பாடம் நடத்தும் அண்ணாமலை; பாடம் கற்கும் பத்திரிகை நிருபர்கள்

சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் என்ற அந்தஸ்துக்கு தன்னை தகுதிப்படைத்தவராக மாற்றிக்கொள்ள முடியாதவராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இருக்கிறாரோ? என்பதை கடலூரில் அவர் பத்திரிகை நிருபர்களிடம் நடந்து கொண்ட விதம் சந்தேகத்தை எழுப்புகிறது.

பத்திரிகை நிருபர்களை தரம் தாழ்ந்து கடிந்து கொள்வது, அவர்களை விமர்சிப்பதை இவரைப் போன்ற தலைவர்கள் சிலர் விமர்சிப்பதை முந்தைய தலைமுறை பத்திரிகையாளர்களும், இன்றைய இளம்தலைமுறை பத்திரிகையாளர்களும் பார்த்தவர்கள்தான்.

பத்திரிகையாளராக, ஒரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துவிடுவோர், ஊர் உலகில் நடக்கும் பிரச்னைகள், அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.

ஆனால் அவர்களுக்கு ஏதேனும் ஒரு பாதிப்பு, அவமரியாதை ஏற்பட்டால், அதை தட்டிக் கேட்பதால் பத்திரிகை தலைமைக்கு தங்களால் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்ற நல்லெண்ணம் காரணமாக பல நேரங்களில் வாய் திறப்பதில்லை.

பத்திரிகையாளர்கள் சில நேரங்களில் நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுப்பதுண்டு. அத்தகைய குரலுக்கு பத்திரிகை நிர்வாகங்களும் செவிசாய்ப்பது உண்டு. இதெல்லாம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு.

என்னிடம் மாத ஊதியம், தொகுப்பூதியம், ஒப்பந்த ஊதியம் என நீ எப்படி வாங்கினாலும், போட்டி நிறைந்த இந்த பத்திரிகை, ஊடக உலகில் என் நிறுவனத்துக்கு நீ எந்த செய்தியையும், எந்த தலைவர்களின் பேட்டியையும் விட்டுவிடாமல் கொடுத்துவிட வேண்டும்.

அதற்காக நீ எவ்வளவு அவமானம், அவமரியாதையை சந்தித்தாலும் பரவாயில்லை என்ற ஆண்டான்-அடிமை போக்கு பத்திரிகை, ஊடக நிர்வாகங்களில் இருப்பது தவிர்க்க முடியாதது.

அதுவும் விளம்பரம் இல்லாமல் காலம் தள்ள முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்ட பத்திரிகை, ஊடகங்களின் நிலை இன்னும் மோசம்.

பத்திரிகையாளர்களில் ஒருசிலர் தாங்கள் சேகரிக்கும் செய்திக்காக சன்மானம் பெறுகிறார்கள், சுயஆதாயம் பெறுகிறார்கள் என்பது இன்றைக்கு நேற்றைக்கல்ல. பத்திரிகை உலகம் தோன்றியது முதலே எழுப்பப்படும் குற்றச்சாட்டுதான். இது ஒரு குறைபாடுதான்.

ஆனால், சன்மானம், தனிப்பட்ட ஆதாயம் பெறும் நிலைக்கு ஒருசிலர் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணமே அத்தகையோர் பணிபுரியும் நிர்வாகமே காரணம்.

அவர்களுக்கு போதிய ஊதியமும், அவர்கள் தன்னிச்சையாக செயல்படும் சுதந்திரமும் அளிக்கப்பட்டால், அத்தகைய ஒருசிலரும் தவறு செய்வதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு.

அப்படிப்பட்டவர்கள் தவறு செய்தால் பத்திரிகை நிர்வாகங்கள் உடனடியாக அந்த நிருபர் மீது நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை.

ஒருசில பத்திரிகை, ஊடக தலைமைகள் பெரிய எதிர்பார்ப்புகளை, தேவைகள், ஆதாயங்களை தங்களுக்கு கீழே பணிபுரியும் நிருபர்கள் மூலம் நிறைவேற்றிக்கொள்வது இன்றைய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

இதனால், தங்களின் கீழ் பணிபுரிவோர் சிலரை, நேர்மையானவர்களாக வழிநடத்துவது இயலாத காரியம்.

அத்தகைய நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள் பணத்தை விட, ஆதாயத்தை விட சுயமரியாதையே முக்கியம் என சுயமுடிவு எடுத்தால் அன்றி இந்த குறைகளுக்கு தீர்வு காண முடியாது.

மாதம்தோறும் கைநிறைய ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை விட்டுவிட்டு, சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அவலங்களையும், சீர்கேடுகளையும் களைவதற்கு பத்திரிகையாளராக மாற வேண்டும் என்ற இலட்சியத்தோடு வந்தவர்கள் ஏராளம்.

இன்றைக்கும் பல இளைஞர்கள் அத்தகைய இலட்சியத்தோடுதான் பத்திரிகை, ஊடகத் துறைகளில் நுழைந்து வருவதும் உண்மை.

ஆர்வத்தோடு ஒரு நிறுவனத்தில், பத்திரிகையாளராக சேர்ந்த பிறகுதான், ‘ஒய்யார கொண்டையாம், தாழம்பூவாம், உள்ளே இருக்குமாம் ஈரும், பேனும்’ என்ற பழமொழி நினைவுக்கு வரும்.

இதனால், எந்த இலட்சியத்துக்காக, பத்திரிகையாளராக சேர்கிறாரோ, அந்த சூழ்நிலை மாறி, வாழ்க்கை சுழலில் அடித்துச் செல்லப்படுகிறார்.

வெளியில் இருந்து பார்க்கும்போது, பத்திரிகையாளர் என்றால் ஒரு மரியாதைக்குரியவர் என்ற பார்வை பலருக்குத் தெரியும்.

ஒரு பத்திரிகையாளர் சுதந்திரமாக பணிபுரிந்து, நடுநிலையோடு செய்திகளை சேகரித்து, அதை அந்த பத்திரிகை, ஊடகம் எந்தவித பாரபட்சமின்றி வெளியிடும் சூழல் இன்றைக்கு இல்லை. அது கடந்த காலங்களில் நடந்த வரலாறாக, நினைவலையாக மாறிவிட்டது.

எந்த அரசியல்வாதியிடமோ அல்லது செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களாலோ, ஒரு நிருபர் அவமானத்தைச் சந்திக்க நேரிட்டால், அச்செய்தியை பிரசுரிக்காமல் இருக்கலாம். ஒளிபரப்பாமல் இருக்கலாம். அந்த பேட்டிக்குரியவர் மன்னிப்பு கோரும் வரை அவரது செய்திகளை புறக்கணிக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளை எந்த நிறுவனமும் துணிச்சலாக எடுப்பதில்லை.

அதற்கு மாறாக, அப்படி ஒரு நிருபர் அவமானப்பட்டால், அவமதிக்கப்பட்டால், அதையும் ஒரு செய்தியாகக் கருதி வெளியிடுவதுதான் இன்றைக்கு பத்திரிகை, ஊடக தர்மமாக மாறியுள்ளது.

காரணம் பத்திரிகை துறையைச் சேர்ந்த ஒருவர் அடைந்த அவமானம் தனக்கு நேர்ந்த அவமானமாக எந்த பத்திரிகை, ஊடகத் தலைமையும் கருதுவதில்லை.

40 வயதைக் கடந்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்துவரும், இக்காலக்கட்டத்தில், தன் குடும்பத்தை பராமரிக்க, வாரிசுகளை படிக்க வைக்க, அந்த நிறுவனத்தில் தொடர்ந்து தன் பணியை தக்கவைக்கவே ஒருவர் முயல்வார்.

அப்படி முயலும் பத்திரிகையாளர்களில் சிலர், எடுபிடிகளாக, கூனி குனிந்து பணிப்புரிய வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டு வெளியில் சொல்ல முடியாத வர்கள் ஏராளம்.

பத்திரிகைகள், ஊடக நிறுவனங்கள், ஒரு பத்திரிகையாளர், யாரிடமும் தன்மானத்தை இழக்கக் கூடாது என்ற நோக்கில், அரசின் சட்டவிதிகளை பின்பற்றி  போதிய ஊதியமும், பணி பாதுகாப்பும் கொடுக்கும்பட்சத்தில் நிச்சயமாக அவர் எந்த அவமானங்களையும் சந்திக்க மாட்டார்.

ஆனால் அத்தகைய சூழலை நாட்டில் பின்பற்றும் நிறுவனங்கள் விரல் விட்டு எண்ணும் அளவுக்குத்தான் உள்ளன. பிற நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள தன்மானத்தை காற்றில் பறக்கவிட்டு விடுவது அதிகரித்துள்ளது.

ஜனநாயகத்தை காப்பாற்றும் கருவியாக பயன்படுத்தும் நோக்கத்தோடு, இன்றைக்கு யாரும் பத்திரிகைகளை, ஊடகங்களை நடத்துவதில்லை. அவை வருமானம், ஆதாயம், தற்காப்புக்கு காரணங்களுக்காகவே நடத்தப்படுகின்றன.

அப்படிப்பட்ட சூழல் என்றைக்கு மாறுகிறதோ அன்றைக்குத்தான் பத்திரிகையாளர்கள் மதிக்கப்படுவார்கள். யாரிடமும் அவமானங்களை சந்திக்க வேண்டிய அவசியமின்றி தலைநிமிர்ந்து நடப்பார்கள்.

அண்ணாமலை போன்ற பண்பற்றவர்களின் பேச்சுகளையும், அவர்களின் பேட்டிகளையும் நிராகரிப்பார்கள். அதுவரை பத்திரிகை நிருபர்கள் அவமானத்துக்குள்ளாவதும், அசிங்கப்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்று.

ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்வது அவசியமாகிறது.  யாரெல்லாம் ஒரு காலத்தில் பத்திரிகையாளர்களை அவமதித்தார்களோ, அசிங்கப்படுத்தினார்களோ, அவர்கள் விதி வசத்தால் பாதிக்கப்படும்போது, தங்கள் தரப்பு நியாயத்தைக் கூட யாரிடமும் வெளிப்படுத்த முடியாத துர்பாக்கியசாலிகளாக மாறும் நிலை ஏற்படும் என்பதால், ‘தன்வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும்’ என்ற பட்டினத்தார் வார்த்தையையும் நினைவில் கொள்வது நல்லது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *