இந்தியா வளர்ச்சியடைந்தால் உலகம் வளர்ச்சி பெறும்

பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

அமெரிக்கா: இந்தியா வளர்ச்சி அடையும்போது உலகமும் வளர்ச்சி அடையும். இந்தியா சீர்திருத்தங்களை அடையும் போது ஒட்டுமொத்த உலகமும் மாற்றங்களை அடைகிறது என்று பாரத பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

மூன்று நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அவர் பிரபல தொழிலதிபர்கள், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.

நேற்று, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மோடி சந்தித்து பேசினார். இந்தியா – அமெரிக்க இடையேயான நல்லுறவை வலுப்படுத்துவது, பொருளாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சனிக்கிழமை நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியது:

நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று உலகம் மோசமான சூழலை சந்தித்து வருகிறது. கொடிய கொரோனா நோய்த் தொற்றுக்கு ஏராளமானோர் பலியாகி விட்டனர்.

எங்களின் பன்முகத்தன்மை ஜனநாயகத்தின் வலிமையாக இருக்கிறது. துடிப்புள்ள ஜனநாயகமே இந்தியாவின் அடையாளமாக விளங்குகிறது.

இந்திய ஜனநாயகம்

இந்திய ஜனநாயகம் 1,000 ஆண்டுகளுக்கு முந்தையது. இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு புதிய வங்கி கணக்கு 30 லட்சம் பேருக்கு தொடங்கப்பட்டுள்ளது.

ஏழை – எளிய மக்களுக்கு தரமான சுகாதார வசதிகள் வழங்க இந்தியாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா வளர்ச்சி அடையும்போது உலகமும் வளர்ச்சி அடைகிறது. இந்தியா சீர்திருத்தங்களை அடையும் போது ஒட்டுமொத்த உலகமும் மாற்றங்களை அடைகிறது.

இந்தியாவில், யு.பி.ஐ. மூலம் மாதம்தோறும் ரூ.3.50 லட்சம் கோடிக்கு மேல் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன்கள் மூலம் கண்காணித்து நிலங்களை அளந்து ஏழைகளுக்கு வழங்க இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது.

உலகில் பயங்கரவாத அச்சுறுத்தல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சில நாடுகள் பயங்கரவாதத்தை அரசியல் கேடயமாக பயன்படுத்துகின்றன. உலகநாடுகள் பயங்கரவாதத்தைத் தடுக்க வேண்டும்.

ஆப்கானிஸ்தானில் பெண்கள், குழந்தைகள், சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி தயாரிப்பாளர்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முன் வர வேண்டும் என்றார் பிரதமர் மோடி.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *