குறளமுதக் கதைகள் வரிசையில் திருக்குறள் கதை 30 இருவேறு உலகத்து என்று தொடங்கும் திருக்குறளுக்கான கதையும், விளக்கத்தையும் கொண்டிருக்கிறது.
வழக்கம்போல இன்றைக்கும் தாத்தாவை அழைத்தபடியே ஆனந்தன் உள்ளே நுழைந்தான்.
உள்ளடக்கம்
இருவேறு நிலைகள் ஏன்?
ஈஸி சேரில் உட்கார்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தர்ம நாதர், அவனுடைய குரலைக் கேட்டு என்னப்பா… என்று சொல்லி நிமிர்ந்தார்.
தாத்தா… நான் என் நண்பன் சுரேஷ் வீட்டுக்குப் போனேன். அவனுடைய வீடு குடிசையாக இருந்தது. இதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்து நண்பன் ரமேஷ் வீட்டுக்கு போனேன். அவனுடைய வீடு மிகப் பெரிதாக அழகான கட்டடமாக இருந்தது.
குடிசையில் வாழுும் சுரேஷ் படிப்பில் கெட்டிக்காரனாக இருக்கிறான். ரமேஷ் படிப்பில் கடைசி இடத்தில் இருக்கிறான். வீட்டுக்கும் படிப்புக்கும் ஏதாவது தொடர்பு உண்டா தாத்தா என்று கேட்டான் ஆனந்தன்.
குறிக்கோளும், எண்ணங்களும்
இதை உனக்கு ஒரு கதை மூலம் தெளிவுபடுத்துகிறேன். அருகில் உட்கார் என்றார் தாத்தா.
ஆறு மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு மாமரத்தடிக்கு சென்றார்கள். அவர்கள் போனது பழம் சாப்பிட. 6 பேருக்கும் தான்தான் அதிக பழங்களை சாப்பிட வேண்டும் என்பது ஆசை.
பழங்கள் மரத்தில் உயரத்தில் இருந்தது. அதனால் முதலாமவன் மரத்தில் ஏறி பறித்தால் சரிபட்டு வராது. பேசாமல் மரத்தை வேரோடு சாய்ப்பதுதான் நல்லது என முடிவு செய்து அந்த முயற்சியில் ஈடுபட்டான்.
இரண்டாவது ஆளோ மரத்தை வேரோடு பிடுங்குவது இப்போதைக்கு நடக்காத காரியம் அடிமரத்தை வெட்டினால் சாய்ந்துவிடும் என அதை வெட்ட தயாரானான்.
மூன்றாவது நபரோ பெரிய மரமாக இருக்கு. இவர்கள் இருவரும் எப்போது வெட்டி முடிப்பது. பேசாமல் பழங்கள் அதிகம் இருக்கும் கிளையை மட்டும் ஏறி வெட்டுவோம் என முடிவு செய்து அவன் கிளையை வெட்டத் தொடங்கினான்.
நான்காவது நபர் மரத்தில் ஏறி கைக்கு எட்டிய பழுத்த பழங்கள் மற்றும் பழக்காத காய்களை பறிக்கத் தொடங்கினான்.
5-ஆவது நபரோ மரத்தில் ஏறி பழுத்த பழங்களை மட்டும் பறித்தான். 6-ஆவது நபர் கீழே விழுந்த பழங்களை பொறுக்கத் தொடங்கினான்.
இவர்களின் எண்ணமும் குறிக்கோளும் பழம் சாப்பிடுவதுதான். ஆனால் அவர்களுடைய செயலில் மாற்றம் இருக்கிறது.
முதலாவது நபருக்கு பேராசை. மரத்தோடு பிடுங்கி அதிகப் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை.
ஆறாவது நபரில் ஆசை மிகக் குறைவு. மரத்தில் இருந்து கீழே விழும் பழங்கள் போதும் என்கிற குறைந்த ஆசை.
இவர்களுடைய குறிக்கோள் ஒன்றாக இருந்தாலும், அவர்களுடைய எண்ணங்களில் பெரிய வேறுபாடுகள் இருக்கிறது.
முதல் மனிதனோ தன்னுடைய குறிக்கோளை அடைய கொடூரமான முறையில் மரத்தை சாய்ப்பது. ஆறாவது மனிதனோ தன்னுடைய குறிக்கோளை அடைய மரத்திற்கு எந்த தீங்கும் இன்றி கீழே விழும் பழங்கள் போதும் என்ற எண்ணம்.
குந்த குந்தர் கூறுவது என்ன?
இந்த எண்ணங்கள்தான் ஒருவருடைய வாழ்க்கை முறையை நிர்ணயிக்கின்றன. அந்த எண்ணங்களால் ஏற்படும் வினைகள் நம்முடைய இன்ப, துன்பங்களுக்கு காரணமாக அமைகின்றன. இதைத்தான் வினைப்பயன் என்கிறார்கள்.
இதைத் தான் குந்த குந்தர் தன்னுடைய திருக்குறள் பாடல் வரிகள் மூலம் நமக்கு சொல்கிறார்.
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
(குறள் – 374)
உலக வாழ்க்கையானது இரு வேறு இயல்பைக் கொண்டது. சிலர் செல்வச் செழிப்புடன் வாழ்கின்றனர். மற்றவரோ நுண்ணறிவும், ஆழ்ந்த மெய்யுணர்வும் பெற்று வாழ்கின்றனர் என்கிறார்.
அறிவுடையவர் வறியவராகவும், அறிவிலாதோர் செல்வமுடையவராகவும் இருப்பதற்குக் காரணம் அவர்கள் செய்த முன் வினைப் பயனே என்கிறார் குறலாசான்.
ஆனந்தா… இப்போது உன்னுடைய சந்தேகத்துக்கு விடை கிடைத்துவிட்டதா என்றார் தாத்தா.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.