எலுமிச்சை, இஞ்சி, பூண்டு கலந்த ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகளை நீங்குவதாக சொல்வது உண்மையா? ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பார்க்கலாம்.
உள்ளடக்கம்
காத்திருக்கும் கேள்விகள்
ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை பலவகை உண்டு. இதில் இஞ்சி, எலுமிச்சை, பூண்டு ஆகியவற்றை கலந்து சாப்பிடுவதால், இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதாக பலரும் சமூகவலைதளங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை? இதற்கு ஏதேனும் அறிவியல் ரீதியான ஆய்வு முடிவுகள் இருக்கிறதா? ரத்தக் குழாய் அடைப்புகள் காரணமாக ஸ்டண்ட் மற்றும் அறுவை சிகிச்சை அளவுக்கு ஆபத்தான நிலையை எட்டியவர்கள் இந்த தகவலை நம்பி சாப்பிடலாமா?
எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை – நம் உடலுக்கு எந்த வகையில் நன்மை தருகிறது… எந்த வகையில் தீமை அளிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம்.
சமூகவலைதளங்களில் பரவும் ஒரு தகவல்
நீங்கள் தொடர்ந்து முகநூல், வாட்ஸ்அப்பில் பரவும் தகவல்களை படிப்பவர்களாக இருந்தால், கீழே உள்ள வாசகங்கள் கொண்ட ஒரு தகவலை படித்திருப்பீர்கள்.
“நண்பர்களே கவனியுங்கள்… இது உண்மை சம்பவம்… உங்கள் இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய் அடைப்பு காரணமாக ஆஞ்சியோ அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறீர்களா….
இதை நம்பிக்கையுடன் செய்யுங்கள் நீங்கள் குணமடைந்து விடுவீ்ர்கள்.
இதய வலி காரணமாக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் 3 இடங்களில் அடைப்புகள் இருப்பதாக தெரியவந்தது.
பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப்பட்டது. அந்த நோயாளி ஆயுர்வேத மருத்துவர் ஒருவரைச் சந்தித்தார்.
அந்த ஆயுர்வேத மருத்துவர், ‘பைபாஸ் அறுவை சிகிச்சை தேவையில்லை’. ஒரு மாதத்துக்கு எலுமிச்சை, இஞ்சி, பூண்டு கலந்து ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை பின்பற்றினால் போதும் என்றார்.
நோயாளி இந்த கலவையை சாப்பிட்டுக் கொண்டே மும்பையில் உள்ள இதய மருத்துவமனையில் பைபாஸ் சர்ஜரிக்கு ரூ.2.25 லட்சம் பணம் கட்டிவிட்டார்.
ஆபரேஷனுக்கு முதல் நாள், நோயாளியை பரிசோதித்த டாக்டருக்கு ஆச்சரியம். நோயாளியின் ரத்தக் குழாய் அடைப்புகள் நீங்கியிருந்தன” என்று ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் கதையை படிக்காதவர்கள் மிகக் குறைவாக இருப்பார்கள்.
இத்தகவல் உண்மையா என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்பு எலுமிச்சை, இஞ்சி, பூண்டு ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவற்றின் தனி மருத்துவக் குணங்களை நாம் முதலில் தெரிந்துகொள்வது நல்லது.
ஆப்பிள் சீடர் வினிகர் மருத்துவ குணங்கள்
இது வயிற்றுப் போக்கை சீர்படுத்தும். இதற்கு இதில் உள்ள பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து காரணமாக அமைந்திருக்கிறது.
பொதுவாக வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு ஆகியவற்றில் ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறையை பின்பற்றினால் நல்ல பலனை தரும் என்று சித்த மருத்துவர்கள் சொல்வது உண்டு.
இரைப்பை வீக்கம், அஜீரணம் ஆகியவற்றை குணப்படுத்தக் கூடியது இந்த ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை. இதற்கு ஒரு கப் நீரில் ஒரு தேக்கரண்டி தேன், 5 மில்லி ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து சாப்பிட வேண்டும் என்று சித்த மருத்துவ முறை சொல்கிறது.
மூக்கடைப்பு பிரச்னை, சைனஸ் பிரச்னையில் அவதிப்படுபவர்களும் இந்த ஆப்பிள் சீடர் விநிகர் சாப்பிடும் முறை மூலம் சாப்பிட்டால் நல்ல பலன் அளிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
வாய் துர்நாற்றம் போக்க
வாய் துர்நாற்றம் உடையவர்கள் காலையில் ஒரு டம்பர் சீரகம் போட்டு கொதிக்க வைத்த நீரில் 5 மில்லி ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து 10 விநாடிகளுக்கு கொப்பளிப்பக்கலாம்.
இந்த வகை ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறையை வாரம் ஒரு முறை கடைப்பிடித்து வந்தால் போதும் இப்பிரச்னைக்கு தீர்வு வரும் என்றும் சொல்லப்படுகிறது.
கை, கால்களில் நகங்களின் இடுக்குகளில் அழுக்கு சேர்ந்து கிருமி தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுத்துவது உண்டு.
இந்த பாதிப்பை சந்திப்பவர்கள், ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகரை வெதுவெதுப்பான நீரில் கலந்து கை, கால், நகங்களை சுத்தப்படுத்தி வந்தால் கிருமிகள் அழிந்துவிடும்.
எண்ணெய் பிசுபிசுப்பான முகத்தில் காற்றில் உள்ள தூசிகள் படிந்து திட்டுத்திட்டாக கருமை நிறம் அல்லது கரும்புள்ளிகள் ஏற்படுவது உண்டு.
அப்போது ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து ஒரு பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி சில நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளக்கும், முக சுருக்கங்கள் நீங்கும் என்றும் சொல்கிறார்கள்.
சளி, இருமல், தொண்டை பிரச்னைகளுக்கு சிறு துண்டு இஞ்சி, இரண்டு பல் பூண்டு, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர், ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறையில் நல்ல பலன் கிடைப்பதாகவும் சித்த மருத்துவ குறிப்புகள் சொல்கின்றன.
ஆப்பிள் சீடர் வினிகர் பயன்பாட்டில் எச்சரிக்கை தேவை
ஆப்பிள் சீடர் வினிகர் அமிலத்தன்மை கொண்டது. இதனால் இதை பயன்படுத்தும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை.
அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் தலைவலி, ஏப்பம், வயிற்றுப்போக்கு, உணவுக்குழாய், தொண்டை, வயிறு ஆகியவற்றில் எரிச்சலை ஏற்படுத்தும்.
மருத்துவரின் ஆலோசனையின்றி ஆப்பிள் சீடர் வினிகரை உடல் நலப் பிரச்னைகளுக்கு நாமாக பயன்படுத்துவது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல.
எலுமிச்சையின் பயன்கள்
இது பொதுவாக எடை குறைப்புக்கு உதவாது என்பதை தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் எலுமிச்சை சாறு குடல் சுத்தம், நச்சு நீக்குதல், ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல், ஒவ்வாமை பாதிப்பை சீர்செய்தல், தொண்டை வலிக்கு நிவாரணம், செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல் ஆகியவற்றுக்கு நல்ல பலனைத் தருவதாக சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இஞ்சியின் மருத்துவ குணங்கள்
இஞ்சியில் உள்ள சத்துக்கள் உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கக் கூடியவை. எடை குறைப்புக்கும், செரிமானப் பிரச்னை, நச்சுக்களை நீக்குதல், மலச்சிக்கல் பிரச்னைக்கு நல்ல தீர்வாகவும் இருக்கிறது.
பூண்டின் மருத்துவ குணம்
பூண்டில் உள்ள சல்பர் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகிறது. இதுவும் சளி, இருமல் பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை பற்றி ஆய்வுகள் சொல்வது என்ன?
இஞ்சி, பூண்டு, எலுமிச்சை ஆகியவற்றை கலந்த ஆப்பிள் சீடர் வினிகர் சாப்பிடும் முறை மூலம் இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டிருக்கும் ஆபத்தான அடைப்புகளை நீக்குவதற்கான எந்தவித உறுதியான மருத்துவ ஆய்வுகளும் இதுவரை வெளிவரவில்லை.
சமூகவலைதளங்களில் தொடர்ந்து பரவி வரும் இந்த கலவை தொடர்பான உண்மை கண்டறியும் செயல்பாட்டில் தில்லியைச் சேர்ந்த மூத்த இதயநோய் நிபுணர்கள் சிலர் இறங்கினர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்கள்.
“இந்த கலவையால் ரத்தக் குழாய் அடைப்புகளை நீக்க முடிவதற்கான எந்த அறிவியல் சான்றுகளும் தற்போது வரை கிடைக்கவில்லை.
இத்தகைய அறிவியல்பூர்வ ஆய்வுகள் இன்றி ஆபத்தான ரத்தக் குழாய் அடைப்பு ஏற்பட்டவர்கள் சாப்பிடலாம் என்ற கருத்தை மருத்துவ உலகம் ஆதரிக்க விரும்பவில்லை.
எலுமிச்சை, இஞ்சி, பூண்டு ஆகியவற்றில் சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கலாம். ஆப்பிள் சைடர் வினிகர் ஒருசில கொழுப்புகளை குறைக்கும் பண்புகளைக் கூட கொண்டிருக்கலாம்.
ஆனால் அந்த கலவையால் தமனி அடைப்புகளை நீக்க முடியாது. நவீன மருத்துவத்தில் கண்டறியப்பட்டுள்ள சில மருந்துகள் மற்றும் ஆஞ்சியோபிளாஸ்டி அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சை போன்றவற்றை மூலமே எளிய தீர்வு காணப்பட்டு உயிர் பாதிப்பை தடுக்க முடியும்” என்பதுதான் அவர்களின் கருத்து.
மருந்து கலவை விற்பனை நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?
இந்த கலவை கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துவதன் மூலமும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன என்பதை இக்கலவையை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் சொல்கின்றன.
அந்த நிறுவனங்களும் மிகுந்த எச்சரிக்கையாக இந்த கலவையின் பயன்களாக, செரிமானத்தை அதிகரிக்கும், உடல் எடை குறைக்க உதவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும், தொப்பையை குறைக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும் என்றுதான் குறிப்பிட்டு விற்பனை செய்கின்றன.
சித்த மருத்துவர்களின் கருத்து என்ன?
முறையாக சித்த மருத்துவத்தை பயின்றவர்கள் சிலரும், எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, ஆப்பிள் சீடர் வினிகர் ஆகியவை சிறந்த மருத்துவ குணங்கள் கொண்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், இத்தகைய கலவை பற்றி ஆயுர்வேத புத்தகங்களில் எதுவும் பதிவாகவில்லை.
அனுபவத்தில் உணர்ந்தவர்கள் இருந்தால் அவர்கள் உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டால் அது பற்றிய ஆய்வுகள் மூலம் உறுதி செய்ய முடியும் என்கிறார்கள்.
ஆரோக்கியமானவர்கள் சாப்பிடலாம்
ஆரம்ப நிலையில் ஏதேனும் இதய பாதிப்புக்கு ஆளாகி, அதற்காக ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், கூடுதலாக இந்த கலவையை உரிய அனுபவம் மிக்க மருத்துவரின் ஆலோசனைகளை பெற்று சாப்பிடலாம்.
அதேபோல் ஆரோக்கியமானவர்களும் இந்த கலவையை உரிய முறைப்படி சாப்பிடுவதால் எந்த பாதிப்பும் வரப்போவதில்லை.
ஆனால் ரத்தக் குழாய் அடைப்பு என்பது இதயத்தின் இயக்கத்துக்கு எப்போது வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் சமூகவலைதளங்களில் பரவக்கூடிய செய்திகளை நம்பி சாப்பிடுவது நல்லதல்ல.
எலுமிச்சை ஜூஸ் பயன்கள் – உடல் ஆரோக்கியத்துக்கான சிறந்த தீர்வு
நெல்லிக்காய் ஜூஸ் மருத்துவ குணங்கள்
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.