Governor walks out: சபாஷ் முதல்வரே!

governor walks out சபாஷ் முதல்வரே
Spread the love

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் மரபைக் காப்பாற்றத் தவறிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, அதே சட்டப் பேரவையில் சரியான பதிலடியைத் தந்துள்ள தமிழக முதல்வர் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சபாஷ் போட வேண்டிய தருணம் இது.

தமிழக ஆளுநராக செயல்படும் ஆர்.என். ரவி, தொடக்கம் முதலே தான் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் போலவே செயல்பட்டு வருவது பல தருணங்களில் அவரது பேச்சு வெளிப்படுத்தி வந்தது.

இதை திமுக அரசு மென்மையாகவே எதிர்த்து வந்ததையும் பார்க்க முடிந்தது. மாநில ஆளும் அரசு என்பதால், சில கட்டுப்பாட்டுகளையும், மரபுகளையும், மரியாதையும் ஆளுநருக்கு தர வேண்டிய கட்டாயம் கூட அதற்கு காரணமாக இருந்திருக்கலாம்.

வரலாற்றில் இல்லாத நிகழ்வு

இத்தகைய சூழலில்தான் தமிழக சட்டப் பேரவையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தன்னை ஆளுநராக நியமித்தவர்களுக்கு நன்றிக்கடன்பட்டவராக காட்டிக் கொண்டார் என்று சொல்ல வேண்டும்.

ஏற்கெனவே அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை, அதுவும் அவரிடம் முன்அனுமதி பெறப்பட்ட உரையில் ஒருசில வரிகளை விடுத்து படிப்பது என்பது இதுவரை வரலாற்றில் நிகழாத ஒன்று.

சட்டப் பேரவையில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய தருணத்தில், ஆளுநர் ரவி தன்னையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.

சட்டப் பேரவையில் தனது உரையை நிகழ்த்திய பிறகு முதல்வரின் கருத்தை அடுத்து மரபுப்படி தேசியகீதம் வாசிக்கப்படுவது வரை சற்று பொறுமையை காக்க அவர் தவறியிருக்கிறார்.

ஆளுநர் ஆர்என் ரவி

எதிர்பாராத திருப்பம்

எந்த அரசியல் சட்டம் வகுத்த ஜனநாயகத்தின்படி, அவர் ஆளுநராக அமர்ந்திருக்கிறாரோ, அந்த சட்ட வடிவுக்கு காரணமான அம்பேத்கர் பெயரை குறிப்பிடுவதைத் தவிர்த்திருப்பது ஆச்சரியமான ஒன்று.

பெரியார், அண்ணா, கலைஞர், காமராஜர் ஆகியோரின் பெயர்களைத் தவிர்த்திருப்பதும் கூட சகிக்க முடியாத ஒன்று.

சட்டப்பேரவையில் அப்படி அவர் அவையின் மாண்பைக் கெடுக்கும் வகையில் செயல்பட்டது யாரும் எதிர்பாராதது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேருக்கு நேர் இதற்கான கண்டனத்தை பதிவு செய்தது பாராட்டுக்குரியதே.

இந்த கண்டனத்தை ஆளுநர் ஒருவேளை எதிர்கொண்டிருந்தால், தமிழக முதல்வர் மீது கூட ஒரு எதிர்கருத்து உருவாகியிருக்கக் கூடும்.

அத்தகைய சூழலைக் கூட உணர முடியாதவராக ஒரு ஆளுநர் இருந்துள்ளார் எனில், அவர் தனது சுயகட்டுப்பாட்டை இழந்துவிட்டார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

தமிழகம் – தமிழ்நாடு பிரச்னை

ஏற்கெனவே தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என அவர் தனது கருத்தை பதிவிட்டதால், அவருக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிய திமுகவின் கூட்டணிக் கட்சிகள், சட்டப் பேரவையிலும் ஆளுநர் உரைக்கு முன்னதாக எழுப்பியது ஒருவேளை ஆளுநரை கலக்கமடையச் செய்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

அதன்பிறகுதான், ஆளுநர் தனது உரையை வாசிக்கும்போது, ஒருவித பதற்றத்துடனேயே காணப்பட்டார் என்பதை நேரடி ஒளிபரப்பு காட்சிகளே தெளிவுபடுத்துகின்றன.

உயரிய பதவிகளான, குடியரசுத் தலைவர், அவரால் நியமிக்கப்படும் ஆளுநர் பொறுப்புகள் உள்ளிட்டவை கட்சி சார்பற்ற முறையில் செயல்படக் கூடிய பதவிகள்.

ஆளுநர் பதவி ஒரு நியமனப் பதவி. அதிகாரமும் ஒரு எல்லைக்குட்பட்டதுதான். அதற்கென சில மரபுகள் பின்பற்றப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் தீவிர அரசியல் பின்னணி கொண்ட பலரும், ஆளுநர் பொறுப்புக்கு வந்த பிறகு அத்தகைய நிலையை பின்பற்றவே விரும்பினர். அதற்கு விதிவிலக்கு ஆர்.என்.ரவி போன்ற சிலர் விதிவிலக்காக உள்ளனர்.

ஆளுநரின் அரசியல் முகம்

ஒரு கட்சியின் மாநில நிர்வாகி பேச வேண்டிய கருத்துக்களை பொது இடங்களில் பேசி அந்த பதவிக்கே களங்கம் விளைவிக்கிறார் என ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.

இந்த நிலையில், இன்றைக்கு அவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் போல செயல்பட்டு சட்டப் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ததைப்போல் இருந்ததை நாடே வேடிக்கை பார்த்தது.

பாஜகவின் மீதான மரியாதை

இத்தகைய போக்கை தமிழகத்தில் ஆளுநர் தொடர்ந்து கடைபிடித்தால், அது தமிழகத்தின் வளர்ச்சிக்கும், பாஜகவின் வளர்ச்சிக்கும் கூட பாதிப்பை ஏற்படுத்தும். இதை மத்தியில் ஆளும் பாஜக விரும்புகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலை விரைவில் சந்திக்க காத்திருக்கும் பாஜக தலைமையிலான அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறதோ, அதைப் பொறுத்துதான் பாஜக  மீதான மரியாதை தமிழகத்தில் உயர்வதிலும், தாழ்வதிலும் இருக்கிறது.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *