இஸ்ரோவின் திட்டம் என்ன?
சென்னை: சந்திரயான்-3 வெற்றியை அடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் குழு மிகுந்த உற்சாகம் அடைந்திருக்கிறது. இந்த நிலையில், சூட்டோடு சூடாக, வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி ஆதித்யா எல்1 விண்கலத்தை சூரியனுக்கு ஏவத் தயாராகியுள்ளது.
Table of Contents
சூரியன் ஆய்வுக்கு Aditya L1
சூரியனை விண்கலம் நெருங்குவதற்குள், சந்திரனின் மேற்பரப்பில் ரோவர் மேற்கொண்டிருக்கும் ஆய்வுகளின் முடிவுகள் ஓரளவுக்கு தெரிந்துவிடும்.
இது சூரியனை ஆராய்வதற்கு அனுப்பப்படும் ஆதித்யா எல் 1 பணிகளுக்கும் உதவியாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரோவின் சந்திரயான் திட்டம், மங்கள்யானை அடுத்து முக்கிய திட்டமாக ஆதித்யா எல்1 திட்டம் இருக்கிறது.
சூரியனை பற்றிய ஆய்வு எதற்கு?
நம்முடைய பூமி உள்பட பல்லாயிரம் கோடி கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்களின் அங்கங்களாக இருக்கின்றன.
இந்த நட்சத்திரங்கள் தொடர்ந்து வெளியிடும் ஒளி, வெப்ப ஆற்றல் அவற்றை சுற்றி வரும் கோள்களை உயிர்ப்போடு இயங்க வைத்து வருகிறது. இத்தகைய நட்சத்திரங்களில் ஒன்றுதான் சூரியன்.
சூரியனும், பூமியும்
சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியன் தோன்றியிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதேபோல் பூமி தோன்றி 4.5 பில்லியன் ஆவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
நாம் வசிக்கும் பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள தொலைவு சுமார் 15 கோடி கி.மீட்டர்.
அந்த சூரியனின் ஒளி, வெப்ப ஆற்றல் காரணமாகவே பூமியில் இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு இன்றைக்கு புல், பூண்டு முதல் நாகரிக மனித உலகம் வரை வளர்ச்சி கண்டுள்ளன.
புரியாத புதிர்கள்!
ஆனால் பிரபஞ்சம் எப்படி தோன்றியது. அது எப்போது தோன்றியது? அதன் மூலம் என்ன?நட்சத்திரங்கள் எப்படி உயிர் பெறுகின்றன?
இந்த நட்சத்திரங்கள் எப்படி ஈர்ப்பு விசை மூலம் தன்னை சுற்றி கோள்களை வலம் வரச் செய்கின்றன? ஈர்ப்பு விசையைத் தவிர வேறு ஏதேனும் ஆற்றல் இருக்கிறதா? பிரபஞ்சத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
பூமியில் வாழும் உயிரினங்களின் எதிர்காலம் என்ன? பூமி அழியும் நிலை ஏற்பட்டால், வேறொரு கோளில் மனித சமூகம் குடியேற முடியுமா? போன்ற ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு இன்றைய அறிவியலால் இன்னமும் தெளிவாக பதில் சொல்ல முடியவில்லை.
இதுபோன்ற கேள்விகளுக்கான விடை தேடித்தான் நம் அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனை ஆராய்வதற்கு உலக நாடுகள் சில முயல்கின்றன.
நாசாவும், இஸ்ரோவும்
அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆராய்ச்சியைத் தொடங்கியது. அதேபோல் ஐரோப்பிய விண்வெளி நிறுவனமும் சூரியனை அறிந்துகொள்ள முயற்சிக்கிறது.
அந்த வகையில்தான் இஸ்ரோவும் சூரியனை பற்றிய தகவல்களை அறிய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை சூரியனை நோக்கி பயணப்படுவதற்கு ஏவுகிறது.
குறிப்பாக, சூரியனில் ஏற்படும் சூரிய புயல்களை முன்கூட்டியே கண்டறிவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
சூரிய புயல்களை கண்காணிப்பது ஏன்?
சூரியனில் தொடர்ந்து எதிர்வினை அணுக்கரு இணைவு ஏற்படுகிறது. இதில் ஒளி அணுக்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருக்களை உருவாகின்றன.
இதன் விளைவாக சூரியனின் மையப் பகுதியில் ஹைட்ரஜன் அணுக்கருக்களை அதாவது புரோட்டான்களை ஹீலிய அணுக்கருக்களாக மாற்றுவதில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
எதிர்வினை ஆற்றல்
புரோட்டான்-புரோட்டான் என சங்கிலி எதிர்வினை சூரியனில் 15 மில்லியன் டிகிரி செல்சியல் வெப்பநிலையில் ஏற்படுகிறது. இதனால் ஒளி, வெப்பம் ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் ஆற்றல் உருவாகிறது.
இந்த ஆற்றல் சூரியனின் மையப் பகுதியில் இருந்து மேற்பரப்புக்கு கடத்தப்படுகிறது. அங்கிருந்து விண்வெளியில் கதிர்வீச்சாக மாறி நீண்டதூரத்துக்கு பயணிக்கிறது.
இதன் காரணமாக சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் வெப்பத்தையும், ஒளியையும் பெறுகின்றன.
சூரியப்புயல்
சில நேரங்களில் சூரியனின் சில பகுதிகளில் தீவிர அணுக்கரு இணைவு ஏற்படுவதால் பெரிய அளவில் வெடிப்புகள் சூரியனில் ஏற்பட்டு ஆற்றலை வெளியிடுகின்றன. இதுவே சூரியப் புயல் என அழைக்கப்படுகிறது.
இதுபோன்று திடீரென நிகழும் ஆற்றல் வெளிப்பாடு, கதிர்வீச்சுகள் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 360 டிகிரியிலும் உமிழப்படுகின்றன.
மின்கட்டமைப்புகளுக்கு ஏற்படும் ஆபத்து
இந்த ஆற்றல் நம்முடைய பூமியில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்கைக் கோள்களையும், தரையில் உள்ள தகவல் தொடர்பு அமைப்புகளையும் பாதிக்கக் கூடியதாகும்.
மின்கட்டமைப்புகளும் இதனால் சேதமடைவதுண்டு.
உயிரினங்களைப் பொறுத்தவரை பூமியின் வளிமண்டலமும், காந்தப்புலமும் பாதுகாப்பதால் நேரடியாக சூரியப் புயல்களால் ஆபத்து ஏற்படுவதில்லை.
கேள்விகளுக்கு விடை காண
இந்த சூரியப் புயல்கள் எப்பது ஏற்படுகின்றன? எதனால் ஏற்படுகின்றன? இதனால் இனி வருங்காலத்தில் வரும் பாதிப்புகள் என்ன?
தொலைத்தொடர்பு சாதனங்களை இந்த தாக்குதலில் இருந்து எப்படி பாதுகாக்கலாம்? சூரியப் புயல் வரும் முன்பே எப்படி அடையாளம் காண்பது?
இதுபோன்ற விஷயங்களை தெரிந்துகொள்வதற்கான அடிப்படை அம்சங்களை ஆராயவே ஆதித்யா எல் 1 அனுப்பப்படுகிறது.
4-ஆவது நாடு இந்தியா
இதன் மூலம் சூரியனை ஆராய விண்கலம் அனுப்பும் நாடுகள் வரிசையில் 4-ஆவது நாடாக இந்தியா இடம்பெறுகிறது.
ஏற்கெனவே, அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி முகமைகள் சூரியனுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளன.
ஆதித்யா எல்1 எங்கே செலுத்தப்படும்
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே இரண்டுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை சமமாக இருக்கும் இடத்துக்கு லெக்ரேஞ்சியன் பாய்ண்ட் ஒன் (Lagrangian point one) எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதைச் சுற்றி ஒரு ஒளிவட்டப் பாதையில் இந்த விண்கலம் செலுத்தப்படும்.
லெக்ரேஞ்சியன் பாய்ண்ட் என்றால் என்ன?
சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், கோள்களைச் சுற்றி வரும் துணைக் கோள்கள், துணைக் கோள்களைச் சுற்றி வரும் சிறுகோள்கள் என விண்வெளிப் பாதையில் ஒரு இயற்கை ஒழுங்கு வடிவமைப்பு உள்ளது.
இவற்றில் ஏதேனும் இரண்டுக்கு இடையே ஒரு பொருளை நகர்த்தினால், எந்தக் கோளின் ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கிறதோ அந்த கோளை நோக்கி அந்தப் பொருள் நகர்ந்து செல்லும்.
இரண்டு கோள்களுக்கு இடையே அல்லது கோள்களுக்கும், சூரியனுக்கும் இடையே, ஒரு கோளுக்கும், ஒரு துணைக்கோளுக்கும் இடையே அவற்றின் ஈர்ப்புவிசை ஒரு இடத்தில் சரிசமமாக இருக்கும்.
அதாவது அந்த இடத்தின் ஈர்ப்பு விசை பூஜ்ஜியமாக காணப்படும். அந்த இடம்தான் லெக்ரேஞ்சியன் பாய்ண்ட் என அழைக்கப்படுகிறது.
பூமி, சூரியன்
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே இத்தகைய லெக்ரேஞ்சியன் பாய்ண்ட்கள் ஐந்து இருக்கின்றன.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான நேர்கோட்டில் பூமியின் பக்கம், பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள தொலைவில் பத்தில் ஒரு பங்கு தூரத்தில் லெக்ரேஞ்சியன் பாய்ண்ட் 1 அமைந்திருக்கிறது.
அதேபோல் பூமிக்கு அப்பால் அதற்கு சமமான தூரத்தில் இருப்பது லெக்ரேசியன் பாய்ண்ட் 2.
அடுத்து சூரியனின் மறுபக்கம் இதே தூர அளவில் இருப்பது லெக்ரேஞ்சியன் பாய்ண்ட் 3.
அதைத் தொடர்ந்து இரண்டு கோள்களுக்கு வெளியே ஒருசமபக்க முக்கோண வடிவின் இருபக்க முனைகளிலும் தலா ஒரு லெக்ரேஞ்சியன் பாய்ண்ட் இருக்கின்றன.
இவற்றில், ஆதித்யா எல்1 பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ரேஞ்ச் பாயின்ட் 1 க்கு அருகில் உள்ள வெற்றிட சுற்றுப்பாதையில் நுழைகிறது.
ஆதித்யா எப்போது சுற்றுவட்டப் பாதையை அடையும்?
செப்டம்பர் 2-ஆம் தேதி செலுத்தப்படவுள்ள இந்த விண்கலம், 4 மாத கால பயணத்தை மேற்கொண்ட பிறகே சுற்றுவட்டப் பாதையில் நுழையும்.
அதைத் தொடர்ந்து இந்த விண்கலம் சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிப் பணிகளை திட்டமிட்டமாறு மேற்கொள்ளும்.
லெக்சூரியன் பாய்ண்ட்
இந்த விண்கலம் சூரியனை ஆராய உள்ளதால், இதற்கு ஆதித்யா என பெயரிட்டுள்ளனர். ஆதித்யா என்றால் சூரியன் என்று பொருள்.
ஆதித்யா எல்1 என்பதில் எல்1 என்பது, லெக்ரேஞ்சியன் பாய்ண்ட் ஒன்றை மையமாகக் கொண்டு இந்த விண்கலம் இயங்கவுள்ளதால் ஆதித்யாவுடன் எல்1 இணைக்கப்பட்டிருக்கிறது.
இந்த லெக்ரேட்சியன் பாய்ண்ட்டானது சுமார் ஒன்றரை கோடி கி.மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது..
ஈர்ப்பு விசையின் தாக்கம் என்ன?
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கோளும் தனது சுழற்சியின்போது ஈர்ப்பு விசை பெறுகிறது. அந்த ஈர்ப்பு விசை அந்த கோளின் நிறையைப் பொறுத்து அமைகிறது.
பூமியை விட வியாழன் பெரியக் கோள். எனவே பூமியின் ஈர்ப்பு விசையைக் காட்டிலும், வியாழனின் ஈர்ப்பு விசை அதிகம்.
துணைக்கோளான சந்திரன், பூமியை விட நிறை குறைந்தது. அதனால் பூமியின் ஈர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்பு விசை குறைவானது.
இந்த ஈர்ப்பு விசையின் தாக்கம் ஒரு பொருளின் நிறையை குறைக்கவும், அதிகரிக்கவும் செய்யும்.
இதன்படி, சூரிய குடும்பத்தில் இடம்பெற்ற மொத்த நிறையில் 99.86 சதவீதத்தை சூரியன் கொண்டிருக்கிறது. மற்ற கோள்களின் நிறை 0.14 சதவீதம் மட்டுமே. இதனால்தான் இந்த கோள்கள் அனைத்தும் சூரியனின் ஈர்ப்பு விசைக்கு கட்டுப்பட்டிருக்கின்றன.
ராக்கெட் திறன் எப்படி இருக்க வேண்டும்?
ஒரு ஈர்ப்பு விசையில் இருந்து விடுபட வேண்டுமானால், அதைவிட அதிக எதிர்விசை ஆற்றலை பயன்படுத்தும் பொருளால் மட்டுமே முடியும்.
அந்த வகையில் பூமியின் ஈர்ப்பு விசையைக் கடந்து விண்வெளியை அடைவதற்கு ஒரு ராக்கெட் வினாடிக்கு 11.2 கி.மீட்டர் வேகத்தில் பயணிக்க வேண்டும்.
சூரியன் ஈர்ப்பு விசையைக் கடப்பதற்கு வினாடிக்கு 615 கிலோமீட்டர் வேகத்தில் மேலே செல்வது அவசியம்.
லெக்ரேஞ்சியன் பாய்ண்ட் 1-ஐ தேர்வு செய்தது ஏன்?
சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் 10-இல் ஒரு மடங்கு தொலைவில் அமைந்திருக்கிறது. இந்த பாய்ண்ட்டில் ஆய்வு கலன்களை நிறுத்துவதால், சூரியனை தொடர்ந்து நேரடியாக அந்த கலன்களால் பார்க்க முடியும்.
இந்த இடத்தில் சூரியனுக்கும், பூமிக்கும் இடையே எந்த தடைகளும் ஏற்படாது.
ஆதித்யா ஏவப்படும் நாள்
ஆதித்யா எல்1 விண்கலம் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி ஏவப்படுகிறது. இதுவும் இஸ்ரோவின் மற்றொரு மதிப்புமிக்க ஆய்வாக மலரும் என எதிர்பார்க்கலாம்.