12 மணி நேர வேலை மசோதா தேவையா?

12 மணி நேர வேலை மசோதா தேவையா?

கட்டுரையாளர்: ஆர். ராமலிங்கம், முதுநிலை பத்திரிகையாளர்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்தம் தொழிலாளர் முகங்களை சுழிக்க வைத்துள்ளது.

தொழிலாளர்களுக்கான அரசு, ஆதரவற்றோருக்கான அரசு, ஏழைகளுக்கான அரசு என்ற விளம்பரப்படுத்திக்கொண்டு வரும் திமுக அரசுதான் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஒட்டுமொத்த ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பையும் சந்திக்க காத்திருக்கிறது.

திமுகவுக்கு முதல் சறுக்கல் இதுவாகத்தான் இருக்கும்:

தமிழ்நாடு அரசு அதன் கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஒரு சட்ட மசோதாவை இயற்றியிருக்கிறது. தனிப்பெரும்பான்மை அந்த கட்சிக்கு இருக்கிறது என்ற ஒரு காரணத்தால் வேண்டுமானால் இந்த சட்ட மசோதா நிறைவேறியிருக்கலாம்.

ஆனால் மளிகைக் கடைகள், டீக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், துணிக் கடைகள், பத்திரிகை, ஊடகங்களில் 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்ப்பவர்கள். இந்த அரசை நம்பி வாக்களித்தவர்கள் இதைக் கண்டு பதறிப்போயிருக்கிறார்கள்.

இது தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தெரியாமல் போனதைக் கண்டு அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.

சிறுவயதில் ஒரு கதை,-நாம் எல்லோருமே அந்த கதையைப் படித்திருக்க வாய்ப்புண்டு. நுனி மரத்தில் இருந்துகொண்டு அடி மரத்தை வெட்டும் அந்த கதைதான். அதுபோலத்தான் திமுக அரசுக்கு இது ஒரு சறுக்கு மரம்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் 12 மணி நேரம் பணியாற்ற அனுமதிக்கும் சட்டத் திருத்தம் கூட்டணிக் கட்சிகளை மட்டுமின்றி, தொழிலாளர் வர்க்கத்தின் புருவங்களையே உயர்த்தச் செய்திருக்கிறது.

திமுகவில் உள்ள சட்டப் பேரவை உறுப்பினர்களும், அமைச்சர்களும் தங்களை ஒரு தொழிலாளி ஸ்தானத்தில் இருந்து இந்த சட்ட மசோதாவை பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.

அவர்கள் எல்லோருமே இன்றைக்கு முதலாளிகள் மனோபாவத்துக்கு வந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

சட்டங்கள் இருந்தும் ஏற்கெனவே உழைப்புச் சுரண்டல்தான்

ஏற்கெனவே 8 மணி நேர வேலை என்ற கடுமையான விதிகள் இருந்தபோதே தொழிலாளர் நலத்துறையின் சந்து, பொந்துகளில் முதலாளிகள் நுழைந்து 12 மணி நேரத்துக்கும் மேலாக பல இடங்களில் வேலை வாங்கி வருகிறார்கள்.

இத்தகைய சூழலில் அவர்களுக்கு ஆதரவாக ஒரு சட்டம் தேவைதானா என்பதை தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் கூடவா யோசித்திருக்க வாய்ப்பில்லை.

சூப்பர் மார்க்கெட்டுகள், துணிக் கடைகள், ஹோட்டல்கள் என எண்ணிலடங்கா தொழில்களை நடத்திவருவோரால், பணியில் அமர்த்தப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு இன்றைய சட்டங்கள் எதுவுமே கைக்கொடுக்கவில்லை.

இந்த விஷயம் ல்லாம் தொடர்புடைய துறை அமைச்சருக்கு தெரிய வாய்ப்பிருக்கிறதா என்றும் தெரியவில்லை.

12 மணி நேரத்துக்கும் மேலாக வேலை, குறைந்த ஊதியம் தந்துவிட்டு அதிக ஊதியம் கொடுத்ததாக சம்பளப் பதிவேடு. அத்துடன் வருகைப் பதிவேட்டில் 8 மணி நேரம், விடுமுறைகள் அளிப்பதாக போலிப் பதிவு.

அது மட்டுமின்றி ஒருசில விதிகள் தொடர்பாக பெயரளவில் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படும் தகவல் பலகை. இவைதான் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் செய்துவரும் ஃபார்மாலிட்டீஸ்.

இதையெல்லாம் பல்வேறு தொழில்களை நடத்தி வரும் இன்றைய அமைச்சர்களும், சட்டப் பேரவை உறுப்பினர்களும் அறியாதவர்களா என்ன?

ஊழல் மலிந்த துறைகளில் ஒன்று தொழிலாளர் நலத்துறை என்பதையும், அதில் பணிபுரிவோர் சட்ட விதிகளைக் காரணம் காட்டி வணிகர்களை தவணை முறை சந்தாதாரர்களாக்கியுள்ளதையும் வணிக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் அறியாதவை அல்ல.

இத்துறையில் பணிபுரியும் அலுவலர்களில் சிலர் சொல்வதுண்டு. நான் காந்தியாக, காமராஜராக இருக்கத்தான் விரும்புகிறேன். ஆனால் சுற்றியுள்ளவர்கள் என்னை இருக்க விட மாட்டேன் என்கிறார்கள் என்று.

இதையும் கூட அறிந்துகொள்ளாத அப்பாவிகளாக இன்றைய அமைச்சர்கள் இருக்கிறார்கள். பாவம்.!

printing-mithirannews

இன்றைய பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் ஒன்றிலாவது பணியாற்றும் ஊழியர்கள் சட்டரீதியாக வேலை வாங்கப்படுகிறார்களா என்று இவர்கள் பார்த்திருக்கிறார்களா?

அல்லது அத்துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரியாவது கேள்வி எழுப்பியிருக்கிறாரா? என்றால் இல்லை.

ஆட்சியாளர்களும் சரி, அலுவலர்களும் சரி தங்கள் பதவியையும், சுகத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற ஒரே உன்னதக் குறிக்கோளாடு பணியாற்றுவதுதான் வேதனைக்குரியது.

கடந்த கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் கொத்து கொத்தாக பத்திரிகையாளர்கள் வேலை இழந்தார்கள் என்பதையும் கூட இன்றைய ஆட்சியாளர்கள் தெரிந்துகொள்ளவில்லை.

பத்திரிகை, ஊடகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பெரும்பாலோர் ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிகிறார்கள். நிரந்தரப் பணியாளர்கள் என்ற பெயரில் ஒரு சிலரை மட்டுமே இவை பணியில் அமர்த்திக் கொள்கின்றன.

போதாக்குறைக்கு பத்திரிகையாளர் ஓய்வூதியம் என்ற பெயரில் நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் எல்லாமே நிரந்தர ஊழியர்களுக்கு சாதகமாகவே இருப்பதை ஆட்சியாளர்களே அறிந்த ஒன்று. ஏனெனில் அவர்களிலும் பலர் பத்திரிகை, ஊடகங்கள் நடத்துவதால் இது தெரியாத விஷயமும் அல்ல.

தொழிலாளர் சங்கங்கங்கள் நீண்ட போராட்டம் நடத்திய பிறகே ஒருசிலவற்றில் வெற்றி காண முடிந்துள்ளது. எங்கெல்லாம் தொழிலாளர்களுக்கு சங்கங்கள் பலமாக இல்லையோ அங்கெல்லாம் தொழிலாளர்களின் குரல்வளை நசுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் திமுக அரசு, தொழிலாளர்கள் நலனுக்கு எதிராக ஒரு சட்ட மசோதாவை கொண்டு வந்து அதற்கு நியாயம் கற்பிப்பது முட்டாள்தனமானதாகவே தோன்றுகிறது.

கூரை ஏறி கோழிப்பிடிக்க தெரியாதவர்கள்


தொழிலாளர்கள் வாரத்துக்கு 48 மணி நேரம் வேலை செய்யும் தற்போதைய நிலையே நீடிக்கும் என்பதால் வேலை நாட்கள் குறையும் என்றும், தொழிலாளர்கள் விரும்பினால் மட்டுமே இந்த சட்டம் பொருந்தும் எனவும் அமைச்சர்கள் கூறுவது, ” கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன், வானத்தில ஏறி வைகுண்டம் காட்டுவேனு” சொன்ன கதையாக இருக்கிறது.

வேதனைச் சிரிப்பு கேட்கவில்லையா?

1948 ஆண்டு சட்டப் பிரிவுகள் 51, 52, 54, 56, 59 பிரிவுகளில் சிலவற்றில் இருந்தோ அல்லது அனைத்திலும் இருந்தோ விலக்கு அளிக்க இந்த சட்டத் திருத்தம் வழி செய்கிறது.
பிரிவு 51 தொழிலாளர்களின் வேலை நேரத்தை வரையறுக்கிறது.

எந்த ஒரு பணியாளரும் எந்த ஒரு வாரத்திலும் 48 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது. பிரிவு 52 வார விடுமுறையை வரையறுக்கிறது. அதாவது ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை அளிப்பதை இது வலியுறுத்துகிறது.
இந்த நெகிழ்வுத் தன்மை மூலம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தாது. குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த விதிகள் பொருந்தும்.

மின்னணுவியல் துறை, தோல் பொருள்கள் இல்லாமல் காலணிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், மின்னணுவியல் தொகுப்பு தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள் போன்றவற்றில் பணிபுரிபவர்கள் வேலைபார்க்கும் சூழலுக்கு ஏற்ற வகையில் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தலாம் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இதைக் கேட்டால் வேதனையோடு தொழிலாளர்கள் கேலிச் சிரிப்பைத்தான் உதிர்ப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கெனவே இதுபோன்ற நிறுவனங்களில் 12 மணி நேர வேலையில்தான் தொழிலாளர்கள் இருக்க்கிறார்கள்.

அரசு அதிகாரிகள், அமைச்சர் போன்றவர்கள் ஆய்வுக்கு போகும்போது அங்குள்ள தொழிலாளர்கள் வேண்டுமானால் 8 மணி நேர வேலை பார்ப்பதாக சொல்லலாம். உண்மையில் அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது.

எங்கெல்லாம் தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கிறதோ அங்கேதான் உழைப்புச் சுரண்டல் சற்று குறைந்துள்ளது என்பது கூட இன்றைய தமிழக முதல்வருக்கு தெரியாதது வேதனை அளிக்கிறது.

சட்டப் பிரிவுகள் என்ன சொல்கின்றன?


54-ஆவது பிரிவு எந்த ஒரு ஊழியரும் ஒரு நாளில் 9 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது என்கிறது.
56-ஆவது பிரிவு இடைவெளி நேரம் எல்லாவற்றையும் சேர்த்தாலும் கூட ஒரு நாளில் பத்தரை மணி நேரத்துக்கு மேல் வேலை நேரம் இருக்கக் கூடாது என்கிறது.
59-ஆவது பிரிவு ஒரு தொழிலாளர் ஒரு நாளில் 9 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்தால், அவருக்கு ஒவ்வொரு மணி நேரத்துக்கும் இரட்டிப்பு ஊதியம் தர வேண்டும் என்கிறது.
இந்த 5 பிரிவுகளுமே தொழிலாளர்களின் வேலை நேரம் குறித்த பிரிவுகளாகும். இந்த விதிகளில் இருந்து தொழிற்சாலைகளுக்கு விளக்கு அளிக்கவே புதிய சட்டத் திருத்தம் வழிவகுக்கிறது.

திமுக அரசுக்கு சரிவை ஏற்படுத்தும் சட்டம்:


இந்த சட்ட மசோதாவை முதல்வர் கொண்டு வந்து நிறைவேற்றியதன் மூலம் திமுக அரசுக்கும், அவரது நிர்வாகத்துக்கும் கண்டிப்பாக களங்கம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
அமைச்சரே மாதம் மும்மாரி பொழிகிறதா? என அரசன் கேட்க… ஆமாம் அரசரே மாதம் மும்மாரி பொழிகிறது! என அமைச்சர்கள் சொல்வதை நம்பிக்கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் எந்த முகத்தோடு மே தின வாழ்த்துக்களை தொழிலாளர்களுக்கு சொல்லப் போகிறாரோ? தெரியவில்லை.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *