலே பாபாவிடம் அருகில் சென்று ஆசி பெறவும், அவரது காலடி மண்ணை சேகரிக்கவும் மக்கள் முண்டியடித்திருக்கிறார்கள்.

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழுந்ததால் பலருக்கு மூச்சுத் திணறலும், உடல் மிதிப்பட்டும் போனார்கள்.

இதில் பலர் உயிரிழந்தார்கள். பாதிக்கப்பட்ட பலர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

சொற்பொழிவு நிகழ்ச்சியில் அதிக அளவில் மக்கள் பங்கேற்ற நிலையில், அதற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதால்தான் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் போதிய வசதியும் இல்லாமல் போனதால் உயிர் காப்பு நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள முடியாமல் போனதால் பலி எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக ஆக்ரா சரக கூடுதல் காவல் துறை இயக்குநர் அலிகார், கோட்ட காவல் ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநில அரசு இந்த சோக சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவி வழங்குவதாக அறிவித்தது.

குடியரசுத் தலைவர் இரங்கல்

கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது இத்தகவல் பிரதமருக்கு கிடைத்தது. அதையடுத்து அவர் உடனடியாக இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

அத்துடன் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியையும் அவர் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.

ராகுல் காந்தி

எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர்.

முந்தைய விபத்துக்கள்

உத்தரபிரதேச மாநிலம், பிரதாப்கர் மாவட்டத்தில் 2010 மார்ச் 10-ஆம் தேதி நடந்த இலவச ஆடைகள், உணவு பொட்டலங்கள் வழங்கும் கோயில் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் 63 பேர் உயிரிழந்தார்கள்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் 2011 ஜனவரி 14-ஆம் தேதி ஊர்வலமாகச் சென்ற பக்தர்கள் மீது ஜீப் மோதியதால் ஏற்பட்ட நெரிசலில் சபரிமலை பக்தர்கள் 104 பேர் உயிரிழந்தார்கள்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ரதனாகர் கோயிலில் நடந்த விழாவின்போது கூட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தார்கள்.

அதேபோல் 2010-க்கும் முன்பும் இதுபோன்ற சில பெரும் விபத்துக்கள் வடஇந்திய மாநிலங்களில் நடந்திருக்கின்றன.

82 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *