குறளமுதக் கதைகள் வரிசையில் திருடன் துறவியானான் என்ற கதை திருக்குறள் கதைகள் 8-இல் இடம்பெறுகிறது.
ஒரு நாட்டில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு துறவி இருந்தார். அவர் அனைத்தையும் துறந்து பற்றற்ற வாழ்க்கை நிலையை கடைப்பிடித்தார்.
உள்ளடக்கம்
அரசன் தந்த தங்க திருவோடு
அந்த நாட்டின் அரசன் நாள்தோறும் அவரை சந்தித்து நல்லறங்களைக் கேட்பது வழக்கமான ஒன்றாக இருந்தது.
ஒரு நாள் அரசன், அந்த துறவி ஏதேனும் ஒரு பரிசு கொடுக்க வேண்டும் என்று விரும்பினான். அதனால் அவர் உபயோகப்படுத்துவதற்காக தங்கத்தால் ஆன திருவோட்டை அவரிடம் கொடுத்தான்.
துறவி முதலில் அதை ஏற்கவில்லை. அரசன் தொடர்ந்து வற்புறுத்திய நிலையில், அந்த திருவோட்டை வாங்கி வைத்துக் கொண்டார்.
அன்றிரவு அவர் அயர்ந்து தூங்கியபோது, ஏதோ அருகில் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டார்.
அந்த திருடன், நம்மிடம் ஏதோ விலை மதிப்பு மிக்க பொருள் இருக்கிறது என்பதால்தான் வந்திருக்கிறான் என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.
திருடன் பெற்ற திருவோடு
அருகில் வா என அந்த திருடனை அன்பாக அழைத்தார். அவன் தயங்கியபடியே அருகில் சென்றான்.
தான் படுத்திருக்கும இடத்தின் அருகே வைத்திருந்த தங்கத் திருவோட்டை எடுத்து இதுதான் என்னிடம் இருக்கிறது. எடுத்துக் கொள் என்று அவனது கையைப் பிடித்து கொடுத்தார்.
அவன் மிகுந்த மகிழ்ச்சியோடு அதை எடுத்துச் சென்றான்.
மறுநாள் இரவும் அவர் தூங்கும்போதும் ஏதோ சத்தம் கேட்டு விழித்துக்கொண்டார்.
மீண்டும் முதல் நாள் வந்த திருடனை வந்து நிற்பதைப் பார்த்தார்.
அவனை பார்த்த அவர், என்னிடம் உனக்கு பயன்படும் படியான விலை உயர்ந்த பொருள் வேறு எதுவும் இல்லையே எனச் சொன்னார்.
இதைக் கேட்ட அந்த திருடன், அவரது காலில் விழுந்து வணங்கினான்.
அய்யா… உங்களிடம் இருக்கும் பற்றற்ற குணம் என்னிடம் இல்லை.யே.. என வருந்தினான்.
அந்த குணம் உனக்கும் வேண்டும் என்று ஆசைப்படுகிறாயா என்று கேட்டார்.
ஆமாம்… என கண்ணீர் மல்க வேண்டினான்.
யாதனின் – திருக்குறள் சொல்வது என்ன?
மகனே கேள். எந்தெந்தப் பொருள்களில் இருந்து பற்றை விடுகிறாயோ… அந்தந்தப் பொருள்களால் ஏற்படும் துன்பம் உன்னை அண்டாது. இதை நீ கடைப்பிடித்தால் போதும். நீயும் என்னை போன்ற பற்றற்றவன் ஆகலாம்.
இதைத்தான் திருவள்ளுவர்,
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
(குறள் – 341)
என்று கூறி நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
அதாவது, நீ எந்தெந்தப் பொருள்களிலிருந்து பற்றை விடுகிறாயோ ? அவற்றால் துன்பம் வருவதில்லை என்பதுதான் இதன் அர்த்தம். புரிந்துகொண்டாயா? என்றார் துறவி.
அவரது உபதேசத்தை கேட்ட திருடன், பொருள்களின் மேல் வைத்த பற்றைத் துறந்தான். துறவியிடம் மீண்டும் வந்து துறவியாக மாறினான்.