உதயநிதி ஸ்டாலின்: அமைச்சர் பதவியா?

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகிறாரா
70 / 100

சென்னை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியில் அமர வைக்கப்படுவாரா?  என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்களிடம் தொடர்ந்து இருந்து வருகிறது.

போதாக்குறைக்கு பல தரப்புகளில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்க வேண்டும் என்ற அன்பு நெருக்கடியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இது ஒருபுறம் இருக்க திமுகவை ஆதரிக்கும் கட்சிகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சி சார்பில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பும் அளவுக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தூக்கிப் பிடிக்கும் ஊடகங்கள்

அத்துடன் உதயநிதி ஸ்டாலினை தூக்கிப் பிடிக்கும் வேலைகளை ஒருசில ஊடகங்களும் செய்யத் தொடங்கியுள்ளன.

அந்த ஊடகங்களின் இத்தகைய நோக்கத்துக்குக் காரணம், எப்படியாவது அடுத்த தேர்தலில்,  மு க ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததுமே மகனை முதல்வர் பதவிக்கு கொண்டு வர காய் நகர்த்திவிட்டார் என்ற ஒரு பிரசாரத்தை மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே.

இது ஒரு வகையில் திமுக மீது வாரிசு அரசியல் முத்திரையை வலுவாக செலுத்தி மீண்டும் சரிவு பாதைக்கு திருப்ப வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே. இதை திமுகவின் நீண்டகால அனுதாபிகளே சொல்கிறார்கள்.

ஒருவேளை அமைச்சரவையை முதல்வர் மு க ஸ்டாலின் மாற்றி அமைத்தாலும், மகனுக்கு அதில் வாய்ப்பு கொடுப்பார் என்று எதிர்பார்ப்பது வீண்.

வெறும் வாயை மென்று வரும் எதிர்க்கட்சிகளுக்கு இது அவலைக் கொடுத்து மெல்ல வைக்கும் நிலையாக மாறிவிடும் என்பது முதல்வர் மு க ஸ்டாலினுக்கும் தெரியும், அவரது மகன், உதயநிதி ஸ்டாலினுக்கும் தெரியும் என்கின்றனர் கட்சியின் அனுதாபிகள்.

உதயநிதி ஆதரவாளர்கள்

பழகுவதற்கு இனிமையான இளைஞராக, சுறுசுறுப்பாக சுற்றிவரும் உதயநிதி ஸ்டாலினும் அந்த பதவி ஆசையை, கட்சி நலனை முன்னிட்டு வளர்த்துக்கொள்ள மாட்டார் என்றே அவரது ஆதரவாளர்களில் சிலர் கூறுகின்றனர்.

தற்போது உதயநிதி ஸ்டாலின் கையில் உள்ள படங்களை விரைந்து முடித்து வருவதை சிலர் சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர். அவருக்கு பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அப்பணிகளை வேகமாக நிறைவு செய்வதாகவும் பொதுவெளியில் பேசப்பட்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின்

கட்சியின் எதிர்காலம்?

உதயநிதிக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவரது இளம்வட்ட ஆதரவாளர்களிடம் எழுவது இயல்பானது.

அவ்வகையில்தான் அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை மாவட்டம்தோறும் திமுக நிர்வாகிகள் போடத் தொடங்கியுள்ளதையும் பார்க்க வேண்டும். இதன் மூலம் இளம்தலைமுறையை திமுகவின் பக்கம் இழுக்க முடியும் என்ற நம்பிக்கையும் மற்றொரு காரணம்.

எது எப்படியோ, தற்போதைய சூழலில் அமைச்சர் பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு அளித்து, அதன்மூலம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பை முதல்வர் அளிப்பார் என்று எதிர்பார்ப்பது தவறு.

அப்படி ஒரு வேளை செய்தாரேயானால் அவரே கட்சியின் எதிர்காலத்துக்கு குழி வெட்டுகிறார் என்று அர்த்தம்.

அவசரம் ஏன்?

மு.க.ஸ்டாலினின் தனது தந்தை மு.கருணாநிதி, எப்படி அரசியலில் அவரை பக்குவப்படுத்தி, ஒரு தொண்டனாக கட்சிப் பணிகளில் ஈடுபட வைத்திருந்தாரோ, அத்தகைய நிலையையே, இன்னும் சிலகாலத்துக்கு தனது மகன் விஷயத்திலும் மு க ஸ்டாலின் செய்ய வேண்டும்.

அதை செய்யாமல் முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது மகனுக்கு உடனடியாக அமைச்சர் பதவி வழங்குவாரேயானால், மீண்டும் ஒரு வைகோ கட்சிக்குள் விரைவில் உருவாகாமாட்டார் என்பது நிச்சயமல்ல.

இது ஒருபுறம் இருக்கட்டும், அண்மையில் சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

மக்கள் பணி

அப்போது அவர் பதில் அளித்தபோது, தை பிறந்துள்ளது. அரசியல் பணி, திரையுலகில் ஏதேனும் இலக்கு உள்ளதா?  என்று கேட்கிறீர்கள். எனக்கு அப்படி எந்த இலக்கும் இல்லை. என் வேலையை நான் பார்த்துக்கொண்டு இருக்கேன். என்னால் முடிந்த அளவு மக்கள் பணியாற்றியாற்றி வருகிறேன் என்றார்.

விடாப்பிடியாக, செய்தியாளர்கள், தைப்பிறந்தால் வழி பிறக்கும். உங்களுக்கு வழிப்பிறக்குமா? என மறைமுகமாக அமைச்சர் பதவி குறித்த கேள்வியை எழுப்பினார்கள்.

அதற்கு அவரும்,  ஏன்?  எனக்கு ஏற்கனவே நல்ல வழிதானே இருக்கிறது. என்ன குறையை கண்டீர்கள்?  என்று உதயநிதி ஸ்டாலின் திருப்பி கேட்டதும், செய்தியாளர்கள் அமைதியாகிவிட்டனர்.

ஆசை இல்லையாம்!

ஏற்கெனவே ஒரு முறை, இத்தகைய கேள்வியை எழுப்பியபோது, அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பின்மீதும் எனக்கு ஆசை இல்லை.

மக்கள் பணியில் என்றும் உங்களுள் ஒருவரான இருக்க வேண்டும், முதல்வர் ஸ்டாலினுக்கும், மக்களுக்கும் ஒரு பாலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

இப்படித்தான் அவரது பதில் அமைந்திருந்தது. அதே மனநிலையைத்தான் இப்போதும் உதயநிதி ஸ்டாலின் கொண்டிருக்கிறார் என்பது அவரது பதிலில் தெரிகிறது.

70 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *