சென்னைக்கு அருகே கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்திருப்பதுதான் உத்தண்டி பெருமாள் கோவில். இக்கோயில் வரலாறும், தரிசனம் குறித்த தகவல்களும் இப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன.
உள்ளடக்கம்
உத்தண்டி பெருமாள் கோவில்
சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் அக்கரையில் இருந்து 5 கி.மீட்டர் தொலைவில் கடலோரம் அமைந்திருப்பதுதான் இந்த உத்தண்டி பெருமாள் கோவில். மத்ஸ்ய நாராயணன் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது.
மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான மத்ஸ்ய அவதாரத்தை தாங்கிய திருவுருவச் சிலைதான் இக்கோயிலின் மூலவர்.
மத்ஸ்ய அவதாரம் என்பது பாதி உடல், பாதி மீன் வடிவம் கொண்ட உருவத்தில் மகா விஷ்ணு எடுத்த அவதாரம். இதை தமிழில் மச்ச அவதாரம் என்று அழைப்பதுண்டு.
நாட்டில் மத்ஸ்ய அவதார மகாவிஷ்ணுவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் கோயில்கள் அமைந்திருக்கின்றன. அத்தகைய கோயில்களில் ஒன்றுதான் தமிழகத்தில் சென்னையில் அமைந்திருக்கும் இத்திருக்கோயில்.
கோயில் திறந்திருக்கும் நேரம்
வங்கக் கடலோரம் அமைந்திருக்கும் உத்தண்டி பெருமாள் கோவில் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6 முதல் 10 மணி வரையிலும், பிற்பகலில் 5 மணி முதல் இரவு 8.30 வரையிலும் திறந்திருக்கிறது.
வார இறுதி நாள்களிலும், விசேஷ நாள்களில் காலை 6 முதல் 11 மணி வரையிலும், பிற்பகல் 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கிறது.
விமானம் இல்லாத கோயில்
உத்தண்டி பெருமாள் கோவில் பிரம்மாண்டமான வடிவை பெற்றிருந்தாலும், இத்திருக்கோயிலில் மகா மண்டபங்களோ, கோபுரங்களோ, விமானங்களோ, கலசங்களோ கிடையாது.
பெரிய சுற்றுவட்டப் பாதைக்கு நடுவே சற்று உயரமான இடத்தில் சிறிய குளத்தின் நடுவே 12 அடி உயரமுடைய மத்ஸ்ய நாராயணனை நாம் தரிசிக்கலாம்.
108 தூண்கள்
திறந்தவெளிப் பகுதி தியான மண்டபமாக காட்சி தருகிறது. இதைச் சுற்றிலும் 108 தூண்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஒவ்வொரு தூணும் 9 அடி உயரம் கொண்டதாக அமைந்திருக்கிறது.
இந்த தூண்களில் விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் அஷ்டோத்தர சதா நாமாவளி ஆகியவை தமிழிலும், சமஸ்கிருதத்திலும், ஆங்கில மொழியிலும் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
மூலவர் மத்ஸ்ய நாராயணன்
உத்தண்டி பெருமாள் கோவில் மூலவர் மத்ஸ்ய நாராயணன் ஒரே கிரானைட் கல்லால் செதுக்கப்பட்ட உருவமாகும். அழகிய திருவுருவாக பளபளப்பாக காட்சி தரும் இந்த திருவுருவம் மலர்ந்த முகத்துடன் நமக்கு அருள்பாலிக்கிறது.
இந்த சிலை கிட்டத்திட்ட சென்னை பார்த்தசாரதி பெருமாளின் உருவத்தை கொஞ்சம் நினைவூட்டவும் செய்கிறது.
சின்மயா மிஷன் பராமரிப்பு
25 ஆண்டுகளுக்கு முன்பு சின்மயா மிஷனுக்கு பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய இடத்தில்தான் இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.
கடந்த 2015 மே 24-ஆம் தேதி இத்திருக்கோயில் பக்தர்களின் தரிசனத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
திருக்கோயில் வலம்
திருக்கோயில் நுழைவாயிலை அடுத்து கீதாசாரத்தில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணன் உபதேசம் செய்யும் காட்சி சிலையாக வடிக்கப்பட்டிருக்கிறது. பூட்டப்பட்ட குதிரைகளுடன் அர்ஜுனனும், கிருஷ்ணரும் தேரில் இருப்பது போன்ற காட்சி நம் மனதை கொள்ளைக்கொள்ளும்.
இந்த தேரைக் கடந்ததும் அழகிய விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலின் சுற்றுவட்டப் பாதையில் ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் திருவுருவச் சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன.
அத்துடன் சிவபெருமான், முருகபெருமான், ஸ்ரீகிருஷ்ணர் சிலைகளும் இந்த சுற்றுவட்டப் பாதையில் இடம்பெற்றிருக்கின்றன.
சுற்றுவட்டப் பாதை
மத்ஸ்ய நாராயணனை தரிசித்துவிட்டு வலம் வருவதற்கு இரு பாதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று சாதாரண சுற்றுப் பாதை. மற்றொன்று சிறிய கூழாங்கற்கள் பதிக்கப்பட்ட பாதை.
அக்குபஞ்சர் முறையில் இந்த கூழாங்கற்கள் பதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் நடந்து செல்லும்போது மனதுக்கு இதமாக இருப்பதாகவும் இப்பாதையில் நடந்து சென்று தரிசனம் செய்யும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
மத்ஸ்ய நாராயணனுக்கு அருகில் விஷ்ணுவுக்கும், லட்சுமிதேவிக்கும் சிறிய சந்நிதி இருக்கிறது. ஆஞ்சநேயர் மத்ஸ்ய நாராயணனை நோக்கி கை கூப்பியவாறு காட்சி தருகிறார்.
சமுத்திர ஆரத்தி
திருக்கோயில் சார்பில் ஞாயிற்றுக்கிழமைதோறும் சமுத்திர ஆரத்தி எடுக்கப்படுகிறது. இது கிட்டத்திட்ட காசியில் எடுக்கப்படும் கங்கா ஆரத்தியைப் போன்று நடத்தப்படுகிறது.
தியானத்தில் பக்தர்கள்
இங்கு வரும் பக்தர்கள் பெரும்பாலோர் பரந்துவிரிந்த திறந்தவெளிப் பகுதியில் ஆங்காங்கே அமர்ந்து தியானத்தில் ஈடுபடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த திருக்கோயிலை மாலை நேரத்தில் வலம் வரும்போது, கடலோரம் வீசும் காற்றை அனுபவிப்பதோடு, உள்ளத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிரம்பி வழிகிறது என பக்தர்கள் தங்கள் உணர்வை வெளிப்படுத்துகிறார்கள். இரவு நேரத்தில் மின்னொளி அலங்காரத்தில் கோயில் மிளிர்கிறது.
விஷ்ணு ஏன் மச்ச அவதாரம் எடுத்தார்?
பாகவத புராணம் சொல்லும் கதையின்படி, மகா விஷ்ணு மீன் உருவம் எடுத்து பிரம்மாவிடம் திருடப்பட்ட வேதங்களை மீட்கிறார். அப்போது பூமியில் பிரளயம் ஏற்படுகிறது. இதனால் பல உயிர்களையும், தாவரங்களையும், விதைகளையும் ஒரு படகில் ஏற்றி காப்பாற்றி, பூமியில் அவை பூமியில் தழைக்கச் செய்கிறார் மகா விஷ்ணு.
மற்றொரு கதைப்படி, ஒருமுறை பிரம்மதேவர் அசந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். அவர் உறக்கத்தில் தானாகவே வேதங்களை சொல்லிக் கொண்டிருந்தார். இதை குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவன் என்ற அசுரன் பார்க்கிறான்.
தன்னுடைய சக்தியை திரட்டி, அந்த வேதங்களை பிரம்மதேவரிடம் இருந்து திருடிச் செல்கிறான். அந்த வேதங்கள் மீண்டும் பிரம்மதேவருக்கு கிடைக்காமல் செய்ய கடலுக்கு அடியில் மறைத்து வைக்கிறான்.
மகாவிஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம்
பிரம்மாவிடம் வேதங்கள் இல்லாவிட்டால், பிரம்ம சிருஷ்டி இயங்காமல் போய்விடும். உலகம் சரியாக இயங்கி அறம் செழிக்க வேண்டும் என்றால் மீண்டும் பிரம்ம தேவரிடம் வேதங்கள் வந்தாக வேண்டும்.
இந்த நிலையில், கண் விழித்த பிரம்ம தேவர் வேதங்கள் காணாமல் போனதை அறிந்து பிரம்ம சிருஷ்டி பாதிக்கப்படுவதைக் கண்டு கலக்கமடைகிறார்.
செய்வதறியாது தவித்த அவர், மகா விஷ்ணுவை நோக்கி தவம் செய்யத் தொடங்குகிறார். மகா விஷ்ணு அவர் முன் தோன்றி தவத்துக்கான காரணத்தை கேட்டறிகிறார்.
மச்ச அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு
மகா விஷ்ணு அந்த வேதங்களை ஹயக்ரீவன் திருடிச் சென்று மகா சமுத்திரத்தின் அடியில் மறைத்து வைத்திருப்பதை அறிகிறார்.
அதனால் அவர் மச்ச அவதாரம் எடுக்கிறார். தன்னுடைய அவதாரத்தை சிறிய மீனாக எடுக்கிறார்.
சத்ய வ்ரதன் என்ற மன்னன் கிருதமாலா நதியில் விமோசனம் வேண்டி கையினால் தண்ணீரை அள்ளும்போது அந்த மீன் வடிவில் சிக்கிக் கொள்கிறார்.
தன்னுடைய கையில் சிறிய மீன் இருப்பதைக் கண்டு அதை மீண்டும் தண்ணீரில் விட முயற்சிக்கிறான்.
அப்போது அந்த மீன் அவனிடம் பேசுகிறது. நான் பெரியவனாக வளரும் வரை என்னை காப்பாற்றி வளர்த்து வா.
அதற்கு பிரதி உபகாரமாக, இந்த பூமியில் பிரளயம் ஏற்படும்போது உன்னை காப்பாற்றுகிறேன் என்று சொல்கிறது.
மீன் தன்னிடம் பேசியதைக் கண்டு ஆச்சரியமடைந்த அவன், நிச்சயமாக இந்த மீன் ஒரு தெய்வீகம் குணமுடையது என்பது உணர்ந்து அதை வளர்க்கத் தொடங்கினான்.
முதலில் ஒரு கிணற்றில் வளர்ந்த மீன், அடுத்து மிகப் பெரிய கிணற்றில் வளரத் தொடங்கியது.
இப்போது அந்த கிணறும் போதாமல் போனதால், அரசனை பார்த்து, நான் நன்றாக வளர்ந்துவிட்டேன். அதனால் என்னை சமுத்திரத்தில் விட்டுவிடு என்று அந்த மீன் சொன்னது.
இதனால் அவன் சமுத்திரத்தில் கொண்டு சென்று விடுகிறான். அப்போது அந்த மீன், மத்ஸ்ய நாராயணாக அவனுக்கு காட்சி தந்தது.
மீட்கப்பட்ட வேதம்
சமுத்திரத்தில் பிரம்மா தொலைத்த வேதங்களைத் தேடிச் செல்கிறேன். அப்போது இந்த பூமியில் பிரளயம் ஏற்படும். அதனால் இந்த உலகம் அழியும். அப்போது பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் அழிந்துவிடும்.
இருந்தாலும், பிரளயத்துக்கு பிறகு மீண்டும் உயிர்கள் தழைக்க வேண்டும் என்பதற்காக உன்னை காப்பாற்ற வருவேன். அப்போது, சகல ஜீவராசிகளில் தாவரங்கள் முதல் ஐந்தறிவு உயிரினங்கள் வரையில் ஒன்று வீதம் ஒரு படகில் திரட்டிக் கொண்டு தயாராக இரு, உன்னுடன் 7 ரிஷிகளும் காத்திருப்பார்கள். உங்கள் அனைவரையும் நான் காப்பாற்றுகிறேன் என்று சொல்லி மத்ஸ்ய நாராயணன் மறைந்தார்.
மன்னனும் மத்ஸ்ய நாராயணன் சொன்னபடி செய்தான். சமுத்திரத்துக்குள் மீன் உருவில் மறைந்துபோன மத்ஸ்ய நாராயணன் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி ஹயக்ரீவனை வதம் செய்கிறார்.
அதைத் தொடர்ந்து அவன் மறைத்து வைத்திருந்த வேதங்களை மீட்டதோடு, சமுத்திரத்தில் படகுடன் தவித்த சத்ய வ்ரதனை காப்பாற்றுகிறார். பிரளயத்துக்கு பிறகு சத்ய வர்தன் மனு என்ற பெயரில் பூமியில் வாழத் தொடங்கினான் என்பதுதான் இந்த மத்ஸ்ய நாராயணன் தொடர்புடைய புராண வரலாறாக இருக்கிறது.
பக்தர்களின் நம்பிக்கை
வாழ்க்கையில் ஏற்பட்ட கடும் துயரங்கள், கஷ்டங்களால் அவதிப்படுபவர்கள் நம்பிக்கையோடு மச்ச அவதார மூர்த்தியான மத்ஸ்ய நாராயணனை வணங்கினால் அனைத்து துன்பங்களும், துயரங்கும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
அந்த வகையில் உத்தண்டி மத்ஸ்ய நாராயணன் திருக்கோயிலுக்கு வருவோரின் எண்ணிக்கையும் நாளும் அதிகரித்து வருகிறது.
திருப்பதி லட்டை பக்தர்கள் நம்பிக்கையோடு சாப்பிடலாமா?
உத்தண்டி பெருமாள் கோவில் – விடியோ வடிவில் காணுங்கள்
Vedanarayana perumal temple – வேதநாராயண பெருமாள் கோவில் எங்கிருக்கிறது?
வேதநாராயணப் பெருமாள் கோயில் தமிழ்நாடு திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருநாராயணபுரத்தில் அமைந்திருக்கிறது. இங்கு மகா விஷ்ணு வேதநாராயணா என அழைக்கப்படுகிறார். இங்கு மகாவிஷ்ணு நான்கு வேதங்களைத் தலையணையாகக் கொண்டு சாய்ந்த நிலையில், பிரம்மாவுக்கு வேதங்களை கற்பிக்கிறார்.
இது இடைக்கால சோழர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் இந்து சமய மற்றும் அறநிலையத் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் இக்கோயில் நாள்தோறும் காலை 6 முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கிறது.
Dwadasha jyotirlinga temple – ஸ்ரீதுவாதச ஜோதிர்லிங்க கோயில் எங்குள்ளது?
ஸ்ரீதுவாதச ஜோதிர்லிங்க கோயில் கர்நாடக மாநிலம், பெங்களூரில் அமைந்திருக்கிறது. ஓம்கார் ஹில்ஸ், ஓம்கார் ஆசிரமத்தில் அமைந்திருக்கிறது. பெங்களூர் ஸ்ரீனிவாசபுரத்தில் உள்ள ஓம்கார் மலைகள் பகுதியில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட கோவில்களில் ஸ்ரீதுவாதச ஜோதிர்லிங்க கோயிலும் ஒன்று.
இங்கு ஸ்ரீமத்ஸ்ய நாராயண கோவில், ஸ்ரீவனதுர்கா கோவில், ஸ்ரீநாகதேவதா கோவில், ஸ்ரீமுனீஸ்வர கோவில் ஆகியன இருக்கின்றன.
Machiya Narayana temple – மத்ஸய நாராயணா கோயில் எங்குள்ளது?
மத்ஸய நாராயணா திருக்கோயில் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் உத்தரண்டியில் அமைந்திருக்கிறது. இது தொடர்பான விவரங்கள் இங்கு இடம்பெற்றிருக்கும் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
kuttis kovil uthandi – குட்டீஸ் கோவில் உத்தண்டி எங்கிருக்கிறது?
குட்டீஸ் கோவில் உத்தரண்டி என்று அழைக்கப்படுவதும் இந்த மத்ஸய நாராயணா திருக்கோயில்தான்.
matsya narayana temple history
மத்ஸய நாராயண கோவில் சுவாமி சின்மயா மிஷன் நிர்வாகத்தால் கட்டப்பட்டு 2015 மே மாதம் 24-ஆம் தேதி முதல் பக்தர்கள் வழிபாட்டுக்கு வந்தது.
matsya naryana temple contact number
Chinmaya Mission, Chinmaya Heritage Centre, No. 2, 13th Avenue, Harrington Road,
Chetpet – 600 031, India Phone: 04428365046 / 04428363876 E-mail: chennaichinmaya@gmail.com
sholinganallur to matsya narayana temple distance, Beach near matsya narayana temple, Matsya narayana temple directions…
சோழிங்கநல்லூர்- அக்கரை – பனையூர் வழியில் 6.2 கிலோமீட்டர் தூரத்தில் மத்ஸய நாராயணா திருக்கோயில் அமைந்திருக்கிறது.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.