தமிழ் நாட்டில் மதுவிலக்கு காலத்தின் கட்டாயம்

மதுவிலக்கு
82 / 100

ஆர்.ராமலிங்கம்


சென்னை: தமிழ்நாட்டில் மதுவிலக்கு காலத்தின் கட்டாயம் என்பதையும், இதுவே அதை அமல்படுத்துவதற்கான சரியான தருணம் என்பதையும் தமிழ்நாடு அரசு நிர்வாகம் இப்போதாவது உணர வேண்டும்.

கள்ளக்குறிச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி நகராட்சியின் 7-ஆவது வார்டு கருணாபுரத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த திங்கள்கிழமை கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்திருக்கின்றனர். இந்த சம்பவத்துக்கு காரணம் கள்ளச் சாராயம் அருந்தியதுதான் என்பதை உறவினர்கள் பொதுவெளியில் பேசியிருக்கின்றனர்.


இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகலில் கருணாபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பலரும் கள்ளச் சாராயம் அருந்தியதால் அதிக வயிற்றுப் போக்கு, கை, கால் மரத்து போதல் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஒவ்வொருவராக உயிரிழப்பை சந்திக்கத் தொடங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை மாலை வரை சாவு எண்ணிக்கை 52-ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது என்ன?


கள்ளக்குறிச்சியில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் தங்கு தடையின்றி நீண்ட காலமாக கிடைத்து வருகிறது.

காவல் துறையினரிடத்தில் புகார் தெரிவித்தால், அடுத்த சில மணி நேரங்களில் யார் மீது புகார் தெரிவித்தோமோ அவர்களே வந்து மிரட்டும் நிலை ஏற்படுகிறது.

இதுதான் எங்கள் நிலை என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பலரும் காவல்துறையை குற்றம் சாட்டுகிறார்கள்.

கள்ளச் சாராயத்தை நாடுவது ஏன்?


விஷச் சாராயமாக மாறிய கள்ளச் சாராயத்தை குடித்த பெரும்பாலோர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் பட்டியலின மக்களே.
இவர்கள் அனைவரும் கூலித் தொழிலில் ஈடுபடுவோராக இருக்கிறார்கள். இவர்கள் சில ஆண்டுகளாக காலையில் பணிக்கு செல்லும்போதும், வீடு திரும்பும்போதும் அருகில் விலை மலிவாகக் கிடைக்கும் கள்ளச் சாராய பாக்கெட்டுகளை வாங்கிச் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அரசு மதுபானக் கடைகளில் வாங்கும் சரக்குகளுக்கு குறைந்தபட்சம் ரூ.150 தேவைப்படுகிறது. ஆனால், அதை விட அதிக போதைத் தரும் கள்ளச் சாராயம் 50 ரூபாய்க்கே கிடைக்கிறது.
இதனால்தான் நாள்தோறும் ரூ.200 முதல் 300 வரை சம்பாதிக்கும் ஏழைத் தொழிலாளர்கள் இந்த கள்ளச்சாராயத்தை அருந்தி வந்திருக்கிறார்கள்.

தமிழ் நாட்டில் மதுவிலக்கு

அரசு நடவடிக்கை என்ன?


இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கள்ளக்குறிச்சி மதுவிலக்குப் பிரிவு போலீஸார் உள்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பலர் மீதும் நடவடிக்கை பாய்ந்திருக்கிறது. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து அரசு உயர்மட்ட அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகள் சொல்வது என்ன?


இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரிகளும், அரசு நிர்வாகமும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்க முயலவில்லை என்று தெரிவித்தார்.
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, அரசாங்கம் தூங்கிக் கொண்டிருக்கிறது. விஷச் சாராய மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைக்க பார்த்தது என்று குற்றம் சாட்டினார்.
அத்துடன் பல்வேறு அரசியல் கட்சியினரும் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தவும் வலியுறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள்.

தொடரும் விஷச் சாராய சாவுகள்


கள்ளச் சாராயத்தில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் மெத்தனால் வேதிப் பொருள் போதைக்காக அதிக அளவில் கலக்கப்பட்டதால் அது விஷமாக மாறி பலரின் உயிரை பறித்திருக்கிறது.
இந்த மெத்தனால் லிட்டர் 20 ரூபாய்க்கு கிடைப்பதால், அதை மது தயாரிக்கவும், போதையை அதிகரிக்கவும் கள்ளச்சாராய வியாபாரிகள் பயன்படுத்துகிறார்கள் என்பதை காவல்துறையினர் சொல்கிறார்கள்.
இதுபோன்ற விஷச்சாராய சாவுகள் தமிழ்நாட்டில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்திருக்கிறது.

குறிப்பாக 2001-இல் கடலூர் மாவட்டத்தில் விஷச் சாராயம் குடித்தவர்கள் 53 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
1991 முதல் 2001 வரையிலான 10 ஆண்டு காலத்தில் காலத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விஷச்சாராய சாவுகள் தமிழகத்தில் நடந்திருக்கின்றன. இதில் 341 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மரக்காணம் அருகேயும், செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூரிலும் விஷச்சாராயம் குடித்து 22 பேர் உயிரிழப்பை சந்தித்திருக்கிறார்கள்.
இப்போது நடந்துள்ள விஷச் சாராய சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.

அரசுக்கு இது அழகல்ல


போதைப் பொருள் நடமாட்டம், டாஸ்மாக் கடைகள் மூலம் ஏராளமான குடும்பங்களின் வாழ்வாதாரம் சீர்குலைவு, மதுபான விற்பனையால் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள், சட்டம், ஒழுங்கை பாதிக்கும் சம்பவங்கள் தொடர்வதை சகித்துக்கொண்டு இனியும் ஒரு ஆளும் அரசு இருப்பது அழகல்ல.
அதிமுக ஆட்சியாக இருந்தாலும், திமுக ஆட்சியாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவம் நடக்கும்போது மட்டும் அதிரடியாக அனைத்து மாவட்டங்களிலும் சாராய வேட்டை நடத்தப்படுகிறது.

அதன் பிறகு இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் காவல்துறையின் கடந்த கால சம்பவங்களாக இருந்து வந்திருக்கின்றன.
இந்த விஷயத்தில் காவல்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பதை அதை கட்டுப்பாட்டில் வைத்துள்ள உயர் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தி ஒரு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு அரசு தயாராக வேண்டும்.

மாமூல் வாழ்க்கை


“மாமூல்” என்ற வார்த்தை ஒரு காலத்தில் ரௌடிகளோடு இணைத்துப் பேசும் வார்த்தையாக இருந்தது. ஆனால் மெல்ல இது காவல்துறையையும் அடையாளப்படுத்தும் வார்த்தையாக மாறியிருக்கிறது.
இதற்கு காரணம், விரைவாக மற்றவர்களைப் போல் வசதிப்படைத்தவராக மாறுவதற்கு, மாத ஊதியம் போதாதென்று கூடுதல் வருவாய் ஈட்டும் மனப்போக்கு உடைய சிலர் ஆங்காங்கே காவல்துறையில் இருப்பதால்தான்.

அவர்களைப் பார்த்து புண்ணில் சீழ் பிடித்ததுபோல் மற்றவர்களை நோக்கி மாமூல் மெல்ல பரவத் தொடங்கி இருப்பதால் காவல்துறையில் கடமை உணர்வு மிக்கவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

அவர்களை சரியாக அடையாளம் கண்டு அவர்களை பணிநீக்கம் செய்யும் அளவுக்கு கடுமையான சட்டங்களையும், விதிமுறைகளையும் அரசு கொண்டு வர வேண்டும். இதற்கு உரிய ஆலோசனையை உயர் அதிகாரிகளும் வழங்க வேண்டும்.

காவல் நிலையங்களின் நிலை


அரசு நிர்வாகம் எவ்வளவோ மாற்றங்களை காவல்துறையில் செய்தாலும், இன்றைக்கும் ஏழைகளுக்கு காவல் நிலையத்தில் நீதி கிடைப்பது அரிதான நிகழ்வாக இருக்கிறது. அரசியல்வாதிகளுக்கும், காவல்துறையை சரியாக கையாளத் தெரிந்தவர்களுக்குமே இன்றைக்கும் மதிப்பும், மரியாதையும் காவல் நிலையத்தில் இருப்பதை அறிந்து பாதிக்கப்படுவோர் வேதனைப்படுவது சிறிதளவுக் கூட குறையவில்லை.

தவறுகளை களைய …


பொதுவாக ஒரு துறையின் தலைமை பதவியை வகிப்பவர், அவருக்கு கீழே பணிபுரியக் கூடியவர்களுக்குத்தான் அதிகாரி.

ஆனால் பொதுமக்களுக்கு அவர் ஒரு சேவகன். இந்த அடிப்படை தமிழகத்தில் காமராஜர் காலத்தோடு மறைந்து போய்விட்டது.
இன்றைக்கு பாதிக்கப்படுபவர்கள் பலரும் செல்போன்களை ஆயுதமாகப் பயன்படுத்தி விடியோக்களாக படமெடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட பிறகே நடவடிக்கை எடுக்கும் நிலையில் இன்றைய உயர்மட்ட அதிகாரிகள் இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு மக்களுடைய தொடர்பில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

பொதுவாக, கீழ்மட்டத்தில் பணியாற்றுவோரை பற்றி ஒரு அதிகாரியிடத்தில் பாதிக்கப்பட்டவர் நேரடியாக சந்தித்து அச்சமின்றி புகார் தெரிவிக்கும் நிலை தமிழகத்தில் நீண்டகாலமாக இல்லை. இந்த நிலை காவல்துறையில் ஒருபடி அதிகம்.
ஒரு சராசரி மனிதன் காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளரைக் கூட நேரடியாக சந்திக்க முடியாது. அந்த அளவுக்கு அதிகாரம் மிக்கதாக காவல்துறை இருப்பதாக சாதாரண மக்கள் நினைக்கிறார்கள். இந்த இடைவெளி முதலில் குறைக்கப்பட வேண்டும்.
இதற்கு சைரன் வைத்த காரில் செல்வதை மட்டுமே கௌரவமாகக் கருதும் அதிகாரிகள், மக்களை நேரடியாக திடீரென சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிய பழக வேண்டும். அத்துடன் அந்த மக்கள் அச்சமின்றி அந்த அதிகாரியிடம், தவறு செய்வோரை பற்றி தகவல் தரும் உரிமையை தருவதோடு, அதை கேட்டுக்கொள்ளும் மனநிலையையும் பெற வேண்டும்.

இத்தகைய சூழல் இனி வருங்காலங்களில் உருவாக வாய்ப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. அத்தகையை நடைமுறையை அமல்படுத்த இன்றைய ஆட்சியாளர்களால் செய்ய முடியுமா அல்லது அதிகாரிகள் ஒத்துழைப்புத் தருவார்களா என்பதும் தெரியவில்லை.


திமுக ஆட்சியில் அண்ணா காலத்தில் மதுவிலக்கு இருந்தது. ஆனால் நிதி நிலையைக் காரணம் காட்டி 1971 ஆகஸ்ட் 30-ஆம் தேதி மதுவிலக்கை கைவிட்டவர்தான் மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி.
அதைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எம்ஜிஆரும் மதுவிலக்கை அமல்படுத்த துணியவில்லை. ஜெயலலிதா ஆட்சியிலும், எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியிலும் பல்வேறு முன்னேற்றங்களை டாஸ்மாக் அடைந்தது.
அதிமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடி வந்த ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக் விஷயத்தை மறந்துவிட்டார்.
ஒருபக்கம் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைப்பு மறுபக்கம் மனமகிழ் மன்றங்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளின்போது மதுபானம் பரிமாறலாம் போன்ற அடுத்தக்கட்ட முன்னெடுப்பு பணிகளில்தான் இன்றைய அரசு கவனம் செலுத்துகிறது.


தமிழகத்தில் அரசு விற்பனை செய்யும் மதுபானங்களால் ஏராளமான குடும்பங்கள் சீரழிவது ஒருபுறம், கட்டுப்படுத்த முடியாத கள்ளச்சாராய விற்பனையில் பெருகி வரும் விஷச்சாராய சாவுகள் மற்றொருபுறம் என்பது தொடர்கதையாகவே இருக்கிறது.

அரசு யோசிக்க வேண்டும்


இந்த சீரழிவு தொடராமல் இருப்பதற்கு தங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களின் மீது ஆளும் கட்சி உண்மையான அக்கறை செலுத்த வேண்டும்.

இப்போதாவது காலம் தாழ்த்தாமல் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

டாஸ்மாக் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் வருவாய் இழப்பை சமாளிக்க மாற்று வழிகளுக்கான யோசனைகளை பொருளாதார நிபுணர்களிடம் கேட்டறிந்து அவற்றை அமல்படுத்த வேண்டும்.

ஆளும் கட்சியினர் உள்பட அரசியல்வாதிகள் யாரும் காவல்துறையின் நேர்மையான நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


கள்ளச்சாராய உற்பத்தி, விற்பனை போன்றவற்றைத் தடுக்கக் கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும். கள்ளச்சாராயத்தைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகளும், தண்டனைகளும் கிடைக்க வழி காண வேண்டும்.

காவல்துறையின் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் அதிகாரிகளில் இருந்து கீழ்மட்ட காவலர்கள் வரை கடமை உணர்வோடு செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க பொதுமக்கள் அடங்கிய ரகசியக் குழுக்கள் அமைக்க வேண்டும்.


இதைத்தான் இன்றைக்கு ஆளும் அரசாங்கத்திடம் பாமர மக்கள் எதிர்பார்ப்பது.

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mithiran News

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading