உள்ளத்தனையது உயர்வு! – திருக்குறள் கதை 33

90 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 33) உள்ளத்தனையது உயர்வு என்ற தலைப்பிலான சிறுகதையும், அதுவே ஒருவரின் வாழ்வின் உயரத்தை நிர்ணயிக்கும் என்பதை விளக்கும் திருக்குறளும் இடம்பெறுகிறது.

உள்ளடக்கம்

கோகுலும் ராகுலும்

கோகுல்… என்று கூப்பிட்டவாரே ராகுல் வந்தான்.

அவனது குரலைக் கேட்டதும், உள்ளே வா ராகுல் என்று வரவேற்றான் கோகுல்.

கோகுல்… இன்றைக்கு உன் பள்ளிக்கு தொடக்கக் கல்வி அலுவலர் வந்தாராமே? என்றான் ராகுல்.

ஆமாம். உனக்கும் அது தெரிஞ்சு போச்சா? என்றான் கோகுல்.

சரி… அவர் உங்களிடமெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடித்திருப்பாரே… எப்படி சமாளித்தீர்கள் என்றான் ராகுல்.

இப்போது பள்ளியில் நடந்த சம்பவத்தை விவரிக்கத் தொடங்கினான் கோகுல்.

முதலில் அவர் வாசித்தல் திறனை சோதித்தார். அதில் நாங்கள் எல்லோரும் திறமையாக படித்து பாராட்டை பெற்றோம்.

ஆனால்… அவர் ஒரு கேள்வி கேட்ட எங்களையெல்லாம் திணறச் செய்தார்.

தாமரை செடியின் உயரம் என்ன?

தாமரை பூ பூக்கும் செடியின் உயரம் என்ன என்பதுதான் அந்த கேள்வி.

நாங்கள் எல்லோருமே இந்த கேள்விக்கு பதில் தெரியாமல் கொஞ்சம் தடுமாறினோம்.

என்னுடைய நண்பன் ஒருவன். தாமரைச் செடியின் உயரம் இரண்டரை அடி என்று கூறினான்.

ஆனால் தொடக்கக் கல்வி அலுவலர் மற்றொரு எதிர் கேள்வி கேட்டு மடக்கினார்.

தாமரைச் செடி 4 அடி உயரம் வளராதா என்பதுதான் அந்தக் கேள்வி. இதனால் எல்லா மாணவர்களும் வாய்விட்டு சிரித்தார்கள்.

இப்போது எனக்கு பாட்டி ஒரு நாள் தாமரையைப் பற்றி சொன்னது நினைவுக்கு வந்தது. அதனால் தொடக்கக் கல்வி அலுவலரை பார்த்து, அய்யா… தாமரைச் செடியின் உயரத்தை நான் சொல்லட்டுமா… என்றேன்.

எங்கே சொல் பார்க்கலாம். நீ சரியாக சொல்லிவிட்டால், உனக்கு ஒரு பேனா பரிசு தருகிறேன் என்றார் அவர்.

பதிலுக்கு கிடைத்த பரிசு

அய்யா… தாமரைச் செடிக்கு என்று தனி உயரம் கிடையாது. நீர் நிலைகளில் வளரும் தாமரைச் செடியில் உள்ள தாமரை எப்போதும் நீரின் மேலே மிதந்தபடித்தான் இருக்கும்.

அதனால் குளத்தில் எவ்வளவு ஆழத்திற்கு நீர் இருக்கிறதோ அதுதான் அந்த தாமரைச் செடியின் உயரமாகவும் இருக்கும்.

நீர் குறைவாக இருக்கும்போது உயரம் குறைவாகவும், நீர் அதிகரிக்கும்போது அதன் உயரமம் அதிகமாகவும் ஆகும்.

தாமரையின் இயற்கை குணம் அது எப்போது தண்ணீர் மீது மிதப்பதுதான் என்று சொன்னேன்.

என்னுடைய விரிவான பதிலை கேட்ட தொடக்கக் கல்வி அலுவலர், சபாஷ்… சரியான பதில். இந்தா.. என்று கூறி பேனாவை பரிசளித்தார்.

அத்துடன் அவர் இந்த பதிலைக் கேட்டதும் உள்ளத்தனையது உயர்வு என்று முடியும் திருக்குறள் ஒன்றையும், உள்ளத்தனையது உயர்வு என்றால் என்ற விளக்கத்தையும் சொன்னார் என்றார் கோகுல்.

எந்த திருக்குறளை சொன்னார் என்று கேட்டான் ராகுல்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம், மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு

(குறள் – 595)

உள்ளத்தனையது உயர்வு

நீர்நிலைகளில் உள்ள தண்ணீரின் அளவே அதில் மலர்ந்திருக்கும் தாமரைத் தண்டின் அளவும் இருக்கும். அதுபோல மனிதர்களின் வாழ்க்கையின் உயர்வு என்பது அவர் மனதில் கொண்டிருக்கும் ஊக்கத்தின் அளவே இருக்கும். உள்ளத்தனையது உயர்வு என்பதுதான் அந்த திருக்குறளின் விளக்கம் என்றான் கோகுல்.

அருமை… அருமை என்று சொன்ன நண்பன், உள்ளத்தனையது உயர்வு என்பது நம்முடைய எண்ணங்களைப் பொறுத்துதான் நாம் வாழ்க்கையில் உயர முடியும் என்பது சரியானதுதான்.

உள்ளத்தனையது உயர்வு என்பதற்கான சரியான பாடலை அந்த அலுவலர் சொன்னதும் சரியே. நாமும் வாழ்க்கையில் உள்ளத்தால் உயர்வு என்பதை கடைப்பிடிப்போம் நண்பா.. என்றான் அவன்.

நாவடக்கம் தரும் நற்செய்தி – திருக்குறள் கதை

குழந்தைகள் தொலைகாட்சியை நீண்ட நேரம் பார்த்தால் என்ன பாதிப்பு வரும்?

கேள்வியும் பதிலும்

திருக்குறளில் உள்ள மூன்று பால்களில் எத்தனை எத்தனை அதிகாரங்கள் உள்ளன?

அறத்துப்பாலில் 38 அதிகாரங்களும், பொருட்பாலில் 70 அதிகாரங்களும், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்களும் உள்ளன.
அதன்படி 133 அதிகாரங்களில் 1330 குறள் வெண்பாக்களால் கட்டமைக்கப்பட்டதுதான் திருக்குறள்.

திருக்குறளில் பயன்படுத்தாத இரு சொற்கள் எவை?

தமிழ், கடவுள்

முதன் முதலில் திருக்குறள் புத்தகமாக அச்சிடப்பட்ட ஆண்டு என்ன?

1812-ஆம் ஆண்டில் முதன் முதலில் திருக்குறள் புத்தகமாக வெளிவந்தது.

திருக்குறளுக்கு முதலில் இட்ட பெயர் என்ன?

முப்பால்

ஒவ்வொரு திருக்குறளும் எப்படி அமைந்திருக்கிறது?

இரண்டு அடிகளில் 7 சீர்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. முதல் அடியில் 4 சீர்களும், இரண்டாவது அடியில் 3 சீர்களும் இடம்பெற்றிருக்கின்றன.

ஒரே திருக்குறளில் 6 முறை வந்துள்ள ஒரு சொல் எது?

பற்று.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு

திருக்குறளில் எத்தனை சொற்கள் உள்ளன

திருக்குறளில் 14 ஆயிரம் சொற்கள் உள்ளன.

திருக்குறளில் மொத்தம் எத்தனை எழுத்துக்கள் உள்ளன?

42,194 எழுத்துக்கள் திருக்குறளில் உள்ளன.

தமிழ் எழுத்துக்கள் 247-இல் எத்தனை எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெறவில்லை?

திருக்குறளில் மொத்தமுள்ள தமிழ் எழுத்துக்களில் 210 எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. 37 எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை.

திருக்குறளில் பயன்படுத்தாத எண் எது?

திருக்குறளில் 9 என்ற எண் பயன்படுத்தப்படவில்லை.

திருக்குறளின் சிறப்புக்கும், பெருமைக்கும் துணை நிற்பது எது?

திருவள்ளுவமாலை.

திருவள்ளுவர் இருமுறை பதிவு செய்திருக்கும் அதிகாரம் என்ன?

குறிப்பறிதல்

திருக்குறளில் பயன்படுத்தாத உயிர் எழுத்து எது?

திருக்குறளில் இடம்பெற்ற இரு மரங்களின் பெயர்கள் என்ன?

பனை, மூங்கில்

இலத்தீன் மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்தவர் யார்?

வீரமாமுனிவர்

திருக்குறளை உரையின்றி அச்சுப்பணி செய்தவர் யார்?

ஞானப்பிரகாசர்.

திருக்குறள் எந்த மதத்தைப் பற்றி பேசுகிறது?

திருக்குறள் குறிப்பிட்ட மதம், கடவுளைப் பற்றி எங்குமே குறிப்பிடவில்லை.

உலகின் மிக உயரமான சிலை திருவள்ளுவருக்கு எங்கே வைக்கப்பட்டிருக்கிறது?

கன்னியாகுமரியில். இந்த சிலை கடலில் விவேகானந்தர் பாறைக்கு அருகே 133 அடி உயரம் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கிறது.

திருவள்ளுவர் ஆண்டு எப்போது முதல் கணக்கிடப்படுகிறது?

திருவள்ளுவரின் காலம் கி.மு.31. இதையே தொடக்க ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

திருவள்ளுவரின் சொந்த ஊர், பெற்றோர் பற்றிய தகவல் உண்டா?

திருவள்ளுவரின் ஊர் எது என்பது ஆதாரங்களுடன் எதையும் உறுதிப்படுத்தப்படவில்லை. அவருடைய பெற்றோர் குறித்த தகவலும் கிடைக்கவில்லை.

திருக்குறள் எப்போது எழுதப்பட்டது?

காலத்தால் அழியாத பண்டைய தமிழ் ஞானத்தின் தொகுப்பாக கருதப்படுகிறது.
தமிழ் மரபின் வாயிலாகவும், கடைச்சங்கத்தின் கடைசி நூலாகவும் இதை அறிஞர்கள் கருதுகிறார்கள்.

90 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply