சாதனை மைல் கல்லைத் தொட்ட சந்திரயான்-3

chandrayan 3 landing-mithirannews

சென்னை: இந்தியா வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் விக்ரம் லேண்டரை தரையிறக்கி உலக நாடுகளை ஆச்சரியத்தோடு திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
சந்திரயான் 2 தோல்விக்கு பிறகு மிகக் கவனமாக செலுத்தப்பட்ட சந்திரயான் 3 தனது வெற்றியை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
சந்திரயான் 3-இன் லேண்டர் நிலவில் தரையிறங்கும் நேரடி ஒளிபரப்பை தொலைக்காட்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் பதற்றத்துடன் கண்டனர். நிலவில் லேண்டர் தரையிறங்கியதும் எல்லோர் முகத்திலும் பூரிப்பும், சந்தோஷமும் மிளிர உற்சாகக் குரல் எழுப்புவதைக் காண முடிந்தது.

சோதனைக் கடந்த சாதனை


விண்வெளி ஆராய்ச்சியில் சந்திரனை ஆய்வு செய்யும் நோக்கத்துடன் இந்தியா முதன்முறையாக 2008-ஆம் ஆண்டில் சந்திரயான் 1 விண்கலத்தை அனுப்பியது. இதை பிஎஸ்எல்வி எக்ஸ்ஸெல் ராக்கெட் சுமந்து சென்றது.
இது வெற்றி அடைந்ததை அடுத்து நிலவின் மேற்பரப்பை அடைந்த 5 நாடுகள் பட்டியலில் ஒன்றாக இந்தியா இடம் பிடித்தது.
இந்த பயணத்தின் முடிவில், கிடைத்த ஆதாரங்கள் மூலம் நடத்திய ஆராய்ச்சியில், நிலவில் நீரின் மூலக்கூறுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

சந்திரயான்-2 சொல்லித் தந்த பாடம்


இதைத் தொடர்ந்து சந்திரயான்-2 கடந்த 2019 ஜூலை 22-ஆம் தேதி ஏவப்பட்டது. இந்த விண்கலத்தை ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் சுமந்து சென்றது.
இதில் நிலவை சுற்றும் பகுதி, தரையிரங்கும் லேண்டர் பகுதி, லேண்டருக்குள் ரோவர் எனப்படும் சிறிய ரக நகரும் வாகனம் ஒன்று ஆகியன இடம்பெற்றன.
இந்த நிலையில், சந்திரயான்-2-இல் இருந்து பிரிந்த விக்ரம் என்ற லேண்டர் பகுதி நிலவின் தரைப்பகுதியை இறங்கும்போது சிக்கல் ஏற்பட்டு வேகமாக நிலவில் வீழ்ந்து சேதமடைந்தது.
இதனால் இத்திட்டம் தோல்வியை அடைந்தது. இருந்தாலும், சந்திரனை சுற்றி வந்த சந்திரயான்-2 தொடர்ந்து நிலவை பற்றிய தகவல்களை அனுப்பி வந்தது.
அதைவிட ஆச்சரியமான விஷயம். இப்போதும் கூட அது உயிர்ப்புடன் சந்திரயான்-3 விண்கலத்துடன் தொடர்புகொண்டு தகவல் அனுப்பியதுதான்.

சந்திரயான்-3


சந்திரயான்-2 தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, சந்திரயான்-3-க்கான திட்டம் வகுக்கப்பட்டது.
இத்திட்டத்தில் லேண்டரை பாதுகாப்பாக இறங்குவதும், லேண்டர் தரையிறங்கிய பிறகு அதில் உள்ள கதவு திறப்பது, அதைத் தொடர்ந்து ரோவர் சாய்வுப்பலகை வழியாக நிலவின் தரையில் இறங்கி ஆய்வு செய்வது வரையிலான பணிகள் மிகுந்த கவனத்துடன் திட்டமிட்டன.
அதைத் தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலம் ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்டது. வழக்கமாக பிற நாடுகள் பூமியில் இருந்து நேரடியாக சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பும். இதற்கு மிகுந்த சக்திவாய்ந்த உந்து திறனும், அதிக எரிபொருளும் தேவை.
ஆனால் இந்தியா, இயற்கையான கோள்களின் ஈர்ப்பு விசையை மையப்படுத்தி விண்கலத்தை சந்திரனில் இறக்கிறது. இதற்கான பயணம் நேரம் அதிகம். ஆனால் அதிக உந்து சக்தியும், அதிக எரிபொருளும் தேவையி்ல்லை. அந்தவகையில் ஒரு சிக்கனமான அதே நேரத்தில் தேவையான ஆய்வுகளை செயல்படுத்தக் கூடிய கருவிகளுடன்தான் சந்திரயான் 3 பயணம் தொடங்கியது
பூமியில் இருந்து புறப்பட்ட அந்த விண்கலம் திட்டமிட்டபடி நிலவை நெருங்கியது. அதைத் தொடர்ந்து நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவந்த சந்திரயான் 3-இல் இருந்து ரோவர் அடங்கிய லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவை நோக்கி தரையிறக்கப்பட்டது.

20 நிமிடங்கள் திக்…திக்…


கடைசி 20 நிமிடங்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி நாடே மிகுந்த பதட்டத்துடன் விக்ரம் லேண்டர் நிலவின் தரைப்பகுதியில்வெற்றிகரமாக இறங்க வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் நேரடி ஒளிபரப்பைக் கண்டது.
வெற்றிகரமாக புதன்கிழமை மாலை திட்டமிட்ட நேரத்தில் அது நிலவின் தென்துருவப் பகுதியில் இறங்கி சாதனைப்படைத்தது.
இதன் மூலம் நிலவின் தென்பகுதியில் கால் பதித்த முதல் நாடு என்பதையும், நிலவில் கால் பதித்த 4 நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விண்வெளி திட்டத்தில் முன்னேறியுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் தொடர்ந்து இஸ்ரோவுக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.
அடுத்தக்கட்டமாக ரோவர் நிலவில் செய்யும் ஆராய்ச்சி இஸ்ரோவை அடுத்த படிக்கட்டுக்கு முன்னேற்றும் என்பதில் சந்தேகமில்லை.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *