Kurangani temple: முத்துமாலை அம்மன் மகிமை

முத்துமாலை அம்மன் கோயில்
70 / 100

செந்தூர் திருமாலன்

அந்த பாவங்களைப் போக்கி அவர்களுக்கு பாவ விமோசனம் தரும் ஆற்றல்மிக்க அன்னையாக குரங்கணி முத்துமாலை அம்மன் விளங்குகிறாள்.
“பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமே” என்கிறார் பட்டினத்தார். அதாவது ஒருவர் இந்தப் பிறவியில் செய்த புண்ணியங்களும் பாவங்களும் அவரது அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்ந்துவரும் என்பதுதான் இதன் பொருள்.
ஒருவர் தெரிந்தோ,தெரியாமலோ பாவங்கள் செய்திருந்தால் அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.


முத்துமாலை அம்மன் கோயில்

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த அன்னையின் திருத்தல வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. ராமாயண காலத்தில் சீதா தேவியை ராவணன் சிறைப் பிடித்து சென்றான்.
அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்கு செல்ல ராமபிரான் தன் வானர சேனையை அணிவகுத்து நிற்க செய்த இடம் குரங்கணியாகும்.
குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் குரங்கணி என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.


முத்து மாலையை வீசிய சீதாதேவி


ராவணன் சீதாதேவியை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றபோது சீதாதேவி ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்றி கீழே வீசினாள்.
அப்படி வீசப்பட்ட முத்துமாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலையில் இருந்து ஜோதியாக ஒளி வீசியது.
அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர் முத்துமாரியின் ஒளி வீச்சைக் காணமுடியாமல் கண்கள்கூசின.


சீதை வழிபாடு


அருகில் கிடந்த மண்சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர்மக்கள் கூடி முத்துமாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தத் தொடங்கினார்கள்.
முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு சீதாதேவி தங்கியிருப்பதாக நினைத்து அதற்காக முத்துமாரியம்மன் என்று பெயரிட்டனர்.
செவிவழி செய்தியாக காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் இச்சம்பவம் அம்மனின் மகிமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.


அம்மனை நம்பாத அதிகாரி


குரங்கணி பகுதியை நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார்.
அதற்கு கோவிலின் சுற்றுச்சூழல் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச் சுவரை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அந்த ஊரைச் சேர்ந்த 4 சகோதரர்கள் வம்சாவழியினர் தடுத்தனர்.


அம்மன் அசரரீ


அப்போது அந்த அதிகாரி இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால் நான் அம்மன் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறேன்.
அதற்கு அம்மன் பதிலளிக்குமா என ஆணவத்துடன் கேட்கிறார். அதற்கு வம்சாவழியினர் நிச்சயம் அம்பாள் பதிலளிப்பாள் என்றனர்.
அதையும்தான் பார்ப்போமே என்று கூறியபடியேஅந்த அதிகாரி முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன் என்று மூன்று முறை அழைத்தார்.
அப்போது கோவில் கருவறையின் உள்ளே இருந்து என்ன? என்ற சத்தம் இடி முழக்கம் போல் கேட்டது.
அந்த சத்தத்தைக் கேட்ட அதிகாரி அதிர்ச்சியில் உறைந்து போய் மயங்கி கீழே விழுந்தார். அவர் பயணித்து வந்த குதிரையும் கீழே சாய்ந்தது.


மன்னிப்பு கேட்ட அதிகாரி


உடனே கூடியிருந்தவர்கள் பயபக்தியுடன் அம்மனை வணங்கி, தாயே! தவறை பொறுத்தருள வேண்டும் என மனமுருகி வேண்டிக் கொண்டனர்.
பின்னர் அம்மன் தீர்த்தத்தை எடுத்து அதிகாரி மீதும், குதிரை மீதும் தெளித்தனர். சிறிது நேரத்தில் சுய உணர்வு வரப் பெற்று அதிகாரி எழுந்தார். குதிரையும் எழுந்தது.
ஆத்தாளின் பரிபூரண கருணையை உணர்ந்த அந்த அதிகாரி நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து அம்மனை வணங்கி தாயே! “நான் தெரியாமல் செய்த குற்றத்தை பொறுத்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.
பின்னர் கோயிலை இடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு இரண்டு மண் குதிரைகளை செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார்.
அந்தக் குதிரைகளை இன்றும் கோவிலில் உள்ள பெரிய சுவாமி சன்னதியில் காணலாம்.

amman


கோயிலில் பூஜைகள்


பழங்காலத்தில் திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை நடந்து வந்தது.
அப்போது அம்மனுடைய மண்ஓட்டு திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது.
இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவுகூரும் வண்ணம் இவ்வாறு முன்னோர்கள் தீபதூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தார்களாம்.


புத்துயிர் பெற்ற கோயில்


1957-ஆம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது அம்மனின் முத்துமாலையை மூடியிருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு கல்லினால் திருமேனி சிலா சாசனம் செய்யப்பட்டது .
அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு குடமுழுக்கு அபிஷேகம், மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல் இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முத்துமாலை அம்மன் சன்னதியின் இடது புறமும், வலதுபுறமும், பரிவாரமூர்த்திகளின் சன்னதிகள் புடைசூழ அமைந்திருக்கின்றன.
இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.


ராமன் தேடிய சீதை


சீதாதேவியை காணாமல் இராமரும் லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் சீதாதேவியை கடத்தி சென்றான் எனக் கூறியது. அனுமனுடன் வானரப் படைகள் சீதா தேவியை தேடிச் சென்றபோது ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது.
அனுமன் அதன் அருகே சென்றுபார்த்தபோது அது சீதை தூக்கி எறிந்த முத்துமாலை என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால், இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.


தனித் தனி சன்னதிகள்


முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகள், பார்வதி அம்மன், பிரம்மசக்தி மாரியம்மன், சந்தனமாரியம்மன், பைரவர், வீரபத்திரர் முதலியோருக்கு இங்கு தனிதனி சன்னதிகள் உள்ளன .
மேலும் விநாயகர் காசிநாதர் விசாலாட்சி நவக்கிரகங்கள் அருள் பாலிக்க, மூலவர் முத்து மாரியம்ன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.


திருவிழாக்கள்


குரங்கணி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனித் திருவிழா, தைத்திரு மாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு.
கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
அப்போது முத்துமாரி அம்மனுக்கு தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனித் திருவிழாவிற்கு 15 நாள்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும்.
முத்துமாலை அம்மன் சன்னதியின் தென்புறம் முப்புடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவாரமூர்த்தங்களுக்கு மகாஅபிஷேகம் நடைபெறும்.
அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும். இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

நோன்போ நோன்பு


ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும். அன்று இரவு அம்மன் கோவில் பணியாளர் ஒருவர் ஊருக்குள் செல்வார். அவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு சென்று 15-ஆம் நாள் அம்மன்கொடை”நோன்போ நோன்பு” என கூறிக்கொண்டு செல்வார்.
அந்த 15 நாட்கள் கோயிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவுக்கு 8 நாள்கள் முன்பாக ஆண்கள் பெரியசாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர்.


அம்மன் திருநடை திறப்பு


பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வருவர். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன் திங்கள்கிழமை மாலையில் அம்மன் தங்க ரதத்தில் அலங்கார ஆபரணங்களுடன் எடுத்துச் சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும்.
அம்மனுக்கு மகாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இரவு ஸ்ரீநாராயணர் சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, தாயர்களுடன் அம்மன் கோட்டை வலம் வந்து வீதி உலா வருவார்.
ஆனித் திருவிழா முடிந்து எட்டாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்து அருள்வர்.


மாட்டு வண்டி கட்டிக்கிட்டு…!


ஆனி திருவிழாவில் பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து, ஆடுவெட்டிபொங்கல் இட்டு வழிபாடு செய்வர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படுவதும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வதையும் இங்கே பார்க்கலாம்.


ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி!


குரங்கணி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னதி உள்ளது . இந்த சன்னதி அமைய தனி காரணமுண்டு.
கோவில் பூசாரி மற்றும் இவ்வூரைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றி, கேரளாவில் இருந்து எனது காவல்வீரன் பெரியசாமி நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலைவடிவில் மிதந்து வருகிறான்.
அவனை வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலதுபுறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திருவுருவை அமைத்து வையுங்கள் என அருளினர்.
அம்மன் அருளாணைப்படி, தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரியசாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.


வியாதியை குணப்படுத்தும் சாம்பார் சாதம்!


குரங்கணி குரங்கணி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் ஒரு வீடு உள்ளது. இதனை கோயில் வீடு என்று அழைப்பர் இங்கு செவ்வாய்க்கிழமைதோறும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருவார்கள்.
பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு கோவில் வளாகத்தில் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருப்பார்கள். அவர்கள் மீது பூசாரி தீர்த்தத்தை தெளிப்பார்.
அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து அதை பனைமர ஓலைகளில் செய்த பட்டையில் படைப்பார்கள். இவ்வாறு படைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை உடல்நலம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக ஐதீகம்.
இந்த சாம்பார் சாதத்தை பெறுவதற்காக எப்போதும் செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.


உடல் உறுப்புகள் நேர்த்திக் கடன்!


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் கை,கால் போன்ற மனித உடல் உறுப்புகளை மரக்கட்டையால் செய்து கோயிலில் நேர்த்திக்கடனாக செலுத்துவது விசேஷம்.
வாத நோயினால் கைகால் முடக்கப்பட்டு படுக்கையாக இருப்பவர்கள் நோய் குணமாக வேண்டி அவர்களுடைய உறவினர்கள் அம்மனிடம் வேண்டிக் கொள்வார்கள்.
நோய் குணமானதும் கை, கால், பாதம்,போன்ற உடல் உறுப்புகளை மரக்கட்டையால் செய்து அதை கோவிலுக்கு வந்து காணிக்கையாகசெலுத்துவதாக வேண்டிக் கொள்வார்கள்.
அதன்படி நோய் குணமானதும் கோயிலுக்கு வந்து செலுத்துவார்கள். அவ்வாறு நேர்த்திக் கடனாக செலுத்தப்படும் மரக்கட்டையால் ஆன உடல் உறுப்புகள் கோயில் வளாகத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.


தரிசன நேரம்!


இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.


வழியும்- தூரமும்


தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குரங்கணி முத்துமாரியம்மன் கோயில்.
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள தென் திருப்பேரை என்ற ஊரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றாலும் கோவிலை அடையலாம்.

70 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *