நிம்மதி பெருமூச்சு விடும் பஞ்சாப்!

amirhpal-mithirannews

கட்டுரையாளர்: ஆர். ராமலிங்கம்


சீக்கியர்களுக்கென காலிஸ்தான் என்ற தனி நாடு வேண்டும் என்று குரல் எழுப்பி தந்த அம்ரித்பால் சிங்கை ஒருவழியாக பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் பஞ்சாப் நிம்மதி பெருமூச்சு விடுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பே அதாவது 1940-களிலேயே பஞ்சாபை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்று ஒரு பிரிவினர் குரல் எழுப்பி வந்தனர்.
பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவாக்கும் பணிகள் மேற்கொண்டபோது, பஞ்சாபை காலிஸ்தான் என தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை வைக்கப்பட்டது.

பஞ்சாப் மக்களின் முடிவு


இந்த தனி நாடு கோரிக்கையை பஞ்சாப் மக்கள் ஏற்கவில்லை. இதனால்தான் இன்றைக்கு இந்தியாவின் ஒரு பகுதியாக பஞ்சாப் தொடர்ந்து இருந்து வருகிறது.
சுதந்திரத்துக்கு பிறகும் அவ்வப்போது பஞ்சாப்பில் தனி நாடு கோரிக்கை எழுந்து மறைவதுண்டு. அந்த வகையில், தனி நாடு போராட்டத்தைத் தொடங்கி அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியவர் ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே.
நாட்டில் பிரிவினைவாதம் தலைதூக்குவதை உணர்ந்த இந்திராகாந்தி 1984-இல் இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட, ராணுவ நடவடிக்கை மூலம் அவரும், அவரது கூட்டாளிகளும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
கடந்த 4 பத்தாண்டுகளாக அமைதி தழுவிய பஞ்சாப்பில் கடந்த ஆண்டில் ஒரு இளைஞர் காலிஸ்தான் பிரச்னையை கையில் எடுத்தார். 30 வயதான அந்த இளைஞர்தான் அம்ரித்பால் சிங். மெக்கானிக்கல் என்ஜினியரான அவர் கார்கோ நிறுவனத்தில் பணியில் இருந்துள்ளார்.

வாரிஸ் பஞ்சாப் டி


“வாரிஸ் பஞ்சாப் டி” (பஞ்சாப்பின் வாரிசுகள்) அமைப்பை நடிகரும், சமூக ஆர்வலருமான தீப் சித்து தொடங்கியிருந்தார். அதன் தலைவராக அம்ரித்பால் சிங் நியமிக்கப்பட்டார். அம்ரித்பால் சிங்கை அவரது ஆதரவாளர்கள் பிந்த்ரன் வாலேயுடன் ஒப்பிட்டு பேசத் தொடங்கினர்.
பிந்திரன்வாலே தனது போராட்டக் காலத்தில் சொன்ன, பஞ்சாப்பில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, போதைப் பொருள் அதிகரிப்பு பிரச்னைகளுக்கு தீர்வு காண தனி நாடு ஒன்றே தீர்வு என்ற அதே கருத்தை மக்களிடம் முன்வைக்கத் தொடங்கினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அம்ரித்பால்பால் சிங், ஒரு மத ஊர்வலத்தை நடத்தினார். இந்த ஊர்வலம் பஞ்சாப்பில் போதைப் பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கும், சாதி ரீதியாக நிலவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.


சீக்கியர்கள் முதலில் பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது இந்துக்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்றும் கூட அம்ப்ரித்பால் சிங் பேசினார்.

காவல் நிலையம் முற்றுகை


இப்படிப்பட்ட சூழலில், அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் குற்ற சம்பவம் ஒன்றில் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டதாக அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இதை அம்ரித்பால் சிங் மறுத்தார். போலீஸ் பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம் சாட்டினார். உள்நோக்கத்துடன் தன்னுடைய உதவியாளரை கைது செய்திருப்பதாக விமர்சித்தார்.
கைது செய்யப்பட்ட தன்னுடைய உதவியாளரை விடுவிப்பதற்காக தனது ஆதராவளர்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டார். நூற்றுக்கணக்கான வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பை சேர்ந்த இளைஞர்கள், கையில் வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இக்கட்டான சூழலில், அம்ரித்பால் சிங் உதவியாளரை போலீஸார் விடுவித்தனர். அம்ரித்பால் சிங் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து அவர் தலைமறைவானார்.

தேடுதல் வேட்டை

ஒரு மாதகாலம் கடந்த நிலையில், அம்ரித்பால் சிங் நேபாளம் தப்பிச் சென்றிருக்கலாம் என கருதப்பட்டது. இந்திய தூதரகத்தை அணுகிய போலீஸார் அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிடாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.
போலீஸாரின் தீவிர விசாரணையில், அவருக்கும், அவரது ஆதரவு குழுக்களுக்கும் வெளிநாடுகளில் உள்ள சீக்கிய பிரிவினைவாத அமைப்புகளைச் சேர்ந்த சிலர் பொருளாதார உதவி செய்து வருவதை கண்டறிந்தனர்.
பணம் அனுப்பியவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்கள். அம்ரித்பால் சிங் மற்ரும் ஆதரவாளர்களுக்கு கிடைத்து வரும் உதவிகள் தடுக்கப்பட்டன.
அம்ரித்பாலின் நெருங்கிய நண்பர்கள், மனைவி உள்ளிட்ட உறவினர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டார்கள். இந்த சூழலில்தான் அவர் பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியில் உள்ள ரோட் கிராமத்தில் உள்ள குருத்வாரா சாஹிப்புக்குள் இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
அங்கு முகாமிட்ட போலீஸார் அவரை கைது செய்தனர். போலீஸார் தரப்பில், அவரை சுற்றி வளைத்ததாக கூறப்பட்டது. ஆனால் அம்ரித்பால் சிங் தரப்பில் சரணடைந்ததாக சொல்லப்பட்டது.
எப்படி இருப்பினும், பஞ்சாப்பை பதற்றத்தை ஏற்படுத்தி வந்த பிரச்னைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பஞ்சாப்பில் ரத்தக் கிளறி, வெடிகுண்டு, துப்பாக்கிக் கலாசாரம் தலை தூக்குவதற்கு முன்பு ஒரு முடிவுரையை காவல்துறை எழுதி அமைதியை பாதுகாத்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *