ஆடிப் பெருக்கு: திருமணத் தடை நீக்கும் விழா

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு
70 / 100

செந்தூர் திருமாலன்

ஆடிப் பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடி மாதம் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. ஆடிப் பெருக்கு விழா திருமணத் தடை நீக்கும் விழாவாக பெண்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆடிப் பெருக்கை தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது இந்த ஆடி மாதம் என்பதால்தான்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்

தமிழ் மாதங்களில் ஒன்றான ‘ஆடி’ அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. இம்மாதத்தில்தான் உமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தார் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

இதனால் இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பூமித்தியரேகைக்கு வடக்கில் சூரீயன் பயணம் செய்கிறார்.

அடுத்து அடுத்த ஆறு மாத காலத்திற்கு (ஆடி முதல் மார்கழி வரை) தன் பயணத்தை பூமத்தியரேகைக்கு தெற்கில் தொடங்குகிறார். இக்காலம் தட்சிணாயன புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது.

ஆடி தபசு

இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் இருந்தது ஆடி மாதத்தில்தான். அதை நினைவுகூரும் விதத்தில் ‘ஆடி தபசு’ நிகழ்ச்சி நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் இன்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

முற்காலத்தில் அரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக பார்வதிதேவி புன்னை வனத்தில் தவம் இருந்தார்.

அவரது தவத்தை பாராட்டி சிவனும், விஷ்ணுவும் ஆடி மாத பௌர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர்.

அம்பிகை தவம் இருந்த இடம் சங்கரன்கோவில். இது திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு சுவாமி சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணம் செய்து கொண்டார்.

அம்பிகை தவம் இருந்து பலனை அடைந்ததால் மக்கள இங்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றி நலம் பெறுகின்றனர்.

பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய சிவபெருமான் ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்கட்டும் என்று வரம் கொடுத்தார்.

காற்றும் மழையும் ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். காற்றை காளியம்மனும், மழையை மாரியம்மனும கட்டுப்படுத்துவதாக ஐதீகம்.

இதனால் அம்மன் அருள் வேண்டி ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு நடத்தப்படுகிறது.

திருமணத் தடை - ஆடிப் பெருக்கு

நல்ல கணவர் அமைய வேண்டி

திருமணம் ஆகாத பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தங்களுக்கு நல்ல வரண் அமைய வேண்டி கோயிலுக்கு சென்று கூழ் வார்த்து வழிபட்டு வருகின்றனர்.

‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி, அரைச்ச மஞ்சள் பூசிக்குளி’ என்பதுபழமொழி.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து அரைத்த மஞ்சளை பூசி குளிப்பதால் சுமங்கலி பெண்களின் மாங்கல்யம் பலம்பெறும் என்பது நம்பிக்கை.

ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் ‘ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக எம்மை வாழவைக்க வேண்டும் அம்மா சுமங்கலியாக'” என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவியரசர் கண்ணதாசன்.

ஆடிப் பெருக்கு

ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி காவிரித் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலம் பொங்கும் விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

காவிரிக்கரையில் இருமருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். காவிரியை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்’ நடந்தாய் வாழி காவிரி’ எனக்கூறி வாழ்த்துவார்.

ஆடி பதினெட்டாம் நாள் காவிரி பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னஙகளை தயாரித்துக் கொண்டு கொண்டு போய் காவிரி கரையில் வைத்து நோன்பு நோற்பார்கள்.

கணவனை சென்றடையும் காவிரிக்கு மங்கலப் பொருட்களான மஞசள், பனைஓலையால செய்யப்பட்ட காதோலை , கருகுமணி மாலை ,வளையல் , அரிசி, வெல்லம ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

புதுமணத் தம்பதியர்

புதுமணத் தம்பதியர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள்.

பிறகு அவர்கள் அணிந்திருந்த ஆடையை களைந்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள்.

அதைத் தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சந்நதிகளுக்கு சென்று வழிபடுவார்கள்.

மாங்கல்ய பூஜை

பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து புது தாலிகயிறு (மஞசள் சரடு) அணிந்து கொள்வார்கள். சிறுவர்கள் சிறிய அளவிலான மரச் சப்பரம் செய்து இழுத்துச் செல்வார்கள்.

திருச்சி, திருவையாறு, ஒகேனக்கல், மேட்டூர், பவானி, கூடுதுறை, மயிலாடுதுறை போன்ற காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம், நாகபஞ்சமி பண்டிகைகள் இந்த மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது

ஆடி மாதத்தில் கிராம புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் சுடலை மாடன், அய்யனாரப்பன் , மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூசைகளும், விழாக்களும் விமர்சையாக எடுக்கப்பட்டு வருகிறது.

முளைப்பாரி திருவிழா, நையாண்டி மேளம், கரகாட்டம், வில்லுபாட்டு கச்சேரி என்று விழா அமர்க்களப்படும். இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யலாமா?


திருமணம் ,புதுமனை புகுவிழா போன்ற சுபயகாரியங்கள் செய்ய ஆடி மாதம் ஏற்றதல்ல என்று கூறப்படுவதுண்டு.

ஆடி மாதத்தில் திருமணமான பெண்கள் கருத்தரித்தால் பத்தாவது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும்.

அப்போது வெயில் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதை தவிர்த்தனர் .

அதேபோல் ஆடி மாதம் புதுமண தம்பதியினரை பிரித்து வைக்கிறார்கள்.

ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும். அதனால் கிரகப்பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.

கூழ்வார்க்கும் திருவிழா


தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரிய அர்ஜுனனின் மகன்கள் கொன்று விடுகிறார்கள்.

இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

அப்போது இந்திரன் மழையை பெய்து தீயை அணைக்கிறார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன.

வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்து கொள்கிறார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதன் காரணமாக, அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டபோது, மக்கள் அவருக்கு பச்சரிசி, வெள்ளம், இளநீரை உணவாக அளிக்கிறார்கள்.

இதைக் கொண்டு ரேணுகா தேவி கூழ் தயாரித்து உணவருந்துகிறார். அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவி முன்பு தோன்றி வரம் தருகிறார்.

உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று ஆசி வழங்குகிறார். .

இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பெண்கள் புதிய தாலிச் சரடை கட்டிக் கொள்வது ஏன்?

ஆடிப்பெருக்கின்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும். காவிரி ஆற்றை பெண்கள் கங்காதேவியாக நினைத்து வணங்குவர்.

ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை போல தங்கள் குடும்பமும் அனைத்து நன்மைகளையும் பெற்று சுபிட்சமாக வாழ வேண்டி பெண்கள் திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்கிறார்கள்.

முன்னதாக பெண்கள், மஞ்சள், குங்குமம், கலப்பரிசி, வெல்லம், அரிசி, தேங்காய் பழம், தாலிசரடு ஆகியவற்றை வைத்து பூஜை செய்கிறார்கள்.

பின்னர் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் புதிய தாலிசரடை கட்டிக் கொள்கிறார்கள்.

புதுமணத் தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரிகரைக்குச் சென்று அங்கு அரசு வேப்ப மரத்தை சுற்றி வலம் வந்து மஞ்சள் நூலை கட்டுகிறார்கள்.

இதற்கு காரணம் அரச மரமும் வேப்ப மரமும் சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்ச ராஜன் என்றும், வேப்பமரத்தை விருட்சராணி என்றும் அழைக்கப்படுகிறது.

சக்தி ரூபமாக திகழும் வேப்பமரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலைக் கட்டுகிறார்கள் இவ்வாறு செய்தால் திருமணம் ஆகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும், திருமணமான பெண்களுக்கு சந்தான லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

குரங்கணி கோயில் முத்துமாலை அம்மன்

பல் டாக்டரின் ஆஃபர்

70 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *