திருக்குறள் கதைகள் 3: பாவத்தின் தகப்பன் யார்?

Thirukkural kathaigal Pavathin thakappan yaar
64 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 3) மற்றும் அற்றவர் என்பார் திருக்குறள் விளக்கத்தை அறியலாம்.

விடை கிடைக்கவில்லை

வெங்கடேஷ் உயர் குலத்தில் பிறந்தவன். அது மட்டுமல்ல காசி யாத்திரையும் சென்று வந்தவன்.

வேத நூல்களைக் கற்றுத் தேர்ந்தவன். அவன் தன் மனைவியிடம் தனது கல்வியின் மேன்மை மற்றும் திறமையைப் பற்றியும் கூறிக் கொண்டே இருப்பான்.

ஒரு நாள் அவள், அவனிடம் பாவத்தின் தகப்பனார் யார்? எனக் கேட்டாள். அதாவது பாவத்துக்கு அடிப்படைக் காரணமாக எதைக் கூறலாம் என்ற கருத்தை முன் வைத்து இக்கேள்வியை அவள் கேட்டாள்.

பல நூல்களைப் புரட்டினான் விடை கிடைக்கவில்லை. பலரிடமும் கேட்டான் விடை கிடைக்கவில்லை. காசி நகருக்கே சென்று தேடினார். விடை கிடைத்த பாடில்லை .

இறுதியில், விலை மாது ஒருத்தியின் வீட்டுத் திண்ணையில் போய் அமர்ந்து, மனைவி கேட்ட கேள்விக்கு விடை தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.

அந்தப் பெண் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தாள்.

அவன் ஏதோ யோசனை செய்து கொண்டிருப்பதைக் கண்ட அவள், எதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என வினவினாள்.

அவனிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் அவள், நீங்கள் மிகவும் களைப்பாக இருக்கிறீர்கள். உள்ளே வாருங்கள். உணவருந்திவிட்டு செல்லுங்கள் என்று அழைக்கிறாள்.

இதைக் கேட்ட அவன், அவளைப் பார்த்து நீ தவறான நடத்தைக் கொண்டவள். உன் வீட்டு திண்ணையில் அமர்ந்ததே தவறு. நீ இடும் உணவை அருந்துவது அதை விட தவறு. நான் புறப்படுகிறேன் என்றான் அவன்.

அந்த விலை மாது உடனே, அய்யா… உடனே இங்கிருந்து புறப்பட்டு போய் விடாதீர்கள்.

நான் உங்கள் கல்வித் திறமையைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் என் வீட்டு விருந்தினர். அதனால் உங்களை இங்கிருந்து செல்ல அனுமதிக்க மாட்டேன் என்றாள்.

இதனால் அவன் ஒரு முடிவுக்கு வந்தான். சரி… ஆனால் உணவை நானே சமைத்து சாப்பிடுவேன். சம்மதமா? என்று கேட்கிறான்.

அவளும் சரி என்று ஏற்றுக் கொண்டாள். அவன் சமையலுக்கான பொருள்களை அவளிடம் இருந்தே பெற்று சமைத்தான்.

திருக்குறள் கதைகள் பாவத்தின் தகப்பன் யார்

அவன் தான் சமைத்த உணவை சாப்பிடத் தயாரானான். அப்போது அவள், அய்யா… உங்கள் உணவை நான் ருசி பார்க்க விரும்புகிறேன்.

உங்கள் உணவில் கொஞ்சம் தாருங்கள் என்று கூறி 5 நூறு ரூபாய் நோட்டுகளைத் தந்தாள்.

அவனும் அவள் தந்த பணத்தைப் பெற்றுக் கொண்டான்.

அய்யா… என் கையில் உள்ள உணவை உங்களுக்கு ஊட்டுவது போல் செய்வதற்கு விரும்புகிறேன். அதற்கு இன்னும் ஒரு ஐந்நூறு ரூபாய் தருகிறேன் என்றாள்.

பரவாயில்லையே… தனக்கு ஊட்டுவது போல் பாசாங்கு செய்வதற்கு இன்னுமொரு 500 ரூபாய் கிடைக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வதா என்று நினைத்து அதற்கு ஒப்புக் கொண்டான்.

அவனுக்கு ஊட்டுவது போல் கையை உயர்த்திய அவள், பளார் என அவனது கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.

அந்தணனே… லோபம்தான் பாவத்துக்கு தகப்பன். நீ பேராசைக்கு ஆட்பட்டு நான் கூறியதற்கெல்லாம் இணங்கினாய்.

திருக்குறள் சொன்ன கருத்து

எல்லா நூல்களையும் கற்றேன் என்கிறாய். ஆனால் திருக்குறள் சொன்ன ஒரு கருத்தை மறந்துவிட்டாயே…

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்

அற்றாக அற்றது இவர்

அதிகாரம் 37-இல் அவாவறுத்தல் என்ற தலைப்பில் 365-ஆவது குறளாக அது இடம்பெற்றிருக்கிறது.

ஆசை அற்றவரே பிறவியற்றவர் எனப்படுவர். பற்றை விடாதவர் பலவற்றைத் துறந்தாலும் முழுவதையும் துறந்து விட்டார் என்று கூற முடியாது என்றாள் அந்த விலை மாது.

மனைவி கேட்ட கேள்வியான, பாவத்தின் தகப்பனார் யார்? என்பதற்கு விடை பேராசை என்பதை இப்போது உணர்ந்தான் வெங்கடேஷ்.

மெத்த படித்திருந்தாலும், ஒரு கேள்விக்கு விடை தெரியாமல் தவித்த எனக்கு, என்னுடைய பேராசையையே விடையாக்கிய அந்த விலை மாது தன்னை விட உயர்ந்தவள் என்பதை உணர்ந்து வெட்கத்தோடு வீடு நோக்கி நடக்கத் தொடங்கினான் வெங்கடேஷ்.

64 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *