உலக அதிசயங்களில் ஒன்றாக இந்தியாவின் ஆக்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது தாஜ் மகால். இதை எல்லோரும் காதல் கோட்டை என வர்ணிப்பது உண்டு.
ஷாஜகான் மிகவும் நேசித்த தன் மனைவி மும்தாஜ் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம்தான் தாஜ் மகால் என்பது நாம் எல்லோருமே அறிந்த ஒன்று.
ஆனால் அது உண்மையில் மும்தாஜ் பேகத்தின் கனவுக் கோட்டைதான் தாஜ் மகால் என்பது பலரும் அறியாத ஒன்று.
அதேபோல் மும்தாஜ் பேகம் இறந்தபோது, முதலில் புதைக்கப்பட்ட இப்போதைய தாஜ் மகால் இடம் அல்ல. இது பலரும் அறியாத விஷயம்.
உள்ளடக்கம்
தாஜ் மகால் பற்றி ஆதாரங்கள் சொல்லும் உண்மை
ஷாஜகானைப் பற்றியும், அவர் தனது மனைவிக்காக கட்டிய தாஜ்மஹால் பற்றியும் அக்காலக் கட்டத்தில் எழுதப்பட்ட நூல்கள் பலவும் அரிய தகவல்களை தந்துள்ளன.
அந்த நூல்களின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்களும், அது தொடர்பான தகவல்களை திரட்டுவோரும் தாஜ் மஹால் பற்றி அறிந்துள்ள தகவல்கள் பலவும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.
மேலோட்டமாகவே நம்மில் பெரும்பாலோர் தாஜ்மஹால் பற்றிய அறிந்திருப்போம். அதன் வரலாற்று உண்மைகளும் கூட பல புனைவுகளுடன் வெளிவந்து நம்மை குழப்பத்தில் ஆழ்த்துவதும் உண்டு.
ஷாஜகான் எப்படிப்பட்டவர்
தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான் காலத்தில்தான் முகலாய பேரரசின் பெருமைகள் வெளிப்பட்டன. ஷாஜகான் உடல் அளவில் மிகவும் வலுவானவர். சற்று பருமனான தேகம் கொண்டவர். ஆனால் சற்று உயரம் குறைவானவர்.
மிக மென்மையான குணமும், எல்லோரையும் கண்ணியமாக நடத்தக் கூடியவராகவும் அவர் இருந்துள்ளார். அவரது பேச்சும், செயலும் ஒன்றையொன்று சார்ந்ததாகவே இருந்துள்ளது.
அவர் இளவரசராக இருந்தபோது மீசை மட்டுமே வைத்திருந்தார். பிற்காலத்தில் அவர் அரசராக பொறுப்பேற்ற ஏற்ற பிறகே தாடி வளர்க்க முற்பட்டார் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அந்த காலத்தில் முகலாய அரசப் பரம்பரையினர் பலரும் மது அருந்தும் பழக்கமுடையவர்களாகவே இருந்துள்ளனர். ஆனால் அவர்களில் இவர் விதிவிலக்காகவே இருந்துள்ளார்.
தந்தை வற்புறுத்தலுக்காக தனது 24 வயதில் மதுவை சுவைத்தாலும், அதை பழக்கமாக அவர் கொண்டிருக்கவில்லை. எப்போதாவது மது அருந்தும் போக்கை பின்னாளில் முற்றிலும் தவிர்த்துள்ளார்.
இசை ஆர்வம் கொண்ட ஷாஜகான்
அவர் இசையை கேட்பதில் ஆர்வம் கொண்டவர். நடனம் ஆடுவார். கவிதைகளை கேட்டு மகிழ்வார். நன்றாக பாடும் திறன் கொண்ட அவர், சில நேரங்களில் பாடி மகிழ்வார். அவரை மகிழ்விக்க எப்போதும் தயார் நிலையில் நடனக் குழு ஒன்றும் இருந்ததாம்.
அவருக்கு பல மனைவிகள் இருந்தாலும், மும்தாஜ்தான் அவரது ஆலோசகர், அன்புக்கு பாத்திரமானவர். ஷாஜகானின் தனிப்பட்ட வாழ்வை முழுமையாக மும்தாஜ் ஆக்கிரமித்திருந்தார்.
மும்தாஜும், ஷாஜகான் மீது தீரா காதல் கொண்டவராக இருந்துள்ளார். மும்தாஜ் அழகுப் பதுமையாக மட்டுமின்றி, அரசு நிர்வாகத்தில் சிறந்த ஆலோசனைகளை வழங்கக் கூடியவராக இருந்ததும், ஷாஜகானுக்கு அவர் மீதான ஈர்ப்பு பலமடங்கு இருந்து வந்துள்ளது.
மும்தாஜ் பலகீனமான உடல் நிலையில், தான் இறந்துவிடுவோம் என்பதை உணர்ந்தபோது, ஷாஜகானிடம் ஒரு வாக்குறுதி வேண்டும் என்று கேட்டுள்ளார்.
மும்தாஜுக்கு வாக்குறுதி அளித்த மன்னன்
அந்த வாக்குறுதி, தனக்குப் பிறகு வேறு எந்தப் பெண்ணிடமிருந்தும் குழந்தை பெற்றுக்கொள்வதில்லை என்பதுதான் அந்த வாக்குறுதி.
அத்துடன், நான் இறந்த பிறகு, தான் கனவில் கண்ட ஓர் அழகான தோட்டத்தையுடைய அரண்மனை போன்ற ஒரு கல்லறையை எழுப்ப வேண்டும் என்றும் ஷாஜகானிடம் மும்தாஜ் முறையிட்டுள்ளார்.
மும்தாஜ் தனது பதினான்காவது குழந்தையை நீண்ட நேரப் போராட்டத்துக்கு பிறகு பெற்றெடுத்துள்ளார். அதைத் தொடர்ந்து ஆயிரத்து அறுநூற்று முப்பத்தியோரம் ஆண்டு ஜூன் பதினேழாம் தேதி காலமானார்.
அவர் மறைந்து மூன்னூற்று தொண்ணூறு ஆண்டுகளானாலும், ஷாஜகான், மும்தாஜ் காதல் கதை இன்றைக்கும் இளமையாக வலம் வருவதற்குக் காரணம் மும்தாஜ் கனவில் கண்ட கட்டடம் தாஜ்மஹாலாக உருப்பெற்றதுதான்.
மும்தாஜ் மரணம்
ஷாஜகான் அரசனாக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் கடந்த நிலையில்தான் அவனது வாழ்வின் பெரும்சோகமாக மும்தாஜின் மரணம் அமைந்தது.
பதவி, புகழின் மீது ஆசை கொண்டவனாக இருந்த ஷாஜகானின் வாழ்வில் மும்தாஜின் மரணம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
காதல் தோல்வியில் இன்றைய தேவதாஸ்களுக்கு ஷாஜகான் ஒரு முன்னோடியாக இருந்துள்ளான். மும்தாஜ் இறந்த பிறகு, அவன் நீண்ட தாடி, நிரைத்த முடியுடன், ஆடை, ஆபரணங்களின் மீதான நாட்டமில்லாதவனாக இருந்துள்ளான்.
வெள்ளை ஆடை
மும்தாஜ் இறந்த புதன்கிழமைதோறும் அவன் வெள்ளை ஆடை உடுத்தி வந்துள்ளான்.
மும்தாஜ் புர்ஹான்பூர் என்ற இடத்தில் இறந்ததை அடுத்து தப்தி நதிக்கரையோரம் உள்ள ஒரு தோட்டத்தில் முதலில் அடக்கம் செய்யப்பட்டது.
6 மாதம் கடந்த நிலையில், அந்த இடத்தில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டு ஆக்ராவுக்கு கொண்டு வரப்பட்டது.
யமுனை நதிக்கரையில் ஆயிரத்து அறுநூற்று முப்பத்திரெண்டாம் ஆண்டு ஜனவரி எட்டாம் தேதி மும்தாஜ் சடலம் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது.
அதன் பிறகுதான் அப்பகுதியில் ஒரு கல்லறையை கட்ட ஷாஜகான் நடவடிக்கை மேற்கொண்டார். அதற்கு ரவுசா இமுனவ்வரா என பெயரிடப்பட்டது. பின்னாளில் அதுவே தாஜ்மஹாலாக பெயர் மாறியது.
3-வது முறையாக மும்தாஜ் உடல் அடக்கம்
ஆக மும்தாஜ் உடல் மூன்றாவது முறையாக அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் இன்றைய தாஜ்மஹால். இந்த கல்லறையைக் கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்வதற்கு ஷாஜகான் மிகப் பெரிய முயற்சியை மேற்கொண்டாராம்.
தான் வசிக்கும் ஆக்ரா கோட்டையில் இருந்து சற்று அருகில் அந்த இடம் அமைய வேண்டும். கல்லறை அமையும் இடம் அமைதி தவழும் இடமாக இருக்க வேண்டும்.
நீண்ட தொலைவில் இருந்தும் இக்கட்டடத்தை காணும் வகையிலான இடமாக, குறிப்பாக தனது கோட்டையில் இருந்து அதை பார்க்கும் வகையிலும் இருக்க வேண்டும்.
அந்த இடத்தில் மிகப்பெரிய கட்டடம் எழுப்பும்போதும், அங்கே அமையவிருக்கும் தோட்டத்துக்கு எந்தக் காலத்திலும் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டாராம் ஷாஜகான்.
அவ்வகையில் ஆக்ரா கோட்டையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் யமுனை நதிக்கரையோரம் தாஜ்மஹால் கட்டுவதற்கான இடம் தேர்வானது.
தாஜ்மஹால் அமைந்த இடம்
தாஜ்மஹால், தில்லியில் உள்ள ஹுமாயூன் கல்லறையை மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டதாகும். இக்கட்டடத்துக்காக, 42 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
தேர்வு செய்யப்பட்ட இடம் முதலில் சீர் செய்யப்பட்டதாம். கட்டுமானப் பணி ஆயிரத்து அறுநூற்று முப்பத்திரெண்டு ஜனவரியிலேயே தொடங்கியது.
இக்கட்டடத்துக்கான அஸ்திவாரம் மிக ஆழமாக போடப்பட்டபோது, அருகில் செல்லும் யமுனை நதியின் நீர் உட்புகாமல் இருப்பதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டதாம்.
யமுனை நதியின் வெள்ளப் பெருக்கு காலங்களில் அந்த வெள்ளம் தாஜ்மஹாலை சேதப்படுத்திவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டதாம்.
முதலில் தொள்ளாயிரத்து எழுபது அடி நீளம், முன்னூற்று அறுபத்திநான்கு அடி அகலம் கொண்ட மேடை போன்ற தளம் அமைக்கப்பட்டது. அதன் மீதே கல்லறைக் கட்டடம் எழுப்பப்பட்டது.
மன்னன் செய்த காரியம்
இந்த கட்டுமானத்துக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். கட்டடம் கட்டுவதற்காக மூங்கில், மரங்கள், செங்கற்களைக் கொண்ட ஒரு சாரம் அமைக்கப்பட்டது.
பணி முடிந்த பிறகு அந்த சாரத்தை பிரிப்பதற்கு பல மாதங்கள் ஆகும் சூழல் நிலவியதாம். இதனால் அந்த சாரத்தில் உள்ள மரங்களும், செங்கற்களும் தொழிலாளர்களுக்கு சொந்தம் என ஷாஜகான் அறிவித்தாராம்.
இதனால் தொழிலாளர்களே அதை விரைவாக பிரித்து எடுத்துச் சென்றதாக சொல்லப்படுகிறது.
கட்டுமானப் பொருள்கள்
தாஜ்மஹால் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட பளிங்கு கற்கள் சுமார் 200 கி.மீட்டர் தொலைவில் அமைந்த மக்ரானாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாம்.
அவற்றை எடுத்து வருவதற்கு 30 மாடுகள் இழுத்து வரக்கூடிய பிரத்யேகமான மாட்டு வண்டிகள் பயன்படுத்தப்பட்டதாம்.
சீன தேசத்தில் இருந்து பச்சைக் கல், ஆப்கானிஸ்தானில் இருந்து நீலக்கல், அரேபியாவில் இருந்து பவழம், அரேபியா, செங்கடல், பர்மா, இலங்கை, எகிப்து போன்ற நாடுகளில் இருந்தும் அரியவகை கற்கள் தாஜ்மஹால் கட்டுமானத்துக்கு கொண்டு வரப்பட்டன.
இந்த கட்டுமானத்துக்கு அன்றைய காலக்கட்டத்தில் ரூ.4 கோடி என்ற மிகப்பெரிய தொகை தொழிலாளர்களின் ஊதியத்துக்காக செலவிடப்பட்டதாம்.
இது அரசு கருவூலம், ஆக்ரா மாகாண வருவாய் கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்டதாம். அத்துடன் தாஜ்மஹாலின் தொடர் பராமரிப்புக்காக, 30 கிராமங்களின் வருவாய் ஒதுக்கப்பட்டதாம்.
ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்தியொன்பதாம் ஆண்டில் ஷாஜகானின் மகன்களில் ஒருவரான ஔரங்கசீப், ஷாஜகானை சிறையில் அடைத்தார். அப்போது அவரது விருப்பத்தின்படி, தாஜ்மஹாலை அவர் எப்போதும் பார்க்கக்கூடிய வகையிலான பால்கனியில் அவர் சிறை வைக்கப்பட்டார்.
பால்கனியில் உயிர் துறந்த ஷாஜகான்
6 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் அதே பால்கனியில் உயிரிழந்தார். அவரது சடலம் சந்தன மர சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, தாஜ்மஹாலில் மும்தாஜ் கல்லறைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது.
இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். தற்போது உலா வரும் சில கட்டுக்கதைகளில் உண்மை இல்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
தாஜ்மஹாலை கட்டும்போது சுற்றுச்சுவருக்கு வெளியில் இருந்து பார்த்த மனிதனின் கண் பறிக்கப்பட்டதாக சொல்லவது கட்டுக்கதை. தாஜ்மஹாலை கட்டிய தொழிலாளர்களின் கைகளை வெட்டியதாக கூறப்படுவதும் கட்டுக்கதை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
Discover more from Mithiran News
Subscribe to get the latest posts sent to your email.