குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 15) அறத்தில் எது சிறந்தது என்பதை விளக்கும் கதை இடம்பெறுகிறது.
“உயிர்களிடத்து அன்பு வேணும், தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்” என்று பாரதி பாடலைப் பாடியவாறு வந்தான் ஆனந்தன்.
என்ன ஆனந்தா… ரொம்ப சந்தோஷமாக இருக்கிறாய் போல தெரிகிறதே… உன் வாயில் இருந்து பாரதியின் பாடல் வருகிறதே என்றார் தர்மநாதர்.
உள்ளடக்கம்
அறத்தில் எது சிறந்தது?
தாத்தா எனக்கு ஒரு சந்தேகம். அறத்தில் சிறந்தது எது? என்று கேட்டான்.
“ஆனந்தா, எந்த ஒரு மனிதனும் ஆசைகளை அடக்க உணவுகளைக் குறைத்து நல்லறங்களை மேற்கொள்ள வேண்டும். தாம் செய்த பாவங்களிலிருந்து விடுபட விரதங்களை மேற்கொள்ள வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அருளோடு நடந்து கொள்ளுதல் கூட ஒரு அறம்தான்” என்றார் தர்மநாதர்.
தெய்வப் புலவர் திருவள்ளுவர், இதற்காகவே “அருளுடைமை என்னும் அதிகாரத்தையே உருவாக்கியுள்ளார்.
அன்பு என்பது சுற்றத்தார், நண்பர் என்னும் குறுகிய வட்டத்தோடு நின்று விடும். ஆனால், அருளோ பரந்து பட்டது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் ஒப்ப நோக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர் ஆசான்.
இல்லறத்தார்க்கு அன்பு இருந்தால் மட்டும் போதுமானது. ஆனால் துறவு நிலையை அடைய விரும்புவோருக்கு அருள் உள்ளமும் வேண்டும். அறத்தில் எது சிறந்தது என்பதற்கு ஒரு கதையையும் சொல்கிறேன்.
இளவரசியின் விருப்பம்
அபயமதி என்ற பெயருடைய இளவரசி ஒருத்தி தன்னுடை முற்பிறப்பைப் பற்றி அறிய விரும்பினாள்.
அதற்காக அமிர்தமதி என்னும் ஆச்சாரியரை சந்தித்தாள். அவர், “பெண்ணே நீ சென்ற பிறப்பில் சம்பா நகரத்தில் பறவைகளைப் பிடித்து விற்று வாழும் கருட வேகன் என்பவனின் மனைவியாய் இருந்திருக்கிறாய். அப்போது உன் பெயர் கோமதி.
நீ ஒரு நாள் அவ்வூருக்கு வந்திருந்த சமாதி குப்தர் என்னும் முனிவரைக் கண்டு வணங்கினாய்.
அவர் புலால் உண்பது, மது அருந்துவது, பொய், கொலை, களவு செய்தல் ஆகியவைகளை மறந்தும் செய்யாதே என்று உன்னிடம் சொன்னார்.
அத்துடன் அவர் ஐந்து வகையான உதும்பரம் பழங்களை உண்ணுதல் தவறு என்றும் உபதேசித்தார். அன்று முதல் அவருடைய அருளுரைகளைக் கேட்டு நடந்து வந்தாய்.
ஒரு நாள் உன் கணவன் பறவைகளைப் பிடித்து கூட்டில் அடைத்தான். அதனைக் கண்டு அந்த உயிர்களிடத்தில் கருணை காட்டி விடுவித்தாய்.
வெளியில் சென்றிருந்த கணவன் இல்லத்திற்கு வந்தவுடன் பறவைகள் இல்லாததைக் கண்டு அதிர்ந்தான்.
இக்கூட்டைத் திறந்து விட்டது யார்? எனக் கேட்டான். அருளுள்ளம் கொண்ட நீ , நான் தான் திறந்து விட்டேன் என்றாய்.
உடனடியாக அவன் இந்த வீட்டில் இனி உனக்கு இடம் கிடையாது. உடனே வெளியேறு என துரத்தினான்.
கணவனால் கைவிடப்பட்ட நீ, அபலையாய் உறவினர் ஒருவர் வீட்டில் சென்று தங்கினாய். ஒரு நாள் அந்த நாட்டு அரசன் தாத்தரி வாகனனும், அரசி சீமதியும் உலா வந்தனர்.
அப்போது அவர்களைக் கண்ட நீ, அந்த அரசியின் வயிற்றில் பிறக்க வேண்டும் என நினைத்தாய். நீ அப்பிறப்பில் இறந்ததும், அரசி சீமதி வயிற்றில் சென்று தங்கினாய்.
துறவறம் பூண்ட இளவரசி
அப்போது அரசிக்கு எந்த உயிரையும் கொல்லக் கூடாது என்ற எண்ணம் தோன்றியது. அரசி தன் எண்ணத்தை மன்னனிடம் கூறினாள்.
மன்னனும் நகரில் யாரும் எவ்வுயிரையும் கொல்லக் கூடாது என உத்தரவிட்டான். அனைத்து உயிர்களுக்கும் அடைக்கலம் (அபயம்) தரும் எண்ணத்தை நீ ஊட்டியதால் உனக்கு அபயமதி எனப் பெயரிட்டனர் என்றார் முனிவர்.
தன்னுடைய முற்பிறவியை அறிந்த அவள், துறவறம் ஏற்று, அறநெறி நினைவுகளோடு வாழ்ந்து உயிர் நீத்த அடுத்த பிறவியில் அமித காந்தன் என்னும் தேவனாகப் பிறந்தாள்.
திருவள்ளுவர் சொல்வது என்ன?
மன்னுயிர்களை தன் உயிர் போல் நினைத்து பரிவு காட்டும் அருளாளனுக்குத் தன் உயிர் அஞ்சத்தக்க தீவினை எதுவும் இல்லை.
மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை
(குறள்-244)
உலக உயிர்களின் துன்பங்களைப் போக்கும் அருளாளன் நல்லனவற்றையே எண்ணி அவற்றையே செய்வான். ஆதலால் அவனுக்கு நல்வினைப்பயனே உண்டாகும். தீவினை ஒரு போதும் பற்றாது என்று திருவள்ளுவர் சொல்கிறார்.
அறத்தில் எது சிறந்தது? என்று கேட்டாயே ஆனந்தா… இப்போது தெரிந்துகொண்டாயா அன்பின் மகத்துவத்தை என்றார் தர்ம நாதர்.
கோபம் வந்தால் – திருக்குறள் கதை
குட்டை பாவாடையால் ஆபத்து – காமெடி
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.