துறவரம் பூண்ட வட்டி கடை வைத்தி

வட்டிக் கடை வைத்தி கதை
82 / 100

ஒரு ஊரில் வைத்தி என்பவன் வசித்து வந்தான். அவன் வட்டிக் கடை வைத்திருந்தான்.

ஏழைகள் பலரும் அவனிடம் நகைகளை அடமானம் வைத்து வட்டிக்கு பணம் வாங்குவார்கள். அவன் அதிக வட்டி வசூலித்ததால் பல நேரங்களில் ஏழைகளின் நகைகள் வட்டி உயர்ந்ததால் மூழ்கி போய்விடும்.

அதை அவனே எடுத்து வைத்துக் கொள்வேன். இப்படியாக ஏராளமான தங்கம், வெள்ளி நகைகளைச் சேர்த்து வைத்திருந்தான்.

யார் உதவிக் கேட்டு வந்தாலும், அவர்களிடம் பலனை எதிர்பார்க்காமல் உதவ மாட்டான். அப்படிப்பட்டவனுக்கு இரு மகன்கள் இருந்தார்கள்.

இருவருமே சோம்பேறிகள். தந்தையின் வட்டித் தொழிலைக் கூட கவனிக்க தகுதி அற்றவர்களாக இருந்தார்கள்.

சோதித்த கடவுள்

வைத்தி வட்டித் தொழிலில் செய்கிற பாவம் நம்முடைய பிள்ளைகளை பாதிக்கிறதே என்ற வருத்தத்தில் வைத்தியை விட்டு தனித்து சென்றுவிட்டாள்.

இப்படி வட்டித் தொழிலில் அவன் ஏராளமான பணம், பொருள்களை சேர்த்து வைத்த அவன் மாதம்தோறும் திருப்பதி கோயிலுக்கு போவதில் மட்டும் தவற மாட்டான்.

வட்டியில் தனக்கு ஏற்பட்ட பாவத்தை போக்க வேண்டிய திருப்பதி உண்டியலில் சொற்பத் தொகையை போட்டுவிட்டும் வருவான்.

வைத்திக்கு சோதனை தந்தால்தான் அவன் இனி திருந்துவான் என கடவுள் முடிவு செய்தார். அதனால் அவர் துறவி வேடத்தில் அவனை ஒரு நாள் சந்தித்தார்.

உதவிக் கேட்டு வந்த துறவியை பார்த்த அவன், அவருடைய கழுத்தில் வெள்ளி பூணுடன் காணப்பட்ட உருத்திராட்சத்தைப் பார்த்துவிட்டான்.

பெரியவரே… நீங்கள் அந்த உருத்திராட்சத்தை கழட்டி கொடுத்தால், நான் உங்களுக்கு பணம் தருகிறேன் என்றான்.

துறவியும் அவன் கேட்டபடியே உருத்திராட்சத்தை கழட்டித் தந்தார். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர், இந்த உருத்திராட்சம் உங்களிடம் இருக்கும் வரை நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும் என ஆசிர்வதித்து சென்றுவிட்டார்.

தொட்டதெல்லாம் பொன்னான விந்தை

உருத்திராட்சத்தை வாங்கிக் கொண்டு வந்த அவன் பூஜை அறையில் அதை வைத்துவிட்டு, அதன் கதவை சாத்தினான்.

என்ன ஆச்சர்யம்… அந்த கதவு தங்கக் கதவாக மாறியது. அவனுடைய கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

பூஜை அறையில் இருந்த பொருள்களை தொட்டபோது அவையும் தங்கமாக மாறிப்போயின.. அவனுடைய ஆனந்தத்துக்கு அளவே இல்லாமல் போனது.

இந்த அதிசயத்தை உடனே யாரிடமாவது சொல்ல வேண்டும் என்று துடித்தான். ஒரு அறையில் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த இரு மகன்களையும் தட்டி எழுப்பி இந்த அதிசயத்தை சொல்ல ஓடிப்போனான்.

உள்ளே கட்டிலில் தூங்கிய இரு மகன்களையும் தட்டி எழுப்பினான். உங்கள் இருவருக்காக நான் சேர்த்த சொத்துக்கள் போதாது என்று எனக்கு ஒரு அதிசய சக்தியும் இப்போது கிடைத்திருக்கிறது என்று சொன்னான்.

தூங்கிக் கொண்டருந்த இரு மகன்களும் எழுந்திருக்கவில்லை. அவர்களுடைய உடல் மெல்ல தங்கச் சிலைகளாக மாறிப்போயின.

துயரத்தில் ஆழ்ந்த வைத்தி

அய்யோ… என்னுடைய இரு மகன்களும் சிலையாகிவிட்டார்களே.. நான் என்ன செய்வேன் என்று இப்போது புலம்பத் தொடங்கினான்.

பைத்தியம் பிடித்தது போல் அங்கிருந்த பொருள்களையெல்லாம் தொடவே, எல்லாமே தங்கமாகிக் கொண்டிருந்தன. அவன் வெறுப்பின் உச்சிக்கே சென்றான்.

இனி நான் வாழ்ந்து பயனில்லை. இறக்க வேண்டியதுதான் என எண்ணி புலம்பினான்.

வீட்டுக்குள் அவன் சேர்த்து வைத்த நகைகளையெல்லாம் தெருவில் வீசியெறிந்தான். தெருக்களில் நின்று வேடிக்கை பார்த்த மக்கள் தங்களுடைய நகையை அந்த வட்டிக்கடைக்காரன் திருப்பித் தருவதாகக் கருதி அவரவர் நகைகளை எடுத்துக் கொண்டார்கள்.

வீடே தங்கமாக ஜோலித்தது. வீட்டினுள் இருந்த பொருள்களில் வெள்ளி பூண் போடப்பட்டிருந்த அந்த உருத்திராட்சம் மட்டுமே எந்த மாற்றமும் இன்றி இருந்தது.

அதைப் பார்த்த போது, தன்னிடம் அந்த உருத்திராட்சத்தை தந்த துறவி, “இது உங்களிடம் இருக்கும் வரை தொட்டதெல்லாம் பொன்னாகும்” என ஆசிர்வதித்தது நினைவில் வந்தது.

உடனே அந்த உருத்திராட்சத்தை எடுத்துக்கொண்டு துறவி இருக்கும் இடத்தைத் தேடி ஓடினான். நாள் முழுதும் தேடியும் அந்த துறவி கிடைக்கவில்லை.

மனமுடைந்த அவன் ஆற்றில் குதிக்க முற்பட்டபோது, அந்த துறவி ஆற்றில் மூழ்கி எழுந்திருப்பதைக் கண்டான்.

மன்னித்த துறவி

துறவியே… தவறு செய்துவிட்டேன். என்னுடைய பேராசை என்னுடைய வாழ்க்கையையே சூனியமாக்கிவிட்டது. என்னை மன்னித்து விடுங்கள்.

வட்டிக் கடை வைத்தி கதை

இந்தாருங்கள் நீங்கள் கொடுத்த உருத்திராட்சை. நீங்கள் எனக்கு அளித்த ஆசிர்வாதத்தை திரும்பப் பெறுங்கள் என கெஞ்சினான்.

துறவி சிரித்தபடியே, உருத்திராட்சத்தை வாங்கிக் கொண்டு, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி அவனை கடந்து சென்றார்.

இப்போது அவனை பீடித்திருந்த பேராசையும், சுயநலமும் விலகியிருந்தது. இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற உணர்வுப்பூர்வமான அறிவு தோன்றியது.

துறவியாக மாறிய வைத்தி

வீட்டை நோக்கி அவன் நடந்தான். வீடு பழைய நிலைக்கு மாறிப் போயிருந்தது. வீட்டு வாசலில் நின்ற இரு மகன்களும் அவனை வரவேற்றார்கள்.

அவரவர் நகைகளை எடுத்துக் கொண்ட ஏழைகள், வைத்தியை பார்த்து நன்றி சொல்ல காத்திருந்தார்கள்.

வட்டித் தொழிலை கைவிட்ட அவன் தன் மகன்களை வேறு தொழில்களை புரிந்து அதில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை தர்ம காரியங்களுக்கு செலவிடுங்கள் என்று அறிவுரை வழங்கினான்.

தன்னுடைய ஆடம்பர ஆடைகளைக் களைந்து துறவரம் பூண்டு, துறவி காட்டிய பாதையில் நடந்து சென்றான் வைத்தி.

அரசன் சோதித்த இறையருள் சிறுகதை

சாமியாருக்கு எப்படி பொறுமை வந்தது எப்படி? ஒரு நிமிட காமெடி கதை

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mithiran News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading