செந்தூர் திருமாலன்
உலகில் பிறப்பு ஒன்று உண்டு என்றால் இறப்பு வருவது நிச்சயம். மனிதனாகப் பிறந்தவர்கள் மரணத்திலிருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தை. பயத்தைத் தராமல் இருக்க இறையருள் அவசியம். அந்த அருளை அமிர்தகடேஸ்வரர் கோயில் தருகிறது.
உள்ளடக்கம்
மரண பயம்
மனிதன் மரணத்தை நினைத்து பயந்து அதனால் அடையும் மன சஞ்சலத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
மரண பயம் நீங்க அதற்கென்று அமையப் பெற்ற ஆலயங்களைத் தேடிச் சென்று இறைவனை பயபக்தியுடன் வழிபட்டு தங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொண்டால் மன அமைதி கிடைக்கும்.
புராண இதிகாசங்களில் திருக்கடையூர் , திருவீழிமிழலை ,திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகிய திருத்தலங்கள் மரண பயம் போக்கும் தலங்களாக கூறப்பட்டுள்ளன.
திருக்கடையூர் – அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று
இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்திப் பெற்றது. சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் திருக்கடையூரும் ஒன்று.
நாகை மாவட்டம், பொறையார் அருகே திருக்கடையூரில் தருமபுர ஆதீனத்துக்குச் சொந்தமான அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது.
மூலவர் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக வீற்றிருந்து அருள்புரிந்து வருகிறார். எமனை உதைத்த காலசம்கார மூர்த்திக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது.
அம்பாளின் திருநாமம் அபிராமி. திருஞானசம்பந்தர். சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோர் பதிகங்கள் பாடியுள்ளனர்.
பிரம்மன் வழிப்பட்ட தலம்
பிரம்மா, ஞான உபதேசம் பெற வேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார். அதற்கு சிவபெருமான் பிரம்மாவிடம் வில்வ விதை ஒன்றை கொடுத்தார். இந்த விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்துக்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு நீ என்னை வழிபடு என்றார்.
சிவபெருமான் கட்டளைப்படி, பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டு வைத்தார். திருக்கடவூரில்தான் வில்வ விதையிலிருந்து முளை வந்தது.
இதனால் இப்பகுதிக்கு வில்வ வனம் என்ற பெயர் ஏற்பட்டது. சாகா வரம் தரும் அமிர்தத்தை பெறவேண்டி தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தனர்.
அப்போது வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்களுக்குக் கொடுக்க விரும்பாத தேவர்கள் அதைக் குடத்தில் வைத்து எடுத்துக் கொண்டு சென்றனர்.
அவ்வாறு செல்லும் வழியில் நீராடுவதற்காக ஒரு இடத்தில் அதை வைத்தனர் .நீராடிவிட்டு குடத்தை எடுக்க முயன்றபோது அதை எடுக்க முடியவில்லை.
அந்த குடம் பாதாளம் வரை ஊடுருவி சென்று சிவலிங்கமாக மாறி இருப்பதைக் கண்டார்கள். அமிர்தம் இருந்த இடம் பூமியில் வேர் ஊன்றிவிட்ட இடம் என்பதால் இப்பகுதி திருக்கடையூர் என பெயர் பெற்றது.
தல வரலாறு
மிருகண்டு முனிவர் தம்பதியர் குழந்தை பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களின் பக்தியை மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றினார்.
“ஆயிரம் ஆண்டுகள் வாழும் கெட்ட குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டுமே வாழும் அறிவில் சிறந்த மகன் வேண்டுமா? ” எனக் கேட்டார்.
அவர்கள் 16 வயது வரை மட்டுமே வாழக் கூடிய தலைச் சிறந்த மகனே எங்களுக்கு போதும் என்றனர்.
இறைவன் அவர்கள் விருப்பப்படியே வரம் அளித்தார். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் மார்க்கண்டேயன் என்ற மகன் பிறந்தான்.
மார்க்கண்டேயன் அறிவில் சிறந்தவராகவும் சிறந்த சிவபக்தர் ஆகவும் விளங்கினார். அவருக்கு 16 வயது ஆனபோது அவரது பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் பதினாறு வயதுதான் என்பதை மார்க்கண்டேயனிடம் கூறினர்.
எனக்கு நீண்ட ஆயுளை சிவபெருமாள் மட்டுமே வழங்க முடியும். அதனால்தான் ஒவ்வொரு ஆலயமாக சென்று வழிபடுகிறேன் என பெற்றோரிடம் கூறிவிட்டு மார்க்கண்டேயன் ஒவ்வொரு ஆலயமாக தரிசித்து வந்தார்.
அவ்வாறு அவர் திருக்கடையூர் வந்தபோது அவருடைய ஆயுள் முடிவுக்கு வந்தது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக் கயிற்றை மார்க்கண்டேயன் மீது வீசினார்.
எமனைக் கண்டு அச்சம் அடைந்த மார்க்கண்டேயன் தான் வழிபட்டுக் கொண்டு இருந்த லிங்கத்தை ஆறத்தழுவிக் கொண்டான்.
எமனும் தனது பாசக் கயிற்றை லிங்கத்தின் மீது சேர்த்து வீசினான். சிவபெருமான் பக்தனை காக்கும் பொருட்டு லிங்கத்தில் இருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனை காலால் எட்டி உதைத்தார்.
காலனை சூலாயுதத்தால் கொன்று காலனுக்கு காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார்.
மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 வயதுடைய சிரஞ்சீவியாக வாழும் வரத்தை வழங்கி அருள்புரிந்தார்.
பின்னர் பூமாதேவி, பிரம்மா, மகா விஷ்ணு ஆகியோர் வேண்டுதலுக்கு இணங்கி எமன் உயிர் பெற்றதாக புராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.
ஆலய அமைப்பு
ஆலயத்தின் மேற்கில் ஏழுநிலை ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. கருவறையில் அமிர்தகடேஸ்வரர் சுயம்புலிங்கமாக மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமாஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வர ர், பைரவர், பஞ்சபூதங்கள், சூரியன், அகத்தியர், சப்தகன்னியர்கள், 64 நாயன்மார்களின் சந்நிதிகள் உள்ளன.
இந்த கோவிலில் நவகிரகங்கள் இல்லை. கருவறைக்கு முன்பு உள்ள மண்டபத்தில் காலசம்கார மூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காட்சி தருகிறார்.
அருகில் மார்க்கண்டேயன் கூப்பிய கரத்துடன் காட்சி தருகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பிய நிலையில் நிற்கும் எமனுக்கு தனி சந்நிதியும் உண்டு.
எமனின் பாசக் கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் ஒரு தழும்பும் உள்ளது.
கோவில் வெளிப்பிரகாரத்தில் கிழக்கு பகுதியில், அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. முருகப் பெருமாள் ஒரு முகத்துடன் நான்கு திருக்கரங்களுடன் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார்
அமாவாசை அன்று வானில் தோன்றிய முழுநிலவு
திருக்கடையூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார்.
தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் ஒரு அமாவாசை தினத்தன்று திருக்கடையூர் வந்தார். மன்னரின் வருகையின்போது அவரை கவனிக்காமல், பட்டர் அன்னை அபிராமி நினைவில் மூழ்கியிருந்தார்.
இதனால் பட்டரை நோக்கி இன்று என்ன திதி தெரியுமா என்று கேட்டார். ஆழந்த தியானத்தில் இருந்த பட்டர் இன்று பௌர்ணமி திதி என்று தவறுதலாக சொன்னார்.
.இதனால் கோபம் அடைந்த மன்னர் இன்று இரவு வானில் பௌர்ணமி நிலவு காணப்படாவிட்டால், பட்டருக்கு தண்டனை வழங்கப்படும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
மன்னரிடம் தவறாக சொன்னதை அறிந்த பட்டர், அபிராமி சந்நிதி முன்பு குழி வெட்டி, அதில் தீ மூட்டி, அதற்கு மேல் ஒரு விட்டமும், 100 கயிறுகள் கொண்ட உறியையும் கட்டி அதில் ஏறி அமர்ந்தார்.
அன்னை மீது கொண்ட பக்தி உண்மையானால், இந்த பழியில் இருந்து காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால் தீக்குண்டத்தில் விழுந்து உயிர் துறப்பேன் என சபதம் செய்தார்.
அதைத் தொடர்ந்து அந்தாதி பாடல்களை பாடத் தொடங்கினார். ஒவ்வொரு பாடலுக்கும் உறியைத் தாங்கி நிற்கும் கயிறு ஒன்றை அறுத்து வந்தார்.
79-ஆவது பாடலை பாடும்போது, அன்னை காட்சி தந்து, தனது காதனியை விண்ணில் வீசி முழு நிலவு தோன்றச் செய்த அபிராமி, பாடலை தொடர்ந்து பாடக் கேட்டுக் கொண்டார்.
அன்னையின் கருணையைக் கண்டு வியந்து, தொடர்ந்து பாடல்களை பாடி 100-வது பாட்டுடன் அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.
மன்னர் தான் செய்த தவறுக்கு பட்டரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
ஆலயம் திறந்திருக்கும் நேரம்
இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
திருவிழாக்கள்
சித்திரை மாதம் பிரமோற்சவம்,
ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம்,
தை அமாவாசை உற்சவம்,
கார்த்திகை மாதம் 1008 சங்காபிஷேகம்.
இருப்பிடம்
நாகை மாவட்டம், மயிலாடுதுறை தரங்கம்பாடி செல்லும் வழியில் மயிலாடுதுறையில் இருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் திருக்கடையூர் அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது.
சீர்காழியில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழியில் இருந்து பஸ் வசதி உள்ளது. ரயிலில் வருபவர்கள் மயிலாடுதுறை ,சீர்காழியில் இறங்கி அங்கிருந்து திருக்கடையூர் செல்லலாம்.
- பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் தமிழில் செய்யப்படும் சடங்குகளை தவறாமல் காணுங்கள் (VIDEO)
சஷ்டியப்த பூர்த்தி பூஜைகளை செய்யும் இடம்
மரண பயத்தை போக்கும் இடம் என்பதால் இந்த திருக்கோயிலில் நீண்ட ஆயுள் பெற தம்பதியர் பூஜை செய்ய வருகின்றனர்.
60 வயது நிரம்பியவர்கள் கோவிலுக்கு மனைவியுடன் வந்து ஆயுள் வேள்வி செய்கின்றனர்.
60 வயது தொடங்கும்போது உக்ரரத சாந்தியும், 61 வயது தொடக்கத்தில் சஷ்டியப்த பூர்த்தி சாந்தியும் செய்கிறார்கள்.
71 வயதில் தொடக்கத்தில் பீமராத சாந்தியும், 80 வயது தொடக்கத்தில் சதாபிஷேகமும் இங்கு செய்துகொள்கிறார்கள்.
என்றும் இளமையுடன் வாழ சிறப்பு ஹோமங்களும் பூஜைகளும் இங்கு செய்யப்படுகிறது. இந்த பூஜைகளை அவரவர் பிறந்த தமிழ் மாதம், பிறந்த நட்சத்திரம், திதி, வாரம் கூடி வரும் நாளில் செய்துகொள்வது நல்லது.
திருக்கடையூர் கோவிலில் அறுபதாவது திருமண வழிபாடு நடத்தினால் ஒரு கோடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்