Young Generation: பாதுகாப்புக்கு என்ன தேவை?

young generation பாதுகாப்புக்கு எது தேவை
75 / 100

வெ நாராயணமூர்த்தி 

செல்வத்தை மட்டுமே குறியாகத் தேடும் கலாசாரத்தை ஏற்று உலகமே வேகமாக மாறிவரும்
நிலையில், இன்றைய இளைய தலைமுறையை (Young Generation) பாதுகாப்பது எதுவாக இருக்கும் என்பது பலரும் கேட்கும் கேள்விகளில் ஒன்று.

இதைத்தான் என்னிடம் ஒரு இளம் நண்பர், வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை பண்புகள் இந்த நவீன காலத்துக்கு எப்படி பொருந்தும்? என்று என்னைக் கேட்டார்.

இது நான் மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறையினர் எழுப்பும் கேள்வி’ என்றார் அவர். 

இளையத் தலைமுறை கேள்விக்கு என்ன பதில்

முக்கியமான கேள்வி. பதில் சொல்கிறேன், கவனமாகக் கேள், என்றேன்.

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி பயனடைந்து வந்த வேத சாஸ்திரங்களுக்கு, இந்த பாரம்பரிய கலாசார வழிகாட்டிகளுக்கு, ‘இக்கால நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

அவைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ நம் இளையத் தலைமுறையினர் தயங்குகிறார்கள்.

அனைத்து கலாசாரங்களும் சங்கமித்து ‘உலகமயமாகி’ வரும் இந்தக் காலத்தில் வேதமாவது, பண்டைய கலாசாரமாவது! என்று அவர்கள் எள்ளி நகையாடுவது நம் கண்கூடாகக் காணும் ஒரு சோக நிகழ்வு.

துரதிஷ்டம்

உலகத்துக்கே ஆன்மீக வாழ்வியல் தத்துவத்தை பறைசாட்டிய இந்த மண்ணில், வேகத்தையும், சுயநலத்தையும் பொருளாதார உயர்வை மட்டுமே மையமாகக் கொண்ட போக்கு காணப்படுகிறது.

தனிமனித-சமுதாய தர்ம ஒழுக்கநெறிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் இந்த நவீன வாழ்வியல் மாய தத்துவத்தை, நம்  இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டது துரதிருஷ்டம்.

இந்த நிலைக்கு நாம் அனைவரும் ஒருவகையில் காரணம் என்று நினைக்கிறேன். உண்மையான ஆன்மீகக் கல்வியையும், வாழ்வியல் பண்புகளையும் அவைகளுக்குள்ள நெறிமுறை மேம்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தரும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர தவறிவிட்டோம்.

பெற்றோர்கள் என்ற வகையில் நாமும் தெரிந்து கொள்ளும் வாய்பை இழந்து விட்டோம்.
இப்போதாவது இந்தத் தவறை உணர்ந்து இந்த நிலைமையை சரி செய்ய முயல்வது நாம்
அனைவரின் சமுதாயக் கடமையாகும்.

தெரிந்துகொள்வோம்

முதலில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். வேதங்கள் சூத்திரங்களாலும், கவிநயம்
கொண்ட பாடல்களாலும், செய்யுள் நடைகளாலும் ஆனவை.

காலங்களைக் கடந்தது. இந்த உலகைப் படைத்த பரம்பொருள் அருளியது. தனிமனித, சமுதாய வாழ்வியல் தத்துவக் களஞ்சியம் இவை.

எப்போது அருளினார்? உயிரினங்கள் தோன்றியபோது! 

அது எப்போது? விவரிக்கமுடியாத ஒரு காலத்தில்! மனிதன் யோசிக்கத்தொடங்கும் முன்!! பல ‘யுகங்களுக்கு’ முன்னால் என்று சொல்லலாம்.

காலப்போக்கில் பல அழிந்தன

அக்காலத்தில் வந்த ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் வேதங்களை உணர்ந்து, உள்வாங்கி அவைகளுக்கு விளக்கம் அளிக்க எளிய நடையில் பாசுரங்களை (உபநிஷத்துக்கள்) எழுதினர்.

அவைகளில் ஒரு பகுதி  குருகுல (குரு-சிஷ்ய பாரம்பரிய) வழியில் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இன்றும் நம்மிடையே வலம் வந்துகொண்டிருக்கிறது.

பெரும்பாலானவை பாதுகாக்கப்பட முடியவில்லை. காலப்போக்கில் அழிந்துபோனது. 

வேதாந்தம் என்ன சொல்கிறது?

வேதங்களின் சாராம்சம் வேதாந்தம். இது என்ன? நாம் அனைவரும் தெய்வத்தால்
படைக்கப்பட்டவர்கள். தெய்வீகமானவர்கள்.

‘நம் வாழ்வின் பயனே இந்த தெய்வீகத்தை உணர்வதுதான்’. அதே போல மற்ற உயிர்களில் உள்ள அதே தெய்வீகத்தையும் உணர்வது.

நம்மை உணர்ந்தால், உலகையும் அதன் பின்னணி உண்மையையும் உணரலாம். நம்மைப்
படைத்த பரமனை உணரலாம். பிறவிப் பயனை அடையலாம். இந்த உன்னத நிலையை
உணர்வதற்கான வழிமுறைகளைத்தான் வேதாந்தம் சொல்கிறது.

மூன்று நிலைகள் எவை?

நம் ஐந்து புலன்கள் வழியாக நமக்கு ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த உலகை
தெரிந்து கொள்ளும் வழி ஆரம்ப நிலை (பிரதிக்க்ஷை அனுபவம்).

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நம் புத்தியைப் பயன்படுத்தி சில அனுபவங்களைப் பகுத்தறிவது அடுத்த நிலை (பரோக்க்ஷ அனுபவம்).

இந்த இரண்டு அனுபவ நிலைகளும் இல்லாமல், இந்த இரண்டு நிலைகளையும் தாண்டி சில அனுபவங்களை (ஐம்புலன்களையும், புத்தியையும் பயன்படுத்தாமல்) நேரடியாக உணர்வது மூன்றாம் நிலை (அபரோக்க்ஷ அனுபவம்).

இந்த மூன்று நிலைகளும் நம்மையும், நம்மை சுற்றி நடக்கும் இந்த உலகைப் பற்றியும் அதையும் கடந்து நம் எல்லோரையும் இயக்கும் மஹா சக்தியை உணரக்கூடிய வழிகள் என்று வேதாந்தம் கூறுகிறது.

தேடலுக்கான சில வழிகள் எவை?

அத்வைதம், விசிஷ்ட அத்வைதம், த்வைதம் ஆகிய மூன்று சித்தாந்த வழிமுறைகளில்
உணரலாம் என்பது பிற்காலத்தில் வேதங்களுக்கு விளக்கம் அளித்த குருமார்கள் சொன்னார்கள்.

ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வர் ஆகியோரது கருத்து. இதைத்தான் உண்மையான ஆன்மிகம் என்று வகைப்படுத்தினாலும் இது நம்மையும் நம்மைப் படைத்தவனையும் தேடும்  உண்மையான ‘தேடல்’.

தவம், பக்தி, மந்த்ரங்கள், ஜபம், யோகம், யாகம், ஹோமம், பூஜைகள், குரு சேவை
போன்றவை இந்தத் தேடலுக்கான சில வழிகள்.  ஆனால் இது எளிதல்ல. இங்கேதான் பிரச்னை தொடங்குகிறது.

உலகை அடையாளம் காட்டுவது எது?

நாம் பார்க்கும், உணரும் இந்த உடல் வெறும் தசையாலும், எலும்பாலும், ரத்தாலும் மட்டுமே
ஆனது அல்ல.

இதற்குள்ளே இன்னும் நான்கு கூடுகள் (கோஷங்கள்) உள்ளன. இந்த உடல்
‘அன்னமய கோஷம்’. உணவால் ஆனது.

அடுத்த அடுக்குகளாக உடலை இயக்கக்கூடிய ப்ராணமய கோஷம், எண்ணங்களையும் உணர்வுகளைக் கொண்ட ‘மனோமய கோஷம்’, தேவை-
தேவை இல்லாதவைகளை முடிவு செய்யும் (புத்தி) ‘விஞ்ஞானமய  கோஷம்’. இவைகளுக்கும் உள்ளே ஆதியாக, அமைதியும் ஆனந்தமும் தாண்டவமாடும் ‘ஆனந்தமய கோஷம்’.

இந்த ஐந்து கூடுகளையும் விட்டு விலகி, இவைகளின் நடவடிக்கைகளை ஒளிர்வித்து, இந்த ஐந்து கோஷங்களின் வழியாக உலக அனுபவங்களை அடையாளம் காட்டுவது சதா
ஸ்வயப்பிரகாசமாக  ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆத்மன்.

நொடியில் உணர எது தேவை?

இதுவே களங்கமில்லாத, அழிவில்லாத, நம் உண்மையான சொரூபம்-பரப்ரம்மம். இது வேதங்கள் சொல்வது.
இந்த உன்னத நிலையை உணர, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்து உணர்பவர்களும் உள்ளனர்.

ஒரு ப்ரம்ம குருவின் உதவியுடன் ஒரே நொடியுள் உணர்ந்தவர்களும் உள்ளனர். பரப்ரம்ம சொரூபத்தை உணர வேதாந்தம் பல நெறிமுறைகளை, ஒழுக்கப் பண்புகளை,
வாழ்வியல் தத்துவங்களை பட்டியல் போட்டு காட்டுகிறது.

அவைகளில் முற்றும் உணர்ந்த ஒரு குருவின் துணையோடு இந்த ஆன்மீகத் தேடலை மேற்கொள்வதே எளிமையான வழி.

சாத்தியமானதா?

யோசித்துப் பாருங்கள். நாமே வேத சாராம்ஸங்களை கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு உணர்ந்து தெளிவடைவது என்பது இந்தப் பிறப்பில் சாத்தியமா என்று கூட நமக்குத் தெரியாது. 
இப்படி கஷ்டப்பட்டு எதற்கு உணரவேண்டும்? நமக்குள் மறைந்து இருக்கும் இறைநிலையை
உணருவதால் என்ன பயன்? இத்தகைய வேத நெறிமுறைகள் எளிமையானவை அல்ல. நம் மேல்
நம்மைப் படைத்தவனுக்கு அக்கறை இருந்தால், இந்த உணர்வை அவரே தரட்டுமே? நாம் ஏன்
தேடிப்போகவேண்டும்?

மேலும் தற்போது இவைகளை கற்றுத்தரவோ யாரும் இல்லை, கற்றுக்கொள்ளும் பக்குவமும்  நேரமும்  நமக்கு இல்லை.

அதையும் தாண்டி, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் இவை எப்படி பயனளிக்கும் என்பதுதான் இப்போதுள்ள இளையதலைமுறையின் கேள்வி.

எது நிலைத்தடுமாற வைக்கிறது?

 ஏன் அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள்? எதார்த்தம் என்று நினைத்து குதர்க்கவாதிகளாகி
தங்களை கெடுத்துக்கொண்டு வருகின்றனர்.

காரணம் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இன்றைய ‘கல்வி’ அவர்களை நிலை தடுமாற வைத்துள்ளது.

இயல்பான தார்மீக சிந்தனைகள் திசை திருப்பப்பட்டு, தாங்கள் யார் என்று
தெரிந்துகொள்ளவோ தங்களுக்குள் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதோ அவர்களுக்கு
அவசியம் இல்லை என்று அவர்களை நினைக்கத் தூண்டுகிறது.

இந்த நவீனக் கல்வியும் தவறான தொழில்நுட்பத் தகவல் சாதனங்களும் அவர்களுக்கு வேகத்தையும், சுயநலத்தையும், பொருளீட்டுவதை மட்டுமே சொல்லித் தருகிறது.

இதற்காக மட்டுமே அவர்களைத் தயார் செய்கிறது. அவர்களில் புதைந்துள்ள தெய்வீகச் சிந்தனைகளை, அஹிம்சை தத்துவங்களை சிதைக்கிறது.

அல்ப சந்தோஷம்

இதற்கு ஒத்தாசையாக இங்கே நிலவும் அரசியல் அமைப்புகள் இந்த நிலைமையை மேலும்
சீரழிக்கின்றன.

இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடை, உடை, பாவனைகளையும், கலாசார கண்ணியங்களையும் மறந்து விட்டனர்.

தங்களின் இயல்பான தார்மீகச் சிந்தனைகளையும் துறந்து தங்களை ஹிம்ஸித்துக் கொள்வதோடு மற்றவர்களை ஹிம்ஸிப்பதிலும் தவறில்லை என்று போக்கில் வளர்கின்றனர்.

இவர்கள் தங்களை முட்டாள்களாகவும், முரடர்களாகவும் வளர்த்துக் கொள்கின்றனர். இதில் வறட்டு கௌரவத்தையும், அந்தஸ்தையும், சுயமரியாதையையும் கலந்துக் கொண்டு அல்ப
சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர்.

அதர்ம பண்புகள் போதிப்பு

தெளிவான ஆன்மிக சிந்தனைக்கு தங்களை தயார் செய்துகொள்ளும் நிலை தவறி, முன்னோர்கள் விட்டுச்சென்ற தார்மீக வாழ்க்கை நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத கோழைகளாக வலம் வருகின்றனர்.

இந்த நவீன கல்வி முறை, காலம் காலமாக கட்டிக் காத்துவந்த சமுதாய, கலாசார  தார்மீக
நெறிமுறைகளில் இருந்து விலக்கி, ஒரு செயற்கையான, அதர்ம பண்புகளை போதிக்கிறது.

மாறி வரும் குடும்ப சூழல், சமுதாய மாற்றங்கள், இலக்கை அடைய எதையும் செய்யலாம் என்ற மேலைநாட்டு கலாசார தத்துவங்கள் அவர்களைத் தவறான வழியில் செல்லத் தூண்டுகிறது.

தார்மீக சிந்தனைகள் இழப்பு

குழம்பி நிற்கும் அவர்களைத் தங்கள் கலாசாரத்தையே, தங்கள் இயல்பான நற்குணங்களையே, பண்புகளையே மறக்கச் செய்தவிட்டன.

தங்களையும், இந்த சமூகத்தையுமே  எதிர்க்கும் அசட்டு தைரியத்தையும், வரட்டு ஆணவத்தையும் தந்து அவர்களை சுயநலப் பேதைகளாக்கியுள்ளது.

அவர்கள் தன்னம்பிக்கையையும், தார்மீக சிந்தைகளையும் இழந்து, உண்மையை
ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

கோவில்களிலும் தெய்வ நம்பிக்கையையும் தவிர்த்து தங்களுக்குள்ளேயே அல்லல் படுகின்றனர். இந்த நிலை அவர்களை தங்களையும் தங்களைச் சுற்றி உள்ள அனைத்தையுமே சந்தேகிக்க வைக்கிறது.

young generator guide

ஆன்மிகம் தேவையில்லாததா?

சுயநலமே பிரதானமாகி மற்றவர் நலன் அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்றாக ஆக்கிவிட்டது.

காலங்காலமாக கட்டிக் காத்த குடும்ப உறவுமுறை கலாசாரம் அவர்களுக்கு மரியாதை இல்லாத சுமையாகிவிட்டது.

ஆன்மீகத்தை விட்டும் தங்களை விட்டுமே  வெகு தூரம் விலகிப் போய்விட்ட
இவர்கள் ‘ஆன்மிகம் என்பது தமக்குச் சம்பந்தமில்லாதது, தேவையில்லாதது, இந்தக்
காலத்துக்குப் பொருந்தாதது’ என்ற முடிவுக்கு வருவதற்கு இதுதான் காரணம்.

வாழ்வியல் பண்புகள்

அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட வேண்டும்.

ஆணித்தரமான ஆன்மிகம் கலந்த நன்னெறி போதனைகளைகளை எளிமையாக்கிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

தங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். உண்மையான வாழ்வியல் பண்புகளோடும் ஒழுக்க நெறிமுறைகளால் மட்டுமே  அவர்களால் தங்களையும், இயல்பு நிலையான தெய்வீகத்தையும் உணர முடியும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

தெய்வீகத்தை உணரலாம்

அப்போதுதான் அவர்கள் அனைத்து உயிர்களிடமும் தெய்வீகத்தை உணர முடியும்.

தன்னுள் இருப்பவனே அனைத்து உயிர்களிலும் இருக்கிறான் என்று உணர்வு வரும்போது அனைவரும் ‘தானே’ என்றல்லவா  நினைக்க முடியும்?

இங்கே எப்படி ஏற்றத் தாழ்வு வரும்? சுயநலம் எங்கிருந்து வரும்? மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கவோ அதில் ஈடுபடவோ எப்படி இயலும்?

இதுவல்லவோ உண்மையான சமத்துவம்? மனிதநேயம்? இதுவல்லவோ  உண்மையான உயர்நிலை வாழ்வியல்?

மனிதகுல வழிகாட்டிகள்

வேதங்களில் சொல்லியுள்ள தார்மீக வழி முறைகளையும், உண்மையான மனித
கலாசாரத்தையும், ஒன்பது வகையான ஒழுக்கப் பண்புகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

அமைதியையும் ஆனந்தத்தையும், எண்ண ஸ்வதந்த்ரத்தையும் பெற வாய்ப்பு பெறலாம் என்ற கருத்தை அவர்கள் உணரச் செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி.

 ‘வேதங்கள் காலத்தைக் கடந்தவை. எந்தக் காலத்திற்கும் பொருந்தும் மனிதகுல வழிகாட்டிகள்.
நவீன காலத்துக்கும் ஏற்ற உண்மையான வாழ்க்கைத் தத்துவங்களை வேதங்களால் மட்டுமே தர முடியும்’ என்ற கருத்து அவர்கள் மனதில் ஆழமாக பதியவேண்டும்.

நல்வழி தத்துவம்

‘நாம் ஒழுக்கப் பாதையில் செல்லும்போது மட்டுமே நமக்கு பாதுகாப்பும், நிம்மதியும், குறையற்ற மன நிறைவும், ஆரோக்யமும் ஐஸ்வரியமும், அமைதியும் உண்மையான ஆனந்தமும், ஸ்வதந்த்ரமும் கிடைக்கிறது.

இந்த நிலை மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். ‘என் ஒழுக்கப்
பாதை மற்றவர்களையும் நல்வழிப் படுத்தும்’ என்ற தத்துவம் அவர்கள்
தெரிந்துகொள்ள வேண்டும்.

‘இந்த உலகத்துக்கு தேவையானது தன்னையும் தெய்வத்தையும் புரிந்துகொள்ளும் ஆன்மிக வழி.
அது ஒன்றுதான் உண்மையான செல்வத்தையும், அமைதியையும், ஆனந்தத்தையும்,
பாதுகாப்பையும், வளர்ச்சியையும் தனி மனிதனுக்கு மட்டுமல்லாது உலக சமுதாயத்துக்குமே அளிக்கவல்லது.

இது ஆன்மீகத்தால் மட்டுமே சாத்தியம்’  என்ற மகத்தான உண்மையை உணரவைக்க வேண்டும்.

அவித்ய காம கர்ம’ என்பது தவறான கல்வி, விவேகமில்லாத இச்சைகளிலும் கர்ம வினைகளிலும் அவர்களை மேலும் சிக்க வைக்கும் என்ற உண்மையை
அவர்கள் உணரச்செய்ய வேண்டும். 
தாங்களாகவே அழிவைத் தேடி தங்கள் வாழ்க்கையை வேகமாக கரைத்துக்கொண்டு வரும் இந்த இளைய சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் உண்மையான ஆன்மீகச் சொரூபத்தை உணரச் செய்வது நம் பொறுப்பு.

ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்

இன்றிலிருந்து நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் குழந்தைகளிடம் இக்கருத்துகளை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். கோவில்கள், புண்ணியஸ்தலங்கள், குரு ஆசிரமங்கள் போன்ற நம்பிக்கை நிறுவனங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல ஒவ்வொரு வாய்ப்பையும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குருவருளின் முக்கியத்துவத்தையும் வேத சாஸ்திர நற்பண்புகளை பற்றியும் தொடர்ந்து அவர்களைக் கேட்கச் செய்ய வேண்டும்.

வேத சாஸ்திரங்கள் அருளியுள்ள ஆன்மிகம் மட்டுமே அவர்களைச் செம்மை படுத்தக்கூடிய ஒரு அருமருந்து.

இதனால் மட்டுமே தனிமனித ஒழுக்கமும், சமுதாய அமைதியும் வளர்ச்சியும் கிடைக்கும். குற்றங்கள் இல்லாமல் போகும்.  உண்மையான பேரானந்தத்தை இன்றைக்கும்
என்றைக்கும் அனைவரும் உணர முடியும்.

ஆத்ம போதனை

இதற்கு முதலில் நம்மை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் புதைந்துள்ள பரப்ரம்ம
சொரூபத்தை உணரவேண்டும்.

அதன் பலனை நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் குறிப்பாக இளையவர்கள் தெரிந்து கொள்ள ஒரு பெரிய இயக்கத்தைத் துவங்க வேண்டும்.

அதன் வழியாக ஆன்மிக கலாசாரத்தின் மஹிமையை, அதில் பெறப்படும் பரவாசத்தை, பாதுகாப்பை, நிம்மதியை, ஆழ்ந்த அமைதி நிலையை, ஆத்ம போதனையை, ஸம்ஸார சக்கரத்திலிருந்து பெறப்போகும் விடுதலையை உணரச் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களை இந்த நவீன மாய சித்தாந்தங்களிலிருந்து காப்பது கடினம். இந்த
இளைஞர்களின்  உதவியோடுதான் அடுத்தப் பல தலைமுறைகள் பண்பட வாய்ப்புள்ளது! இந்த தேசம் முன்னேற வாய்ப்புள்ளது!

தான் கேட்ட விஷயங்களை அசை போடும் வகையில் இளம் நண்பர் ஆழந்த யோசனையில்
மூழ்கிவிட்டார்.

75 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *