Annamalai ips: மீண்டும் பாடமெடுத்த வேடிக்கை

பத்திரிகையாளர்களுக்கு மீண்டும் பாடம்
Spread the love

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் என்ற அந்தஸ்துக்கு எவ்வளவு பங்கம் விளைவிக்க முடியுமோ அந்த அளவுக்கு பங்கம் ஏற்படுத்தும் பண்பற்ற பண்பாளராக, தான் தொடர்வதை மீண்டும் அண்ணாமலை நிரூபித்திருக்கிறார்.

சென்னையில் புதன்கிழமை (4.1.2023) நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் நடந்து கொண்ட விதம் பத்திரிகை, ஊடகங்களை எந்த அளவுக்கு அசிங்கப்படுத்த முடியுமே அந்த அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்கிறார்.

அண்ணாமலைக்கு புதிதல்ல

பத்திரிகை நிருபர்களை தரம் தாழ்ந்து கடிந்து கொள்வது, அவர்களை விமர்சிப்பது ஒன்றும் அண்ணாமலைக்கு புதிதல்ல.

இதுபோன்று பேசிய பல தலைவர்களின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் பார்த்தவர்கள்தான் முந்தைய தலைமுறை பத்திரிகையாளர்களும், இன்றைய இளம்தலைமுறை பத்திரிகையாளர்களும்.

அந்த வகையில் சென்னையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் நிருபர் உள்பட, இன்னும் பல பிரபல பத்திரிகைகளின் நிருபர்களையும் தன் பேச்சின் மூலம் அவமதித்திருக்கிறார்.

அரசியலில் இன்னமும் பக்குவம் பெறாதவராக இருக்கிறார் என்றுதான் பலரும் ஏற்கெனவே விமர்சித்து வந்தனர்.

ஆனால் நாளும் நான்காம்தர வசைச் சொற்களை பத்திரிகையாளர்கள், ஊடகங்கள மீது வீசி வருவதன் உச்சமாக புதன்கிழமை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு என்றே சொல்ல வேண்டும்.

அதிகார மிரட்டல் ஜனநாயகம்

ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாக, எல்லா வசைச்சொற்களையும் தாங்கிக்கொண்டு தங்கள் கடமையை செய்துவருபவர்கள்தான் பத்திரிகை, ஊடக நிருபர்கள்.

இந்த நிலையில், அவர்கள் மீது அநாகரிக வார்த்தைகள், வன்முறை, மிரட்டல், அதிகார பலம் போன்றவை நடத்தப்படுவது இந்த ஜனநாயக நாட்டில் சகஜமான ஒன்றுதான்.

தமிழக பாஜகவை பொறுத்தவரை, பொதுவாக, இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் முடிந்தவரை நாகரீகமாக பத்திரிகையாளர்களை நடத்தியிருக்கிறார்கள். அதற்கு இப்போது விதிவிலக்காக அண்ணாமலை இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

பாஜகவுக்கு சாபக்கேடு

அண்ணாமலை பாஜகவை வளர்க்க விரும்புகிறாரோ இல்லையோ, தன்னை வளர்த்துக்கொள்ள முயற்சிக்கிறார் என்பது வெளிப்படை. இதை ஆளும் மத்திய அரசாக விளங்கும் பாஜக வேடிக்கை பார்ப்பது அதைவிட வேடிக்கை.

பாடம் நடத்திய அண்ணாமலை

அண்ணாமலை என்றால் பாஜக, பாஜக என்றால் அண்ணாமலை என்ற அகம்பாவ போக்கை கட்சியின் மூத்த தமிழகத் தலைவர்கள் ரசிப்பதில்லை என்பதும் எல்லோரும் அறிந்த ஒன்று.

பொது இடங்களிலும், பத்திரிகையாளர் சந்திப்பிலும் எதிர்க்கட்சிகள் மீதும், ஆளும் கட்சியின் மீதும் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் அண்ணாமலை, அதற்கான பதில் கிடைக்கும்போது அமைதியாகி விடுவது வாடிக்கையான ஒன்று.

திருவிளையாடலில் வரும் நாகேஷ் சொல்வதுபோல், “எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும். பதில் சொல்லத் தெரியாது” என்பது ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அடிக்கடி நிரூபணமாகி விடுகிறது.

ரஃபேல் வாட்ச் விவகாரம்

கடந்த சில தினங்களுக்கு ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் ஒரு நிருபரின் தூண்டிலில் சிக்கிய அவர் இன்னமும் அதில் இருந்து மீளமுடியவில்லை.

காரணம், வாய் திறந்தாலே, நம்பமுடியாத தகவல்களை, உண்மைக்கு புறம்பான தகவல்களை அள்ளி வீசுவது அவரது பாணியோ என்ற சந்தேகம் ரஃபேல் வாட்ச் விவகாரத்தில் உறுதியானது.

அவர் அடிக்கடி எதிர்க்கட்சிகளை நோக்கி புகார்களை அள்ளி வீசும்போது, அதற்கு ஆதாரம் இருப்பதாக கூறுவது வாடிக்கை.

அந்த வகையில் அவர் புதன்கிழமையும் ஒரு தனியார் நிறுவனம் தொடர்பான விவகாரத்தை கையெலெடுத்தார்.

புதிய தலைமுறை ஏற்கெனவே அந்த விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டது குறித்தும், தக்க ஆதாரம் இருந்தால் அதை வெளியிடத் தயார் என்றும் நேரலையின்போது அந்த ஊடக நிருபர் சவால் விடுத்தார்.

இந்த சூழலில், அவரை தனி அறைக்கு அழைத்து மிரட்டியுள்ளது அநாகரீகத்தின் உச்சம் என்றே சொல்ல வேண்டும்.

பத்திரிகையாளனாக ஒரு பதிவு

25 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் ஒரு பத்திரிகையாளனாக இருந்த எனக்கு ஒன்றே ஒன்றுதான்  சொல்லத் தோன்றுகிறது.

தமிழக பாஜக மூத்த நிர்வாகிகளே, இன்னமும் உங்கள் தலைவர் வாயில் வந்தபடி உளறுவது, பத்திரிகையாளர்களை தரக்குறைவாக தரக்குறைவாக பேசுவதை அனுமதிக்க நினைக்கிறீர்களா?

அத்தகைய தலைமைதான் உங்கள் கட்சியின் வளர்ச்சிக்கு தேவை என கருதுகிறீர்களா?

ஆம் என உங்கள் மனசாட்சி இடம் கொடுத்தால் அமைதியாக இருங்கள். ஒருவேளை, மனசாட்சி உறுத்தினால், இன்னமும் நமக்கென்ன என்று நீங்கள் ஒதுங்கி இருக்காமல், பாஜகவுக்கு மிகப்பெரிய களங்கத்தை உங்கள் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஏற்படுத்திவிடுவார் என்பதை மத்திய தலைமைக்கு எடுத்துரையுங்கள்.

ஓடோடி செய்தி சேகரிப்பது ஏன்?

இனியாவது பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்கள் அண்ணாமலையாக அழைத்தால் அன்றி ஓடோடிச் சென்று பேட்டி எடுக்கும் கலாசாரத்தை கைவிடுங்கள். உங்களின் இக்கட்டான நிலைமையை நிர்வாகத்திடம் தெரிவித்து சம்மதிக்க வையுங்கள்.

நீங்கள் ஒருவரை தேடிச் செல்வதால்தான் அவர் உங்களை ஓடஓட விரட்டுகிறார். நீ என் செய்தியை போட வேண்டும் என்பது அவசியமில்லை என்று ஒருவர் சவால் விடும்போது, அதை கருத்தில் கொண்டு அந்த சவாலை சந்திப்பதுதான் பத்திரிகை நிர்வாகங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அழகு, கௌரவம்.

Show 1 Comment

1 Comment

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *