நல்லோர் திருக்குறள் – கதையும் விளக்கமும்

நல்லோர் திருக்குறள்
84 / 100

நல்லோர்க்கு எது அழகு?. இந்த கேள்விக்கு விடை சொல்கிறது நல்லோர் திருக்குறள் கதையும் விளக்கமும்.

ரமாவும் கல்யாண நாளும்

ரமா எங்கே இருக்க?

ஏங்க… அடுப்பங்கரையில் தான் இருக்கேன்.

ஆமா, துணி எடுக்கப் போகணும் சொன்னியே? போன வாரம் தானே எடுத்துட்டு வந்தே. இப்போ என்ன திரும்பவும் துணி எடுக்க போகணும்னுி சொல்றே?

வரவர உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு… அடுத்த வாரம் நமக்கு திருமண நாள் தெரியுமா?

அடடா… மறந்தே போய்ட்டேன்!

அப்பாடி… இப்பவாவது ஞாபகம் வந்துச்சே… அதற்காகத்தான் ஜவுளிக் கடைக்கு போறேன்.

திருமண நாள் வந்தா… அதுக்கும் ஜவுளி எடுக்கணுமா என்ன?

ம்…. கல்யாணம் ஆன ஆரம்ப காலத்துல ஒரு 10 வருஷம் தொடர்ச்சியா நீங்க செஞ்சதத்தான்… இப்ப நான் செய்யப் போறேன். தெரியுமோ?

கல்யாண நாளை நான் மறந்தாலும், நீங்க மறக்காம எனக்கு புடவை எடுத்து தர்றது வழக்கம். அதோட உங்களுக்கும் புது வேட்டி, சட்டை எடுப்பதும் வழக்கம். உங்க பழக்கத்தைத்தான் இப்ப நான் தொடர்றேன்.

சரி… சரி… இப்ப எவ்வளவு பணம் உனக்கு தேவைப்படுது?

ரொம்ப வேணாம். ஒரு பத்தாயிரம் போதும்…

என்னது? பத்தாயிரமா…. ஜவுளி எடுக்க 10 ஆயிரமா…. என்னடி சொல்ற…

அவ்வளவு முடியாதுன்னா சொல்லுங்க… நான் ஜவுளிக் கடைக்கே போகல..

பக்கத்து வீட்டு மாமி பட்டுப் புடவை

நேத்து பக்கத்து வீட்டுக்கு சும்மா போனேன். அந்த மாமி 20 ஆயிரத்துக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கி வந்திருந்தா…. பார்த்ததும் எனக்கு அதை கட்டிப் பார்க்கணும்போல ஆசை வந்துச்சு…

நான் அது மாதிரி ஒரு புடவை எடுக்கனும்னா… இந்த ஜென்மத்துல முடியாது… அதனாலத்தான் 10 ஆயிரம் கேட்டேன். முடிஞ்சா கொடுங்க… இல்லாட்டி பரவாயில்லை.

பச்சையப்பா சில்க்ஸ், ஜெயச்சந்திரன் இங்க போனா… 100 ரூபாய்க்கு எல்லாரும் பாத்துபாத்து கசக்கிப் போட்ட புடவை ஏதாவது ஒண்ணை நான் சேர்த்து வச்சிருக்கிற காசுல எடுத்துக்கிறேன்.

தோ பாரு ரமா… நான் உழைச்சு சம்பாதிக்கிறவன். பக்கத்து வீட்டுல இருக்கிறவர பத்தி உனக்கு நல்லாவே தெரியும்… அவருக்கு பல வழியில் வருமானம். அதிலே அவர் மனைவி எது வேணும்னாலும் வாங்கலாம்… அவங்களோட நம்மல கம்பேர் பண்ணாதேம்மா…

அடப் போங்க… நேர்மைன்னு சொல்லிகிட்டு திரிஞ்சா… கடைசி வரைக்கும் கஷ்டப்பட வேண்டியதுதான். உங்க நேர்மையை யாராவது மதிக்கிறாங்களா… அதை ஒரு தாளில் எழுதி வச்சு கழுத்திலே தொங்க போட்டுக்குங்க…

நீ அப்படியெல்லாம் சொல்லாதே ரமா… நீ நாலும் அறிஞ்சவள். நீயே நம்ம குழந்தைகளுக்கு பாடம் சொல்லித் தரப்போ… நேர்மையா இருக்கனும்… உழைச்சு சம்பாதிக்கனும்… அப்பதான் உன்னுடைய அப்பாவுக்கும், எனக்கும் பெருமைன்னு சொல்லுவியே… அது சும்மாவா….

உனக்கு ஒரு நல்லோர் திருக்குறள் சொல்கிறேன் கேள்.

நல்லோர் திருக்குறள்

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்

(குறள்- 116)

ஒருவன் நடுவு நிலையிலிருந்து நழுவி, பாவத்தைச் செய்ய நினைத்தால் அதுவே பின்னர் தனக்கு வரப் போகும் தீமைகளுக்கான அறிகுறி என்று குறளாசான் சொல்கிறார்.

நல்லோர்க்கு அழகு

சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் நேர்மை இருக்க வேண்டும். நேர்மையற்ற முறையில் சம்பாதிப்பதும் தவறு. அதை முறைதவறாக செலவிடுவதும் தவறு.

நாம் எப்போது நேர்மை தவறுகிறோமோ, அப்போதே ஆன்மாவின் தூய தன்மை மறைந்துவிடுகிறது.

கபடமும் , ஏமாற்றுத் தன்மையும் மேலோங்கி மனதிலே உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவதும் அதிகமாகி விடுகிறது.

இதனால் நாம் ஏழையாக இருக்கிறோம். அவர்களைப் போல் பணக்காரனாக வேண்டும். அதற்காக அவர்களைப் போல தவறான பாதையை தேர்வு செய்ய வேண்டும் என்று நினைப்பதே தவறு ரமா..

இப்போதாவது புரிந்துகொள். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழியை கேள்விப்பட்டது இல்லையா?

நம்மை விட வசதியானவர்களை, வசதிகளை அனுபவிப்பவர்களை பார்ப்பதை விட்டு, நம்மை விட வசதி குறைவானவர்களை எண்ணிப் பார் ரமா…

ஏங்க… பக்கத்து வீட்டு மாமி பட்டுப் புடவை எடுத்திருக்கிறா… நானும் ஒரு பட்டுப் புடவை எடுக்கனும்னு ஆசைப்பட்டது தவறா… இதுக்கு ஒரு மணி நேரம் எனக்கு கச்சேரி பண்றீங்களே…

என் போதாத காலம் நான் இங்கு வந்து மாட்டிக்கிட்டு அவஸ்தைப்பட்டுகிட்டு இருக்கேன்…

எதிர்வீட்டு பங்கஜம்

ரமா…. ரமா… (வீட்டு வாசலில் உரத்த குரலில் எதிர்வீட்டு பங்கஜம் பதற்றமாக கூப்பிட்டாள்)

ரமா… யாரோ வாசல்ல கூப்பிடுறாங்க… பாரு…ன்னார் வீட்டுக்காரர்.

ம்ஹூம்…. ஏதாவது அக்கப்போர் பேச வருவா… அந்த பங்கஜம்… இதோ போறேன்னு சொல்லிட்டு ரமா வாசலுக்கு போனா…

ஏதோ இரண்டு பேரும் ரொபம் சுவாரஸ்யமாக அரை மணி நேரம் பேசிக்கிட்டிருந்தாங்க..

உள்ளே வந்த ரமா… சொன்னா…

ஏங்க… நம்ம பக்கத்துவீட்டு மாமி பாவம்ங்க… அந்த மாமாவை போலீஸார்காரங்க கைது பண்ணிட்டாங்களாம்… டி.வி. நியூஸ்ல அவர் பேர சொல்றாங்களாம். அவமானத்துல, பக்கத்து வீட்டு மாமி கதவை பூட்டிக்கிட்டு வெளியே வராம இருக்காங்க..

நல்லோர் திருக்குறள் கதை

நான் கூட பக்கத்து வீட்டு கதவை தட்டினேன். அவங்க திறக்கலே…

எதுக்கு கைது பண்ணியிருக்காங்களாம்?

ஏன்? மாமி. எதற்காக கூப்பிட்டேள்? எனக் கேட்டாள் ரமா.

மாமா… ஆபிஸ்ல ஒரு சர்பிகேட் கொடுக்க 1000 ரூபா லஞ்சம் வாங்கினாராம். அதை லஞ்ச ஒழிப்பு போலீஸ்காரங்க கையும் களவுமா பிடிச்சுட்டாங்களாம்.

கொஞ்ச நாழி முன்னாடித்தான் டி.வி. செய்தில சொன்னத கேட்டுட்டு பங்கஜம் ஓடி வந்து சொன்னா…

மாமி… பாவம்ங்க…

சரி… சாப்பாடு வைக்கிறேன். சாப்பிடுங்க… நான் இன்னைக்கு ஜவுளிக் கடைக்கு போகலே…

நாளைக்குத்தான் போறேன். வருஷம் தவறாம புடவையும், வேட்டி, சட்டையும் எடுத்துகிட்டு வர்றோம். இந்த வருஷம் தவறக்கூடாதுங்கிறதால நம்ம வசதிக்கேற்ப புடவை, வேட்டி, சட்டை எடுத்துகிட்டு வரேன்னு சொல்லிட்டு சமையல் கட்டுக்கு போனா ரமா.

நேர்மை என்றைக்கும் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடாது. அது என்றைக்கும் நமக்கு பாதுகாப்பைத்தான் தரும்.

பணமும், பகட்டும்தான் வாழ்க்கை என்று நினைப்பவர்கள் நாளும் உறங்க முடியாமல் தவிப்பது வாடிக்கை. ஆனால் நமக்கு இருக்கும் வசதியே போதும், நிம்மதியே வேண்டும் என்று நினைப்பவர்களை எந்த ஆபத்தும் அண்டாது என்பதே உண்மை.

இதைத்தான் குறளாசன், தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய துணிந்தால், அதுவே தான் கெடப்போவதற்கு அறிகுறி என்று அழகாகக் கூறியிருக்கிறார்.

இந்த பழக்கம் யார்கிட்டே இருந்து வந்துச்சு…

திருப்பதி லட்டு: பக்தர்கள் நம்பிக்கையுடன் சாப்பிடலாமா?

84 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *