நாச்சியார்கோயில் அதிசய கல் கருடன்

சென்னை: தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோயில் கல் கருடன் ஒரு ஆன்மிக அதிசயமாக பக்தர்களால் போற்றப்பட்டு வருகிறது. இந்த நாச்சியார்கோயில் அதிசய கல் கருடன் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ளது திருநறையூர். திருநறையூர் என்பதற்கு தேன் போன்ற இனிமை பொருந்திய ஊர் என்று பொருள். இந்த ஊர் நாச்சியார்கோயில் என அழைக்கப்படுகிறது.

பெருமாளின் நூற்றிஎட்டு திவ்ய தேசங்களில் இக்கோயில் பதினான்காவது திவ்ய தேசம். திருநறையூர் நம்பி,  திருமங்கையாழ்வார் ஆகியோர் இத்தலப் பெருமாளை போற்றி மங்களாசாசனம் செய்துள்ளனர்.

ஸ்ரீரங்கம், திருப்பதி, அழகர் கோவில் ஆகிய தலங்களைத் தொடர்ந்து 110 பாசுரங்கள் பாடப்பெற்ற தலம் நாச்சியார்கோவில். இத்திருதலம் தொடர்பான ஆன்மிக வரலாறும் உண்டு.

ஸ்தல வரலாறு

மேதாவி என்னும் மகரிஷி தவம் பல செய்து, ஞான நிலையை அடைந்தவர். இவருக்கு ஓர் ஆசை இருந்தது. அது என்னவென்றால்,  தான் வழிபடும் பெருமாளே தனக்கு மருமகனாக வர வேண்டும் என்பதுதான்.

அவருக்கு பெண் குழந்தை ஒன்று இருந்தால்,  இந்த ஆசை ஒருவகையில் நியாயமானது. ஆனால், எதுவும் இல்லாமல் மகாவிஷ்ணுவே தன் மருமகனாக வரவேண்டும் என்று அவர் எண்ணினால் எப்படி நடக்கும்?

எனினும் மேதாவி மகரிஷியின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று மகாவிஷ்ணு முடிவெடுத்தார்.

மகாவிஷ்ணு தன் துணைவியான மகாலக்ஷ்மியை பூலோகத்தில் மேதாவி மகரிஷிக்கு மகளாக வளர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறினார்.

திருமகளான மகாலக்ஷ்மி பெருமாளின் வேண்டுகோளுக்கு ஏற்ப பூலோகத்திற்கு சென்று மேதாவி மகரிஷி நந்தவனத்தில் உள்ள வஞ்சுள மரத்தின் கீழ் குழந்தையாக அவதரித்தாள்.

நந்தவனத்தில் பூக்கள் பறிப்பதற்காக வந்த மேதாவி மகரிஷி அந்த குழந்தையைக் கண்டெடுத்தார். வஞ்சுள மரத்தடியில் கண்டெடுக்கப்பட்டதால், அக்குழந்தைக்கு வஞ்சுளவல்லி என்ற பெயர் சூட்டி மேதாவி மகரிஷி வளர்த்து வந்தார்.

வஞ்சுளவல்லியும் வளர்ந்து பருவம் எய்தினார், மகாவிஷ்ணு மேதாவி மகரிஷிக்கு மருமகனாகும் காலம் நெருங்கியது.

மகாவிஷ்ணு அந்தணர் உருவத்தில் மேதாவி மகரிஷி வீட்டிற்கு வந்தார். வீட்டுக்கு வந்த விருந்தாளிக்கு விருந்து அளித்து பணிவிடை செய்வது என்பது அக்காலத்தில் இருந்தே பின்பற்றப்பட்டு வந்த தமிழர்களின் மரபாகும்.

இதற்கேற்ப மேதாவி மகரிஷியும் தனது வீட்டுக்கு அந்தணராக வந்த மகாவிஷ்ணுவிற்கு அமுது படைத்தார்.

தன் மகளான வஞ்சுளவல்லியை தண்ணீர் எடுத்துவந்து அந்தணரிடம் வழங்குமாறு கூறினார். அப்போது, தண்ணீரை எடுத்துவந்த வஞ்சுளவல்லியின் கரத்தை அந்தணராக வந்திருந்த பெருமாள் பிடித்து இழுத்தார். இதனை கண்ட மேதாவி மகரிஷி கோபம்கொண்டு சாபம் வழங்க முற்பட்டார்.

உடனடியாக மகாவிஷ்ணு அந்தணர் வேடத்தை கலைத்து தன் சுயரூபத்தில் காட்சியளித்தார். இவரை கண்ட மேதாவி மகரிஷி கால்களில் விழுந்து வணங்கினார். அப்போது, திருமால் வஞ்சுளவல்லியை தனக்கு மணமுடித்து தர வேண்டும் என்று மேதாவி மகரிஷியிடம் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில்,  மேதாவி மகரிஷி, ஒரு நிபந்தனையை பெருமாளுக்கு விதித்தார். இத்தலத்தில் தன் மகளான வஞ்சுளவல்லிக்கு முன்னுரிமை வழங்கி “நாச்சியார் கோவில்” என்ற பெயர் சூட்டப்பட வேண்டும்.

அத்துடன், தன் மகள் வஞ்சுளவல்லியின் சொல்லுக்கு கட்டுப்பட்டே திருமால் நடந்துகொள்ளவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.

இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டு வஞ்சுளவல்லி நாச்சியாரை, மகாவிஷ்ணு திருமணம் செய்துகொண்டார். அதன்படி இத்தலத்திற்கு நாச்சியார் கோவில் என்னும் பெயர் வந்தது.

ஸ்தல விருட்சம்

இக்கோவிலின் தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் மணிமுக்தா குளம். இங்கு தென்கலை ஆகமம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இக்கோவில் மாடக்கோவில் என்பதால், இருபத்தியோரு படிகள் அமைக்கப்பட்டு அதற்கு மேல் உள்ள மண்டபத்தில் ஸ்ரீநிவாசபெருமாள் என்னும் நம்பி பெருமாள், தன் துணைவியான வஞ்சுளவல்லி நாச்சியாருடன் வீற்றிருகிறார்.

இத்தலத்தில் திருமகளான நாச்சியாருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால், கருவறையில் கையில் கிளியுடன் காட்சியளிக்கும், வஞ்சுளவல்லி தாயார் சற்று முன்னே நின்று காட்சியளிக்கிறார்.

பெருமாள் சற்று தள்ளி பின்னே இருகரங்களுடன் காட்சியளிக்கிறார். இவளுக்கே எல்லாவற்றிலும் முதல் மரியாதை வழங்கப்படுகிறது. இவளுக்குதான் அபிஷேகமும் முதலில் நடத்தப்படுகிறது.

வீட்டை நிர்வகித்துவரும் பெண்கள் தங்கள் வீட்டு சாவிக்கொத்தை இடுப்பில் அணிவித்துக்கொள்வர். அதேபோல் இக்கோவிலின் வஞ்சுளவல்லி தாயாரான உற்சவமூர்த்தியின் இடுப்பில் இன்றளவும் சாவிக்கொத்து அணிவிக்கிறார்கள்.

கல் கருடன் வீதியுலா

இத்திருக்கோயிலில் நடைபெறும் அதிசய நிகழ்வுகளில் ஒன்று உண்டு. அதுதான் கல்கருடன். வீதியுலா வரும்போது கல்கருடனில் பெருமாளும், அன்ன வாகனத்தில் வஞ்சுளவல்லி நாச்சியாரும் எழுந்தருள்வார்கள்.

மற்ற கோவில்களில் நடக்கும் உலாவை போல் இன்றி, இங்கு தாயார் முதலில் செல்ல, பெருமாள் பின்னே செல்வது வழக்கம்.

மூலவர் ஸ்ரீநிவாசப்பெருமாள் கருவறைக்கு இடதுபுறம் கல்கருடன் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு இவரே மூலவர். உற்சவரும் இவரே. இவருக்கு நித்திய ஆறுகால பூஜை நடைபெறுகிறது.

கல்லாலான உற்சவமூர்த்தியை வேறு எங்கும் காண இயலாது. இவர் தன் சிரம், கை, மேனி, கால் போன்ற இடங்களில் நாகாபரணங்களைப் பூண்டு காட்சியளிக்கிறார். இவரை வழிபட்டு வந்தால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மார்கழி மற்றும் பங்குனி மாதங்களில் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வான கல்கருடனின் மீது பெருமாள் அமர்ந்து வீதியுலா காணும் வைபவம் மிகவும் புகழ்வாய்ந்தது.

இதைக் காண ஆன்மிக பக்தர்கள் பல மாவட்டங்களில் இருந்தும் வருவதுண்டு. அந்நாளில் சுற்றுலா பயணிகள் திரளானோரும் இக்கோயிலுக்கு வருவதுண்டு.

அந்த சமயத்தில் கருவறையில் இருந்து பட்டு வஸ்திரம் அணிந்து சர்வ ஆபரணங்களோடு மலர்களால் அலங்கரிக்கபட்ட கருடன் புறப்படுவார். இதில் ஒரு சிறப்பம்சமும் உண்டு.

கருவறையில் இருந்து புறப்படும்போது 4 பேர் அவரை பல்லக்கில் தூக்குவர். அந்த அளவுக்கே மூலவரின் எடை இருக்கும். மண்டபத்திற்கு வெளியே வரும்போது உற்சவரான கல்கருடனின் சுமை கூடும்.

இதனால் கருடனை தூக்குவோரின் எண்ணிக்கை நான்கில் இருந்து எட்டாக உயரும். சுமை கூடகூட, 16, 32, 64, 128 பேர் என்ற கணக்கில் அதை தூக்குவோரின் எண்ணிக்கையும் உயரும்.

 பின்பு ஸ்ரீநிவாச பெருமாள் கருடாழ்வாரின் மீது அமர்ந்து வீதியுலா வருவார். வீதியுலா முடிந்து கோயிலை நெருங்கும்போது, 128 பேர் சுமக்கும் கல்கருடன் எடை மீண்டும் குறையத் தொடங்கும்,

அதைத் தொடர்ந்து  64 பேர்,  32 பேர், 16 பேர்,   8 பேர், 4 பேர் என படிப்படியாக சுமந்து செல்லும் வகையில் அதன் சுமை குறையும். இந்த அதிசயம் எப்படி நிகழ்கிறது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்..

இத்திருக்கோயிலுக்கு செல்ல விரும்புவோர்,  கும்பகோணத்தில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் எட்டு கிலோமீட்டர் அமைந்துள்ளது.

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக நகரப் பேருந்துகள் இத்திருக்கோயிலுக்கு செல்கின்றன. ஆன்மிக நாட்டம் கொண்டவர்கள் அனைவரும் தரிசிக்க வேண்டிய திருக்கோயில்.

கர்நாடக மாநிலம், கொல்லூர் மூகாம்பிகை திருக்கோயில் தரிசனம் மற்றும் வரலாற்றை அறிய இதை கிளிக் செய்து அந்தப் பக்கம் செல்லலாம்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *