Short story 1: மன்னரின் அமைச்சர் தேர்வு

short story-1 மன்னரின் அமைச்சர் தேர்வு
73 / 100

ஒரு மன்னர் எப்படி தன்னுடைய நாட்டுக்கு நேர்மையான அமைச்சரை தேர்வு செய்தார் என்பது குறித்த ஒரு சிறுகதை short story 1-இல் இடம்பெறுகிறது.

மன்னரின் ஆசை

ஒரு நாட்டை பிரதாபன் என்ற ராஜா ஆண்டு வந்தார். அந்த மன்னரின் அமைச்சர் தேர்வு மிகவும் வித்தியாசமானதாக இருந்தது.

அவர் தன்னுடைய தலைமை அமைச்சராக நேர்மையும், திறமையும் வாய்ந்த ஒருவரை நியமிக்க ஆசைப்பட்டார்.

இதற்காக நாட்டு மக்களுக்கு ஒரு போட்டியை வைத்தார். அந்த போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்களில் ஒருவர் அமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என்று அவர் அறிவித்தார்.

போட்டியில் ஆர்வம் காட்டிய மக்கள்

மந்திரி பதவி என்றால் கசக்குமா என்ன? நாட்டில் உள்ள அனைவருமே இப்போட்டியில் பங்கேற்க தயாரானார்கள்.

ஒரு நாள் அரண்மனை வளாகத்துக்கு நாட்டு மக்களை அழைத்தார். அப்பகுதியில் தயாராக இருந்த மண் நிரப்பப்பட்ட பானைகளில் ஒன்றை ஆளுக்கு ஒன்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

short story-1 மன்னரின் அமைச்சர் தேர்வு கதை

அதேபோல் அருகில் குவித்து வைத்திருக்கிற நெல் மணிகளில் 5 நெல்மணிகள் மட்டும் எடுத்துச் செல்ல வேண்டும்.

நீங்கள் எடுத்துச் செல்லும் பானையில் அந்த நெற்கதைகளை விதைத்து பராமரித்து அவற்றை நெற்கதிர்களாக வளர்க்க வேண்டும்.

குறிப்பிட்ட நாளில் அந்த வளர்ந்த நெற்பயிர்களுடன் கூடிய பானையை எடுத்து வர வேண்டும. அவற்றில் எவை சிறந்தவையாக தேர்வு செய்யப்படுகிறதோ அவரே என் நாட்டின் தலைமை அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று கூறினார்.

காட்சிப்படுத்தப்பட்ட நெற் பயிர்கள்

இதைக் கேட்ட மக்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பானையையும், 5 நெல்மணிகளையும் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினார்கள்.

குறிப்பிட்ட நாள் வந்தது. அரண்மனை வளாகத்தில் மக்கள் திரண்டார்கள். எல்லோரும் அவரவர்கள் நன்கு வளர்த்த பயிர்களை அங்கு காட்சிப்படுத்தினார்கள்.

பல நெற்பயிர்கள் மிகுந்த செழிமையாக வளர்க்கப்பட்டிருந்தன. எல்லாவற்றையும் பார்த்துவிட்டு தன்னுடைய இருக்கைக்கு திரும்பினார்.

மக்கள் எல்லோரும் யாரை தேர்வு செய்யப்படுகிறார் என்று ஆவலோடு காத்திருந்தார்கள்.

அப்போது ராஜா சொன்னார். நீங்கள் வளர்த்திருக்கும் நெற்பயிர்களில் பலவும் செழிப்பாக வளர்க்கப்பட்டிருக்கிறது.

அந்த பயிர்களை வளர்ப்பதில் நீங்கள் காட்டிய அக்கறை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் இங்கிருந்து பானைகளையும், நெற்பயிர்களையும் எடுத்துச் சென்று இந்த போட்டியில் பங்கேற்காதவர்கள் யாரேனும் இருந்தால் நாளை கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.

அப்படி என் முன் ஆஜராகாவிட்டால், அவர்கள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்துவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

மன்னர் ஏன் வராதவர்களைப் பற்றி கவலைப்படுகிறார் என்று யாருக்கும் புரியவில்லை. ஆளுக்கு ஒரு கதையை பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள்.

மன்னர் முன் ஆஜரான இளைஞன்

மறுநாள் காலையில், மக்கள் எல்லோரும் மீண்டும் அரண்மனை முன்பு திரண்டிருந்தார்கள். மண் பானையுடன் முதல் நாள் வராத ஒரு இளைஞன் மட்டும் மண் நிறைந்த அந்த மண் பானையையும், 5 நெல்மணிகளையும் அப்படி எடுத்து வந்திருந்தான்.

மக்கள் எல்லோரும் அந்த இளைஞனுக்கு நிச்சயமாக மன்னர் தண்டனை கொடுப்பார் என்ற எதிர்பார்ப்போடு காத்திருந்தார்கள்.

அந்த இளைஞனிடம் இருந்து மண் பானையையும், நெல் மணிகளையும் காவலர்களை விட்டு பெற்று வரச் சொல்லி அந்த பானையை சோதித்தார். நெல்மணிகளையும் சோதித்தார்.

பிறகு அவனைப் பார்த்து, நாட்டு மக்கள் எல்லோரும் என் கட்டளைக்கு பணிந்து பானைளில் நெற்பயிர்களை போட்டிப்போட்டு வளர்ந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால் நீ சோம்பேறியாக இருந்துவிட்டு, என்னுடைய கடுமையான உத்தரவுக்கு பிறகு இங்கு வந்திருக்கிறாய். என்ன காரணத்தால் நீ மட்டும் இந்த நெல்மணிகளை பானையில் இட்டு வளர்க்காமல் அப்படியே கொண்டு வந்திருக்கிறாய் என்று மன்னர் கோபமாக கர்ஜித்தார்.

அந்த இளைஞன் நடுங்கியபடியே, மன்னரை பார்தது சொன்னான்.

மன்னரே என்னை மன்னிக்கவும். நானும் தாங்கள் வைத்த போட்டியில் பங்கேற்க ஆசைப்பட்டு பானையையும் 5 நெல்மணிகளையும் எடுத்துச் சென்றேன். வீட்டுக்கு சென்றபோது என்னுடைய பாட்டி அந்த நெல்மணிகளை பார்த்துவிட்டு அவை வேகவைக்கப்பட்ட நெல்மணிகள்.

இதை விதைத்தால் பயிராக முளைக்காது. வேண்டுமானால் வேறு நெல்மணிகளை பானையில் இட்டு முளைக்க வை என்று கூறினாள்.

நான் எனக்கு கிடைக்கும் மந்திரி பதவிக்காக, அந்த தவறை செய்ய விரும்பவில்லை. அதனால்தான் நான் நெல்மணிகளை பானையில் இட்டு வளர்க்கவில்லை என்று அச்சத்தோடு விளக்கம் தந்தான்.

இளைஞனை அமைச்சராக்கிய ராஜா

இதைக் கேட்ட மன்னர், சபாஷ் இளைஞனே… நீ தான் நாட்டில் உள்ள பிரஜைகளில் நேர்மையானவனாக இருந்திருக்கிறாய். காரணம் நான் போட்டிக்காக கொடுத்த நெல்மணிகள் அனைத்துமே வேகவைக்கப்பட்டவை. அவை முளைக்காது என்பது எனக்குத் தெரியும்.

ஆனால், மக்கள் எல்லோரும் தாங்கள் எடுத்துச் சென்ற நெல்மணிகள் வளரவில்லை என்றதும், வேறு நெல்மணிகளை பானையில் இட்டு வளர்த்து அதை நேற்று கொண்டு வந்து காட்சிப் படுத்தினார்கள். அதனால்தான் நேற்று எந்த முடிவையும் எடுக்காமல் சென்றுவிட்டேன்.

நான் ஒரு நேர்மையானவனைத்தான் அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று விரும்பி இந்த போட்டியை வைத்தேன். அதில் என் பரிட்சையில் நீ மட்டும் தேர்வாகியிருக்கிறாய்.

நீ தான் இன்று முதல் என்னுடைய தலைமை அமைச்சர் என்று பாராட்டு தெரிவித்து மக்களிடையே அவனை அமைச்சராக அறிவித்தார் மன்னர்.

73 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *