சென்னை: அரசியலுக்கு ராகுல் காந்தி தகுதியானவர் அல்ல. அவர் விளையாட்டுப் பிள்ளை (பப்பு) என்றெல்லாம் பாஜக மக்களிடையே செய்து வந்த 10 ஆண்டுகால பிரசாரத்துக்கு மக்களவையில் பதிலடி கொடுத்து விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி (Congress Rahul Gandhi).
பாஜக ஆட்சிக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. இனி வருங்காலமும் நம்முடையதுதான் என்ற கோட்டையை கட்டியிருந்தது பாஜக.
காங்கிரஸ் ராகுல் காந்தி
அதனால்தான் இந்த தேர்தலில் 400 இடங்களை வெல்வோம் என்று பாஜக சொல்லி வந்தது. ஆனால் பாஜகவின் கற்பனைக் கோட்டையை தகர்ந்தெரிந்து சாதித்திருக்கிறார் ராகுல் காந்தி.
அத்துடன் அவர் விடவில்லை. மக்களவையில் ஆணித்தரமான, அழுத்தம் திருத்தமான தனது பேச்சுக்களால் பாஜகவை நிலைகுலையவும் வைத்திருக்கிறார் ராகுல் காந்தி.
அதிர்ந்து போன அமித் ஷா
இன்னும் சொல்லப் போனால், மோடிக்கு எதிராக தொடர்ந்த ராகுல் காந்தி தொடுத்த கேள்விக் கணைகளை சமாளிக்க முடியாமல், ஒரு கட்டத்தில், மத்திய அமைச்சர் அமித் ஷாவே எழுந்து நின்று, சபாநாயகரை நோக்கி ராகுல் காந்தியிடம் இருந்து எங்களை காப்பாற்றுங்கள் என்று முறையிட்டிருக்கிறார்.
“பப்பு” என்று பாஜகவினரால் கேலி செய்யப்பட்டு வந்தவர் மக்களவையில் பந்தாட தொடங்கியிருப்பதை ஜனநாயக பாதையில் மக்களவை நடப்பதைக் கண்டு மக்கள் ரசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
அரசியல் பிரவேசம்
2004 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலின்போதுதான் ராகுல் காந்தி தன்னுடைய முதல் அரசியல் பிரவேசத்தைத் தொடங்கினார்.
அவர் தன்னுடைய அரசியல் பிரவேசத்தின்போதே, சாதி, மத பிரிவினைவாத அரசியலை எதிர்ப்பதையே தன்னுடைய அடையாளமாக காட்டத் தொடங்கினார்.
அது பாஜகவின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அதனால் காங்கிரஸ் ஆட்சி 2014 வரை தொடர்ந்தது.
சோனியா காந்தியை அடுத்து நேரு குடும்பத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவிக்கு ராகுல் காந்தி வந்தால், பாஜகவுக்கு எதிர்காலமே இல்லாமல் போய்விடும் என்ற அச்சம் அக்கட்சிக்கு இருந்து வந்தது.
கட்சி பிரச்னையை சாதகமாக்கிய பாஜக
காங்கிரஸ் கட்சிக்குள் ராகுல்காந்தியின் செயல்பாடுகள் தொடர்பாக சிலர் அதிருப்தியை வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். அவர் பகுதி நேர அரசியல்வாதியாக இருப்பதாகக் கூட குறை கூறினார்கள்.
இதனால் அவர் அரசியலுக்கு வர விருப்பமில்லாத அரசியல்வாதி என்ற பிம்பம் தலைதூக்கியது. இதை எப்படியாவது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள பாஜக துடித்தது.
2013 அக்டோபரில் ராகுல்காந்தியை விளையாட்டுப் பிள்ளை என்ற அர்த்தத்தில் “பப்பு” என்று அமித் ஷா குறிப்பிடத் தொடங்கினார்.
பாஜகவினரும் அவரைத் தொடர்ந்து ராகுல்காந்தியை பப்பு என கிண்டலடிக்கத் தொடங்கினார்கள்.
இருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் முகமாக ராகுல்காந்தி 2014-இல் மாறினார். இதனால், பாஜக ராகுல் காந்தி அரசியலுக்கு தகுதியானவர் அல்ல என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்த தீவிரமாக முனைப்பு காட்டத் தொடங்கியது.
பாஜகவின் பிரசாரம்
2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தை பாஜக, நரேந்திர மோடியை முன்னிலைப்படுத்தி தொடங்கியது. அப்போது மீண்டும், ராகுல்காந்தி “பப்பு” என பாஜகவால் மீண்டும் விமர்சிக்கப்பட்டார்.
அப்போது, 10 ஆண்டு காலம் தொடர்ந்து மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சி மீது மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டிருந்தது. இதனால், 2014-இல் வேறொரு ஆட்சி வந்தால் பரவாயில்லை என்ற எண்ணம் உருவெடுத்தது.
இந்த நிலையில், “பிரதமர் நாற்காலியை பப்புவின் பிறப்புரிமை என்று காங்கிரஸ் கட்சி நினைக்கிறது. ஆனால் இது ஜனநாயக நாடு. மக்களின் ஆசிர்வாதம் தேவை.
மக்களின் ஆசிர்வாதம் நரேந்திர மோடிக்கே உண்டு. அதனால் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்கிறோம். பப்புவின் கையில் ஆட்சியைக் கொடுக்க மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று வலிமையான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
மனம் மாறிய மக்கள்
பாஜகவின் தொடர் பிரசாரத்தின் காரணமாக, மக்களே ஒரு கட்டத்தில் ராகுல்காந்தி அரசியலுக்கு தகுதியற்றவர்தானோ என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.
எதிர்பார்த்தபடியே மோடி பிரதமர் ஆனார். ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 44 மக்களவை உறுப்பினர்களை மட்டுமே பெற முடிந்தது.
2019 தேர்தலின்போதும் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே பெற்றது. ஆனால் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது.
உதாசீனப்படுத்தப்பட்ட ராகுல்
குறைந்தபட்சம் 55 இடங்களைக் கைப்பற்றினால்தான் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாக செயல்பட முடியும் என்ற நிலையில் காங்கிரஸ் மீண்டும் தோல்வியின் விளிம்புக்கே சென்றுவிட்டது.
முந்தைய தேர்தலைக் காட்டிலும் 8 இடங்களை அதிகம் பிடித்தாலும் வாக்கு வங்கி 20 சதவீதத்துக்கும் கீழே சென்றுவிட்டது.
அத்தேர்தலில் இரு இடங்களில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அதில் வயநாட்டில் வெற்றி பெற்றார். அமெதி தொகுதியில் தோல்வியை தழுவினார்.
பல வழக்குகள் அவரை சுற்றி வளைத்தன. மக்களவைக்கு அவர் வந்தாலும், ஏதோ ஒரு இருக்கையில் அமர்ந்து இருந்துவிட்டு அமைதியாகச் சென்றுவிடுவதைக் கூட பாஜக கேலி செய்யத் தொடங்கியது.
ராகுல்காந்தியை ஒரு தலைவராகவே பாஜகவினர் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களவையில் பேசுவதற்கு அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.
மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பு
இந்த நிலையில்தான் அவர் 2022-இல் பாரத் ஜோடா யாத்ரா என்ற பெயரில் நாடு முழுவதும் ஒற்றுமை நடை பயணத்தைத் தொடங்கினார்.
இடையில் அவர் மீது அவதூறு வழக்கு பதிவாகி அவருக்கு எதிராக தீர்ப்பு கிடைத்தது. அதில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
தீர்ப்பு வந்த சில மணி நேரங்களிலேயே அவருடைய மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது. நீதிமன்றத்துக்கு சென்று மீண்டும் மக்களவை உறுப்பினர் பதவியை அவர் தக்க வைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
கொடிக் கட்டி பறந்த பாஜக
இதனால் எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத ஆட்சியாக கடந்த 10 ஆண்டுகளாக பாஜக கொடிக்கட்டி பறந்தது. கேள்வி கேட்பார் இல்லாததால் அரசு என்ன நினைக்கிறதோ அதைத்தான் செய்யும் நிலை நீடித்தது.
எதிர்க்கட்சியாகக் கூட காங்கிரஸ் இனி வர முடியாது. இனி வருங்காலம் முழுவதும் பாஜகவின் ஆட்சிதான் என்று பாஜகவின் தலைவர்கள் எல்லோருமே பேசத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த அதிகார பலம் அவர்களின் கண்களை மறைத்தது என்பது கடந்த 5 ஆண்டுகாலத்தில் கொண்டு வரப்பட்ட மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டங்களே சாட்சி.
நிலைநிறுத்திக் கொண்ட ராகுல்
ராகுல்காந்தி அரசியல் தலைவராக வருவதற்கு தகுதியற்றவர் என்ற நிலையை தொடர்ந்து பாஜக சொல்லி வந்த நிலையில், ராகுல்காந்தி காங்கிரஸின் தேசியத் தலைவர் என்ற பொறுப்பில் இருந்து விலகினார்.
பாஜகவுக்கு எதிரான பிரசாரத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கினார்.
இந்தியா முழுவதும் ஒற்றுமை யாத்திரை நடத்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே அணியில் சேர்த்தார்.
மக்களை நோக்கிய பயணம்
இந்த ஒற்றுமை பயணத்தில் அடித்தட்டு மக்களோடு பழகினார். அவர்களோடு கலந்துரையாடினார்.
அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்டார். சாலையோர ஓலைக் குடிசைகள், லாரி டிரைவர்கள், சாலையோர சிற்றுண்டி கடைகள், டீக்கடைகள், என அவர் கால்கள் பதிந்த இடங்கள் ஏராளம்.
தேர்தல் நேரத்தில் மக்கள் பிரச்னைகளுக்கு மிகத் தீவிரமான குரலை எழுப்பினார். ஆதாரங்களை அடுக்கி வைத்தார்.
அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை பாஜக அரசால் பாதிக்கப்பட்டு வருவதை சுட்டிக் காட்டினார்.
நட்புக் கரம்
கூட்டணி கட்சிகள் விலகிச் சென்றாலும், அவர்களாக நம்மை தேடி வரட்டும் என்று காத்திருக்கவில்லை. அவரே சென்று நட்புக் கரம் நீட்டினார்.
நேருவின் பாரம்பரியத்தின் வந்தவன் என்ற இருமாப்பை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காட்டிக் கொள்ளவில்லை.
இதன் மூலம் அடித்தட்டு மக்கள் முதல் மேல்தட்டு மக்கள் வரை ராகுல்காந்தி எதிர்காலத்தில் ஒரு சிறந்த தலைவருக்கான தகுதியை பெற்றிருப்பதை உணர வைத்தார்.
ஊடகங்களும் சோதனை
கடந்த மக்களவைத் தேர்தலின்போது ஊடகங்கள் எல்லாமும் இணைந்து பாஜகவுக்கு கொடி பிடித்தன.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் என பல்வேறு வகையிலும் ஆளும் பாஜகவே மீண்டும் ஆட்சிக்கு வரும் எனச் சொல்லி மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்தது.
ஆணவப் பேச்சுக்கள்
அதனால்தான் 400 தொகுதிகளை வெல்வோம் என்ற ஆணவ பேச்சு பாஜக தரப்பில் பரவலாக எழுந்தது. காங்கிரஸ் கட்சி கரைந்து போய்விட்டது. அது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. கூட்டணி கட்சிகளை நம்பி களத்தில் இறங்கியிருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டது.
சிக்கித் தவித்த தேர்தல் ஆணையம்
போதாக்குறைக்கு தேர்தல் ஆணையமும் கூட பல விஷயங்களில் நடுநிலை தவறியது என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம் மீண்டும் பாஜகவே ஆட்சிக்கு வரும் என்று எல்லா மட்டத்திலும் கொடி பிடிக்கும்போது நாம் மட்டும் ஏன் விலகி நின்று சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாதுகாப்பு உணர்வால் கூட அப்படி நடந்திருக்கலாம்.
சமூக ஊடகங்களின் பங்களிப்பு
இத்தனை எதிர்ப்புகளுக்கிடையே ராகுல்காந்திக்கு ஆதரவாக இருந்தவை காங்கிரஸின் கூட்டணி கட்சிகளும், சமூக ஊடகங்களும்தான்.
இன்றைக்கு அரசமைப்பு சட்டப் புத்தகத்தை பிரதமரே வணங்கும் நிலையை உருவாக்கியதற்கு மறைமுகமாக இந்த சமூக ஊடகங்களும், பிரபல ஊடகங்களாலும், பத்திரிகைகளாலும் ஆளும் கட்சிக்கு எதிராக மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததை பாராட்டாமல் இருக்க முடியாது.
மீண்டும் எழுந்து நின்ற ராகுல்
ராகுல் காந்தி ஒரு கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியானவர்தான். ஒரு நாட்டை ஆள்வதற்கு தகுதியானவர்தான் என்பது இப்போது மெல்ல மக்கள் நம்பத் தொடங்கியிருப்பதன் வெளிப்பாடுதான் காங்கிரஸின் தற்போதைய வெற்றி.
கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, காங்கிரஸ் கட்சியும், கூட்டணிக் கட்சிகளும் இணைந்து 234 தொகுதிகளைப் பெற்றதே ஒரு சாதனைத்தான்.
பாஜக தொடர்ந்து 10 ஆண்டுகள் பொழிந்த அஸ்திரங்களை தாங்கி மீண்டும் எழுந்து நின்றிருக்கிறார் ராகுல்.
ஓங்கி ஒலித்த குரல்
எந்த இந்து மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்களோ அதையே ஆயுதமாக்கி திருப்பித் தாக்கும் வல்லமையை இப்போது ராகுல்காந்தி பெற்றிருப்பதை மக்களவையில் முதல் கூட்டத் தொடரே காட்டிக் கொடுத்திருக்கிறது.
மக்களவையில் சிவபெருமானின் படத்தைக் காட்டி ராகுல்காந்தி பேசிய பேச்சை கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.
சிவனின் முத்திரை
“சிவனின் கை முத்திரைதான் காங்கிரஸ் கட்சியின் சின்னம். உண்மையையும், அஹிம்சையையும் உலகுக்கு எடுத்துரைக்கிறது.
எதிர்க்கட்சியாக இருப்பதும் எங்களுக்கு பெருமைதான். அதிகாரம் எங்களுக்கு முக்கியமல்ல. அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது” என்று பேசினார் ராகுல்காந்தி.
கடவுளோடு தொடர்புபடுத்தி பிரதமர் மோடியையும் மறைமுகமாக கிண்டல் அடித்தார் ராகுல் காந்தி.
அத்துடன் அவர், உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை என்று பேசியபோது, பிரதமர் மோடி குறுக்கிட்டு, ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் விமர்சிப்பது தீவிரமான பிரச்னை என்றார். இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித்ஷா குரல் எழுப்பினார்.
காப்பாற்ற கோரிய அமித் ஷா
எங்கே இந்த பிரச்னை வேறு திசை நோக்கி செல்லுமோ என எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கே ஒரு டிவிஸ்ட்டை ராகுல்காந்தி வைத்தையும் பார்க்க முடிந்தது.
“நரேந்திர மோடி மட்டுமே ஒட்டுமொத்த இந்து சமூகம் கிடையாது. பாஜக மட்டும் இந்து சமூகம் அல்ல. ஆர்எஸ்எஸ் மட்டும் இந்து சமூகம் இல்லை” என்று சொல்லி ஆளும் பாஜகவை திணற வைத்ததை ரசிக்காமல் இருக்க முடியவில்லை.
அக்னிபாத் விவகாரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு என அவர் பாஜகவுக்கு எதிராக தொடுத்த கேள்வி கணைகளால் ஒரு கட்டத்தில் திணறிப் போன அமித் ஷா ” எங்களை காப்பாற்றுங்கள் சபாநாயகரே… ராகுல் சபையில் அடுக்கடுக்கான பொய்களை சொல்கிறார். அவரிடம் இருந்து தயவுசெய்து காப்பாற்றுங்கள். என்று கேட்கும் நிலை ஏற்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிகழ்வு.
சபாநாயகருக்கு ஒரு குட்டு
பாஜக அரசால் தேர்வு செய்யப்பட்ட சபாநாயகர், மோடி ஆட்டி வைக்கும் பொம்மை என்று நேரடியாக குற்றம் சாட்டாமல் மிகவும் நாசுக்காக, மக்களவையில் சிரிப்பலையை எழுப்பும் ஒரு நகைச்சுவையாக ராகுல் காந்தி பேசிய விதத்தையும் கூட சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.
“நீங்கள் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து உங்களை இருக்கைக்கு அழைத்து வந்த என்னை, நிமிர்ந்து நின்று ஒரு சபாநாயகர் அந்தஸ்தோடு கைக் குலுக்கினீர்கள். ஆனால் பிரதமர் மோடி கைக்குலுக்கும்போது, தலைகுனிந்து அவர் கையை குலுக்கினார்கள்” என்று சொல்லி சபாநாயரையும் அவர் வாரியது ரசிக்கும்படியாகத் தான் இருந்தது.
சினிமா காட்சிகளாய் ரசிக்கலாம்
புதிய அரசு ஆட்சி அமைந்த நிலையில் தொடங்கிய முதல் மக்களவைத் தொடரிலேயே சுவாரஸ்யமான விஷயங்கள் தொடங்கிவிட்டது. அதனால், பட்ஜெட் நேரத்தில் இதை விட அமர்க்களமான, சுவாரஸ்யமான விஷயங்களை நாம் பார்க்க முடியும்.
10 ஆண்டு காலத்தில் சுவாரஸ்யமில்லாத மக்களவைக் கூட்டத் தொடர்களால் அதை பலரும் பார்க்க விரும்பாமல் போனதுண்டு.
இனி அப்படியில்லை. பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த சினிமா காட்சிகளைப் போல மக்களவை நிகழ்ச்சிகள் காணும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
மக்களின் குரல்
55 வயதில் எதிர்க்கட்சித் தலைவராக இப்போது அமர்ந்திருக்கிறார். எதிர்காலத்தில் பிரதமராக அவர் வரவேண்டும் என விரும்பினால், எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பாக செயல்படுவதுதான்.
நாட்டு மக்களின் பிரச்னைகளை மக்களவையில் எதிரொலிக்கும் குரலாக ராகுல் காந்தி தன்னுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படத் தொடங்கியிருக்கிறார்.
நாடாளுமன்றம் சரியான முறையில் இயங்கவும், அரசின் தவறான கொள்கைகளை தடுக்கும் குரலாகவும் உருவெடுத்திருக்கிறார்.
மனதின் குரலுக்கு நெருக்கடி
சிபிஐ இயக்குநர் நியமனம், தேர்தல் ஆணையர் நியமனம், லோக்பால் தலைவர் நியமனம் உள்ளிட்டவற்றின் தலைவர்களை தேர்வு செய்யும் மூவர் குழுவில் அவர் அங்கம் வகிக்கப் போகிறார்.
இனி அவருடைய சம்மதம் இன்றி பாஜக தன்னிச்சையாக யாரையும் தேர்வு செய்ய முடியாது. அப்படி மீறி செயல்பட்டால் மக்களவையில் அது எதிரொலிப்பதன் மூலம் நாட்டு மக்களிடம் எளிதாக ராகுல்காந்தியால் கொண்டு செல்ல முடியும்.
நாடாளுமன்றத்தில் அமைக்கப்படும் பொதுக் கணக்கு, பொதுத் துறை நிறுவனங்கள், பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களின் உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி செயல்படும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
களைக்கட்டிய மக்களவை
10 ஆண்டுகளாக விவாதங்களில் நேரடியாக பங்கேற்பதை தவிர்த்து வந்த மோடி, ராகுல் காந்தி பேசும்போது எழுந்து நின்று குறுக்கீடு செய்ததையும், அமித்ஷா உள்ளிட்ட பல அமைச்சர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்ததையும் பார்க்க முடிந்தது.
பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் கூட ஆர்வமாக இந்த மோதலை ரசிக்கத்தான் செய்தார்கள்.
இந்த விவாதங்களின்போது, நாட்டின் பிரதமர் யார் என்ற சந்தேகம் கூட வந்ததாக சில அரசியல் விமர்சகர்கள் நகைச்சுவையாக குறிப்பிட்டதையும் இங்கே சொல்லாமல் இருக்க முடியவில்லை.
நாட்டில் எல்லா விஷயங்களிலும் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் எனில் ஆளும் கட்சிக்கு எதிராக சவால் விடக் கூடிய அளவில் எதிர்க்கட்சிகளும் இருக்க வேண்டும். அந்த வகையில் ஒரு ஆரோக்கியமான அரசியல் களத்தை இப்போது பார்க்கத் தொடங்கியிருக்கிறோம்.
வாழ்க இந்தியா! வாழ்க ஜனநாயகம்!
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.