Vyadha gita: வ்யாத கீதை சொல்வதென்ன?

vyadha gita - வ்யாத கீதை சொல்வதென்ன
75 / 100

வெ நாராயணமூர்த்தி

மார்க்கண்டேய முனிவர் மூத்த பாண்டவ இளவரசனான தர்மராஜனுக்கு வ்யாத கீதையை (vyadha gita) சொன்னதாக ஸ்ரீமத் மஹாபாரத புராணம் கூறுகிறது. அது நமக்கு சொல்லும் கருத்துக்கள் மிக ஆழமானவை என்பதோடு மிக மிக அழுத்தமானவையும் கூட.

கௌசிகன் தவம்

குருகுலத்தில் வேதசாஸ்த்ரங்களைப் பயின்ற இளைஞன் கௌசிகன் உயர்நிலை ஞானத்தைத் தேடுவதில் நாட்டம் கொண்டான்.

துறவறம் மேற்கொள்வது என்று முடிவு செய்தான். தன் வயதான பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும், அவர்களின் ஏக்கத்தையும், துக்கத்தையும் அறிவுரைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை.

பெற்றோர்களுக்குத் தான் ஆற்றவேண்டிய கடமை, பொறுப்புகளையும்
பொருட்படுத்தாது வீட்டை விட்டு அவன் வெளியேறினான்.

நீண்ட பயணத்துக்குப் பின் ஒரு காட்டிற்குச் சென்று கடும் தவம் மேற்கொண்டான். நாட்கள்
கடந்தன. தன்னை மறந்தான், இந்த உலகை மறந்தான். எண்ணங்கள் ஒருநிலை
கொள்வதையும் தவத்தின் பயனையும் உணர்ந்தான். மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பினான்.

தவத்தின் வலிமையை அறிந்த கௌசிகன்

ஒரு நாள் ஒரு பெரிய மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருந்தபோது அவன் தலைக்கு மேல் இருந்த ஒரு கிளையில் ஒரு கொக்கு பறந்து வந்து அமர்ந்தது.

சிறிது நேரத்தில் அந்தப் பறவை எச்சமிட்டது. அது கீழே அமர்ந்திருந்த கௌசிகன் மேல் விழுந்தது. தியானம் கலைந்தது. அண்ணாந்து பார்த்த கௌசிகனுக்கு கோபம் கொப்பளித்தது.

தான் எவ்வளவு பெரிய தவ வலிமைகளைப் பெற்று வருகிறேன்? இந்தப் பறவை என் மீது எச்சமிடுகிறதே என்று எண்ணி அதை உற்றுநோக்கினான் கௌசிகன்.

ஒன்றும் அறியாத அந்தக் கொக்கு எரிந்து சாம்பலானாது. இதைக் கண்ட கௌசிகனுக்கு ஒருபுறம் ஆச்சர்யம், மறுபுறம் பெருமிதம்.

தனக்கு இவ்வளவு பெரிய சக்தி கிடைத்துவிட்டதா? தன் தவ வலிமையால் அந்தப் பறவைக்கு
நல்ல புத்தி புகட்டி விட்டோம் என்ற கர்வம் அவன் தலைக்கேறியது.

பசியால் காத்திருந்த சோகம்

அந்தக் காலத்தில் தவசிகள் தங்கள் அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று பிக்க்ஷை
எடுத்து, கிடைக்கும் உணவை உண்டு தவத்தைத் தொடர்வது வழக்கம்.

இந்த நிலையில், பசியை உணர்ந்த கௌசிகனும் அருகிலுள்ள கிராமத்துக்கு புறப்பட்டான். ஒரு வீட்டிற்கு எதிரில் நின்று, ‘பவதி, பிக்க்ஷாந்தேஹி’ என்று குரல் கொடுத்தான்.

சிறிது நேரத்தில் அந்த வீட்டுப் பெண்மணி ஒரு பாத்திரத்தில் அன்னம் கொண்டு வருவதைக்
கண்டான்.

அந்த நேரம் பார்த்து, அந்தப் பெண்மணியின் கணவனும் களைப்புடன் வீடு திரும்பினான்.

உடனே பெண்மணி கௌசிகனைப் பார்த்து, ‘ஸ்வாமி சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ வருகிறேன்’ என்று சொல்லி விட்டு, தான் கொண்டுவந்த அன்னத்தோடு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

நேரம் கடந்தது. காத்திருந்த கௌசிகனுக்கோ பசி. பசியால் கோபம். அதோடு சேர்ந்து அந்தப்
பெண்ணினால் ஏற்பட்ட அவமானம்.

கோபத்தின் உச்சியில் கௌசிகன்

மீண்டும் குரல் கொடுத்தான் கௌசிகன். பதில் இல்லை. ‘இது என்ன விசித்திரம், இந்தப் பெண் என் தவ வலிமை தெரியாமல் என்னிடம் விளையாடுகிறாளே, இப்படி காக்க வைக்கிறாளே’ என்று பொருமினான். ஆத்திரம் தலைக்கேறியது.

பொறுமை இழந்து, ‘பெண்ணே அன்னம் தரப்போகிறாயா இல்லையா?’ என்று உரக்க கத்தினான். இன்னும் கால தாமதம் ஆனது.

சிறிது நேரம் கழித்து, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்தப் பெண், ‘ஸ்வாமி, இதோ வந்துவிட்டேன்’, என்று அன்னம் கொண்டு வந்தாள்.

அவளை பார்த்ததும் கண்கள் சிவக்க கௌசிகன் – ‘பெண்ணே, கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் இப்படி தவமுனிகளைக் காக்க வைக்கலாமா? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று கண்களை அகல விரித்து அவளை உற்று நோக்கினான்.

கௌசிகனுக்கு விழுந்த அடி

அந்தப் பெண்ணோ சிறிதும் கலக்கமின்றி, கௌசிகனை பார்த்து ‘என்னை என்ன அந்தக் கொக்கு என்று நினைத்துக் கொண்டீரா முனிவரே, நீங்கள் பார்த்ததும் நான் சாம்பலாக?’ என்றாள் சிரித்துக்கொண்டே.

துணுக்குற்று ஆத்திரத்தில் இருந்து விடுபட்டான் கௌசிகன். காட்டில் நடந்தது இந்தப் பெண்ணுக்கு எப்படி தெரிந்தது? என்று ஆச்சர்யத்துடன் வாயடைத்துப் போய் அந்த பெண்ணை பார்த்தான்.

முதலில் கடமை அதன் பிறகே தர்மம்

‘ஸ்வாமி, களைப்புடன் வீடு திருப்பிய என் கணவனுக்கு ஸ்ரமபரிகாரம் செய்வித்து அவருக்கு
உணவளித்து கவனித்துக் கொள்வது என் கடமை. குடும்பமே என் கடவுள்.

பக்தியுடன் நான் செய்யும் பணிவிடையே பத்தினி தர்மம். முதலில் என் கடமை, பொறுப்பு, பிறகுதான் தான தர்மம் எல்லாம்.

என் கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. ஞான மார்க்கத்தில் இருக்கும் நீர், இது கூட தெரியாமல் கோபப்படுவது எந்த வகையில்
நியாயம் என்று நினைத்து பார்த்தாயா?’ என்று அவள் கேட்ட கேள்வி கௌசிகனை உறைந்துபோகச் செய்தது.

தர்மவ்யாதனிடம் சென்று கேள்

தன்னிலை திரும்பிய கௌசிகன், சுதாரித்துக் கொண்டு, ‘சரி பெண்ணே, நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். எனக்குப் பசியும் தணிந்துவிட்டது. முதலில் இதைச் சொல். நான் பறவையை பஸ்மமாக்கிய சம்பவம் உனக்கு எப்படி தெரிந்தது? என்று பவ்வியமாகக் கேட்டான் கௌசிகன்.

‘அது தெரிய வேண்டுமானால், அருகில் உள்ள மிதிலா நகரத்தில் வசிக்கும் தர்மவ்யாதனிடம்
கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்’, என்று சொல்லியனுப்பினாள்.

மிதிலை நோக்கி பயணம்

கௌசிகனுக்கு பசி மறந்தது. கோபம் பறந்து போனது. தன்னிலையை உணர்ந்தான். கர்வம் கரைந்தது. யார் இந்த தர்மவ்யாதன்? என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் மேலிட்டது. மிதிலையை நோக்கி பயணமானான்.

சில நாட்கள் பயணித்து, அந்த நகரைச் சென்றடைந்து, தர்மவ்யாதனைப் பற்றி வினவினான்.
என்ன ஆச்சர்யம், அனைவருக்கும் தெரிந்த நபராக இருந்தார் தர்மவ்யாதன்.

‘இந்த நகரின் ஒதுக்குப் புறமான பகுதியில் அவரின் கடை இருக்கிறது’ என்று மிகுந்த மரியாதையுடன் அடையாளம் சொன்னார்கள். ஒரு வழியாக கண்டுபிடித்து அங்கே சென்றபோது, அது கசாய் கடைகள் நிறைந்த பகுதி என்பதை கண்டு துணுக்குற்றான்.

எங்கு பார்த்தாலும் மாமிசங்கள் குவிந்து கிடந்தது. குமட்டிக்கொண்டு வந்தது கௌசிகனுக்கு.

தர்மவ்யாதன் கடையிலோ கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனாலும் முனியைப் பார்த்ததும்
நமஸ்கரித்து, ‘ஸ்வாமி, அந்தப் பத்தினி தங்களை இங்கு அனுப்பினாளா?’ என்று
சாதாரணமாக வினவ, கௌசிகன் மலைத்துப் போனான்.

வ்யாத் கீதை சொல்வது என்ன

இது எப்படி சாத்தியம்?

‘ஆண்டவா, இது என்ன விந்தை? இது எப்படி சாத்தியம்? ஒரு சாதாரண கசாய்க்காரனுக்கு
தன் கதை எப்படி தெரிகிறது?’ என்று குழம்பிப் போனான் கௌசிகன்.

‘முதலில் என் வாடிக்கையாளர்களை கவனித்துவிட்டு பிறகு உங்களிடம் பேசுகிறேன். மாலை வரை காத்திருக்க முடியுமா? என்றான் தர்மவ்யாதன் பவ்யமாக.

உண்மையை தெரிந்துகொள்ளும் வரை எக்காரணம் கொண்டும் கோபப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்த கௌசிகன், சரி என்றான்.

இது என்ன புதுவகையான, தான் கற்றிராத, கேள்விப்படாத ஞானம்? ஒரு சாதாரண பெண்
காட்டில் நடந்ததைச் சொல்கிறாள். இந்த கசாய்க்காரான் அவளைப் பற்றி சொல்கிறான். இதில் புதைந்துள்ள உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் விடப்போவதில்லை என்று மனதில் உறுதியோடு காத்திருக்கத் தொடங்கினான்.

தெய்வீக மகிழ்ச்சி எப்படி?

மாலை வந்தது. தன் பணிகளை முடித்துக் கொண்ட தர்மவ்யாதனுடன் அவன் வீட்டிற்குச்
சென்றான கௌசிகன். அங்கேயும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

தர்மவ்யாதன் குளித்துவிட்டு, பூஜைக்காரியங்களை செய்து முடித்தான். அடுத்து தன் பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்தான். மனைவிக்கு சமையல் உதவிகளை செய்தான்.

கடைசியில், தன் குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டே வெளியே வந்து கௌசிகனை சந்தித்தான்.

தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இளம் முனியை அறிமுகம் செய்தான். அழகான
மனைவி, மக்கள், தாய், தந்தை. மகிழ்ச்சியான குடும்பம்.

அன்பும், பண்பும், அமைதியும் ததும்பும் குடும்பம். சமுதாயத்தில் மிகத் தாழ்ந்த குலமாகக் கருதப்பபடும் கசாய்தொழில் செய்யும் ஒருவன் குடும்பத்தில் இப்படி ஒரு தெய்வீக மகிழ்ச்சியா?

இதை கௌசிகன் தன் கண்களால் நம்பமுடியவில்லை!

கர்ம வினை

உணவு உண்ட பிறகு இருவரும் பேசத் தொடங்கினார்கள். ‘என்னைப் பற்றி முன்பின் தெரியாத உங்களுக்கு என் கதை எப்படி தெரிந்தது? அந்தப் பெண்ணைக் கேட்டால் உங்களைக் கேட்கச் சொல்கிறாள் என்றான் அப்பாவியாக.

இப்போது தர்மவ்யாதன் பேசத் தொடங்கினான்.

முன்னொரு பிறவியில் நீங்கள் ஒரு பழுத்த முனியாக இருந்தீர்கள். எனக்கும், அப்போது என்
மனைவியாய் இருந்த, நீங்கள் சந்தித்த அந்தப் பெண்ணிற்கும் நீங்கள் சாபமிட்டீர்கள்.

அதனால் நான் இந்தப் பிறவியில் இந்த குலத்தில் பிறந்தேன். அவள் இன்னொரு குடும்பத்தில் பிறந்தாள். இது என் கர்ம வினை. ஆனாலும் நான் முற்பிறவியில் செய்த புண்ய பலனால் நல்ல பெற்றோர்களையும், மனைவி மக்களையும் அடைந்திருக்கிறேன்.

கடமைகள் முக்கியம்

இந்தப் பிறவியில் மாமிச வியாபாரம் என் குலத் தொழில். நானாக விலங்குகளை
அழிப்பதில்லை, நானும் என் குடும்பத்தாரும் மாமிசம் உண்ணுவதும் இல்லை.

இதில் நான் தொழில் தர்மத்தை கடைப்பிடிக்கிறேன். யாரையும் ஏமாற்றுவதில்லை. அதிக லாபத்தையும் நாடுவதில்லை.

சம்பாதிப்பதில் நிறைய தானம் செய்கிறேன். எப்போதும் உண்மையையே பேசுகிறேன். சதா நல்லவைகளையே நினைக்கிறேன், செய்கிறேன்.

பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் ஒரு போதும் நான் தவறுவதில்லை.

செய்யும் தொழிலே எனக்கு தர்மம். என் வாடிக்கையாளர்களையும், மற்றவர்களையும் நான்
கடவுளாகவேப் பார்க்கிறேன், வணங்குகிறேன்.

ஸ்வதர்மம்

அவர்களுக்குச் சேவை செய்கிறேன். இது ஷிவக்யான ஜீவ சேவை. அனைத்து ஜீவன்களையும் நானாகவும், என்னுள் இருக்கும் கடவுளாகவே ஆராதிக்கிறேன். இது என் தர்மம். என் தவம்.

இந்த நிலையிலேயே ஒன்றிப்போனதனால் அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் அறிய முடிகிறது. எனக்குக் கிடைத்த வரப்ரசாதம்.

என்னைப் போலவே, நீங்கள் ஏற்கெனவே பார்த்த அந்தப் பத்தினியும் இந்தப் பிறவியில் தன்
குடும்பத்தில் தர்ம நெறி தவறாது வாழ்க்கை நியதிகளைக் கடைப்பிடிக்கிறாள்.

அதனால் அவளால் எல்லாவற்றையும் உணரமுடிகிறது. நீங்கள் இட்ட சாபத்துக்கு பரிகாரமாக, எங்கள் இருவரிடமும் நீங்கள் இந்தப் பிறவியில் இப்போது தீட்க்ஷை பெறவேண்டியுள்ளது. இதுவே ஸ்வதர்மம். இது எழுதப்பட்ட விதி.

தர்மமே தானம்

எந்தக் குலமும், எந்தப் பிறப்பும், எந்தத் தொழிலும் கேவலமுமில்லை, கொடூரமுமில்லை,
அசிங்கமுமில்லை. நாம் அணுகும் விதத்தைப் பொறுத்து அது பவித்ரமடைகிறது.

நீங்கள் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே உமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். ஞானமே இறைநிலையை உணரும் தூண்டுகோல். இதை உணர்ந்தால் அனைத்தையும் உணரலாம்.
உலகத்தை துறக்கத் தேவையில்லை. காட்டுக்கும் போகத் தேவை இல்லை. தவமும் தேவை
இல்லை.

உலகைவிட்டு விலகி தேடிப் போவதல்ல ஞானம், உலகத்தையே சத்யமாக, ஞானமாக,
தர்மமாக, இறையருளாக உணருவது, என்று அமைதியாக போதித்தான் தர்மவ்யாதன்.

பெற்றோரிடம் திரும்பிச் சென்ற கௌசிகன்

தெளிவடைந்த கௌசிகன் தன் வீட்டிற்குத் திரும்பி, தன் பெற்றோர்களை கண்ணும்
கருத்துமாய் பேணத் தொடங்கினான்.

கடமையையும், பொறுப்பையும் ஸ்ரத்தையோடு செய்வதே தர்மம், ஸ்வதர்மமே மெய்ப்பொருள், இதுவே தான் தேடிய ஞானம் என்பதை உணர்ந்தான்.

ஒரு வ்யாதனிடம் (கசாய்க்காரனிடம்) தான் கற்ற ஞானத்தை, தர்ம வாழ்க்கைக்
கல்வியை, ‘வ்யாத கீதை’ என்று பெயரிட்டு, ஒரு காவ்யமாக சரித்திரத்தில் பதிவு செய்தான்.

75 / 100

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *