சென்னை: ஒருவழியாக தமிழக ஆளுநர் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதாவுக்கு ((online gambling ban) ஒப்புதல் அளித்துவிட்டார்.
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதைக்கு தடையாக உள்ள சில விஷயங்களுக்காக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார்.
ஆனால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 200 தொடர்பாக ஆளுநர் கூறிய கருத்துக்கள் அவருக்கு எதிராக திசை மாறியது.
இதை தமிழக அரசு சரியாக பயன்படுத்திக் கொண்டது. சட்டப் பேரவையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்ட தனி தீர்மானம் ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட மசோதா காலதாமதத்துக்கு முடிவு தேடி தந்தது.
உள்ளடக்கம்
ஆளுநருக்கு எதிராக தீர்மானம்
ஆளுநர் ஆர்.என். ரவி, குடிமைப் பணி தேர்வை சந்திக்கவுள்ள மாணவர்களிடையே சமீபத்தில் பேசினார். அப்போது மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் தொடர்பாக சில கருத்துக்களை சொன்னார். அது அவருக்கு எதிராக அமைந்தது.
ஒரு மசோதாவை ஆளுநர் நிறுத்தி வைத்தால், அது நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று அவர் பேசினார். இது அவருக்கு எதிரான அம்பாக மாறியது.
இதனால் சட்டமன்ற பேரவை விதிகள் 92/7 மற்றும் 287 ஆகியன தளர்த்தப்பட்டு, ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தலைகளை எண்ணும் வாக்கெடுப்பு நடத்தப்படடு சட்டமன்ற பேரவை விதிகள் தளர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம்
ஏற்கெனவே இத்தகைய நடைமுறையை 2017-ஆம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை காலத்தில் பயன்படுத்தப்பட்டது.
சட்டசபை மாண்புகளை அவமதிக்கும் வகையில் ஆளுநர் செயல்பாடு உள்ளது. சட்டசபை மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கால நிர்ணயம் செய்ய வேண்டும்
ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை மத்திய அரசும், குடியரசுத் தலைவரும் வழங்க வேண்டும். இவை அடங்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த தனித் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தின்போது, ஆளுநர் ரவி மீது பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் ஒரு குற்றச்சாட்டை வைத்தார்.
ஆளுநருக்கு ஒதுக்கப்பட்ட நிதியில், ரூ.11.30 கோடி ஆளுநரின் சொந்த கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிதியை அரசுக்கு தெரியாமல் செலவிட்டுள்ளனர். பெட்டி செலவுக்கு இவ்வளவு நிதியா என்று கேள்வியை எழுப்பினார்.
இந்த நிலையில்தான் ஆளுநர் ரவி,சில மணி நேரங்களில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இது உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டு சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டம்
“ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புடைய அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவோருக்கு 3 மாதம் சிறைத் தண்டனை. அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம். அல்லது அபராதத்துடன் கூடிய சிறை தண்டனை.
இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை. அல்லது ரூ.5 லட்சம் அபராதம். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
10 லட்சம் அபராதம்
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை. இல்லாவிடில், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கலாம்.
இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் தவறு செய்தால் தண்டனை உண்டு. ஓர் ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. அத்துடன், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.