Swetharanyeswarar Temple: பிள்ளை வரம் தலம்

பிள்ளை வரம் தரும் கோயில்
72 / 100

செந்தூர் திருமாலன்


சுவேதாரண்யேஸ்வரர் கோயில் (Swetharanyeswarar Temple). இது மயிலாடுதுறை அருகேயுள்ள திருவெண்காட்டில் உள்ள திருக்கோயில். நவக்கிரகங்களில் புதனுக்கு தனி சந்நதி இங்குதான் உள்ளது.
காசிக்கு சமமான திருத்தலங்களில் ஒன்று. சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இத்திருத்தலம் விளங்குகிறது
சிவபெருமானின் 64 மூர்த்தி பேதங்களில் ஒன்றாகிய ஸ்ரீஅகோரமூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காண முடியும்.


சுவேதாரண்யேஸ்வரர் கோயில்

இத்திருத்தலத்தில் சுவேதாரண்யேஸ்வரர், ஸ்ரீநடராஜர், அகோரமூர்த்தி என மூன்று சிவமூர்த்தங்கள் அமைந்துள்ளன.
இத்தலத்தில் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், என மூன்று தீர்த்தங்கள் இருப்பது மற்றொரு சிறப்பு.
சிவபெருமான் உமாதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க திருவெண்காட்டில் எழுந்தருளினார் அப்போது ஆனந்தத்தால் அவருடைய மூன்று கண்களில் இருந்தும் கண்ணீர் துளிகள் சிந்தின.
அந்த மூன்று துளிகளும் அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என மூன்று குளங்களாக உருவெடுத்தன என்று தலபுராணம் சொல்கிறது.


நால்வரின் பாடல் பெற்ற தலம்

விஷ்ணு, சூரியன், சந்திரன், அக்கினி, இந்திரன், ஐராவதம் முதலானவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்திருக்கிறார்கள்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் பாடல் பெற்ற தலமாக இது விளங்குகிறது.


பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற இடம்


பதினோராம் திருமுறையை பாடிய பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற திருக்கோயிலும் இதுவே.
பன்னிரு சூத்திரங்களைக் கொண்ட சிவஞான போதம் என்னும் சைவ, சித்தாந்த முழு முதல் நூலை எழுதிய மெய்கண்டார் அவதரித்த தலம் இது.
பிரளய காலத்திலும் அழியாமல் சிவபெருமானின் சூலாயுதத்தால் தாங்க பெற்ற தலமாகவும் இது விளங்குகிறது.
வியாச முனிவரின் ஸ்கந்த மகாபுராணம், அருணாச்சல புராணத்தில் இத்தலத்தின் சிறப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

தேவாரப் பாடல்

இத்திருத்தலத்தின் இறைவன் வேதாரண்யேஸ்வர் உமையவள் பிரம்மவித்யாம்பிகை அம்மனுடன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


“பேயடையா பிரிவெய்தும்
பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர்
ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோ ளுமைபங்கன்
வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையா ரவர்தம்மைத்
தோயாவாந் தீவினையே”


என்று தேவாரப் பாடலில் இக்கோயிலின் சிறப்பை திருஞானசம்பந்தர் கூறுகிறார்.
மூங்கில் போன்ற திரண்ட தோளினை உடைய உமையம்மை எழுந்தருளிய திருவெண்காட்டை அடைந்து, அங்குள்ள முக்குள நீரில் எழுந்து வழிபடுவோரை பேய்கள் பிடிக்காது. பேய் பிடித்திருந்தாலும் விலகும்.
இறையருளால் மகப்பேறு வாய்க்கும், மனவிருப்பங்கள் நிறைவேறும் . இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம் என்கிறார் திருஞானசம்பந்தர்.
குழந்தை வரம் தரும் சுவேதாரண்யேஸ்வரர் பற்றி அவர் இப்படி விவரித்திருக்கிறார் தன்னுடைய பாடலில்.


தல வரலாறு

ஜலதராசூரனுடைய மகன் மருத்துவாசுரன் என்ற அசுரன் சிவனை நோக்கி தவமிருந்தான். அதன் பலனாக ஈஸ்வரனிடம் இருந்து சூலாயுதத்தை வரமாக பெற்றான்.
இதையடுத்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் கொடுமைகள் பல செய்யத் தொடங்கினான். இதனால், தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
உடனே சிவபெருமான் தனது வாகனமான நந்தினியை மருத்துவாசுரனிடம் அனுப்பினார். மருத்துவாசுரன் சிவபெருமானிடமிருந்து பெற்ற சூலாயுதத்தால் நந்தியை தாக்குகிறான்.
நந்திக்கு ஒன்பது இடங்களில் காயம் ஏற்படுகிறது. (இன்றளவும் இந்த ஆலயத்தில் உள்ள நந்தியின் உடலில் இந்த காயங்களின் தழும்புகளை காணலாம்).


அகோரமூர்த்தியின் தோற்றம்

நந்தி காயமடைந்ததை அறிந்த சிவபெருமான் சினம் கொள்கிறார். அகோரமூர்த்தியாக மாசி மாதம் தேய்பிறை பிரதமை பூர நட்சத்திரத்தில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு அவதாரம் எடுக்கிறார்.
கரிய திருமேனியுடன், செவ்வாடை உடுத்தி, இடது காலை முன் வைத்து வலது கால் கட்டை விரலையும் அடுத்த விரலை ஊன்றி நிற்கிறார்.
அவரது எட்டுக் கரங்களும் அவற்றில் ஏழு ஆயுதங்களைத் தாங்கிய கம்பீர தோற்றத்தை மருத்துவாசுரன் பார்க்கிறான்.


மருத்துவாசுரனின் வேண்டுதல்

அகோர மூர்த்தியின் கைகளில் மணி, கேடயம்,கத்தி,வேதாளம், உடுக்கை,கபாலம், திரிசூலம் ஆயுதங்களும், கோரை பற்களுடன் 14 பாம்புகளை தன் திருமேனியில் அணிந்தும், மணிமாலை அணிந்தும் அஷ்ட பைரவர்களுடன் காட்சி தந்த கோலத்தைக் கண்ட மருத்துவாசுரன் அவரது காலடியில் சரணடைந்தான்.
இறைவனிடம் தன்னை மன்னித்தருள வேண்டிய அவன், அகோர மூர்த்தியான உங்களை உண்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களுக்கு நவக்கிரக தோஷம், புத்திர தோஷம், எம பயம் ஆகியவற்றை நீக்க வேண்டும்.
அவர்களின் வாழ்வில் அனைத்து செல்வங்களும் பெற அருள் வழங்க வேண்டும் என வேண்டிக் கொண்டான்.
அவன் வேண்டியபடியே அந்த வரத்தை அகோரமூர்த்தி அருளியதால்தான், இத்திருத்தலத்தை நாடி வழிபட்டு செல்வோருக்கு மரண பயம் நீக்கியும், நீண்ட ஆயுளையும் இறைவன் தருகிறான்.
இந்த தலத்தின் பெருமைகளை கேட்டறியும் மக்கள் ஆயிரக்கணக்கில் நாள்தோறும் கோயிலுக்கு வந்து செல்கிறார்கள்.


சிறப்பு வழிபாடுகள்

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட அகோரமூர்த்திக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு அகோர பூஜை நடைபெறுகிறது.
மாதம்தோறும் பூர நட்சத்திரத்தில் அகோரமூர்த்தி பூஜையும் நடைபெறுகிறது. கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக கார்த்திகை மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் மிகச் சிறப்பானவை.
இத்தலத்தின் விருட்சங்களாக ஆல், கொன்றை, வில்வம் ஆகியன இருக்கின்றன.


குழந்தை பாக்கியம்

விருத்தாச்சலம் அருகே உள்ள பெண்ணாடத்தில் வாழ்ந்து வந்த அச்சுதகளப்பாளர் என்பவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை.
அவர் தனது குருவாகிய அருள்நிதி அருணந்தி சிவாச்சாரியாரிடம தனது குறையை வெளிப்படுத்துகிறார்.
அவர் திருமுறைகளைப் பூஜித்து கயிறு சாத்தி பார்த்தார். அப்போது டபேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை” என்னும் திருவெண்காடு ஈசனை நோக்கி திருஞானசம்பந்தர் பாடிய தேவார பாடல் வந்தது.


மெய்கண்ட தேவர் நாயனார்

அச்சுதக்களப்பாளர் தம் மனைவியுடன் திருவெண்காட்டிற்கு வந்து முறையாக முக்குளம் மூழ்கி சுவேதாரணேஸ்வரரை வணங்கி வழிபட்டு வந்தார்.
ஒருநாள் இரவு அச்சிதக்களப்பாளரின் கனவில் வெண்காடர்தோன்றி உமக்கு இந்த பிறவியில் குழந்தை பேறு இல்லை. எனினும் நம் ஞானக் குழந்தையின் பாடலில் நம்பிக்கை வைத்து நம்மை வழிபட்டு வருவதால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று அருளினார்.
அதன்படியே அச்சிதகளப்பாளரின் மனைவி கருவுற்று ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
குழந்தைக்கு சுவேதனபெருமாள் என்ற பெயரை சூட்டினார். அவரே மெய் கண்டார் என்று தீட்சை நாமம் பெற்று சிவஞான போதம் நூலை இயற்றி அருளிய சித்தாந்த ஞானபரம்பரைக்கு முதல் தலைவராக விளங்கிய மெய்கண்ட தேவர் நாயனாராவார்.

a


கோயிலில் வழிபடும் முறை

கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த குளத்துக்கு வர வேண்டும்.
ஆண்கள் வேட்டியும் ,பெண்கள் புடவையும் கட்டிக் கொண்டு அக்னி தீர்த்த குளக்கரையில் உள்ள மெய்கண்டார் சிலையை வணங்கியபடி குழந்தை வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் இறைவனை நினைத்து குளத்தில் கிழக்கு முகமாக பார்த்து மூழ்க வேண்டும்.
அப்போது ஒரு மடக்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.பெண்கள் முகத்தில் மஞ்சளை தடவிக் கொள்ள வேண்டும். குளத்தில் எலுமிச்சைப் பழம், வாழைப் பழம், பூக்களை சமர்ப்பிக்க வேண்டும் . பின்னர் சூரிய தீர்த்தத்தில் நீராட வேண்டும்.
தொடர்ந்து சந்திர தீர்த்தத்திற்கு சுற்றி செல்ல வேண்டும் (குறுக்காக செல்லக்கூடாது). குளித்து முடித்தவுடன் ஈரமான ஆடைகளை அங்கேயே விடக்கூடாது. அதை வீட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
புது ஆடைகள் அணிந்து கொண்டு முதலில் பெரிய வாரணர், விநாயகர், சுவேதாரணஸ்வரர், அகோரமூர்த்தி, பிரம்ம வித்யாம்பிகை,பிள்ளை இடுக்கி அம்மன், புதன் சந்நதியில் தங்கள் பெயர்களை அர்ச்சனை செய்ய வேண்டும். பிள்ளை இடுக்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்யலாம்.


பிள்ளை இடுக்கி அம்மன் மகிமை

திருஞானசம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்தபோது தரை முழுவதும் சிவலிங்கங்களாக காட்சியளித்தன இதனால் அவர் தலத்தில் கால் வைக்க தயங்கி எப்படி நான் இந்த தலத்திற்கு செல்வேன்? என நினைத்து சிவனை வேண்டினார்.
அவரது குரலை கேட்டு சிவபெருமான் பார்வதியை அனுப்பி திருஞானசம்பந்தரை அழைத்து வரும் படி கூறினார்.
சிவனின் ஆணைக்கிணங்க பார்வதிதேவி திருஞானசம்பந்தரை தனது இடுப்பில் தூக்கிக் கொண்டு கோவிலுக்குள் வந்தடைந்தார். அதனால் பிள்ளை இடுக்கி அம்மன் என்ற திருநாமத்தை அவர் பெற்றார்.
அம்மன் தனி சந்நதியில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். அவருக்கு விளக்கேற்றி வழிபட்டால், அவர் குழந்தை வரம் அருள்வதாக புராணம் சொல்கிறது.


வழியும் – தூரமும்

திருவெண்காடு திருத்தலம் மயிலாடுதுறையில் இருந்து 28 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. சீர்காழியில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
சென்னையில் இருந்து ரயிலில் வருபவர்கள் சீர்காழியிலோ, மயிலாடுதுறையிலோ இறங்கி பஸ், கார் மூலம் கோயிலை சென்றடையலாம்.
திருச்சி மார்க்கத்தில் வருபவர்கள் மயிலாடுதுறை வந்து திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு பஸ், கார் மூலம் சென்றடையலாம்.
சீர்காழி, மயிலாடுதுறையில் இருந்து கோயிலுக்கு நகர பேருந்துகள் பகல் நேரத்தில் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.


நடை திறந்திருக்கும் நேரம்:


காலை 6 மணி முதல் பிற்பகல் 12:30 மணி வரையிலும், மாலையில் 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.


பூஜை நேரம்

காலை 6 மணி, 9 மணி, மதியம் 12 மணி, மாலை 5 மணி, 6 மணி, இரவு 8.30 மணி என ஆறு கால பூஜைகள் வழக்கமாக நடந்து வருகிறது.


திருவிழா

மாசி மாதம் இந்திர விழா 10 நாள்கள் இக்கோயிலில் நடைபெறும். 5-ஆவது நாள் விழாவில் அகோரமூர்த்தி அசுரனை சம்ஹார புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.
கார்த்திகை மாதம் 10,008 சங்காபிஷேகமும், வருடம்தோறும் நடராஜருக்கு ஆறு அபிஷேகமும் நடைபெறும்.
இங்குள்ள ருத்ர பாதத்தில் பூஜை செய்தால் 21 தலைமுறையினர் செய்த பாவம் நீங்குவதாக ஐதீகம்.
சௌபாக்கிய துர்க்கை , ஸ்வேதா மாகாளி, சுவேதன பெருமாள் ஆகியோருக்கு தனி சந்நதிகள் உள்ளன. 28 பிள்ளையார்கள் இங்கு உள்ளன.

72 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *