வாழ்க்கையில் நாம சில நேரங்களில் அவமானம் ஏற்படும் நிலை ஏற்படுவது உண்டு. இந்த அவமானத்தை எப்படி சந்திக்க வேண்டும். நாம் அவமானம் சந்திக்க வேண்டுமா? என்பதைப் பற்றித்தான் இக்கட்டுரை கூறுகிறது.
உள்ளடக்கம்
அவமானம் ஏற்படும் போது…
அவமானம் ஏற்படும்போது, அதனால் ஏற்படும் விளைவுகளை 3 வகையாக பிரிக்கலாம். முதலாவது அவமானப்படும்போது அடங்கிப் போய்விடுவது. இரண்டாவது அவமானப்படும்போது கொதித்தெழுந்து கிளம்புவது. மூன்றாவது ரகம் முக்கியமான ஒன்று, அவமானப்பட்டால், அதை சவாலாக ஏற்று முன்னுக்கு வருவதற்கு துடிப்பது.
இந்த மூன்றாவது ரகத்தைச் சேர்ந்தவர்கள்தான் வரலாற்றில் மிகப் பெரிய இடத்தை நீங்காமல் பிடித்து சாதனைப் படைத்தவர்களாக இருக்கின்றனர்.
எப்போது முன்னேறுகிறோம்
மனோதத்துவ நிபுணர்கள் சொல்வதும் இதைத்தான். ஒருவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை சவாலாக ஏற்று வாழ்க்கையில் முன்னேற முயற்சிக்க வேண்டும். அதன் மூலம் அதுவரை தான் கண்ட தோல்விகளுக்கு விடை கொடுக்க முடியும்.
இறை நம்பிக்கை உடையவர்கள் தாங்கள் சந்திக்கும் அவமானங்களை விதி என்று சகித்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம் இறைவன் நிச்சயமாக நமக்கு ஒரு பாதையைத் திறந்து அவமானப்படுத்தியவர்களுக்கு பதிலடி கொடுக்க வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையே காரணம்.
இதுதான் அவர்களை அவமானத்தில் இருந்து விடுபட வைத்து முன்னேற வைக்கிறது.
ஒருவர் எந்த அவமானத்தையும் சகித்துக் கொள்பவராக இருந்தால், அவருடைய வாழ்க்கையில் ஒன்றும் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தைக் காண்பதில்லை.
அதேபோல் அவமானத்தைக் கண்டு கொதித்தெழும் மனப்பான்மையும் பேராபத்து. ஒரே வழி அவமானத்தை உரமாக்கி, அதன் மூலம் வெற்றி காண உழைப்பதே புத்திசாலித்தனமானது என்கிறார்கள் வாழ்க்கையில் பல இடர்களைச் சந்தித்தவர்கள்.
பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் சில அவமானங்களை சந்திக்கும் வரையிலும் எந்த பாதிப்பும் இன்றி, கவலையும் இன்றி எந்த முன்னேற்றமும் இன்றி மகிழ்ச்சியாக காலத்தைக் கழிப்போம்.
நாம் எப்போது அவமானத்தை சந்திக்கிறோமோ அப்போதுதான் நாம் நம்மை அவமானப்படுத்தியவர்களுக்காக முன்னேறிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் ஏற்படும். அதுதான் நம்முடைய வெற்றி பாதை அமைத்து தரும்.