பாஜக வெற்றி பாதையில் மாற்றம் வருமா?

82 / 100

சென்னை: மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சில தேர்தல் கணிப்புகள் சொல்லியுள்ளன. இந்த நிலையில் பாஜகவின் மற்றொரு முகம் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.

இதனால் பாஜக வெற்றிப் பாதையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

பாஜக வெற்றி பாதை

வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 3-ஆவது முறையாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமா அல்லது காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு கடந்த சில வாரங்களாகவே நிலவி வருகிறது.

இந்த நிலையில், வரும் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றி பெற்று 3-ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று ஏபிபி செய்தி நிறுவனம் மற்றும் சி வோட்டர் அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய கருத்து கணிப்பு தெரிவித்திருக்கிறது.

மோடியின் தியான ரகசியம்

காணொலியை பார்த்தீர்களா?

இதேபோன்று வேறு சில கருத்துக்கணிப்புகளும் கூட பாஜகவுக்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 295 முதல் 335 இடங்களில் வெற்றி பெறும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.


இண்டியா கூட்டணியின் வெற்றி 165 முதல் 205 என்ற எண்களைத் தாண்டாது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


ஒரு சில கருத்துக்கணிப்புகள் மட்டுமே இண்டியா கூட்டணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது.

உச்சநீதிமன்றம் அதிரடி


பொதுவாக தேர்தல் நேரத்தில் ஆளும் அரசுக்கு எதிரான போக்கு நிலவினாலும் கூட, தன்னுடைய அதிகார பலத்தின் மூலம் ஒருசில சாதகமான அம்சங்களை கையாள்வது உண்டு.

இதன் மூலம் வெற்றி வாய்ப்புகளை அடைவதற்கான முயற்சிகளை எந்த அரசும் மேற்கொள்வது வாடிக்கையான ஒன்று. அதில் பாஜக ஒன்றும் விதிவிலக்காக இல்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், சமீபத்தில் தேர்தல் பத்திரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது பாஜகவுக்கு ஒருவகையில் பாதிப்பை ஏற்படுத்தும் தீர்ப்பாக அமைந்திருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

தேர்தல் பத்திரத்தின் தாக்கம்

“தேர்தல் பத்திர முறை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19(1) ஆகியவற்றை மீறுவதாக உள்ளது.

அத்திட்டத்தில் வெளிப்படை தன்மை இல்லை. அரசிடம் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. நன்கொடை தருவோர் குறித்த விவரங்களை தெரிவிக்கத் தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கிறது.

எனவே தேர்தல் நன்கொடை அளிக்க வகை செய்யப்பட்ட வருமான வரி திருத்தச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ திருத்தச் சட்டம் ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

தேர்தல் பத்திர முறை தொடர்பான மற்ற சட்டத் திருத்த மசோதாக்களும் ரத்து செய்யப்படுகின்றன.

தேர்தல் பத்திரச் சட்டம் மட்டுமின்றி, நிறுவன சட்டத் திருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.

2019-ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்தவர்கள் விவரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிட வேண்டும்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து பங்களிப்பு விவரங்களை மார்ச் 6-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். நன்கொடை கொடுத்தவர்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய இணையதளத்தில் ஏப்ரல் 13-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும்” என்று உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

இதன்படி, பாரத ஸ்டேட் வங்கியும், தேர்தல் ஆணையமும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் தேர்தல் பத்திரம் தொடர்பான விஷயங்களில் செயல்படும்போது அதனால் வெளியாகும் தகவல்கள் ஒருவேளை பாஜகவுக்கு எதிராக தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.

விவசாயிகள் போராட்டம்

வேளாண் விளைபொருள்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டு வர வலியுறுத்துவது, வேளாண் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய சங்கங்கள் தில்லி நோக்கி பேரணியை தொடங்கின.
ஆனால் பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள் பஞ்சாப்-ஹரியானா இடையே ஷம்பு, கானாரி ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

அங்கு அமைக்கப்பட்ட தடுப்பு அரண்களை அகற்ற முயன்ற விவசாயிகள் மீது கண்ணீர்புகை வீசப்பட்டது.
அத்துடன் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 3 விவசாயிகள் காயம் அடைந்தார்கள். அவர்களில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.

4 கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் ஒரு இணக்கமான முடிவு காணப்படவில்லை.

ஒரு விவசாயி உயிரிழந்துள்ளதை அடுத்து போராட்டத்தை தாற்காலிகமாக 2 நாள்களுக்கு விவசாய சங்கங்கள் நிறுத்தி வைத்திருப்பதாக அதன் தலைவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

அதே நேரத்தில் விவசாயிகளின் இந்த போராட்டம் தொடர்பாக சமூக ஊடக நிறுவனமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டவர்களின் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியிருக்கிறது.

இந்திய அரசு அவர்களுக்கு, சில நிர்வாக உத்தரவுகளை அனுப்பியதை அடுத்து இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் எக்ஸ் தளம் தெரிவித்திருக்கிறது.

காங்கிரஸ் விமர்சனம்

செய்தி நிறுவனமான பிடிஐ தகவல்படி, உள்துறை அமைச்சக உத்தரவின்பேரில் 177 கணக்குகள் மற்றும் இணைய இணைப்புகள் தாற்காலிகமாக முடக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி, “ஜனநாயக நாட்டில் எதிர்ப்புக் குரல்களை அடக்க அரசு முயற்சிக்கிறது” என குற்றம் சாட்டி, சமூக ஊடக பக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக விமர்சனம் செய்திருக்கிறது.
சமூக ஊடக பதிவுகளையும், கணக்குகளையும் முடக்கியதற்காக பல எக்ஸ் தள பயனர்களும் கூட அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
விவசாயிகளின் போராட்ட விவகாரத்தில் பாஜக மென்மையான போக்கை கடைப்பிடிக்காமல் போனதால் அது மிகப் பெரிய மோதலாக உருவெடுத்திருப்பதை மறுப்பதிற்கில்லை.
மக்களில் ஒரு பகுதியினர், தங்களுடைய கோரிக்கைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடும்போது, அதை இரும்புக்கரம் கொண்டு அடக்க அரசு முயற்சிக்கிறது.

அது அரசாங்கத்துக்கு எதிரான அலைகளைத்தான் மக்களிடத்தில் எழுப்பும் என்பதை பாஜக உணர்ந்துகொள்ளவில்லை என்று அரசியல் கருத்தாளர்கள் கூறுகிறார்கள்.

தேர்தல் நெருங்க, நெருங்க ஆளும் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதற்கு எதிராக திரும்பும் சூழல் இருப்பதை பார்க்கும்போது, அது தற்போதைய கருத்துக் கணிப்புகளின் பாஜக வெற்றிப் பாதையில் பின்னடைவு ஏற்படுத்தும் என்றே தோன்றுகிறது.

82 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply