New Criminal Laws: எதிர்ப்பு கிளம்பியது ஏன்?

புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு ஏன்
74 / 100

நடைமுறைக்கு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள்

சென்னை: நாட்டில் கடந்த ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்திருக்கும் 3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு (New criminal Laws) பரவலாக எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
இதில் பல அம்சங்கள் மனித உரிமைகளுக்கு எதிரானதாகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகவும் அமைந்திருப்பதால் எதிர்க்கிறோம் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் எம். பாஸ்கரன் தெரிவித்தார்.


புதிய கிரிமினல் சட்டங்கள்

மத்திய அரசு பழைய 3 குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக 3 புதிய குற்றவியல் சட்டங்களை ஜூலை 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது.
இந்த 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களும் கடந்த 2023 டிசம்பரில் நடந்த மக்களவைக் கூட்டத்தின்போது கொண்டு வரப்பட்டன.
50-க்கும் மேற்பட்ட குறைகளை எதிர்க்கட்சிகள் சுட்டிக் காட்டியதோடு, அவற்றில் மாற்றங்களை கொண்டு வருவதன் அவசியம் குறித்தும் பரிந்துரை செய்தார்கள். இருந்தாலும், இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் ஆளும் பாஜக அரசால் நிறைவேற்றப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பே 1860-இல் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) கொண்டு வரப்பட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) 1865-ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது. அதையடுத்து இச்சட்டம் 1973-இல் திருத்தப்பட்டது.
அடுத்து 1872-இல் இந்திய சாட்சி சட்டம் (Indian Evidence Act) 1865-ஆண் கொண்டு வரப்பட்ட சட்டமாகும்.


ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்ட சட்டங்கள்

இந்த மூன்று சட்டங்கள்தான் மாற்றப்பட்டு புதிய சட்ட மசோதாக்களாக மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பரில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டங்கள் ஹிந்தியில் பெயரிடப்பட்டிருக்கின்றன. இந்திய தண்டனைச் சட்டத்துக்கு பதில் கொண்டு வரப்பட்ட சட்டத்தின் பெயர் பாரதிய நியாய் சனிதா.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு மாற்றாக வந்துள்ள சட்டத்தின் பெயர் பாரதிய நாகரிக் சனிதா.
இந்திய சாட்சி சட்டத்துக்கு பதிலாக நடைமுறைக்கு வந்திருக்கும் சட்டத்தின் பெயர் பாரதிய சாக்ஷிய் அதினியா.


பாரதிய நியாய் சனியா

இந்திய தண்டனைச் சட்டத்தில் 511 பிரிவுகள் இருந்தன. இப்போதைய பாரதிய நியாய் சனியாவில் 358 பிரிவுகளாக குறைக்கப்பட்டிருக்கின்றன.
இதில் புதிதாக 21 குற்றங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. 41 குற்றங்களுக்கு தண்டனை கூடுதலாக்கப்பட்டிருக்கிறது.
82 குற்றங்களுக்கு அபராதம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 6 குற்றங்களுக்கு சமூக சேவை செய்ய உத்தரவிடும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.


பாரதிய நாகரிக் சுரக்ஷா சனிதா

குற்றவியல் நடைமுறைச் சட்டம் 484 பிரிவுகளை உடையதாக இருந்தது. இந்த சட்டத்துக்கு மாற்றாக வந்துள்ள பாரதிய நாகரிக் சுரக்ஷா சனிதா 531 பிரிவுகளை கொண்டிருக்கிறது.
இந்த பிரிவுகளில் 9 புதிய பிரிவுகளும், 39 சார் பிரிவுகளும் அடக்கம். முந்தைய சட்டத்தின் 14 பிரிவுகள் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றன.


பாரதிய சாக்ஷிய் அதினியா

முந்தைய இந்திய சாட்சி சட்டம் 166 பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது. புதிய சட்டமான பாரதிய சாக்ஷிய் அதினியா சட்டத்தில் 170 பிரிவுகள் உள்ளன.
ஏற்கெனவே இருந்த பிரிவுகளில் 24 பிரிவுகளில் மாற்றமும், 2 சார் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. 6 பிரிவுகள் நீக்கப்பட்டிருக்கின்றன.


குற்றச் செயல்களுக்கான தண்டனை அதிகரிப்பு

பழைய சட்டத்தில் குற்றச் செயல்களை தூண்டுவோருக்கான சிறைத்தண்டனை 3 ஆண்டுகள் இருந்தது. இப்போது புதிய சட்டத்தின் மூலம் 7 ஆண்டுகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
பாலியல் தொழிலுக்காக குழந்தையை கடத்தும் குற்றத்துக்கு பழைய சட்டத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு வந்தது.
இப்போது புதிய சட்டம் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கும் வரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
ஆள் கடத்தல் குற்றங்களுக்கு பழைய சட்டத்தில் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. புதிய சட்டத்தில் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்.

புதிய கிரிமினல் சட்டங்களுக்கு எதிர்ப்பு
வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்.


வழக்கறிஞர்களுக்கு தலைவலி

பழைய சட்டங்களில் 85 சதவீதம் ஷரத்துக்கள் அப்படியே புதிய சட்டத்தில் இடம் பெற்றிருந்தாலும், அதன் பிரிவு எண்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
இதனால் பழைய சட்டத்தில் உள்ள எண்களை நீண்டகாலமாக நினைவில் வைத்திருக்கும் வழக்குரைஞர்கள், நீதிமன்றங்களில் புதிய சட்டப் பிரிவுகளை மனதில் நிறுத்துவதற்கு ஒருசில ஆண்டுகள் ஆகலாம்.
இதே நிலைதான் காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யும்போதும் ஏற்படும்.
காவல்துறைக்கு அதிக அதிகாரங்கள்
புதிய சட்டங்கள் காவல்துறைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கியிருக்கின்றன. ஏற்கெனவே பழைய அதிகாரங்களிலேயே மனித உரிமை மீறல் பிரச்னைகள் ஏராளமாக இருக்கும் சூழலில் தற்போதைய புதிய அதிகாரங்கள் சில நேரங்களில் தவறான பயன்படுத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்வதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
நீதிமன்ற அனுமதி தேவையில்லை
முன்பு ஒருவருக்கு கை விலங்கிட நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும். ஆனால் இப்போது காவல்துறை நினைத்தால், அதற்கான காரணத்தை தேடிப்பிடித்து கைது செய்யப்பட்டவருக்கு எப்போது வேண்டுமானாலும் கை விலங்கு போட முடியும் என்கிறார்கள் சட்ட மேதைகள்.


டிஜிட்டல் மயம்

காவல் துறையினர் ஒருவரை கைது செய்தால் உதவி ஆய்வாளர் அளவில் அன்றே அது தொடர்பான தகவலை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.
காவல்துறையிடம் இணையவழியில் புகார்களை பதிவு செய்ய முடியும். காவல்துறையினர் இணைய வழியில் அழைப்பாணைகளை அனுப்ப முடியும்.
குற்றம் எங்கு நடந்தாலும், எந்த காவல் நிலையத்திலும் புகார் பதிவு செய்ய முடியும்.
காவல்துறை எப்படி ஒரு வழக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும். சாட்சிகளை திட்டமிட்டு உருவாக்கக் கூடாது போன்ற விஷயங்களும் புதிய சட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.


பணி பளு அதிகரிக்கும்

புதிய சட்டங்களில், விசாரணை நிறைவடைந்த 45 நாள்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்..
முதல் நீதிமன்ற விசாரணை நடந்த நாளில் இருந்து 60 நாள்களுக்குள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய வேண்டும்.
பழைய சட்டம் நடைமுறையில் இருந்த காலத்தில் உள்ள வழக்குகளை பழைய சட்டத்தின் படியும், புதிய சட்டம் வந்தப் பிறகு பதிவாகும் வழக்குகளை புதிய சட்டத்தின்படியும் விசாரிக்கும்போது காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதிமன்றங்களும் குழப்பம், பணி பளு போன்றவை அதிகரிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது


பாதிப்பை ஏற்படுத்தும் விஷயங்கள்

sedition எனப்படும் தேசத் துரோகம் இந்த சட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு, இந்தியாவின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருங்கிணைப்புக்கு தீங்கு விளைவிப்பது குற்றமாக மாற்றப்பட்டிருக்கிறது.
இது கருத்து சுதந்திரத்தை பாதிக்கும். அரசுக்கு எதிரான எதிர்ப்புகளை முடக்கப் பயன்படுத்துவதற்கு இச்சட்டம் பயன்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
முன்பு கைது செய்யும்போது எந்த பலப்பிரயோகமும் செய்யக் கூடாது என்று சட்டம் சொன்னது. இப்போது அந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. காவல்துறை விரும்பினால் விசாரணைக்கு முன்பே சொத்துக்களையும் முடக்க முடியும்.

ஜாமீன் கிடைப்பது தாமதமாகும்

முன்பு ஒருவர் கைது செய்யப்பட்டால், 15 நாளைக்குள் காவல்துறையினர் நீதிமன்றத்தை அணுகி போலீஸ் காவல் பெற வேண்டும்.
இப்போது இந்த காலம் 60 நாள்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 60 நாள்களில் ஜாமின் கிடைப்பது கடினமாகலாம்.
தலைமைக் காவலர் மட்டத்தில் கூட பயங்கரவாதக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவரை கைது செய்ய முடியும். குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டால், அவருக்கு மனிதாபின உதவி செய்தால் கூட அது பெரும் குற்றமாக காண்பிக்க முடியும் என்கிறார்கள் சட்டம் படித்தவர்கள்.


ஹிந்தியில் பெயர்

ஏற்கெனவே காவல் துறையினருக்கு உள்ள அதிகாரங்களால்,மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்படுவோர் அதிகரித்திருக்கிறார்கள்.

இப்போது கூடுதல் அதிகாரம் அவர்களுக்கு தரப்பட்டிருப்பது பல அதிகார துஷ்பிரயோங்களுக்கு வழி வகுக்கும்.
Article 348 indian constitution of India-இல் சட்டங்கள் ஆங்கிலத்தில்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த சட்டத்துக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே உள்ள சட்டப் பிரிவுகள் காவல் துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற நடைமுறைகளில் மனப்பாடமாக இருப்பவை.

ஆனால் அந்த சட்டப் பிரிவுகளின் எண்கள் புதிய சட்டத்தில் மாற்றப்பட்டுள்ளது.
302 என்றால் கொலை வழக்கு, 420 என்றால் மோசடி என்று மனப்பாடமாக காவல்துறையினரும், வழக்குரைஞர்களும் பல தலைமுறைகளாக சொல்லி வருகிறார்கள்.
இனி அவர்கள் புதிய சட்டப் பிரிவுகளை மிகுந்த எச்சரிக்கையுடன் கையாள வேண்டியிருக்கிறது.

காவல் துறைக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிக அதிகாரங்கள் மனித உரிமைகளை பாதிக்கும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டுக் குழுவின் துணைத் தலைவர் எம். பாஸ்கரன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

74 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *