திருக்குறள் கதைகள் 21: சினமெனும் பெருந் தீ!

திருக்குறள் கதை 21
64 / 100

குறளமுதக் கதைகள் வரிசையில் (திருக்குறள் கதைகள் 21) சினமெனும் பெருந் தீ என்பதைப் பற்றிய கதையும், திருக்குறள் விளக்கமும் இடம்பெறுகிறது.

கோபமடைந்த நண்பன்

ஆனந்தனும் , விவேக்கும் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஆனந்தன் விளையாட்டில் வெற்றி பெற்றதைக் கண்ட விவேக், ஆனந்தனின் முதுகில் ஓங்கி அடித்து விட்டு தப்பி ஓடினான்.

வலி பொறுக்க முடியாத ஆனந்தன், கீழே கிடந்த கல் ஒன்றை எடுத்துக் கொண்டு விவேக்கை தாக்க ஓடினான்.

ஆனந்தனிடம் இருந்து தப்பிக்க விவேக் எதிரே இருந்த ஜினாலயத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டான்.

விவேக்கை ஜினாலயம் தவிர பிற இடங்களில் தேடியதால் அவன் கிடைக்கவில்லை. இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தான் ஆனந்தன். விவேக் ஜினாலயத்துக்குள் சென்றிருப்பான் என்பதை உணர்ந்தான்.

அப்போது அவனுடைய கோபம் சற்று குறைந்திருந்தது. இருந்தாலும், விவேக்கை பழிக்கு பழி திரும்ப அடித்து விட வேண்டும் என்ற முடிவு மட்டும் அவனிடம் இருந்து மாறவில்லை.

ஜினாலயம்

அங்கே அறவுரை மண்டபத்தில் தர்ம நாதர் அறச் சொற்பொழிவாற்றுவதைக் கண்டான். அப்போது, அவர் கோபத்தினால் வரும் கேடுகளை விளக்கிக் கொண்டிருந்தார்.

சினமானது ஒரு பெருந் தீ. அது எதிரியை மட்டுமல்ல தன்னையும் அழித்து விடும். சினத்தைப் போல உயிருக்குத் துன்பம் தருவது வேறில்லை.

எவரிடம் அளவு கடந்த கோபம் உள்ளதோ? அவர்கள் அதை அறவே விட்டொழித்தல் வேண்டும் என்றார்.

மேலும், பிறர் நமக்கு பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தைச் செய்தாலும் அவர் மீது கோபப்படாமல் இருப்பதே நல்லது என்கிறார் பொய்யா மொழிப் புலவர்.

திருக்குறள் கதை 21

திருவள்ளுவர்

திருவள்ளுவர் சொல்கிறார்

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்

புணரின் வெகுளாமை நன்று

(குறள் – 308)

தீப்பந்தம் போல் மனதை வாட்டும் தீமையை ஒருவன் செய்தாலும்கூட, அவன் மேல் சிறிதளவும் கோபம் கொள்ளாது இருத்தல் நல்லது என்கிறார்.

ஒருவர் நெருப்பை வாரி இறைப்பது போன்ற கடுந்துன்பத்தை மற்றவர்க்குச் செய்தாலும் அவன் மேல் சினம் கொள்ளக் கூடாது.

இத்தகு குணம் ஞானியருள் உயர்ந்த ஞானியருக்கேப் பொருந்தும் என்று எண்ணாது நாமும் முயற்சி செய்து சினத்தைத் துறத்தல் நன்று என்று பேசி தன்னுடைய அறவுரையை நிறைவு செய்தார்.

மனம் வருந்திய நண்பன்

தர்மரிடம் எப்போதும் கதை கேட்கும் ஆனந்தன், இன்றைக்கு அவர் ஒரு பொது இடத்தில் நடத்திய அறவுரையை மிகக் கவனமாகக் கேட்டான்.

அதைத் தொடர்ந்து தன்னுடைய நண்பனை பழிக்கு பழி தீர்க்கும் எண்ணத்தை கைவிட்டான்.

ஆனந்தன் ஜினாலயத்தை விட்டு அமைதியாக திரும்புவதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த விவேக், வேகமாக அவனை பின்தொடர்ந்து ஓடி வந்தான்.

ஆனந்தா… உன் கோபத்தை தனித்துக்கொள். நீ என்னை ஆசைத் தீர அடித்துவிடு என்று முதுகை காட்டினான் விவேக்.

ஆனந்தன் சிரித்தபடியே.. உன் தவறை நீயே உணர்ந்துவிட்ட பிறகு நான் அடிப்பது சரியல்ல.

நீ என்னை வேகமாக அடித்தது எனக்கு வலியை ஏற்படுத்திவிட்டது. அதனால் கோபம் வந்தது. இனி நான் மட்டுமல்ல, யாரையும் விளையாட்டுக்காக அவர்கள் உடல் துன்பமடையும் வகையில் அடித்து விடாதே.

வா இன்றைக்கு இன்னும் வீட்டுப் பாடம் எழுதவில்லை. அதை எழுதி முடிப்போம் என்றான் ஆனந்தன்.

திருக்குறள் கதை 20 – நட்பின் இலக்கணம்

மனித உடலின் அதிசய செல்கள்

64 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *