ஹொரனாடு என்று அழைக்கப்படும் ஸ்ரீஷேத்திர ஹோரனாடு கர்நாடக மாநிலம், சிக்மகளூர் அருகே அமைந்திருக்கிறது. இங்குதான் அன்னபூர்ணி திருக்கோயில் அமைந்திருக்கிறது.
Table of Contents
கோயில் எங்கே இருக்கிறது?
இது சிக்மகளூரில் இருந்து 95 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. பெங்களூரில் இருந்து இக்கோயிலுக்கு செல்லும் தூரம் 316 கி.மீட்டர்.
இந்த அழகிய திருக்கோயில் மலைகளுக்கிடையே அமைந்திருக்கிறது. இங்கிருந்து சிருங்கேரி 61 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து 2,726 அடி உயரத்தில் ஹொரநாடு அமைந்திருக்கிறது. இதுஒரு குளிர்ச்சியான மலைப்பிரதேசமாகும்.
சுற்றிலும் வனப்பகுதிகளும், பசுமை நிறைந்த இயற்கையும் சூழ்ந்ததாக இது அமைந்திருக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் கூட இப்பிரதேசம் குளிர்ச்சி பொருந்தியதாக அமைந்திருப்பது சிறப்பு.
இதனால் கோடைக் காலத்தில் சுற்றுலா செல்வோருக்கு இத்திருக்கோயில் தரிசனம் ஏற்றது.
இனிய அனுபவம்
பகல் நேரத்தில் சிக்மகளூரில் இருந்து ஹொரநாடுக்கு காரிலோ, பேருந்திலோ பயணம் செய்பவர்களுக்கு இனிய அனுபவம் காத்திருக்கிறது.
சாலையின் இருபுறமும் அடர்ந்த காடுகள், ஆங்காங்கே கொட்டும் அருவிகள், நீர்வீழ்ச்சிகள் நம் கண்களை பரவசப்படுத்தும்.
அன்னபூரணி திருக்கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிலும் பயணிகள், பக்தர்கள் தங்கிச் செல்வதற்கான விடுதிகள் பல அமைந்திருக்கின்றன. உணவருந்தும் ஹோட்டல்கள் பலவும் உள்ளன. கோயிலிலும் நித்தமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
அகத்தியர் பிரதிஷ்டை செய்த சிலை
அன்னபூரணி திருக்கோயிலின் மூலவர் அன்னபூர்ணேஸ்வரி சிலையை அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாக புராண வரலாறு சொல்கிறது.
எட்டாம் நூற்றாண்டில் அன்னபூரணி திருக்கோயில் எழும்பியுள்ளது. அகத்தியர் பிரதிஷ்டை செய்த சிலை பின்னாளில் சேதமடைந்துள்ளது. அன்னபூரணி திருக்கோயிலுக்கு வந்த ஆதிசங்கரர் சிலையை புதுப்பித்திருக்கிறார்.
அன்னைக்கு அவர், ஆதி சக்தியத் மஹா ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி என புதிய பெயர் அப்போது சூட்டப்பட்டது. கோயிலின் முகப்பும் மிகவும் அழகிய தோரண வாயிலாக அமைந்திருக்கிறது.
தோரண வாயிலை முப்பெரும் தேவியரின் சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. கோயில் வாயிலில் அமைந்திருக்கும் 4 தூண்களிலும் சிம்ம சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. தோரண வாயிலை அடுத்து அகலமான படிக்கட்டுகள் நம்மை ஆலயத்துக்கு அழைத்துச் செல்கின்றன.
ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி
ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி சங்கு சக்கரம் ஏந்திய நிலையில் காணப்படுகிறார். நின்ற கோலத்தில் 4 கரங்களோடு காட்சி தருகிறார். முற்றிலும் தங்கத்தால் ஆன திருமேனியைக் காண கண் கோடி வேண்டும்.
வரிசையில் நின்று காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்மையில் அன்னையைக் கண்டு பரவசம் அடைகிறார்கள்.
புராண வரலாறு
திருக்கோயில் தொடர்பான ஒரு புராண வரலாறும் உண்டு. சிவன், பார்வதி இருவருக்குள் உணவு பற்றிய வாக்குவாதம் எழுகிறது.
அப்போது உணவுப் பண்டங்கள் ஒரு மாயை என சிவபெருமான் கூறுகிறார். அதை பார்வதி தேவி மறுக்கிறார். கோபமடைந்த சிவபெருமான் இயற்கையின் செயல்பாட்டை நிறுத்துகிறார்.
இதனால் தாவரங்கள் வளர்ச்சி நின்றுபோகிறது. உணவுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. ஜீவராசிகள் உணவின்றி தவிக்கின்றன. இதைக்கண்டு வருந்திய பார்வதி தேவி, அன்னபூர்ணியாக அவதரிக்கிறார்.
எல்லோருக்கும் உணவளிக்கும் பணியை தொடர்கிறார். இந்த சூழலில், பிரம்மாவால் ஏற்பட்ட சாபம் காரணமாக, சிவபெருமானின் கையில் திருவோடு ஒட்டிக்கொள்கிறது. அதை அகற்ற முடியவில்லை.
திருவோடு அன்னத்தால் நிரம்பினால் மட்டுமே அது விலகும் என்பது சாபம். இதை அறிந்த பார்வதி தேவி சிவனின் திருவோட்டை அன்னத்தால் நிரப்புகிறார்.
அன்னம் நிரம்பிய நிலையில் திருவோடு சிவனின் கையில் இருந்து விடுபடுகிறது. சிவனின் சாபமும் நீங்குகிறது. அந்த அன்னபூரணியே இத்திருக்கோயிலில் வீற்றிருக்கிறார்.
ஹொரநாடு ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி திருக்கோயில் தரிசனத்தை எளிய முறையில் காண விரும்புவோர் கர்நாடக மாநிலத்தின் சுற்றுலாத் துறை வாரம்தோறும் இயக்கும் தெற்கு கர்நாடகா சுற்றுலா பேருந்தில் முன்பதிவு காண முடியும்.