Rajini: ரசிகர்கள் முகம் சுளிப்பு

ரஜினி ரசிகர்கள் ரசிக்கவில்லை
Spread the love

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தன்னை விட இளையவரான ஒரு மாநில முதல்வரின் காலில் விழுந்தது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. ரஜினி ரசிகர்கள் இதற்கு பதில் சொல்லி சமாளித்தாலும் பலரும் அவரது செய்கையால் மனம் நொந்து போயிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரசிகர் பட்டாளம் ஏராளம்

திரையுலகில் அடியெடுத்து வைத்த ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டாராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழ் ரசிகர்கள். அவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா, அயல்நாடுகளில் கூட ரசிகர் பட்டாளம் ஏராளம்.
சமீப ஆண்டுகளில் அவரது பேச்சில் வீசிய ஆன்மிக அரசியல் வாடை அவருடைய இமேஜை கொஞ்சம் குறைக்கத்தான் செய்தது.

நல்லவேளை, சிலரது சூழ்ச்சிகளில் இருந்து தப்பி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்து, அவரது ரசிகர்கள் பலரையும் நிம்மதி பெருமூச்சு விட வைத்தார்.

எல்லா கட்சிகளிலும் ரசிகர்கள்

ரஜினிகாந்துக்கு திரைப்பட நாயகன் என்ற அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருப்பவர்களும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் அவரது ரசிகர்களாக உருவானவர்கள்.

அவரது காலதாமதமான அரசியல் பிரவேசத்தை இளையதலைமுறை ரசிகர்கள் ரசித்த அளவுக்கு முந்தைய தலைமுறை ரசிகர்கள் ரசிக்கவில்லை என்பதே உண்மை.

நடிகர் ரஜினிகாந்துககு 72 வயதாகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர் நடித்த படம் ஜெயிலர் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

இமயமலை பயணம்

இதைத் தொடர்ந்து அவர் இமயமலைக்கு ஆன்மிக பயணத்தை வழக்கம்போல மேற்கொண்டார்.
அவரது ஆன்மிக பயணத்தின் இடையே உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தபோது, யாரும் எதிர்பாராத சம்பவம் நடந்தது. அவர் திடீரென யோகி ஆத்யநாத் காலில் விழுந்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.

காரணம், கடந்த 5 ஆண்டுகளுக்கு அதாவது டிசம்பர் 2017-இல் ரசிகர்களை சந்தித்து பேசிய ரஜினி, காலில் விழும் கலாசாரத்தைப் பற்றி பேசினார்.

அப்போது அவர், “தாய், தந்தை, கடவுள் காலில் தான் விழ வேண்டும். இந்த பணம், பேரு, புகழ், அதிகாரம் இதெல்லாம் இருக்கிறவங்க காலில் விழுவது அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டார்.

ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த ரஜினி

ரஜினி வாய்ஸ்


இப்படி அவர் ஒவ்வொரு நிகழ்விலும் ஒரு பஞ்ச் டயலாக் பேசுவது வழக்கமானது. அதை “ரஜினி வாய்ஸ்” என பத்திரிகைகள் முதல் ஊடகங்கள் வரை பெரிய அளவில் செய்தியாக வெளியிடுவதும் வாடிக்கை.
அந்த வகையில் சமீபத்தில் நடந்த ஜெயிலர் படம் தொடர்பான விழா நிகழ்வில் கூட, யாரும் மது அருந்தாதீர்கள் என அட்வைஸ் செய்தார். இதுவும் அனைவராலும் பாராட்டுக்குரிய விஷயமாக பேசப்பட்டது.
இந்த சூழலில்தான், இமயமலை பயணம் சென்ற ரஜினிகாந்த், 51 வயதே ஆன ஒரு மாநில முதல்வர் காலில் (ரஜினிகாந்த் வயது 72) விழுந்தது ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது.
பிறருக்கு அறிவுரை சொல்வது மிகவும் எளிய விஷயம். ஆனால், தன்னால் அதை கடைப்பிடிப்பது முடியாத விஷயம் என்பதுதான் பலரது அனுபவம். அதை ரஜினிகாந்த் செய்திருக்கிறார்.

அந்த வகையில், அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் சொன்ன அட்வைஸ், இப்போது சமூக தளங்களில் வைரலாகி அவரை நகைப்புக்குரியவராக ஆக்கி வருகிறது.

ரஜினி ஸ்டைல்

நடிகர் ரஜினிகாந்த், திரைப்படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் தன்னை எப்போதுமே வீரனாகவே காட்டிக்கொண்டவர்.

அவருடைய இந்த கதாபாத்திரங்களும், அவரது ஸ்டைலும்தான் அவரே எதிர்பாராத அளவுக்கு உச்சியில் உட்கார வைத்தது.

அதனால்தான் எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிகாந்துக்கு தமிழகத்தில் அவ்வளவு ரசிகர் பட்டாளம் இன்றைக்கும் இருக்கிறது.

அப்படிப்பட்ட ரசிகர் பட்டாளத்துக்கு, காவி உடை அணிந்தவர்கள் எல்லோரையுமே அவர் யோகிகளாக கருதுகிறாரோ என்ற சந்தேகம் அவரது செயலால் எழுந்திருக்கிறது.

எந்த பற்றும் இல்லாத துறவியாக ஒருவேளை யோகி ஆதித்யநாத் இருந்திருந்தால், அவர் காலில் விழுந்து வணங்கியதை யாரும் தவறாக எடுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள். அவர் ஒரு அதிகாரப் பதவியில் இருப்பவர்.

அப்படி ஒரு அதிகார பதவியில் இருப்பவர் காலில் ரஜினிகாந்த் விழுந்ததைத்தான் பலரால் ஜீரணிக்க முடியவில்லை.

ரஜினிகாந்த் வேண்டுமானால் நான் அவர் ஒரு துறவி அதனால் காலில் விழுந்தேன் என தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்ளலாம். ஆனால் அது அவரையும், அவரது ரசிகர்களையும் ஏமாற்றும் சமாதானம்.

மக்களால் அன்றாடம் உற்று நோக்கப்படும் ஒரு பிரபலம் ரஜினிகாந்த். இதனால்தான் அவரது தனிப்பட்ட செயல்கள் விமர்சனத்துக்குள்ளாகின்றன.

ரசிகர்கள் ரசிக்கவில்லை

ரஜினிகாந்த் செயலை உள்ளூர ரசிகர்களால் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் அவர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த விஷயத்தை பல்வேறு காரணங்களைச் சொல்லி சமாளிக்கின்றனர்.

“என்னடா இந்த மனுஷன் இப்படி பண்ணிட்டாரே” என்று உள்ளுக்குள் அவர்கள் வேதனைப்படுவதை ரஜினிகாந்த் மனம் உணரத் தொடங்க வேண்டும்.
ரஜினி என்ற தமிழகத்தின் பிம்பம் யாரிடத்திலும் சரிந்து விழுவதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை.

இதனால் அவர் அரசியலில் இல்லாவிட்டாலும், மிகப் பெரிய பிரபலம் என்ற அளவில் எச்சரிக்கையாக இனியாவது அடியெடுத்து வைக்க வேண்டும்.

இல்லாவிட்டால், அவர் சொன்ன கருடன், காக்கா கதை கூட பிற்காலத்தில் மீம்ஸ் என்ற் கிண்டல் கணைகள் பாயும்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *