திருக்குறள் கதை 36: பிற உயிர்களை துன்புறுத்தலாமா?

திருக்குறள் கதை 36 - a man sitting in a lotus pose
85 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதை 36) பிற உயிர்களை துன்புறுத்துவது சரியா? என்பதை விளக்கும் கதையும், திருக்குறள் விளக்கமும் இடம்பெற்றிருக்கிறது.

தாத்தாவும் ஆனந்தனும்

ஆனந்தன் மாலையில் வீட்டுக்குள் நுழைந்தபோது, வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த தாத்தா ஏதோ ஒரு பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்.

ஆனந்தனுக்கு அந்த பாடல் வரிகள் காதில் விழவில்லை. அதனால் தாத்தா… என்ன பாட்டு பாடுறீங்க என்று கேட்டான்.

இதைக் கேட்ட தாத்தா, நீயும் கேளு இந்த பாட்டை… என்று சொல்லிவிட்டு உரக்க பாடத் தொடங்கினார்.

“உயிர்களிடத்து அன்பு வேணும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்” என அவர் பாடத் தொடங்கிய அவர். இடையில் நிறுத்திவிட்டு, இது யார் பாடிய பாட்டு சொல்லு என்று கேள்வியை எழுப்பினார்.

தாத்தா! இது மகா கவி பாரதியின் பாடல் வரிகள். சரியா.. என்றான் ஆனந்தன்.

ஆமாம்.. பாரதி பாடிய பாடல் வரிகள்தான் இவை. ஆனால் இன்றைய சிறுவர்கள் இதனுடைய பொருள் உணராது பிற உயிர்களுக்கு துன்பம் தருகிறார்கள்.

சற்று முன்பு சாலையில் இரு சிறுவர்கள் ஒன்றும் அறியாத ஓணானைப் பிடித்து அதன் வாலில் நூலை கட்டி சாலையில் இழுத்துக் கொண்டு போனார்கள்.

இதைப் பார்த்துவிட்டு… என்னப்பா.. இப்படி செய்யலாமா என்று கேட்டேன். ஆனால் அந்த சிறுவர்கள் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த ஓணானை இம்சைப்படுத்திக்கொண்டே சென்றது என்னை பாதித்தது.

அதனால்தான் இந்த பாட்டை நான் இப்ப பாடினேன் என்று விளக்கம் கொடுத்தார் தாத்தா.

சிறுவர்களை தேடிச் சென்ற ஆனந்தன்

இதைக் கேட்ட ஆனந்தன், தாத்தா உடனே அவர்களை சந்தித்து இதை புரிய வைக்கிறேன் என்று சொல்லிவிட்டு தாத்தாவின் பதிலுக்கு காத்திருக்காமல் அந்த சிறுவர்கள் சென்ற வழியில் ஓடிப்போனான்.

அந்த தெருவை தாண்டியதும் அருகில் ஒரு வயல் பகுதி இருந்தது. அந்த இடத்தில் தாத்தா சொன்ன அந்த சிறுவர்கள் நிற்பதைப் பார்த்தான்.

ஆனந்தன் எல்லோரிடமும் சகஜமாக பேசும் பழக்கமுடையவன். இதனால் அவனை கண்டதும், அந்த சிறுவர்கள், என்ன அண்ணா… இந்தப் பக்கம் வந்திருக்கிறீர்கள் என்றார்கள்.

நீங்கள் இருவரும் ஓணானை இம்சை செய்வதை அறிந்துதான் ஓடி வந்தேன். அப்படி செய்வது பாவம் என்பதை சொல்லத்தான் ஓடி வந்தேன். அதை ஒன்றும் செய்யாதீர்கள், என்றான் ஆனந்தன்.

ஆனந்தா! உனக்குத் தெரியாது, “ஓணான் எங்களைப் பார்த்து ஏளனமாக தலையாட்டி சிரித்தது என்றார்கள் இருவரும்.

ஓணானின் இயல்பே இருபுறமும் தலையை அசைத்து வாயை திறந்து மூடுவதுதான். இதை நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டு அதை கஷ்டப்படுத்துகிறீர்கள். அதை விட்டு விடுங்கள் என்றான் ஆனந்தன்.

திருக்குறள் கதை 36

வாங்க… இரண்டு பேரும். தாத்தா நமக்கு அருமையான கதை சொல்ல காத்திருக்கிறார் என்று சொல்லி ஓணானை விடுவிடுத்து தாத்தாவிடம் அழைத்து வந்தான் ஆனந்தன்.

தாத்தாவிடம் வந்து நின்ற சிறுவர்கள்

இருவரையும் பார்த்த தாத்தா… ஓணானை விடுவித்து விட்டீர்களா என்று கேட்டார். தாத்தா… தெரியாமல் தவறு செய்துவிட்டோம். ஆனந்தன் ஓடி வந்து சொன்னதும், அதை விடுவித்து விட்டோம்.

தாத்தா எங்களுக்கு கதை ஒன்று சொல்லுங்களேன் என்றார்கள் சிறுவர்கள்.

கதை சொல்வதற்கு முன்பு அறங்களுள் ஒன்று கொல்லாமை. அது பற்றிய திருக்குறள் சொல்கிறேன் கேளுங்கள் என்றார் தாத்தா.

கொல்லாமை என்றால் என்ன தாத்தா என்று அவர்கள் கேட்ட கேள்விக்கு இப்போது தாத்தா பதில் சொல்லத் தொடங்கினார்.

திருக்குறள் சொல்லும் கருத்து

ஓரறிவு முதல் ஐந்தறிவு வரையிலான உயிர்களை மறந்தும் கொல்லுதல் பாவம் அதுதான் கொல்லாமை. அது மட்டுமின்றி அவைகளை துன்புறுத்துவதும் தவறு. அறங்களுள் சிறந்தது கொல்லாமைதான்.

இதைத்தான் திருக்குறள்,

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

கொல்லாமை சூழும் நெறி.

(குறள் – 324)

என்னும் பாடல் மூலம் நமக்கு அறிவுரை வழங்குகிறது.

அதாவது, நல்ல நெறி என்று அறவோரால் சொல்லப்படுவது என்னவெனில், எந்த உயிரையும் கொல்லாமல் இருப்பதே சிறந்த நெறி என்பதுதான் இதன் பொருள்.

முனிவரும் பாம்பும்

ஒரு காட்டில் முனிவர் ஒருவர் தவம் செய்துகொண்டிருந்தார். ஏதோ தன்னருகே ஒரு சத்தம் கேட்டதை உணர்ந்த அவர், லேசாக கண் திறந்து பார்த்தார்.

தன் எதிரே உடல் முழுவதும் காயங்களோடு ஒரு பாம்பு அவர் அருகே நெளிந்தபடி இருந்தது.

அந்த பாம்பு அவருக்கு ஏற்கெனவே பழக்கப்பட்டது. அதனால் அதனிடம் முனிவர் பேசத் தொடங்கினார்.

உன் உடம்பெல்லாம் காயமாக இருக்கிறதே. என்ன நடந்தது என்று கேட்டார்.

உங்களிடம் ஒரு நாள் வந்து உபதேசம் கேட்டேன். அப்போது நீங்கள் நீ யாருக்கும் தீங்கு செய்யாதே என்று அறிவுறுத்தினீர்கள்.

அதை கேட்டு நானும் இனி யாரையும் தீண்டி காயப்படுத்துவதில்லை என்று முடிவு செய்தேன்.

ஒரு நாள் உணவுத் தேடி புற்றில் இருந்து புறப்பட்டு சென்றேன். அப்போது என்னை கண்ட என்னை கல்லால் அடிக்கத் தொடங்கினார்கள். உயிர் பிழைக்க ஆசைப்பட்டு உங்களிடம் ஓடி வந்திருக்கிறேன் என்றது பாம்பு.

உன்னுடைய விஷம் மற்றவர்களை கொல்லக் கூடியது. அதனால் நீ யாருக்கும் தீங்கு செய்யாதே என்று உபதேசம் செய்தேன். ஆனால் உன்னுடைய அச்சுறுத்தும் சுபாவமான சீறும் குணத்தை விட்டுவிடச் சொல்லவில்லை. அதை நீ உன் தற்காப்புக்கு பயன்படுத்துவது ஒன்றும் தவறில்லை.

இனி யாராவது உன்னை துன்புறுத்த வந்தால், சீறி அவர்களை அச்சுறுத்து. ஆனால் அவர்களை கடித்துவிடாதே. உன் துன்பங்கள் நீங்கும். உன் காயங்கள் விரைவில் ஆறும் என்று ஆறுதல் சொல்லி அனுப்பினார் அந்த முனிவர்.

மீண்டும் ஒரு நாள் பாம்பு இரை தேட புறப்பட்டுச் சென்றபோது, அதே சிறுவர்கள் அதை பார்த்துவிட்டார்கள்.

உடனே அவர்கள் கற்களை வீச முயற்சித்தபோது, அவர்களை நோக்கி சீறி பாய்ந்தது அந்த பாம்பு. உயிர் பிழைத்தோம் என அந்த சிறுவர்கள் தப்பியோடி தலைமறைவானார்கள்.

பாம்பும் பிறருக்கு தீங்கு செய்யாமல் தன்னுடைய ஆயுளை நல்ல முறையில் கழித்தது என்று கதை சொல்லி முடித்தார் தாத்தா.

சிறுவர்கள் இப்போது தங்கள் தவறுக்கு தாத்தாவிடம் மன்னிப்பு கேட்டதோடு, இனி எந்த உயிருக்கும் நாங்கள் தீங்கு செய்ய மாட்டோம் என்று உறுதி சொல்லி விடை பெற்றார்கள்.

திருக்குறள் கதை 36 சொல்வதென்ன

பிறரை தீண்டினால் இறந்துவிடுவார்கள் என்ற அளவுக்கு விஷமுடைய பாம்பு கூட இனி யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்று தீர்க்கமாக முடிவு எடுக்க முடிந்திருக்கிறது.

ஆனால் சிந்திக்க திறன் பெற்ற ஆறறிவு மனிதர்கள் நாம் பிற உயிர்களுக்கு தீங்கு செய்வது தவறு. அவையும் இந்த பூவுலகில் வாழ இறைவனால் படைக்கப்பட்டவை. பிற உயிரினங்களை துன்புறுத்துவது நெறி அல்ல என்பதை உணர்த்துகிறது.

தெய்வம் எப்போது துணை நிற்கும்-திருக்குறள் கதை 35

தமிழகத்தில் எத்தனை பேசுவோர் இருக்காங்க தெரியுமா?

85 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *