களவு திருக்குறள் கதையும், அந்த கதைக்கு தொடர்புடைய திருக்குறள் விளக்கமும் இதில் இடம்பெறுகிறது.
உள்ளடக்கம்
தாத்தாவும் பேரனும்
ஆனந்தா ! வா, வா.
தாத்தா நேற்று நான் ஒரு கதை சொன்னேன். அதற்கு நீங்கள் ஒரு குறளைச் சொல்லி விளக்கமும் தந்தீர்கள்.
இன்றைக்கு நீங்களே ஒரு கதையைச் சொல்லி, அதற்கேற்ற குறட்பாவையும் சொல்லுங்களேன் தாத்தா.
சரி… சொல்கிறேன் கேள்.
உழவனும் தங்கத் தட்டும்
உழவன் ஒருவன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். அப்போது அவன் பூமிக்கு அடியில் புதைந்திருந்த பொன்னாலான உணவுத் தட்டு ஒன்றைக் கண்டெடுத்தான்.
அப்பாத்திரம் பொன்னால் ஆனது என்பதை அவன் அறியவில்லை . வணிகன் ஒருவனிடம் அந்தத் தட்டைக் கொடுத்து இதற்குரியப் பணத்தைத் தர வேண்டினான்.
வணிகனோ, உழவனை ஏமாற்ற எண்ணினான். காரணம் அந்த தட்டு தங்கத்தால் ஆனது என்பதை உழவன் அறியவில்லை என்பதால்தான்.
இதனால் அவன் அதன் விலையை குறைத்து சொன்னான். உழவன் எதிர்பார்த்த அளவுக்கு காசு கிடைக்காததால், அதற்கு மறுப்பு தெரிவித்தான்.
வணிகனோ பேரம் பேசினான். முதலில் ஆழாக்குத் தருகிறேன் என்றான். அடுத்து உரி தருகிறேன் என்றான்.
இதனால் உழவன் அந்த தட்டை வணிகனிடம் இருந்து பெற்றுக் கொண்டு மற்றொரு வணிகனிடம் சென்றான்.
ஏமாற்றிய மற்றொரு வணிகன்
அந்த வணிகன் அது தங்கத் தட்டு என்பதை உணர்ந்து, அதற்கு ஈடான எடைக்கு மிளகு தருவதாகக் கூறி அதை கொடுத்து தங்கத் தட்டை பெற்றான்.
அந்த தட்டை பெற்ற வணிகன், அதில் இருந்த சேற்றை கழுவி சுத்தம் செய்ய எண்ணி கிணற்றடிக்கு சென்றான்.
அவன் சுத்தம் செய்யும்போது தவறி ஆழமான அந்த கிணற்றுள் தங்கத் தட்டு விழுந்து விட்டது.
இதைக் கண்ட அவன் பதறிப்போனான். தங்கத் தட்டை கோட்டை விட்டு விட்டோமே என மனம் உடைந்து இறந்து போனான்.
தானாக வந்த தங்கத் தட்டை குறைந்த விலைக்கு வாங்க ஆசைப்பட்டு கோட்டை விட்டு விட்டோமே என்று முதல் வணிகனும் வருந்தியே உயிரை விட்டான் என்று கதையை சொல்லி முடித்தார் தாத்தா.
களவு திருக்குறள் சொல்லும் விளக்கம்
தாத்தா! வணிகத்தில் இப்படி பொருளை குறைவாக மதிப்பிட்டு கைவசப்படுத்துவது களவு ஆகாதா , பெரிய தவறு அல்லவா?
இதில் என்ன சந்தேகம் ஆனந்தா… ஒரு பொருளை குறைவாக மதிப்பிட்டு உரியவரை ஏமாற்றுவது களவுதான்.
அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும் என்பதை புரிந்து கொண்டாயா..
இப்போது களவு திருக்குறள் விளக்கத்தை கேட்போம்.
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
(குறள் – 283)
தாத்தா, இந்தக் கதைக்கேற்ற இன்னொரு குறளும் உள்ளது சொல்லட்டுமா?
எங்கே சொல்லு…
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.
(குறள் – 282)
சபாஷ்.. ஆனந்தா
அதற்கான பொருளைச் சொல் பார்ப்போம்.
குற்றமான செயல்களை மனதால் கூட நினைக்கக் கூடாது. அதுவும் ஒரு பாவமே. ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது.
ஆனந்தா நன்றாகச் சொன்னாய்.