நேர்மைக்கு கிடைத்த மந்திரி பதவி

நேர்மைக்கு கிடைத்த மந்திரி பதவி

ஒரு நாட்டை ஆண்ட ராஜா தன்னுடைய மந்திரியாக நேர்மையும், திறமையும் உள்ள ஒருத்தரை நியமிக்க முடிவு செய்தார். இதற்காக நாட்டு மக்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார்.
நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் 5 நெல்மணிகளும், மண் நிரப்பப்பட்ட ஒரு பானையும் கொடுக்கப்படும். அந்த நெல்மணிகளை வளர்த்து குறிப்பிட்ட நாளில் அரண்மனைக்கு வந்து காட்ட வேண்டும். அவர்களில் நல்ல முறையில் பயிரை பராமரித்து வளர்த்திருக்கிற ஒருவரை தேர்வு செய்து மந்திரியாக்கப் போகிறேன் என்று அறிவித்தார்.
மந்திரி பதவின்னா சும்மாவா… எல்லோருக்குமே மந்திரியாக ஆசை. அதனால் எல்லோருமே பானை, நெல்மணிகளை வாங்கிக் கொண்டு போனார்கள்.
குறிப்பிட்ட நாளில் அரண்மனைக்கு வந்து தாங்கள் வளர்த்த நெற்கதிர்களை காட்டினார்கள். அந்த நெற்கதிர்களில் சில ஆள் உயரத்துக்குக் கூட செழுமையாக வளர்ந்திருந்ததைக் கண்டு அதிசயத்தார். இருந்தாலும் அவர்களில் ஒருவரைக் கூட அவர் தேர்வு செய்யவில்லை.

ராஜாவின் அதிரடி உத்தரவு

 அரண்மனையில் நெல்மணிகளையும், பானையும் வாங்கிச் சென்று இதுவரை வராதவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அரண்மனைக்கு வர வேண்டும். இது அரசின் ஆணை என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில், ஒரு ஏழை இளைஞன் மண் பானை 5 நெல்மணிகளுடன் ராஜா முன் வந்து நின்றான். அவனை பார்த்த ராஜா, நீ ஏன் எல்லோரையும் வரச் சொன்னபோது வரவில்லை. ஏன் என் உத்தரவை மதிக்கவில்லை என்று கேட்டார்.
அந்த இளைஞன் தயங்கியபடியே சொன்னான். ராஜா நீங்கள் கொடுத்த நெல்மணிகள் முளைப்பதற்கு தகுதியற்றவை. இதை உங்களிடம் சொல்ல தயக்கமாக இருந்தது. அதனால்தான் நான் பயிரிடப்படாத மண் பானையுடன் அரண்மனைக்கு வராமல் இருந்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்றான்.

நேர்மைக்கு கிடைத்த பரிசு

இதைக் கேட்ட ராஜா, அவனை அருகில் அழைத்து கட்டித் தழுவினார். நேர்மையாக இருக்க ஆசைப்பட்ட உனக்குத்தான் இந்த நாட்டின் மந்திரி பதவி என்றார்.
இதைக் கேட்ட மக்கள் எல்லோருக்கும் ஆச்சரியம் தாளாமல் ராஜாவை பார்த்தனர்.
ராஜா சொன்னார். நான் மக்கள் எல்லோருக்கும் கொடுத்த நெல் மணிகள் முளைக்காது என்பதை நான் அறிவேன். காரணம் அவை அனைத்தும் வேகவைத்து காயவைத்தவை. ஆனால் நீங்கள் எல்லோருமே மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு நேர்மை தவறி வேறு நெல்மணிகளை பானையில் இட்டு அவற்றை வளர்த்து கொண்டு வந்து காட்டினீர்கள்.
ஆனால் உண்மையை உணர்ந்த இந்த இளைஞன், நேர்மை தவறாமல் முளைக்காத விதைகளுக்கு பதில் வேறு விதைகளை முளைக்க வைக்காமல், என்னிடம் உண்மையை தயக்கமில்லாமல் தெரிவித்தான்.
அதனால்தான் அவனுடைய நேர்மையை பாராட்டி இந்த மந்திரி பதவியை அளித்திருக்கிறேன். நேர்மையாக இருப்பவர்கள் என்றைக்கும் மதிக்கப்படுவார்கள் என்றார் ராஜா.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *