சென்னை: மத்திய அரசின் PMJJBY Insurance திட்டம் (பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா) என்ற ஆயுள் காப்பீடு திட்டம் குறைந்த பிரிமியத்தில் ரூ.2 லட்சம் ஆயுள் காப்பீட்டை பெறும் வசதி உள்ளது.
உள்ளடக்கம்
பின்தங்கிய மக்களுக்கான திட்டம்
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா திட்டம் 2015-இல் அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.
பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மக்களுக்காக இந்த ஆயுள் காப்பீடு திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் சேருவதற்கு ஆண்டுக்கு ரூ.436 பிரிமியம் செலுத்த வேண்டும்.
இந்த ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர் இறந்துவிட்டால், அவரது வாரிசுதாரருக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும்.
குறைந்தபட்ச வயது வரம்பு
அரசின் இந்த காப்பீடு திட்டம் ஜூன் 1 முதல் மே 31 வரை கணக்கு ஆண்டாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் மே 31-ஆம் தேதிக்குள் இந்த ஆயுள் காப்பீடு திட்டத்தில் சேருவதன் மூலம் முழு ஆண்டு பலனையும் பெற முடியும்.
இத்திட்டத்தில் இணைவதற்கு குறைந்தபட்சம் 18 வயது அதிகபட்சம் 50 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
ஒருவர் தனக்கு 50 ஆண்டு முடிவதற்குள் இத்திட்டத்தில் சேர்ந்தால், பிரிமியம் செலுத்துவதற்கு உட்பட்டு 55 வயது வரையில் ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது.
பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி யோஜனா திட்டத்தில் எப்படி சேருவது?
ஆண்டுதோறும் பணம் செலுத்தினால் மட்டுமே இந்த ஆயுள் காப்பீடு திட்டம் நடைமுறையில் இருக்கும். அதாவது ஓராண்டுக்குரிய பாலிசித் தொகையை செலுத்தினால் அந்த ஆண்டு மே மாத இறுதியுடன் பாலிசி நிறைவு பெற்றுவிடும். அடுத்து வரும் ஆண்டுகளுக்கு பாலிசியை தொடர்ந்து புதுப்பித்து வர வேண்டும்.
ஒருவர் முதன்முறையாக ஆண்டில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் சேர்ந்தால் ரூ.436 செலுத்த வேண்டும்.
ஒருவர் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் சேர்ந்தால் ரூ.342 செலுத்த வேண்டும்.
டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சேரும்போது மே வரையிலான மீதமுள்ள காலத்துக்கான காப்பீட்டு தொகையாக ரூ.228 செலுத்த வேண்டும்.
மார்ச் மாதத்தில் சேர்ந்தால் ரூ.114 காப்பீடு தொகை செலுத்த வேண்டும்.
அடுத்தடுத்து வரும் ஆண்டுகளுக்கு ஆட்டோ டேபிட் முறையில் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.436-ஐ பிரிமியத் தொகையாக எடுத்துக் கொள்வார்கள்.
சேமிப்புக் கணக்கு தேவை
இந்த திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகளிலும், அஞ்சல் அலுவலகங்களிலும் தனிப்பட்ட கணக்கு வைத்திருப்பவர்கள் சேர வாய்ப்பு வழங்கப்படுகிறது.
திட்டத்தில் சேருபவர்களிடம் ஆண்டுதோறும் பாலிசி காலாவதியாகும் நேரத்தில் சேமிப்புக் கணக்கில் இருந்து தானியங்கி முறையில் பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதிக்கு அனுமதி கோரப்படுகிறது.
பாலிசி காலாவதி ஆகும் நேரத்தில் ஒருவேளை வங்கியில் புதுப்பிப்புக்கு போதிய அளவில் பணம் இல்லாவிட்டாலோ, அல்லது வங்கிக் கணக்கு முடக்கம் அல்லது மூடப்பட்டிருந்தாலோ காப்பீடு காலாவதியாகிவிடும்.
PMJJBY Insurance திட்ட வாரிசுதாரர் பலனை எப்படி பெறுவது?
இத்திட்டத்தில் சேர வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும்.
இத்திட்டத்தில் சேர்ந்த ஒருவர் இறந்துவிட்டால், அவரது வாரிசுதாரர், இறப்பு சான்றிதழ், மருத்துவமனை ரசீது, புகைப்படம், கிராஸ் செய்யப்பட்ட காசோலை, வாரிசுதாரரின் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து ஆயுள் காப்பீட்டு பலன்களை பெற முடியும்.