நீட் தேர்வு விவகாரம்: காற்றில் கரையும் திமுக வாக்குறுதி

84 / 100

சென்னை: கடந்த சட்டப் பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்று நீட் தேர்வு விலக்கு. இந்த வாக்குறுதியை அதன் 5 ஆண்டு கால ஆட்சிக்குள் நிறைவேற்றுவதும், நிறைவேற்ற முடியாமல் போவதும் வரும் மக்களவை தேர்தல் முடிவை பொறுத்தே அமையும்.


திமுக அரசு நீட்தேர்வு விலக்கு தொடர்பாக தொடர்ந்து முயற்சி மேற்கொள்கிறது. ஆனால் அதன் அனைத்து முயற்சிகளுக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசு முட்டுக்கட்டை போடுகிறது.

ஆளுநர் முட்டுக்கட்டை

அத்துடன் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவியும், நீட் தேர்வுக்கு எதிரான நடவடிக்கையை அழுத்தம் திருத்தமாக செய்கிறார்.
இதனால் பாஜக ஆட்சியில் இருக்கும் வரையிலும் திமுகவின் நீட்தேர்வு வாக்குறுதி நிறைவேற 100 சதவீதம் வாய்ப்பு இல்லை.

ஒருவேளை உச்சநீதிமன்றம் நீட்தேர்வு ஏழை மாணவ, மாணவியருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மக்கள் நலனுக்கு எதிராக அமைந்துவிட்டதாக கருதினால் மட்டுமே அதில் சில மாற்றங்களை கொண்டு வரும். இல்லாவிட்டால் நீதிமன்றமும் இந்த விஷயத்தில் தலையிடாது.

பாதிக்கும் தமிழக மாணவர்கள்


மருத்துவக் கல்விக்காக நடத்தப்படும் நீட்தேர்வில் தோல்வியை தழுவும் மாணவர்கள் சில நேரங்களில் நம்பிக்கையை இழந்து வருகிறார்கள். அதனால் தற்கொலை எண்ணிக்கை இதுவரை 15-ஐ தாண்டியுள்ளது.
தமிழக அரசு நீட் தேர்வு விலக்கை பெறும் முயற்சியை செய்யும் அதே நேரத்தில், நீட் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் நம்பிக்கை இழக்காமல் இருக்க போதுமான பயிற்சி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வுக்கான விலக்கு முறைப்படி கிடைக்கும் வரையிலான காலத்துக்கு தனியார் பயிற்சி மையங்களுக்கு நிகரான பயிற்சியை தமிழக அரசு நிர்வாகம் நினைத்தால் நிச்சயமாக கொடுக்க முடியும். இதற்கான ஏற்பாடுகளை செய்வது அவசியமாகிறது.

12-ஆம் வகுப்பிலேயே மருத்துவப் படிப்பில் கவனம் செலுத்த விரும்பும் மாணவர் பட்டியலை எடுத்து தனிப் பயிற்சி அளிக்கலாம்.

இல்லாவிட்டால் அவர்கள் மனரீதியாக, நீட் தேர்வில் வெற்றி கிடைக்காவிட்டால் மாற்று படிப்பு யோசனை மேற்கொள்ளும் நம்பிக்கை கொண்டவர்களாகவும் மாற்ற முயற்சிக்க வேண்டும்.

அண்மையில் சென்னையில் 2 முறை நீட் தேர்வை சந்தித்து தோல்வியை தழுவிய மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பால் மனமுடைந்த தந்தையும் தற்கொலை செய்துகொண்டார்.

அச்சத்தை போக்க வேண்டும்

இதைப் பார்க்கும்போது, நீட் தேர்வு தேவையற்ற அச்சத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளதை காட்டுகிறது.
ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திமுக அரசு, நீட் தேர்வு விலக்கை பெற்றுத் தருவோம் என வெற்று அறிக்கையை தொடர்ந்து அளிப்பதை கைவிட்டு, நீதிமன்றத்தை எப்படி வலுவான காரணங்களுடன் நாடுவது குறித்து யோசிக்க வேண்டும்.

இரண்டு முறை நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி அது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.
மற்றொருபுறம், நீட் தேர்வு விலக்கு வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கடந்தும் ஏன் அதை செய்ய முடியவில்லை என்று எதிர்க்கட்சியான அதிமுக கேள்விக்கேட்டு வருவதற்கு திமுக அரசு பதில் சொல்ல முடியவில்லை.

NEET வரலாறு


பொது மருத்துவம், பல் மருத்துவத் துறையில் சேருவதற்கு இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அமைந்திருக்கிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கைக்கான தகுதியை நிர்ணயிக்க இந்த தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படுகிறது.

மருத்துவக் கல்வியை நாடு முழுவதும் ஒழுங்குப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை விதிகளில் (Medical council of India) கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான அரசால் மாற்றம் கொண்டு வரப்பட்டது.

2013-இல் அறிமுகம்:

அதன்படி National Eligibility and Entrance Test என்பதன் சுருக்கமான நீட் (NEET) தேர்வு 2013 மே 5 முதலில் அறிமுகம் ஆனது.


தமிழகத்தில் வேலூர் கிறித்துவ மருத்துவ கல்லூரி தனி நுழைவுத் தேர்வை நடத்தி வந்தது. அதனால் இந்த புதிய விதிகளை ஆட்சேபித்து ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதேபோல் நாடு முழுவதும் நீட் தேர்வை எதிர்த்து அந்தந்த மாநில உயர்நீதி மன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் முதலில் விசாரணை நடத்தப்பட்டது.

நீதிமன்றத்தின் விசாரணையில்…

அந்த விசாரணையின் முடிவில், நீட் தேர்வு விதிகள் செல்லாது என நீதிமன்றம் அறிவித்தது. ஆனால் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது.

அதில், தீர்ப்பில் பல முக்கிய பிரச்னைகள் கருத்தில் கொள்ளப்படவில்லை. முன் தீர்ப்புகள், சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை எனக் கூறியிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு நடத்தியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் முந்தைய நீட் தேர்வுக்கு எதிரான தீர்ப்பை ரத்து செய்தது. இதனால் நீட் தேர்வு நடத்துவதற்கான தடை நீங்கியது.

அத்துடன், சங்கல்ப் டிரஸ்ட் என்ற அமைப்பு தொடுத்த பொதுநல வழக்கில் உச்சநீதிமன்றம், இனி நீட் தேர்வின் அடிப்படையில் மட்டுமே மருத்துவ இளங்கலை, முதுகலை படிப்புச் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பின்தொடர்ந்த பாஜக அரசு


காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த நீட் தேர்வின் அடிப்படை அம்சங்களை ஆட்சிக்கு வந்த பாஜக அரசும் பின்தொடர்ந்தது.
அத்துடன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2016-இல் நடவடிக்கை மேற்கொண்டது.

இந்திய மெடிக்கல் கவுன்சில் சட்டத்தில 10.D என்ற புதிய சட்டப் பிரிவை அவசரச் சட்டம் மூலம் கொண்டு வந்தது.
பின்னர் இந்த அவசரச் சட்டம் நிரந்தர சட்டமாகவும் நிறைவேற்றப்பட்டது. அந்த புதிய சட்டப் பிரிவு 10.D-படித்தான் இப்போது நீட் தேர்வுகள் நடைபெறுகின்றன.

கருணாநிதி, ஜெயலலிதா நிலைப்பாடு


மன்மோகன் சிங் நீட் தேர்வு தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டபோது, திமுக தலைவர் மு. கருணாநிதி எதிர்த்தார்.

அதேபோல், பாஜக அரசு 2016-இல் கொண்டு வந்த புதிய பிரிவுக்கான அவசரச் சட்டத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.


இந்த சூழலில், 2016-இல் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஜெயலலிதா,, நீட் தேர்வுக்கு தற்காலிக விதிவிலக்கு அளிப்பதற்கான ஒரு அவசரச் சட்டத்தை சட்டப் பேரவையில் நிறைவேற்றினார்.

அப்போது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 254-ன்படி அதற்கு மத்திய அரசும் சம்மதம் தெரிவித்தது.
இருப்பினும், உச்சநீதிமன்றம் இந்த விதிவிலக்கை ஓராண்டு மட்டுமே அனுமதிக்க முடியும் என திட்டவட்டமாக தெரிவித்தது.

மீண்டும் தலையிட்ட நீதிமன்றம்

இப்படிப்பட்ட சூழலில் 2017-ஆம் ஆண்டு நீட் தேர்வு தமிழகத்தில் நடத்தப்பட்டது. இருப்பினும், மீண்டும் ஓராண்டு விதிவிலக்கு அளிக்கும் அவசரச் சட்டத்தை 2017-இல் தமிழக அரசு கொண்டு வந்தது.

தமிழகத்தில் நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வை நடத்தக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வை செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.

மேல்நிலைத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றிருந்தும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ச. அனியா தற்கொலை செய்துகொண்டார்.
இதனால், தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் நீட் தேர்வை விலக்க வேண்டும் என போராடத் தொடங்கின.

அதுமுதல் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. இதுவரை நீட் தேர்வு தோல்வியால் மாணவ, மாணவியர் 15-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

வாய்ப்புகள்


தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய நீட் தேர்வு விலக்கு மசோதா கிடப்பில் போடப்பட்டு விட்டது. பாஜக அரசு இருக்கும் வரை இந்த மசோதாவுக்கு உயிர் கிடைக்க வாய்ப்பு இல்லை.
மத்தியில் ஆளும் பாஜக அரசு வரும் மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்து, மத்தியில் ஒரு கூட்டணி ஆட்சி அமையும் வாய்ப்பு ஏற்பட்டால் ஒருவேளை இந்த மசோதாவுக்கு உயிர் கிடைக்கலாம்.
ஆனால் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமையும் சூழலில், நீட் விலக்கு மசோதாவுக்கு காங்கிரஸ் ஒப்புதல் கொடுப்பது என்பது திமுகவின் மக்களவை உறுப்பினர்களின் பலத்தைப் பொருத்தே அமையும்.

வாய்ப்புகள் தவறினால்…

ஒருவேளை காங்கிரஸ் சம்மதிக்காவிட்டால், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு மீண்டும் உயிர் கிடைக்க வாய்ப்பில்லை.
நீட் தேர்வை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் இன்னமும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன.

இந்த விசாரணையின்போது நீட் தேர்வு நடத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், ஏழை, எளிய மக்களுக்கும், சமுதாய நலனுக்கும், நாட்டின் நலனுக்கும் எதிராக அமைந்திருப்பதாக நீதிமன்றம் கருதக் கூடிய வகையிலான வாதங்கள், ஆதாரங்களை வலுவாக எடுத்து வைப்பது அவசியமாகிறது.
நீட் தேர்வுக்காக புதிதாக கொண்டு வரப்பட்ட 10D சட்டப் பிரிவு மக்களுக்கும், சமுதாயத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக நீதிமன்றம் கருதினால், அந்த பிரிவு செல்லாது என அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
அந்த வாய்ப்பையும் திமுக அரசு தவறவிட்டால், நீட் தேர்வு விலக்கை தமிழ்நாடு பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

84 / 100

Discover more from Mithiran News

Subscribe to get the latest posts sent to your email.

Leave a ReplyCancel reply