About L. இராஜேந்திரன்

பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பிறகு அறம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வருபவர். குறளமுதக் கதைகள் நூலின் ஆசிரியர். அகில இந்திய வானொலி ஆன்றோர் சிந்தனையில் பங்கேற்றவர். ஜினநேசன் என்ற புனைப் பெயரும் இவருக்கு உண்டு.

எண்ணித் துணிக கருமம்: திருக்குறள் கதை 10

குறளமுதக் கதைகள் வரிசையில் இடம்பெறும் திருக்குறள் கதைகள் 10-இல் எண்ணித் துணிக கருமம் என்ற திருக்குறளுக்கான கதையும், குறளுக்கான விளக்கமும் இடம்பெறுகிறது.

எண்ணித் துணிக கருமம்

தர்ம நாதரை அவரது நண்பர்களான விமலரும் ,பார்சுவரும் சந்திக்கச் சென்றார்கள்.

தர்மர் அவர்களை வரவேற்றார்.

மூவருமாக உரையாடத் தொடங்கினார்கள்.

பார்சுவர், தர்மரே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்பு ஆராய்ந்து அந்தச் செயலைச் செய்ய வேண்டும் அல்லவா? என்றார்.

ஆமாம், அதில் என்ன தங்களுக்கு சந்தேகம்? எனக் கேட்டவர், “எந்த ஒரு செயலையும் செய்யத் தொடங்கும் முன் அச்செயலை நன்கு ஆராய வேண்டும். .அவ்வாறு தொடங்கியச் செயலைப் பின்னர் பார்த்துக் கொள்வோம் என்று நினைப்பது கூட குற்றமாகும்”.

இதைத்தான் தெய்வப் புலவரான திருவள்ளுவர் அழகாக ஒரு குறட்பாவில் எடுத்துரைத்துள்ளார் .

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

(குறள் – 467)

பத்ம புராணம்

பத்ம புராணத்தில் ஒரு காட்சி வருகிறது. அனு மஹானின் தந்தை பவணஞ் சயன். அவன் போருக்குப் புறப்பட்டுப் போகிறான். செல்லும்போது மானஸரோவர் ஏரியின் அருகே தங்குகிறான்.

அன்று அந்த நீர் நிலையின் கரையில் சக்ரவாகப் பெண் பறவை தன் இணையான ஆண் பறவையை நினைத்து வருந்துவதைப் பார்க்கிறான்.

அதனால் தன் மனைவியின் நினைவு அவனுக்கு வந்துவிட்டது. திருமணமாகி பல ஆண்டுகள் கழிந்தமையால் அவளைக் காணவும் விழைந்தான்.

தன் நண்பனிடம், “போருக்குச் செல்லும்போது மனைவியின் நினைவு வருதல் தவறே. மேலும் போருக்குச் செல்லாமல் திரும்புவதும் தவறு என்பதையும் உணர்ந்துள்ளேன்” என்றான்.

என்ன செய்வது? இன்றிரவே அவளைக் கண்டு திரும்பி விடுவேன் என்று கூறுகிறான் .

அவன் நண்பனும் பவணஞ்சயனின் மனைவியான அஞ்சனாதேவி இருக்கும் மாளிகை வரை அழைத்துச் செல்கிறான். பணிப் பெண் மூலமாக சந்திக்க வைக்கின்றான்.

பவணஞ்சயனும் அஞ்சனாவின் அறையில் தங்குகிறான்.

இப்போது புரிகிறதா? போருக்குச் செல்ல நினைத்தவனுக்கு சம்சாரத்தின் நினைவு வரலாமா?

குறட்பா விளக்கம்

இதனைத் தான் ஒரு செயலைச் செய்ய நினைக்கத் தொடங்கும்போது ஆராய்ந்து ஈடுபட வேண்டும். இல்லையேல் பின்பு செய்வோம் என நினைத்தல் கூட குற்றமாகும் என்கிறார். இதனையே இக் குறட்பா தெளிவுபடுத்துகிறது என்றார்.

தர்மரே! அருமையான குறள் கூறி விளங்க வைத்தீர்கள் என்று சொல்லி நண்பர்கள் விடை பெற்று சென்றார்கள்.

முயற்சி கைக்கொடுக்குமா? திருக்குறள் கதை 9

திருக்குறள் கதைகள் 9 – முயற்சி கைக்கொடுக்குமா என்பதற்கான கதையைத் தாங்கியது. எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயமும் இதில் அடங்கியிருக்கிறது.

அரட்டை மன்னன்

தீபன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன். சக நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலேயே கவனம் செலுத்தி வந்தான்.
அவனது தந்தையோ அரட்டை அடிப்பதை கைவிட்டு, படிப்பில் கவனம் செலுத்து என்று நாள் தவறாமல் சொல்லி வருவது உண்டு.

ஆனால், அதைப் பற்றி அவன் கவலைப்படவே இல்லை. முதல் பருவத் தேர்வு வந்தது. அவனது நண்பர்கள் படிப்பதில் நாட்டம் செலுத்தத் தொடங்கினர்.

தீபனோ நம்ம பக்கம் ஆண்டவன் இருக்கிறான். நாம் ஏன் கவலைப்பட வேண்டும் என்று அலட்சிய மனப்பான்மையோடு படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.

கடவுளை நம்பிய தீபன்

தேர்வு நாள் வந்தது. நேராக முதலில் கோயிலுக்கு போனான். கடவுளை வணங்கினான். கடவுளே எனக்கு அதிக மதிப்பெண் பெற்றுத் தர வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொண்டான்.

இப்போது அவன், தேர்வில் நாம் அதிக மதிப்பெண் பெற்றுவிடும் என்ற திருப்தியோடு தேர்வை எழுதினான்.

தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கு அவனுக்கு தெரிந்ததை எழுதி வைத்தான். முதல் பருவத் தேர்வு ஒரு வழியாக நிறைவடைந்தது.

தேர்வு வினாத் தாள் திருத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் ஒவ்வொரு மாணவராக அழைத்து விடைத் தாளை வழங்கினார்.

காத்திருந்த அதிர்ச்சி

தீபனும் விடைத் தாளை பெற்றான். அவன் தன்னுடைய நண்பர்களை விட மிக குறைந்த மதிப்பெண்களை பெற்றிருந்து அதிர்ச்சி அடைந்தான்.

வகுப்பறையிலேயே அழுகை அவன் கண்களில் கண்ணீரை தேக்கத் தொடங்கியது. ஒரு வழியாக சமாளித்து வீட்டுக்கு ஓடி வந்தான்.

தந்தை தினமும் சொல்வாரே படி… படி… என்று. இப்போது மதிப்பெண் குறைவாக வாங்கியிருக்கும் நிலையில் அவர் எப்படி வருந்துவார் என்பதை உணர்ந்து அவனுக்குள அச்சம் ஏற்பட்டது.

நான் அரட்டை அடிப்பதில் மட்டுமே கவனத்தை செலுத்தினேன். ஆனால் நண்பர்களோ, அரடடை அடிக்கும் நேரத்தில் அரட்டை அடித்துவிட்டு, படிக்க வேண்டிய நேரத்தை சரியாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அதனால் நண்பர்கள் நம்மை கேலி செய்வார்களே என்ற ஆதங்கமும் அவனுக்கு வந்தது. நாம் எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று நான் எந்த முயற்சியும் செய்யாமல் போனதை இப்போது உணர முடிகிறது என்று வருந்தினான்.

தந்தையின் அறிவுரை

தந்தையின் முன் தயங்கியபடியே சென்று தேர்வு விடைத் தாள்களைக் கொடுத்தான். அவற்றை வாங்கிப் பார்த்த தந்தை கேட்டார்.

இவ்வளவு குறைந்த மதிப்பெண்களை நீ மட்டும் தான் பெற்றாயா… உன் நண்பர்களுமா… என்று கேட்டார்.

அவன் தலை குனிந்தபடியே சொன்னான்… “நான் மட்டும் தான்:.

அவர்கள் ஒருபுறம் அரட்டை அடித்தாலும், மற்றொருபுறம் படிப்பில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆனால் நீ அரட்டையில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறாய் என்று கடிந்து கொண்டார்.

நான் கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அலட்சியமாக இருந்துவிட்டேன் அப்பா. இனி அந்த தவறை செய்ய மாட்டேன் என்றான் தீபன்.

தந்தை சொன்னார்.. உன்னை போன்றவர்களுக்காகத்தான் திருவள்ளுவர் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பாடலை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்.

(குறள்- 619)

தெய்வம் நமக்கு எல்லாம் தந்துவிடும் என்று நினைப்பதை விட முயற்சி செய்தால் உழைப்பிற்கு ஏற்ற பலன் உனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்பதுதான் அதன் பொருள்.

இதை இனி மறவாதே. கடவுள் முயற்சி செய்வோருக்குத்தான் துணை நிற்பார். சோம்பேறிகளுக்கு அல்ல என்று அழுத்தமாக அவன் மனதில் பதிய வைத்தார்.

நான்தான் டாப்

அரட்டையை விட படிப்பு முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினான் தீபன். சில வாரங்கள் கடந்து சென்ற பிறகு இரண்டாம் பருவத் தேர்வு வந்தது.

அதில் தன்னுடைய சக மாணவர்களைக் காட்டிலும் அதிக மதிப்பெண்ணை பெற்று பெருமிதத்தோடு அவர்களுடன் கைக்கோர்த்தான் தீபன்.

திருடன் துறவியானான்: திருக்குறள் கதைகள் 8

குறளமுதக் கதைகள் வரிசையில் திருடன் துறவியானான் என்ற கதை திருக்குறள் கதைகள் 8-இல் இடம்பெறுகிறது.

ஒரு நாட்டில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு துறவி இருந்தார். அவர் அனைத்தையும் துறந்து பற்றற்ற வாழ்க்கை நிலையை கடைப்பிடித்தார்.

அரசன் தந்த தங்க திருவோடு

அந்த நாட்டின் அரசன் நாள்தோறும் அவரை சந்தித்து நல்லறங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்தது.

ஒரு நாள் அரசன், அந்த துறவி ஏதேனும் ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவர் உபயோகப்படுத்துவதற்காக தங்கத்தால் ஆன திருவோட்டை அவரிடம் கொடுத்தான்.

துறவி முதலில் அதை ஏற்கவில்லை. அரசன் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், அந்த திருவோட்டை வாங்கி வைத்துக் கொண்டார்.

அன்றிரவு அவர் அயர்ந்து தூங்கியபோது, ஏதோ அருகில் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார்.

அந்த திருடன், நம்மிடம் ஏதோ விலை மதிப்பு மிக்க பொருள் இருக்கிறது என்பதால்தான் வந்திருக்கிறான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

திருடன் பெற்ற திருவோடு

அருகில் வா என அந்த திருடனை அன்பாக அழைத்தார். அவன் தயங்கியபடியே அருகில் சென்றான்.

தான் படுத்திருக்கும இடத்தின் அருகே வைத்திருந்த தங்கத் திருவோட்டை எடுத்து இதுதான் என்னிடம் இருக்கிறது. எடுத்துக் கொள் என்று அவனது கையைப் பிடித்து கொடுத்தார்.

அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு அதை எடுத்துச் சென்றான்.

மறுநாள் இரவும் அவர் தூங்கும்போதும் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார்.

மீண்டும் முதல் நாள் வந்த திருடனை வந்து நிற்பதைப் பார்த்தார்.

அவனை பார்த்த அவர், என்னிடம் உனக்கு பயன்படும் படியான விலை உயர்ந்த பொருள் வேறு எதுவும் இல்லையே எனச் சொன்னார்.

இதைக் கேட்ட அந்த திருடன், அவரது காலில் விழுந்து வணங்கினான்.

அய்யா… உங்களிடம் இருக்கும் பற்றற்ற குணம் என்னிடம் இல்லை.யே.. என வருந்தினான்.

அந்த குணம் உனக்கும் வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா என்று கேட்டார்.

ஆமாம்… என கண்ணீர் மல்க வேண்டினான்.

யாதனின் – திருக்குறள் சொல்வது என்ன?

மகனே கேள். எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுகிறாயோ… அந்தந்தப் பொருள்களால் ஏற்படும் துன்பம் உன்னை அண்டாது. இதை நீ கடைப்பிடித்தால் போதும். நீயும் என்னை போன்ற பற்றற்றவன் ஆகலாம்.

இதைத்தான் திருவள்ளுவர்,

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்

(குறள் – 341)

என்று கூறி நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

அதாவது, நீ எந்தெந்தப் பொருள்களிலிருந்து பற்றை விடுகிறாயோ ? அவற்றால் துன்பம் வருவதில்லை என்பதுதான் இதன் அர்த்தம். புரிந்துகொண்டாயா? என்றார் துறவி.

அவரது உபதேசத்தை கேட்ட திருடன், பொருள்களின் மேல் வைத்த பற்றைத் துறந்தான். துறவியிடம் மீண்டும் வந்து துறவியாக மாறினான்.

களவு திருக்குறள் கதையும், விளக்கமும்

களவு திருக்குறள் கதையும், அந்த கதைக்கு தொடர்புடைய திருக்குறள் விளக்கமும் இதில் இடம்பெறுகிறது.

தாத்தாவும் பேரனும்

ஆனந்தா ! வா, வா.

தாத்தா நேற்று நான் ஒரு கதை சொன்னேன். அதற்கு நீங்கள் ஒரு குறளைச் சொல்லி விளக்கமும் தந்தீர்கள்.

இன்றைக்கு நீங்களே ஒரு கதையைச் சொல்லி, அதற்கேற்ற குறட்பாவையும் சொல்லுங்களேன் தாத்தா.

சரி… சொல்கிறேன் கேள்.

உழவனும் தங்கத் தட்டும்

உழவன் ஒருவன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். அப்போது அவன் பூமிக்கு அடியில் புதைந்திருந்த பொன்னாலான உணவுத் தட்டு ஒன்றைக் கண்டெடுத்தான்.
அப்பாத்திரம் பொன்னால் ஆனது என்பதை அவன் அறியவில்லை . வணிகன் ஒருவனிடம் அந்தத் தட்டைக் கொடுத்து இதற்குரியப் பணத்தைத் தர வேண்டினான்.

வணிகனோ, உழவனை ஏமாற்ற எண்ணினான். காரணம் அந்த தட்டு தங்கத்தால் ஆனது என்பதை உழவன் அறியவில்லை என்பதால்தான்.

இதனால் அவன் அதன் விலையை குறைத்து சொன்னான். உழவன் எதிர்பார்த்த அளவுக்கு காசு கிடைக்காததால், அதற்கு மறுப்பு தெரிவித்தான்.

வணிகனோ பேரம் பேசினான். முதலில் ஆழாக்குத் தருகிறேன் என்றான். அடுத்து உரி தருகிறேன் என்றான்.

இதனால் உழவன் அந்த தட்டை வணிகனிடம் இருந்து பெற்றுக் கொண்டு மற்றொரு வணிகனிடம் சென்றான்.

ஏமாற்றிய மற்றொரு வணிகன்

அந்த வணிகன் அது தங்கத் தட்டு என்பதை உணர்ந்து, அதற்கு ஈடான எடைக்கு மிளகு தருவதாகக் கூறி அதை கொடுத்து தங்கத் தட்டை பெற்றான்.

அந்த தட்டை பெற்ற வணிகன், அதில் இருந்த சேற்றை கழுவி சுத்தம் செய்ய எண்ணி கிணற்றடிக்கு சென்றான்.

அவன் சுத்தம் செய்யும்போது தவறி ஆழமான அந்த கிணற்றுள் தங்கத் தட்டு விழுந்து விட்டது.

இதைக் கண்ட அவன் பதறிப்போனான். தங்கத் தட்டை கோட்டை விட்டு விட்டோமே என மனம் உடைந்து இறந்து போனான்.

தானாக வந்த தங்கத் தட்டை குறைந்த விலைக்கு வாங்க ஆசைப்பட்டு கோட்டை விட்டு விட்டோமே என்று முதல் வணிகனும் வருந்தியே உயிரை விட்டான் என்று கதையை சொல்லி முடித்தார் தாத்தா.

களவு திருக்குறள் சொல்லும் விளக்கம்

தாத்தா! வணிகத்தில் இப்படி பொருளை குறைவாக மதிப்பிட்டு கைவசப்படுத்துவது களவு ஆகாதா , பெரிய தவறு அல்லவா?

இதில் என்ன சந்தேகம் ஆனந்தா… ஒரு பொருளை குறைவாக மதிப்பிட்டு உரியவரை ஏமாற்றுவது களவுதான்.

அறமல்லாத வழியில் வரும் செல்வம் அழிந்து போவதுடன் நிலையான வறுமையிலும் நம்மை ஆழ்த்தும். அதனால் எல்லா நன்மைகளும் மறைந்து போகும் என்பதை புரிந்து கொண்டாயா..

இப்போது களவு திருக்குறள் விளக்கத்தை கேட்போம்.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து

ஆவது போலக் கெடும்.

(குறள் – 283)

தாத்தா, இந்தக் கதைக்கேற்ற இன்னொரு குறளும் உள்ளது சொல்லட்டுமா?

எங்கே சொல்லு…

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்

கள்ளத்தால் கள்வேம் எனல்.

(குறள் – 282)

சபாஷ்.. ஆனந்தா

அதற்கான பொருளைச் சொல் பார்ப்போம்.

குற்றமான செயல்களை மனதால் கூட நினைக்கக் கூடாது. அதுவும் ஒரு பாவமே. ஆதலால் பிறன் பொருளை அவனுக்குத் தெரியாமல் வஞ்சனையால் கவர்ந்து கொள்வோம் என்று நினைத்தலும் கூடாது.

ஆனந்தா நன்றாகச் சொன்னாய்.

சிறந்த அறம் எது? – திருக்குறள் கதை 6

குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதை 6 – சிறந்த அறம் எது என்பது தொடர்பான கதையும், அதற்கான குறள் விளக்கத்துடன் இடம்பெறுகிறது.

துறவியர் இருவர்

இரு துறவியர் ஆற்றங்கரையோரமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு இடத்தை கடந்து செல்லும்போது, இளம்பெண் ஒருத்தி ஆற்றில் தவறி விழுவதைக் காண்கிறார்கள்.

இதைக் கண்ட இளம் துறவி ஆற்றில் குதித்து அவளை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து சேர்த்தார்.

இளம் துறவியின் இச்செயலை பார்த்து மற்றொரு துறவி கண்டித்தார். இளம் துறவி தன் தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்.

இருவரும் தங்கள் குருவைச் சந்தித்தனர். அப்போது தான் ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை கண்டதும், எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஆற்றில் குதித்து அவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்தேன்.என்னுடைய தவறை குரு மன்னித்தருள வேண்டும் என்றார் அந்த இளம் துறவி.

ஆனால், உடன் வந்த துறவியோ அந்த பெண்ணை இந்த இளம் துறவி தூக்கி வந்ததை பார்த்தேன். அவளோ மிகவும் அழகாகவும், இளமையாகவும் வேறு இருந்தாள். இந்த சூழலில் இந்த இளம் துறவி செய்தது தவறுதான் என்று குருவிடம் சொன்னார்.

திருக்குறள் சொல்வது என்ன?

இருவரின் பேச்சையும் கேட்ட குரு, லேசான புன்னகை தவழ சொன்னார். “இளம் துறவி தாம் செய்தது தவறு என்று சொல்லி வருத்தம் தெரிவித்துவிட்டார். ஆனால் நீரோ, அவள் அழகாய் இருந்தாள். இளமையாகவும் இருந்தாள் என்று சொல்லி இன்னமும் அவள் நினைவை மனதுக்குள் சுமந்து கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்றார் குரு.

தன்னுடைய பேச்சை அத்துடன் குரு நிறுத்திக்கொள்ளவில்லை. மனதளவில் குற்றமற்றவராக இருப்பதே சிறந்த அறம். மனதில் தூய்மை இல்லாமல் இருப்பது அறமல்ல.

இதைத் தான் வள்ளுவர் இப்படி தன் குறள்பா மூலம் சொல்லியிருக்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற

(குறள் – 34)

மனதளவில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அறம் என்பது அதுதான். மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

பிறர் செய்த தவறை பெரிதுபடுத்த வேண்டாம். அதுவே, சிறந்த அறம் என்றார் குரு.

புறங்கூறுதல் அழகா?: திருக்குறள் கதை 5

குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதைகள் 5 – மற்றும் கண்ணின்று எனத் தொடங்கும் புறங்கூறுதல் தொடர்பான குறளின் விளக்கமும் இடம்பெறுகிறது.

புறங்கூறுதல் அழகா?

நகைமுகன், புதிய தலைமையாசிரியர் மலரவனை வரவேற்றார். நகைமுகனைத் தொடர்ந்து பல ஆசிரியர்களும், ஆசிரியைகளும் தலைமையாசிரியரை வரவேற்றனர்.

மலரவனுக்கு துணைத் தலைமையாசிரியர் என்ற முறையில் நகைமுகன் அனைத்து ஆசிரியர்களையும் அறிமுகப்படுத்தினார்.

பின்னர், ஆசிரியர்கள் அனைவரும் தம் தம் வகுப்பிற்குச் செல்லலாயினர்.

ஆனால், நகைமுகனோ வகுப்பிற்குச் செல்லாமல் பிற ஆசிரியர்களைப் பற்றிக் குறை கூறத் தொடங்கினார்.

அவர் கூறியதைக் கேட்ட மலரவன் பேசத் தொடங்கினார்.

குறை சொல்லாதீர்கள்

தயவு செய்து யாரைப் பற்றியும் குறை கூறாதீர்கள். உங்கள் பணியை மட்டுமே நீங்கள் செய்யுங்கள். எல்லோரும் நல்லவர்களே.

அனைத்து ஆசிரியர்களும் இருக்கும் போது அவர்களை வானளாவப் புகழ்ந்து கூறினீர்கள் இப்போது இகழ்ந்துரைக்கின்றீர்களே…

வழிப்பாட்டுக் கூடத்தில் மாணவன் ஒருவன் கூறிய குறளை நீங்கள் நினைத்துப் பாருங்கள்

குறள் கூறும் கருத்து

கண்ணின்று கண்ணறச் சொல்லினும், சொல்லற்க

முன்னின்று பின் நோக்காச் சொல்

(குறள் -184)

பொருளையும் நானே கூறுகிறேன் கேளுங்கள், நேரில் நின்று கருணையில்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசலாம்,

மற்றவர் நேரில் இல்லாத போது பின் விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் சொல்லக் கூடாது என்றார் தலைமை ஆசிரியர்.

நகை முகன் தலைக் குனிந்தவாறு அவ்விடத்தை விட்டு அகன்றார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?: திருக்குறள் கதை 4

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 4) மற்றும் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் குறள் வரிகளின் விளக்கமும் இடம்பெறுகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்:

ஆனந்தன், ‘தாத்தா, தாத்தா என அழைத்தவாறு ஓடி வந்தான்.

தர்ம நாதர் வா, ஆனந்தா – பள்ளிக் கூடத்திற்கு இன்று போகலையா? எனக் கேட்டார்.

எங்க எதிர் வீட்டு அக்காவுக்கு கல்யாணம் அதுக்கு போயிட்டு வந்தேன்.

ஓ! அப்படியா! அதான் புது உடை அணிந்திருக்கிறாயா? எனக் கேட்டார்.

சாப்பாடெல்லாம் நல்லா இருந்ததா?

பிரமாதம் தாத்தா…. ஆனா தாத்தா கல்யாணம் முடிந்தவுடன் பொண்ணு மாப்பிள்ளையுமா, ஊருக்குப் புறப்பட்டாங்க.

ஏன் அழுகை வந்தது?

திடீர்னு,.. அக்காவோட அம்மாவும், அப்பாவும் கண் கலங்கினாங்க.

அக்காவின் கண்களிலிருந்தும் ஏனோ கண்ணீர் திடீரென பொல பொலவென்று வந்தது என்றான் ஆனந்தன்.

பெண்ணை பெத்தவங்க அப்படி கண் கலங்கியது ஏன்னு கேட்கிறியா?

ஆமாம், தாத்தா.

அதுவா? தன் வீட்டில் ஓடி ஆடி விளையாடிய பெண் தன்னை விட்டுப் போகிறாளே என்ற ஆதங்கத்தில் தான் அப்பா, அம்மா கண்களில் இருந்து வந்த கண்ணீருக்கு காரணம்.

அந்த பெண் அழுதாளே… அதற்கு காரணம், இதுநாள் வரை நம்மை கண்ணும், கருத்துமாக பாதுகாத்து வளர்த்த தன் தாய், தந்தையைப் பிரிந்து போகிறோமே … என்ற ஏக்கம்தான்.

ஆனந்தா, அன்பிற்கு அடைத்து வைக்கக் கூடிய தாழ்ப்பாள் ஏதேனும் உள்ளதோ?அன்புடையவர்களின் சிறிதளவு கண்ணீரே பலர் அறிய வெளிப்படுத்தி விடும் எனக் குறளாசிரியர் கூறியது எவ்வளவு நிதர்சனமான உண்மை நினைத்துப் பார்த்தாயா…

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

(குறள் -71)

குறள் சொல்லும் செய்தி

அதாவது அன்பை அடைத்து வைக்கக் கூடியத் தாழ்ப்பாள் இல்லை. தம்மால் அன்பு செய்யப் பட்டவருடைய துன்பங் கண்ட போதே அவருடைய கண்களிலிருந்து வரும் நீர்த்துளி பிறர் அறியும்படி செய்துவிடும் என்கிறார் திருவள்ளுவர்.

தன் மகளுக்குத் திருமணம் முடித்த பெற்றோர். அவள் இனி வேறோர் இல்லத்திலேயே தங்கி விடுவாள் என்ற ஆதங்கத்திலே கண்ணீர் விட்டனர்.

அவளும் தந்தை, தாயை விட்டு கணவர் இல்லத்திற்குச் செல்கிறோம் என்ற நினைப்பில் கண்ணீர் சிந்தினாள்.

இப்போது புரிந்துகொண்டாயா ? ஆனந்தா என்றார்.

எனது சந்தேகத்தை தீர்த்து வைத்ததோடு, அதற்கேற்ற குறளையும் சொல்லியிருக்கிறார்கள் தாத்தா…

இனி இந்த குறள் என் வாழ்நாளில் மறக்காது என்று சொல்லி விடை பெற்றான் ஆனந்தன்.

விடைத் தேடி: திருக்குறள் கதை 3

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 3) பாவத்தின் தகப்பன் யார் என்ற விடைத் தேடிய கதையும், அதற்கான திருக்குறள் விளக்கத்தை அறியலாம்.

விடைத் தேடி

வெங்கடேஷ் உயர் குலத்தில் பிறந்தவன். அது மட்டுமல்ல காசி யாத்திரையும் சென்று வந்தவன்.

வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். அவன் தன் மனைவியிடம் தனது கல்வியின் மேன்மை மற்றும் திறமையைப் பற்றியும் கூறிக் கொண்டே இருப்பான்.

ஒரு நாள் அவள், அவனிடம் பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அதாவது பாவத்துக்கு அடிப்படைக் காரணமாக எதைக் கூறலாம் என்ற கருத்தை முன் வைத்து இக்கேள்வியை அவள் கேட்டாள்.

பல நூல்களைப் புரட்டினான் விடை கிடைக்கவில்லை. பலரிடமும் கேட்டான் விடை கிடைக்கவில்லை. காசி நகருக்கே சென்று தேடினார்.

பாடம் சொல்லித் தந்த விலைமாது

இறுதியில், விலை மாது ஒருத்தியின் வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்து, மனைவி கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பெண் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தாள்.

அவன் ஏதோ யோசனை செய்து கொண்டிருப்பதைக் கண்ட அவள், எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என வினவினாள்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் அவள், நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். உள்ளே வாருங்கள். உணவருந்திவிட்டு செல்லுங்கள் என்று அழைக்கிறாள்.

இதைக் கேட்ட அவன், அவளைப் பார்த்து நீ தவறான நடத்தைக் கொண்டவள். உன் வீட்டு திண்ணையில் அமர்ந்ததே தவறு. நீ இடும் உணவை அருந்துவது அதை விட தவறு. நான் புறப்படுகிறேன் என்றான் அவன்.

அந்த விலை மாது உடனே, அய்யா… உடனே இங்கிருந்து புறப்பட்டு போய் விடாதீர்கள்.

நான் உங்கள் கல்வித் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் என் வீட்டு விருந்தினர். அதனால் உங்களை இங்கிருந்து செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றாள்.

இதனால் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். சரி… ஆனால் உணவை நானே சமைத்து சாப்பிடுவேன். சம்மதமா? என்று கேட்கிறான்.

அவளும் சரி என்று ஏற்றுக் கொண்டாள். அவன் சமையலுக்கான பொருள்களை அவளிடம் இருந்தே பெற்று சமைத்தான்.

அவன் தான் சமைத்த உணவை சாப்பிடத் தயாரானான். அப்போது அவள், அய்யா… உங்கள் உணவை நான் ருசி பார்க்க விரும்புகிறேன்.

உங்கள் உணவில் கொஞ்சம் தாருங்கள் என்று கூறி 5 நூறு ரூபாய் நோட்டுகளைத் தந்தாள்.

அவனும் அவள் தந்த பணத்தைப் பெற்றுக் கொண்டான்.

அய்யா… என் கையில் உள்ள உணவை உங்களுக்கு ஊட்டுவது போல் செய்வதற்கு விரும்புகிறேன். அதற்கு இன்னும் ஒரு ஐந்நூறு ரூபாய் தருகிறேன் என்றாள்.

பரவாயில்லையே… தனக்கு ஊட்டுவது போல் பாசாங்கு செய்வதற்கு இன்னுமொரு 500 ரூபாய் கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வதா என்று நினைத்து அதற்கு ஒப்புக் கொண்டான்.

அவனுக்கு ஊட்டுவது போல் கையை உயர்த்திய அவள், பளார் என அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

அந்தணனே… லோபம்தான் பாவத்துக்கு தகப்பன். நீ பேராசைக்கு ஆட்பட்டு நான் கூறியதற்கெல்லாம் இணங்கினாய்.

திருக்குறள் சொன்ன கருத்து

எல்லா நூல்களையும் கற்றேன் என்கிறாய். ஆனால் திருக்குறள் சொன்ன ஒரு கருத்தை மறந்துவிட்டாயே…

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இவர்

அதிகாரம் 37-இல் அவாவறுத்தல் என்ற தலைப்பில் 365-ஆவது குறளாக அது இடம்பெற்றிருக்கிறது.

ஆசை அற்றவரே பிறவியற்றவர் எனப்படுவர். பற்றை விடாதவர் பலவற்றைத் துறந்தாலும் முழுவதையும் துறந்து விட்டார் என்று கூற முடியாது என்றாள் அந்த விலை மாது.

மனைவி கேட்ட கேள்வியான, பாவத்தின் தகப்பனார் யார்? என்பதற்கு விடை பேராசை என்பதை இப்போது உணர்ந்தான் வெங்கடேஷ்.

மெத்த படித்திருந்தாலும், ஒரு கேள்விக்கு விடை தெரியாமல் தவித்த எனக்கு, என்னுடைய பேராசையையே விடையாக்கிய அந்த விலை மாது தன்னை விட உயர்ந்தவள் என்பதை உணர்ந்து வெட்கத்தோடு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான் வெங்கடேஷ்.

திருந்தாத உள்ளங்கள்: திருக்குறள் கதைகள் 2

குறளமுதக் கதைகள் வரிசையில் – திருக்குறள் கதைகள் 2 – திருந்தாத உள்ளங்கள் தொடர்பான கதையும், குறள் வி்ளக்கமும் கொண்டிருக்கிறது.

குறளுக்கு அர்த்தம் தேவை

ஆனந்தன் தர்மநாதர் தாத்தாவை தேடி வந்தான்.

என்ன ஆனந்தா… தயங்கியவாறு வருகிறாய்? எனக் கேட்டார் தர்மநாதர்.

பக்கத்து வீட்டு அண்ணனுக்கு ஒரு குறளுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமாம் என்றான்.

அப்படியா… ஆனந்தா.. அவரை வரச் சொல். நீயும் தெரிந்துகொள் என்றார் தர்மநாதர்.
அவர்கள் இருவரிடம் எந்தக் குறளுக்கு அர்த்தம் தேவைப்படுகிறது என்றார்.

அச்சமே எனத் தொடங்கும் குறள்

திருக்குறளில் அச்சமே கீழ்கள எனத் தொடங்கும் 1075 பாடலுக்குத்தான் தாத்தா என்றான் ஆனந்தன்.
இந்தக் குறளுக்கு முதலில் பொருளை விளக்குகிறேன் கவனியுங்கள் என்றார் தர்மநாதர்.
கயவர்கள் அதாவது கீழ்மைக் குணமுடையவர்கள் இருக்கிறார்களே! அவர்களின் ஒழுக்கத்துக்கு காரணமாக இருப்பது அச்சம்தான்.
அவர்கள் பிறரிடமிருந்துப் பொருளைப் பெற விரும்பும் வரை மட்டுமே அவர்கள் பயந்தவர் போல் நடிப்பார்கள். .அப்போது மட்டுமே அவர்கள் நல்லவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.அவர்கள் எப்போதுமே திருந்தாத உள்ளங்கள் உடையவர்கள்.

தர்மநாதர் மேலும் தொடர்ந்தார். உங்கள் இருவருக்கும் புரியும் படியாக சொல்கிறேன்.

திருந்தாத உள்ளங்கள் யார்?

தம்மை விட வலிமையானவர்கள் தங்களைத் துன்புறுத்தக் கூடும் எனக் கருதும் கயவர்கள் சில சமயம் வலிமையானவர்களிடம் பணிந்து நல்லவர்கள் போல் நடந்து கொள்வார்கள்.
அது மட்டுமின்றி ஒரு பொருளைப் பெற வேண்டுமென்றால் அந்தப் பொருளைப் பெறுவதற்காக நன்னடத்தை உடையவர்களாக காண்பித்துக் கொள்வர். பொருளைப் பெற்ற பின்பு கயவர்கள் தன் பழைய குணத்துக்கு திரும்பிவிடுவர். இவர்கள்தான் திருந்தாத உள்ளங்கள்.
அதாவது அவர்கள் எப்போதும் போல் கீழ்மைக் குணமுடையவர்களாக இருப்பர் என்கிறார் குந்த குந்தர்.

பஞ்சபாண்டவர் கதை

இதைத்தான் திருவள்ளுவர்

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது

என்ற குறட் பாவால் உணர்த்தியுள்ளார் திருவள்ளுவர்.

இதற்கு ஒரு கதையை சொன்னால் உங்களுக்கு நன்றாகப் புரியும்.

பாண்டவர்கள் அறிவுடையவர்களாகவும், வீரமிக்கவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதை துரியோதனன் அறிவான்.
அவர்கள் அறிவுப்பூர்வமாகவும், வீரமாகவும் போரிட்டு வெல்வது கடினம். அதனால் அவர்களை வஞ்சமான வழியில்தான் வெற்றி கொள்ள முடியும் என்று தீர்மானிக்கிறான்.

வியசனம் என்றால் என்ன?
அதனால் ஏழு வியசனங்களில் ஒன்றாக இருக்கும் சூது மூலமே அவர்களை வெல்ல வேண்டும் என்றும் முடிவு செய்கிறான். பாண்டவர்கள் தோற்றால் அவர்களை நாட்டை விட்டே துரத்தி விடலாம் என்றும் கருதினான்.
தாத்தா, வியசனம் என்றால் என்ன.?
அதைக் கேட்கிறாயா?
கை விடுவதற்கு மிகவும் அரிதான தீய பழக்கமே வியசனம் ஆகும்.

இவை சூதாடுதல், திருடுதல், வேட்டையாடுதல், புலால் உண்ணுதல், கள் குடித்தல், பிறர் மனை நயத்தல், வேசையர் தொடர்பு என்று சொல்லலாம்.
சரி.. தாத்தா…
துரியோதனன் தீட்டிய திட்டத்தில் வென்றானா ? எனக் கேட்டான் ஆனந்தன்.
தாத்தா கதையைத் தொடர்ந்தார்.

துரியோதனன் கபட நாடகம்

துரியோதனன் தன்னுடைய கபட எண்ணத்தை வெளிக்காட்டாமல், பாண்டவர்களோடு விளையாடுவது மட்டுமின்றி, சகஜமாக பழகுவது, அவர்களோடு வேடிக்கைப் பேச்சுகளிலும் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தான்.
தருமனை விளையாட்டாக சூதாட்டத்தில் பங்கேற்க வைத்தான். சில நாள்கள் இவ்வாறே தொடர்ந்தது.
ஒரு நாள் இரு திறத்தாரும் விளையாடி வரும் வேளையில் துரியோதனன் தருமனைப் பார்த்து, நீங்கள் திறமையானவர்கள் என்பது உண்மையானால்? எங்களை நீங்கள் வெல்ல வேண்டும் என்று கூறுகிறான்.

ஒருவேளை நீங்கள் தோற்றுவிட்டால், நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்கிறான் துரியோதனன். தர்மர் தயங்கினார்.
தோற்று விடுவோம் என்ற பயமா? எனத் தர் மரை கேலியாகவும்பேசினான் துரியோதனன். வென்று விடுவோம் எனக் கருதிய தர்மர் போட்டிக்கு சம்மதித்தார்.
இறுதியில் ஒரு நொடியில் தர்மர் தோற்றார். பாண்டவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

அர்த்தம் புரிந்ததா?


உடனே துரியோதனன், நீங்கள் அனைவரும் நாட்டை விட்டேவெளியேற வேண்டும் என கட்டளையிட்டான் என்றார் தாத்தா தர்மநாதர்.
இப்போது நீங்கள் இருவரும் இந்த குரலின் அர்த்தத்தை புரிந்து கொண்டீர்களா?
கயவர்கள், நல்லவர்கள் போல் நடித்துத் தாங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைவார்கள் அதைத்தான் இந்தக் குறள் உணர்த்தியுள்ளது என்றார் தாத்தா.
நாங்கள் இருவரும் இந்தக் குறள் மூலமாக நல்லவர்கள் போல் நடித்து ஏமாற்ற நினைக்கும் கயவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும் உணர்ந்து கொண்டோம் என்று சொல்லி விடை பெற்றார்கள் இருவரும்.

பெரியோர் அழகு எது?: திருக்குறள் கதை 1

குறளமுதக் கதைகள் வரிசையில் முதல் திருக்குறள் கதையாக பெரியோர் அழகு எது? என்பதை தெளிவுபடுத்தும் கதையும், அதற்கான திருக்குறள் விளக்கத்தையும் பார்க்கலாம்.

ஆசிரியரை தேடி வந்த மாணவன்

மாயவன் காவல் துறைக் கண்காணிப்பாளர். தன் சொந்த ஊருக்கு ஆறு மாதம் முன்பு மாற்றலாகி வந்தவன்.

ஒரு நாள் அவன் தன் ஆசிரியர் பரமசிவத்தைத் தேடி வந்தான். என்ன கொடுமை! வயதான காலத்தில் தன்னுடைய ஆசிரியர் தனிமையில் வாடுவதைக் கண்டு வேதனைப்பட்டான்.

தன்னை காண வந்த மாயவனை பார்த்து… பரமசிவமோ யார் நீங்கள்… உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லையே.. என்றார்.

உடனே “மாயவன் என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லை? உங்கள் மகன் அன்புவின் நண்பன் மாயவன்தான் நான்” என்று சொன்னான்.

ஓ… மாயவனா… வயதாகிவிட்டதல்லவா… அடையாளம் தெரியவில்லை என்றார் பரமசிவம்.

நன்றி பெருக்கு

அய்யா… உங்களுக்கு நினைவிருக்கிறதா? நீங்கள்தான் என்னுடைய உயர் படிப்புக்கு உதவி செய்தீர்கள். அதனால்தான் இன்றைக்கு நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று நன்றியோடு சொன்னான் அவன்.

“ஏதோ என்னால் அப்போது முடிந்ததை செய்தேன்” என்றார் பரமசிவம்.

அய்யா… வாங்க என் வீட்டுக்கு போய்ட்டு வரலாம் என்று உரிமையோடு அவரை அழைத்து தன் காரில் அமர வைத்து வீட்டுக்கு அழைத்து வந்தான்.

நீங்கள் என் தந்தை போன்றவர். உங்களிடம் ஒன்று கேட்கலாமா.. தவறாக நினைத்துக் கொள்ள மாட்டீர்களே என்று பீடிகை போட்டான்.

சொல்லுப்பா.. என்று அவனுடைய முதுகில் செல்லமாகத் தட்டினார் பரமசிவம்.

தனிமைக்கு காரணம் என்ன?

அய்யா, மனைவியும், மகனும் உங்களோடு இல்லையா? என்று கேட்டான்.

அவர் நீண்ட பெருமூச்சுக்கு பிறகு அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லத் தயாரானார்.

உன் நண்பன் அன்புவை உயர் படிப்பு படிக்க வைத்தேன். அவனும் நல்ல நிலைக்கு உயர்ந்தான். திருமணமும் நடந்தது. எனக்கு ஓய்வூதியம் வருவதால் அது போதும் என்று சொத்துக்களை அவன் பெயருக்கு மாற்றினேன்.

அவன் சிறிது காலத்தில் என்னையும், என் மனைவியையும் தனிமையில் விட்டுவிட்டு, வெளியூர் சென்றுவிட்டான். அவன் எங்கிருக்கிறான் என்பது கூட எனக்கு தெரியாது.

அன்பு மீது அதீத பாசம் வைத்திருந்த என் மனைவி, படுத்த படுக்கையானாள். சில நாளில் அவர் மறைந்தும் போனாள். அப்போதும் கூட என் மகன் வரவில்லை.

அதனால்தான், தள்ளாத காலத்தில் தனிமையில் நான் வாழ வேண்டியதாகி விட்டது என்றார் கண்கலங்க பரமசிவம் ஆசிரியர்.

மாயவன் மனைவி

இதைக் கேட்ட மாயவனும் கண் கலங்கினான். இவர்களின் பேச்சுக் குரலை கேட்டு வந்த மாயவனின் மனைவியும் இந்த உரையாடலைக் கேட்டு கண் கலங்கினாள்.

அவளை பார்த்த மாயவன், இவர்தான்… என்று சொல்லத் தொடங்கும் முன்பே… அவள் சொன்னாள்… உங்கள் உயர் படிப்புக்கு உதவிய ஆசிரியர்தானே என்றாள்.

ஆமாம்… என்று தலையாட்டினான் மாயவன்.

அப்போது மாயவன் மனைவி சொன்னாள். “அய்யா… என் வீட்டுக்காரரும் உங்கள் மகன் மாதிரித்தான். இனிமேல் இங்கே தங்கியிருங்கள்” என்றாள்.

அதை ஆமோதித்த மாயவன் சொன்னான். உங்கள் மகன் எங்கிருந்தாலும் அவனை நான் கண்டுபிடித்து அவனோடு சேர்க்கிறேன். அதுவரை இங்கேயே தங்குங்கள் என்றதை கேட்ட பரமசிவம் தனிமையில் இருந்த தனக்கு ஒரு ஆதரவு கரம் நீட்டப்பட்டிருப்பதைக் கண்டு மீண்டும் கண் கலங்கினார்.

பெரியோர் அழகு எது?

பேச்சை மாற்றுவதற்காக மாயவன், அங்கே படித்திக் கொண்டிருந்த தன் மகனை பார்த்து என்ன படித்துக் கொண்டிருக்கிறாய் என்று. அவன் சொன்னான். அப்பா திருக்குறளில் செய்நன்றி அறிதல் அதிகாரத்தில் உள்ள பாட்டை படித்துக் கொண்டிருந்தேன் என்றான்.

என்ன குறள்… சொல்லேன்… நாங்களும் கேட்கிறோம் என்றார் பரமசிவம்.

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு”

அதாவது, “தம்முடைய துன்பத்தைப் போக்கியவரின் நட்பை ஏழேழ் பிறவிகளிலும் நினைத்துப் போற்ற வேண்டும். அதுவே பெரியோர் அழகு” அப்படின்னு சொன்னான் சிறுவன்.

பெரியோர் அழகு என்ன என்பதை உணர்ந்திருக்கும் அவன் உன்னைப் போலவே உயர்வான் என்றார் பரமசிவம்.