பிறப்பு எத்தகையதாக இருந்தாலும், ஒருவன் உண்மையை கடைப்பிடித்தால் அவன் வாழ்வில வெற்றியாளனாக வலம் வருவான் என்பதை “ஏழைச் சிறுவனும் நேர்மை தந்த பரிசும்” கதை எடுத்துச் சொல்கிறது.
உள்ளடக்கம்
ஏழை சிறுவன்
அவனுடைய பெயர் வாசு. ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன். அவன் குழந்தையாக இருந்தபோதே தந்தை இறந்து விட்டார்.
கூவம் ஆற்றங்கரையோரம் ஒரு குடிசைப் போட்டு வசித்து வந்த அவனுடைய தாய் ரேவதி, மகனை படிக்க வைக்க ஆசைப்பட்டாள்.
ஒருசில அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்கு அதிகாலையிலேயே சென்று வாசல் பெருக்கி, கோலமிட்டு கிடைக்கும் பணத்தைக் கொண்டு மகனை பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கத் தொடங்கினாள்.
சிறுவன் வாசு, 5-ஆம் வகுப்பை தொட்டபோது, ரேவதிக்கு ஏற்பட்ட திடீர் காய்ச்சல் அவளை படுத்த படுக்கையாக்கியது. விவரம் அறியாத சிறுவன் வாசுவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.
இறந்துபோன தாய்
ஒரு நாள் இரவு அவள் திடீரென இறந்து போனாள். தாய் இறந்ததுகூட தெரியாமல் காலை வரை அவளை கட்டிப்பிடித்து உறங்கிய அவன், மறுநாள் காலை அவளுடைய கண்கள் திறந்தபடியே இருப்பதைக் கண்டு பயந்து போனான்.
தாயை எத்தனையோ முறை தட்டி எழுப்பியும் அவள் எழுந்திருக்கவில்லை. அருகில் இருந்த வீடுகளைச் சேர்ந்தவர்களிடம் அவன் ஓடிப்போய் சொன்னபோது அவர்கள் வந்து பார்த்துவிட்டு, உன் தாய் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டது என்றபோது அவனுக்கு கண்கள் இருண்டு போனது.
அவள்தான் அவனுடைய உலகமாக இருந்தாள். ஆதரவற்ற நிலையில் விடப்பட்ட அவனுடைய பள்ளிப் படிப்பு கனவாக மாறிப்போனது.
ஆதரவு கரம் நீட்டிய மற்றொரு தாய்
அருகில் இருந்த குடிசையில் வசித்து வந்த பார்வதி அம்மாள், நீயும் என் பிள்ளைதான் என்று பாசம் காட்டி சில நாள்களாக உணவு கொடுத்து வந்தார்.
அவரும் ஆதரவற்றவர்தான். அவளுடைய மகன் செந்தாமரை வாசுவின் வயதை ஒத்தவன்தான். அவனுடைய பள்ளிப் படிப்பு நிறைவேறாமல் போனது. அதனால் அவன் குப்பைகளில் கிடக்கும் பொருள்களை சேகரிக்கும் வேலைக்கு சென்று கொண்டிருந்தான்.
ஒரு நாள் அந்த கூவத்தின் ஓரம் கட்டப்பட்டிருந்த குடிசைகளை மாநகராட்சி அகற்றியது. அதில் வாசுவின் குடிசையும் காணாமல் போனது.
குடிசைவாசிகளுக்கு ஏதோ ஒரு இடம் தரப்போவதாகச் சொன்னபோது, எல்லோரும் புதிய இடத்தை நோக்கி புறப்பட்டார்கள்.
தனித்து நின்ற சிறுவன்
பார்வதி அம்மாவும் புறப்பட்டாள். பலமுறை அவள் வாசுவை தன்னோடு வருமாறு அழைத்தும் அவளோடு வர மறுத்துவிட்டான். தாய் இருந்த இடத்தை விட்டு செல்வதற்கு அவனுக்கு மனமில்லாமல் தவித்தான்.
இதனால் அவனை பிரிய மனமில்லாதவளாக வேறு வழியின்றி தன் மகன் செந்தாமரையுடன் பார்வதி அம்மாள் புறப்பட்டு போய்விட்டாள்.
பார்வதி அம்மாள் உணவளித்து வந்த வரை அதைப் பற்றி சிந்திக்காமல் இருந்து விட்டோமே. இப்போது நானே உழைத்து சம்பாதித்தால்தான் உணவு சாப்பிட முடியும் என்பதை அப்போதுதான் வாசு உணர்ந்தான்.
அவன் பல இடங்களில் வேலைக் கேட்டு சென்றபோது, சிறுவனாக இருக்கும் அவனுக்கு யாரும் வேலை தர முன்வரவில்லை. இரண்டு நாள் பட்டினி கிடந்த அவன், சாலையோரத்தில் படுத்துறங்கினான்.
பிழைக்க வழி தெரிந்தது
அதிகாலை நேரத்தில் நாய்கள் குலைக்கும் சத்தத்தில் எழுந்த அவன், எதிரில் ஒரு குப்பைத் தொட்டியில் முதியவர் ஒருவர் குப்பைகளை கிளறி, பிளாஸ்டிக் பாட்டிகளை சேகரித்து சாக்குப் பையில் போடுவதைப் பார்த்தான்.
உழைப்பதற்கு தயாராக காத்திருந்த அவனுக்கு இப்போது கண் முன்னே ஒரு வேலை இருப்பதைப் பார்த்ததும் சந்தோஷம் தாளவில்லை.
முதியவரை பார்த்து, இனி நான் உங்களுக்கு உதவிக்கு வருகிறேன். கிடைக்கும் பணத்தில் எனக்கு 3 வேளை சாப்பாடு போட்டால் போதும் என்றான் வாசு. தனி ஆளாக தவித்த அந்த முதியவரும், அவனை தன்னுடைய வேலைக்கு அவனை துணையாக சேர்த்துக் கொண்டார்.
ஒரு சில ஆண்டுகள் கடந்த நிலையில், முதியவரும் இறந்து போனார். அவர் சாலையோரம் குடிசைப் போட்டு வசித்து வந்த இடம் இப்போது வாசுவுக்கு சொந்தமானதாக மாறியது.
நேர்மைக்கு கிடைத்த பரிசு
தனி ஆளாக குப்பைகளில் உள்ள பொருள்களை சேகரித்து பணம் ஈட்டத் தொடங்கிய வாசு, தன்னுடைய தாய் “நேர்மை தவறாதே. உழைப்புதான் உன்னை உயர்வடையச் செய்யும். படித்து பெரியவனாகி நீ 4 பேருக்கு வேலை கொடு” என்று சொல்வதை அடிக்கடி நினைத்துக் கொள்வான்.
சில ஆண்டுகள் இப்படியே உருண்டோடியது. 21 வயதைக் கடந்த அவன் இப்போது ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கியிருந்தான். சாப்பாடுக்கு போக மீதமிருந்த தொகையை தொடர்ந்து சேமிக்கத் தொடங்கினான்.
ஒரு நாள் அவனுடைய வங்கிக் கணக்கில் யாரோ 10 லட்சம் ரூபாய் போட்டிருந்தார்கள். நேர்மையாக வாழ வேண்டும் என்று தாய் சொன்னது அப்போது அவனுக்கு ஞாபகம் வந்துவிடவே, அந்த பணத்தின் மீது அவனுக்கு ஆசை ஏற்படவில்லை.
உடனடியாக அவன் வங்கி மேலாளரை சந்தித்து விவரத்தைச் சொன்னபோது, வங்கி மேலாளர் அவனுடைய நேர்மையைக் கண்டு வியந்து போனார்.
குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் பாட்டிகளையும், அட்டைப் பெட்டிகளையும் பொறுக்கி வாழும் உன்னிடம் இந்த நேர்மையை நான் எதிர்பார்க்கவில்லை என்று பாராட்டினார்.
உடனடியாக தவறாக போடப்பட்ட பணத்தை, திருப்பி அந்த பணத்துக்கு உரியவரிடமே தகவல் அளித்து மாற்றியபோது, அந்த நபர் வாசுவிடம் செல்போனில் பேச விரும்பினார்..
வாசுவும் அவரிடம் சிறிது தயக்கத்தோடு பேசினான். அப்போது அந்த எதிர் முனையில் இருந்தவர், நான் ஒரு வைர வியாபாரி. எனக்கு இந்த 10 லட்சம் ரூபாய் வேறு கணக்குக்கு தவறாக போவதால் பெரிய இழப்பை ஒன்றும் சந்தித்திருக்க மாட்டேன்.
ஆனால் தவறாக ஒரு பெரிய தொகை உன் வங்கிக் கணக்குக்கு வந்தபோது கொஞ்சம் கூட சபலமின்றி நீ செயல்பட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது. உன்னே போன்ற ஒரு நேர்மையாளனைத்தான் இதுவரை தேடிக் கொண்டிருந்தேன்.
நீ என்னிடம் வந்துவிடு. நான் உனக்கு வேலை தருகிறேன் என்று சொன்னபோது வாசுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
வங்கி மேலாளர் அந்த வைர வியாபாரியிடம் பேசும்போது, இந்தப் பையன் அதிகம் படிக்காதவன் என்றபோது, எனக்கு படிப்பு தேவையில்லை. திறமையும், உண்மையும்தான் தேவை. அதனால் உடனே அவனை என்னிடம் அனுப்பி வையுங்கள் சென்று சொல்லிவிட்டார்.
வேலையில் சேர்ந்த வாசு
வங்கி மேலாளரின் வற்புறுத்தலை அடுத்து அவன் அந்த வைர வியாபாரியிடம் சென்றடைந்தான்.
அது முதல் அவனுடைய வாழ்க்கை தலைக்கீழாக மாறிப்போனது. வைர வியாபாரத்தின் அனைத்து நுணுக்கங்களையும் அந்த வியாபாரி வாசுக்கு கற்றுத் தந்து தன்னுடைய நம்பிக்கைக்கு உரியவனாக தன்னிடம் வைத்துக் கொண்டார்.
வருமானத்தில் ஒரு பகுதியை அவனுடைய வங்கிக் கணக்கில் போடத் தொடங்கினார். இப்போது வாசு நகரின் முக்கியப் பகுதியில் ஒரு மாடி வீட்டுக்கு சொந்தக்காரனாக மாறிப்போனான்.
நகரில் முதலாளிக்கு சொந்தமான கிளையை கவனித்துக்கொள்ளும் பொறுப்பாளனாக மாறினான். முதலாளி, அவனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்தும் வைத்தார்.
நன்றி மறவாத வாசு
ஒரு நாள் அவன் தன்னுடைய கடை வாசலில் யாரோ ஒரு குப்பை பொறுக்கும் தொழிலாளி தயங்கி நிற்பதைப் பார்த்த அவன், உடனடியாக அந்த இளைஞனை உள்ளே அழைத்து வந்து அமர வைத்தான்.
அந்த இளைஞன் வேறு யாருமல்ல. பார்வதி அம்மாவின் மகன் செந்தாமரை என்பதை முகசாயலில் இருந்து தெரிந்துகொண்டுதான் அவனை உள்ளே அழைத்து வந்தான்.
பார்வதி அம்மா எப்படி இருக்கிறார்கள் என்பதையும், பல இடங்களில் உன்னையும், பார்வதி அம்மாவையும் தேடியும் பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்போதாவது உன்னை பார்க்க முடிந்தது என்று பழைய பாசத்தோடு அவனுடைய கைகளை பிடித்து தடவினான் வாசு.
பார்வதி அம்மா உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அவளுக்கு மருந்து வாங்கக் கூட காசு இல்லை. நான் ஒரு நாள் குப்பையில் இருந்து இந்த கல்லை எடுத்தேன். அது விலை உயர்ந்த கல்லாக இருக்கும் என்று நான் சேகரித்த பொருள்களைக் கொடுத்து வரும் கடைக்காரர் சொன்னார்.
அதனால் அதை வீட்டில் எடுத்து வைத்திருந்தேன். அம்மாவுக்கு சில நாள்களாகவே உடம்பு சரியில்லை. இன்றைக்கு அம்மாவுக்கு மருந்து வாங்கக் கூட பணம் இல்லாமல் போனதால் இந்த கல்லை உங்கள் கடைக்கு அருகில் உள்ள கடைக்கு வந்து காட்டினேன்.
அவர் இது சாதாரணக் கல்தான். வேண்டுமானால் 50 ரூபாய் தருகிறேன் என்றார். எனக்கு மருந்து வாங்க 100 ரூபாய் தேவைப்பட்டது. அதனால் தயக்கத்தோடு அவரிடம் இருந்து கல்லை வாங்கிக் கொண்டு அடுத்தக் கடையாக இருக்கும் உன் கடை வாசலில் வந்து நின்றேன்.
நீ இங்கிருப்பாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று சோகத்தோடு சொன்னான் செந்தாமரை.
கவலைப்படாதே… இப்போதே அம்மாவை மருத்துவமனையில் சேர்த்து நல்ல சிகிச்சை அளித்து குணப்படுத்துவோம் என்று அவனை அழைத்துக் கொண்டு அவன் இடத்துக்கு புறப்பட்டான்.
பார்வதி அம்மா குணடைந்ததும் தன் வீட்டுக்கு அழைத்து வந்தான். செந்தாமரையை அழைத்து ஒரு நாள் விலை உயர்ந்த கல்லாக இருக்கும் என்று சந்தேகப்பட்டு என்னிடம் கொண்டு வந்து தந்தாயே… அது உண்மையில் விலை உயர்ந்த நீலக்கல்.
அதை பட்டை தீட்டி விலை மதிப்பை செய்தபோது, இந்தியாவில் உள்ள பெரிய கற்களில் இது ஒன்றாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் மதிப்பு இன்றைக்கு குறைந்தபட்சம் 5 கோடி ரூபாய் இருக்கும்.
அதை என் முதலாளியிடம் கொடுத்து பணத்தை உனக்குத் தர ஏற்பாடு செய்திருக்கிறேன். இனி நீ அந்த பணத்தில் சொந்தமாக ஒரு தொழிலை தொடங்கிவிட்டு அம்மாவை அழைத்துச் செல் என்றான் வாசு.