Mookambika temple: ஆதிசங்கரர் நிறுவிய மூலவர்

மூகாம்பிகா திருக்கோயில் தரிசனம்
Spread the love

ஸ்ரீமூகாம்பிகை திருக்கோயில் கர்நாடக மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி, உடுப்பி மாவட்டம் கொல்லூரில் அமைந்திருக்கிறது.

கோடஞ்சத்திரி மலைக் குன்றுகளின் அடிவாரத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது. இதன் தென்புறத்தில் சௌபர்னிகா நதி ஓடுகிறது.

திருக்கோயில் 51 சக்தி பீடங்களில் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இங்கு தேவியின் காது விழுந்த இடமாக புராணக்கதைகள் சொல்கின்றன.

மங்களூரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருக்கோயிலுக்கு அடிக்கடி பேருந்து வசதி உள்ளது. உடுப்பியில் இருந்தும் மூகாம்பிகை திருக்கோயிலுக்கு சென்றுவர பேருந்து வசதி இருக்கிறது.

உடுப்பியில் இருந்து மூகாம்பிகை திருக்கோயில் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ஜோதிர்லிங்கம்

மூகாம்பிகை திருக்கோயில் அமைந்திருக்கும் நிலப்பரப்பை புராண காலத்தில் பரசுராமர் உருவாக்கியதாக ஐதீகம்.

கொல்லூர் மூகாம்பிகை திரு்கோயிலின் பிரதான தெய்வம் சுயம்பு மூர்த்தியாக விளங்கும் ஜோதிர்லிங்கமாகும்.

ஜோதிர்லிங்கத்தின் நடுவில் தங்கத்தால் ஆன வரிகளுடன் ஒரு பிளவு காணப்படுகிறது.

இந்த லிங்கத்தின் இடப்புறம் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரை குறிக்கிறது. வலப்புறம் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளையும் குறிக்கிறது.

லிங்கத்தின் பின்புறம் 4 கரங்களுடைய பஞ்சலோகத்தால் ஆன மூகாம்பிகை திருவுருவம் காட்சி தருகிறது.

மும்மூர்த்திகள்

கலைகளுக்கு சிறப்பிடம் பெற்ற இத்திருக்கோயில் சிவனை வழிபடுவதால் மும்மூர்த்திகளையும் தரிசித்த பலன் கிடைக்கிறது.

மூகாம்பிகை ஸ்ரீசக்கரத்தின் மீது அமர்ந்து காட்சித் தருகிறாள். கோலன் மகரிஷி கொல்லூரில் ஆசிரமம் அமைத்து தவம் செய்துள்ளதாகவும் புராண வரலாறு சொல்கிறது. அதனால் இந்த பகுதி கொல்லூர் என அழைக்கப்படுகிறது.

ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் அமர்ந்து தியானம் செய்த இடம் சங்கர பீடம் என அழைக்கப்படுகிறது. அத்துடன், மகா மண்டபம் என அழைக்கப்படும் சரஸ்வதி மண்டபத்தில் அமர்ந்துதான் சங்கரர் சௌந்தர்யலகரி பாடி அரங்கேற்றம் செய்துள்ளார்.

Sri mookambika

தல வரலாறு

கொல்லூரில் கம்பாசுரன் என்ற அரக்கன் சிவனை நோக்கி சாகா வரம் கேட்டு கடும் தவம் செய்கிறான்.. வரம் பெற்ற அவன் தேவர்களையும், மக்களையும் துன்புறுத்துகிறான்.

இதை அறிந்த தேவி, அரக்கனின் வீரத்தைக் குறைக்க அவனை ஊமையாக்குகிறாள். அதனால் அவனது அரக்ககுணம் மறைகிறது. அதுமுதல் அவன் மூகாசூரன் என அழைக்கப்பட்டான்.
கன்னடத்தில் மூகா என்றால் ஊமை எனப் பொருள்படுகிறது. தேவியும் மூகாம்பிகை என அழைக்கப்படுகிறாள் என்று ஒரு புராணக் கதை சொல்கிறது.

கோலன் மகரிஷி

கோலன் மகரிஷி தவம் புரிய சிவன் ஒரு பாறையில் தோன்றுகிறார். சக்தி இல்லாமல் எப்படி நான் வழிபடுவது என மகரிஷி கேட்கிறார். சிவலிங்கத்தின் மீது காணப்படும் ஸ்வரண ரேகையை காண்பித்து இடது பாகத்தில் அகிலத்தின் அன்னை பார்வதி, 64 கலைகளின் தாய் சரஸ்வதி, லட்சுமி ஆகியோர் அரூபமாக இருக்கிறார்கள்.

வலது பக்கம் பிரம்மா, விஷ்ணுவுடன் நானும் இருக்கிறேன் என்று சிவபெருமான் கூறியுள்ளார்.
மகரிஷிக்கு சொர்ண லிங்கம் கிடைத்திருப்பதை அறிந்த மூகாசுரன் அப்பகுதிக்கு வருகிறான். அதை அறிந்த மகரிஷி பராசக்தியிடம் வேண்டுகிறார்.
வீரபத்திரன் தலைமையில் ஒரு படையை உருவாக்கி அந்த அசுரனை அழிக்கிறாள். சாகும் தருவாயில் தனக்கு முக்தி வேண்டும் என அன்னையிடம் அரக்கன் மன்றாடுகிறான்.

இதனால் தேவி இனி இந்த இடத்தில் நீ பிரம்மலிங்கேஸ்வரராக இருக்கலாம் என்று வரம் அளிக்கிறாள்.
கோயிலில் உள்ள மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவியுள்ளான்.

காட்சி தந்த மூகாம்பிகை

அதேபோல் ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகை தேவி தரிசனத்தைக் கண்டதை அடுத்து இங்கு அவர் கோயில் நிறுவியதாக ஐதீகம்.

ஒரு நாள் மூகாம்பிகை ஆதிசங்கரர் முன்பாக தோன்றுகிறார். அவர் வேண்டிய வரத்தை கேட்குமாறு சங்கரரிடம் கூறுகிறார்.

அன்னையின் தரிசனத்தைக் கண்ட ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அங்கு மக்கள் அனைவரும் அன்னையை வழிபட கோயில் கட்ட வேண்டும் என்கிறார்.

அதற்கு தேவி ஒரு நிபந்தனை விதிக்கிறார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும். குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது என்பதே அந்த நிபந்தனை. இந்த நிபந்தனையை ஏற்று ஆதி சங்கரர் முன்னால் செல்கிறார்.

மூகாம்பிகை சங்கரரை சோதிக்க விரும்பி, தன் காலில் அணிந்திருந்த கொலுசுகளின் சத்தம் சங்கரர் காதுகளில் விழாமல் தடுக்கிறாள். சலங்கை சத்தம் கேட்காததால், சங்கரர் நிபந்தனையை மறந்து திரும்பி பார்க்கிறார்.

தேவியின் நிபந்தனையை மீறி திரும்பி பார்த்ததால் அந்த இடத்திலேயே தேவி சிலையாக மாறி நின்றுவிடுகிறாள். அந்த இடம்தான் கொல்லூர் முகாம்பிகை திருக்கோயிலாக விளங்குகிறது.

மற்றொரு புராணக் கதை


மற்றொரு புராண வரலாறாக, ஆலயத்துககு ஆதிசங்கரர் வந்தபோது, பக்தர்கள் ஸ்வர்ணலிங்கத்தில் அரூபமாக இருக்கும் தேவியை காண விரும்புகிறார்கள். ஆதிசங்கரர் தியானத்தில் மூழ்குகிறார்.

அப்போது அன்னை அவருக்கு காட்சி தர, அந்த உருவத்தை மனதில் தாங்கி, சிற்பிகள் மூலமாக தான கண்ட தேவியை தத்ரூபமாக செதுக்கச் செய்கிறார். அப்படி உருவான சிற்பம்தான் நாம் வணங்கும் மூகாம்பிகை .

இது பஞ்சலோக சிலை. இந்த சிலையை பிரதிஷ்டை செய்யும்முன் சக்தி வாய்ந்த ஒரு ஸ்ரீசக்கரத்தையும் ஆதிசங்கரர் வைத்தார். அந்த சக்கரத்தில் 64 கோடி தேவதைகள் இருப்பதாக ஐதீகம்.

ஸ்வர்ண ரேகை லிங்கத்தின் பின்னால் மூகாம்பிகை திருவுருவச் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

பூஜை முறைகள்

மூகாம்பிகை திருக்கோயில் பூஜை முறைகள் அனைத்தையும் ஆதி சங்கரரே வகுத்து தந்துள்ளார்.

தாயார் சந்நிதிக்கு பின்னாள் சுயம்பு பஞ்சமுக கணபதி, கருவறை ஸ்ரீசக்கரம் ஆகியவை மும்மூர்த்திகளால் அமைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இத்திருக்கோயிலில் மூலவரான ஜோதிர்லிங்கத்துக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது. மூகாம்பிகைக்கு அபிஷேகம் செய்வதில்லை. புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே செய்யப்படுகிறது.
மூகாம்பிகைக்கு துளசி, பிச்சிப்பூவால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. அம்பாளுக்கு நித்தமும் பட்டு புடவை மட்டுமே சாத்தப்படுகிறது. சிவேலியில் காலை, மதியம் மாலையில் தேவியை சுமந்து வருகிறார்கள்.
கலா மண்டபத்தில் மாலையில் எழுந்தருளியதும் கலைஞர்கள் பாடி வணங்குகின்றனர். பொதுவாக கிரகண காலங்களில் கோயில் நடை சாத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இத்திருக்கோயில் அதில் விதிவிலக்கு. இங்கு கிரகண நேரத்திலும் சாமி தரிசனம், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

தேவி தந்த கஷாயம்


இத்திருக்கோயிலில் தேவியை பாடி மகிழ்ந்த சங்கரர் ஒருமுறை எழ இயலாமல் அவதியுறுவதைக் கண்ட தேவி ஒரு மூலிகை கஷாயம் தருகிறார்.

அதை இன்றளவும் தயாரித்து தேவிக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த கஷாயம் அருந்துவோரின் அனைத்து வியாதிகளும் நீங்குவதாக ஐதீகம்.
ஆலயத்தில் காலையில் தேவி அம்சம், மதியம் சரஸ்வதி, இரவு கலைமகள் அம்சமாகவும் காட்சி தருகிறாள்.

பக்தர்கள் பலரும் சௌபர்னிகா நதியில் 21 தடவை குளித்துவிட்டு ஒவ்வொரு முறையும் அம்பாளை வழிபாடு செய்வது உண்டு. இதற்கு காரணம் நம்முடைய 21 ஜன்ம பாவங்களை போக்குவதாக ஐதீகம்.

இது ஸித்தி சேத்திரமாக விளங்குகிறது. மனதில் மிகுந்த பக்தியுடன் வேண்டுவதை அம்பாள் பக்தர்களுக்கு வழங்குவாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

இங்கு குத்து விளக்கின் பஞ்ச முகத்திலும் திரி வைத்து நெய் விளக்கு ஏற்றுவது மிகவும் விசேஷமான ஒன்று.

ரதோற்சவம்

மார்ச் இறுதி வாரம் முதல் முதல் வாரம் வரை 8 நாள்கள் ரதோற்சவம், ஜூன் முதல் வாரம் சுக்ல பட்சம், அஷ்டமி திதியில் அம்பாளின் ஜன்மாஷ்டமி திருவிழா ஆகியவை சிறப்பாக நடைபெறுகின்றன.

மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் மூகாம்பிகை. நாள்தோறும் மாலை 7 முதல் 8 மணிக்குள் ரத உற்சவம் நடைபெறுகிறது. அம்பாள் சந்நிதிக்கு வலதுபக்கம் நாகலிங்கம் உள்ளது. இது நாகதோஷத்தை போக்கவல்லது.
கோயில் உட்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர், பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சநேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சந்நிதிகள் உள்ளன. கோயிலில் நித்தமும் இருவேளை அன்னதானம் வழங்கப்படுகிறது.
ரவி வர்மாவின் சித்திரங்கள் இத்திருக்கோயிலில் இடம்பெற்றுள்ளன.
ஆலயம் காலை 5 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையிலும், மாலையில் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கிறது.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *