Read in English / பிற மொழிகளில் படிக்க:
(காலை 7 மணி. நாயர் கடையில் பில்டர் காபி வாசனை மூக்கை துளைக்கிறது. கூடவே உளுத்தம் வடையின் மணமும் ஆளைத் தூக்குகிறது. ரேடியோவில் பழைய எம்.ஜி.ஆர் பாடல் ஒலித்துக்கொண்டிருக்க, ‘கரைவேட்டி’ கந்தசாமி “அரசியல் அக்கப்போர்” பக்கத்தில் உள்ள அலறும் மாஜிக்கள் செய்தியை பார்வையிடுகிறார். சற்று நேரத்தில் ‘வாய்ப்பந்தல்’ வைத்தி தனது சைக்கிளை ஓரம்கட்டிவிட்டு வந்து இணைகிறார்.)
(இது நடப்பு அரசியல் நிகழ்வுகளை சுவாரஸ்யமாக அலசும் நாயர் கடை நையாண்டி பகுதி)
-:பந்து மித்திரன்:-
📢 செய்திகளை உடனுக்குடன் பெற வேண்டுமா?
🟢 Follow Ramalingam Rathinasamy on WhatsAppமுக்கிய செய்திகள், விடியோக்கள், பயனுள்ள அறிவியல், கல்வி, அரசியல், இயற்கை சார்ந்த உடல்நலக் குறிப்புகள் அடங்கிய பதிவுகள் உடனுக்குடன் வாட்ஸ்அப்பில்!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களுக்கு:
எங்களது யூடியூப் சேனல்களை Subscribe செய்து ஆதரவு தாருங்கள்!
▶️ Arasiyal Akkappore ▶️ rr views and factsவைத்தி: “நாயரே… வழக்கம்போல ரெண்டு ஸ்ட்ராங் டீ! ஆமாம், கந்தசாமி அண்ணே, பேப்பரை அப்படி உத்துப் பார்க்கிற? ஆளுங்கட்சி முகாம்ல ஏதோ பெரிய பூகம்பம் வெடிக்கப் போகுதுனு நேத்து ஒரு பிட் போட்டியே? அது என்ன ஆச்சு?”
கந்தசாமி: “பூகம்பம் மட்டுமில்ல வைத்தி, பல பேருக்கு அரசியல் அஸ்திவாரமே ஆட்டம் காணப்போகுது! வரப்போற தேர்தல்ல, இப்போ அமைச்சர்களா இருக்குற பல சீனியர்களுக்கு ‘கல்தா’ கொடுக்க தலைமை கறாரா முடிவெடுத்துட்டதா அறிவாலய வட்டாரத்துல ஒரு பேச்சு பலமா அடிபடுது.
அதுமட்டுமில்லாம, ‘அப்பனுக்குப் பின் பையன், பையனுக்குப் பின் பேரன்’னு வாரிசுகளுக்கும் இந்த முறை சீட் கிடையாதுனு ஒரு ஷாக் ட்ரீட்மெண்டு கொடுத்திருக்காங்களாம்.”
இதைப் படித்தீர்களா? நாயர் கடை அரசியல்: விஜய் டப்பிங் பிளான் – பாஜக செக்-மேட்!
வைத்தி: “ஓஹோ! இது பெரிய விஷயமாச்சே, அண்ணே! அப்போ சீனியர்கள் சும்மா இருப்பாங்களா? உள்குத்து வேலையை ஆரம்பிப்பாங்களே… யாரையாவது கொம்பு சீவி விடுவாங்களே… இப்பவே சில வாரிசுகள் தொகுதியில போஸ்டர் ஒட்ட ஆரம்பிச்சாட்டாங்க தெரியுமா? கந்தசாமி அண்ணே”
கந்தசாமி: “ம்….தெரியும் தெரியும்… போஸ்டர் வேலை, ஆளை திரட்டி அறிவாலயம் வாசலுக்கு அனுப்பி கொடி பிடிக்கறது எல்லாம் இந்த தடவை நடக்காது.
ஐபேக் மாதிரி ஒரு தனியார் டீமை வச்சு ரகசியமா சர்வே எடுத்துருக்காங்க. அதுல பல அமைச்சர்கள் மேல தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில இருக்காங்களாம். அதுமட்டுமில்லாம, தேவையில்லாம வாயை விட்டு சர்ச்சையில சிக்குனவங்க, வேலையே செய்யாதவங்கனு ஒரு பெரிய லிஸ்ட்டே ரெடியாகிடுச்சு.
வாரிசுகள் வந்து ‘எப்படியாவது சீட் வாங்கிடுங்கப்பா’னு நச்சரிச்சாலும், ‘எனக்கே சீட் டவுட்டு, இதுல உனக்கு வேற சீட்டு வேணுமாக்கும்ன்னு சீறி பாயிறாங்களாம். இந்த பெருசுகள் சந்திக்கும்போது ஒருத்தருக்கொருத்தர் புலம்புறதா சிலபேர் ஒட்டு கேட்டு வந்து சொல்றாங்க… பொறுத்திருந்து பார்ப்போம், லிஸ்ட் வெளியாகும் போது எத்தனை விக்கெட் விழுகுதுனு!”
வைத்தி: “சரி, ஆளுங்கட்சி நிலவரம் இப்படி இருக்குனா, எதிர்கட்சியில என்ன நடக்குதுன்னே தெரியலேயே? ஒரே சைலண்ட் மோடுல இருக்காங்க… அவங்க கூட்டணி கணக்கெல்லாம் எப்படி போகுதுன்னு ஏதாவது தெரியுமா?”
கந்தசாமி: “அந்த கட்சியில இப்போ கூட்டணி பஞ்சாயத்தை விட, ‘நோட்டு’ பஞ்சாயத்துதான் தூள் பறக்குது! இப்போ சேலத்துக்காரர் ஒரு பெரிய மாஸ்டர் பிளான் போட்டுருக்காராம். கடந்த ஆட்சியில வளம் கொழிக்கும் துறைகளை வச்சுக்கிட்டு ‘கல்லா கட்டிய’ சகாக்களை ஒன்-டு-ஒன் கூப்பிட்டுப் பேசுறாராம்.”
வைத்தி: (ஆர்வமாக) “என்னனு பேசுறாரு? தேர்தல் வியூகமா?”
கந்தசாமி: “வியூகமாவது வெங்காயமாவது! ‘இந்த முறை ஆளுங்கட்சியை எதிர்க்கணும்னா, அவங்களை விட நாம பல மடங்கு அதிகமா செலவு செஞ்சாகணும். அதனால நீங்க இவ்வளவு தரணும். அதோட நீங்க சில பேருக்கு இவ்வளவு இறக்கணும்’னு ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா டார்கெட் ஃபிக்ஸ் பண்ணி பட்டியல் நீட்டுறாராம். அவர் சொல்ற தொகையைக் கேட்டு பல மாஜிக்களுக்கு தலையே சுத்துதாம்.”
வைத்தி: (சத்தமாகச் சிரித்துவிட்டு) “அடப்பாவமே! அப்போ மாஜிக்கள் நிலைமை இப்போ ரொம்ப பரிதாபமா இருக்குமே?”
கந்தசாமி: “பரிதாபம் மட்டுமில்ல, பயத்துலேயே பாதிப் பேர் படுத்துட்டாங்க. ‘தலைவரைப் பார்த்தாலே பில்லு நீட்டுவாரேன்னு’னு பயந்துக்கிட்டு, பல மாஜிக்கள் சேலத்துக்காரர் முன்னே நிக்கக் கூட தயங்குறாங்களாம். அவர் கண்ணுல படாம எப்படி எஸ்கேப் ஆகுறதுனு ரூம் போட்டு யோசிக்கிறாங்களாம்.
சில பேர் ‘எனக்கு உடம்பு சரியில்ல, முட்டி வலி, இடுப்பு வலி’னு சொல்லி மருத்துவமனையில அட்மிட் ஆகி கம்பி நீட்டுற ஐடியாவுல இருக்காங்களாம். சில பேருக்கு போன் செஞ்சா ‘சுவிட்ச் ஆஃப்’னு வருதாம்!”
வைத்தி: “அடப்பாவமே! மாஜிக்கள் எல்லாம் இப்படி ‘எஸ்கேப்’ ஆனா, அப்போ சேலத்துக்காரர் தேர்தலுக்கு எப்படித்தான் செலவைச் சமாளிப்பாராம்? புதுசா ஏதாச்சும் மாஸ்டர் பிளான் வச்சிருக்காரா என்ன?”
கந்தசாமி: “அங்கதான் நம்ம சேலத்துக்காரர் தனிச்சு நிக்கிறார். புதுசா ஒரு ‘டெபாசிட் ஸ்கீம்’ அனவுன்ஸ் பண்ணிருக்காராம்! மாஜிக்கள் ஓடுனா என்ன, மாவட்டத்துலயும், வட்டத்துலயும் எம்.எல்.ஏ சீட் வேணும்னு ஆசைப்படுற புது ரத்தங்கள் நிறைய பேர் இருக்காங்களே? அவங்களை குறிவச்சு ஒரு அதிரடி ஆஃபர் விட்டிருக்காராம்.”
வைத்தி: “ஓஹோ! அது என்னப்பா புது ஆஃபர்? பேங்க்ல போடுற மாதிரி ஃபிக்ஸட் டெபாசிட்டா?”
கந்தசாமி: “அதைவிட சூப்பர் டீல் வைத்தி! சீட் கேட்டு வர்ற அந்த லோக்கல் விஐபிக்கள்கிட்ட, ‘நீங்க எங்கிட்ட முதல்ல 10 பெட்டி கொண்டு வந்து கொடுங்க… நான் கட்சித் தலைமையில இருந்து 10 பெட்டியை அதுல சேத்து 20 பெட்டியா தரேன். இதை வச்சு தொகுதியை முழுசா குளிப்பாட்டிலாம்… என்ன சொல்றீங்கன்னு கேட்குறாராம்.”
வைத்தி: “இது ரொம்ப நல்லாயிருக்கே… அவர் பாக்காத டீலா… இதுமாதிரி டீலை கத்துக் கொடுத்தவரே இப்போ இவரோட வந்து ஒட்டிக்கிட்ட பிறகு சொல்லிக் கொடுக்கவா வேணும்..”
கந்தசாமி: “ஆமாம்ப்பா! இந்த ‘பத்துக்கு பத்து’ ஆஃபரைக் கேட்டு எம்.எல்.ஏ கனவுல இருக்குற மாவட்ட, வட்டத்து நிர்வாகிகள் எல்லாம், எப்படியாவது அந்தப் பத்தை ரெடி பண்ணி தலைமையில கட்டிட்டு சீட்டை கன்ஃபார்ம் பண்ணிடலாம்னு இப்போவே நிலம், நீச்சுனு பேரம் பேச ஆரம்பிச்சுட்டாங்களாம். அத்தோட விடுல… நான்தான் இந்த தடவை நிக்கப்போறேன். கொஞ்சம் முன்கூட்டியே கவனிச்சா நல்லாயிருக்கும்னு வேற கேட்க ஆரம்பிச்சுட்டாங்களாம்.!”
வைத்தி: “அரசியல்ல இதெல்லாம் சகஜமண்ணே! ஆனா, இந்த கவர்ச்சி தலைவர் விவகாரம் நாளுக்கு நாள் பெரிசா ஆகிகிட்டுருக்கே… அந்த 41 பேர் பலியான வழக்குல சிபிஐ சம்மன் அனுப்பி, அதை அவர் தவிர்த்துட்டார்னு நேத்து பூரா டிவியில ஓடிக்கிட்டு இருந்துச்சே? இன்னைக்கு வேற அவர் ஒரு பெரிய நேர்காணல் கொடுக்கப் போறாராமே, மெய்யாலுமா?”
கந்தசாமி: “ஆமாம் வைத்தி. 41 பேர் பலியான அந்த சென்சிட்டிவான விவகாரத்துல, சிபிஐ விசாரணைக்கு நேர்ல ஆஜரானா தேவையில்லாத அரசியல் நெருக்கடியும், இமேஜ் டேமேஜும் வரும்னு அவர் தவிர்த்துட்டதா பேசிக்கிறாங்க.
அதனாலதான் சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி, வழக்கறிஞர்கள் மூலமா பதில் சொல்லிக்கலாம்னு நேரில் ஆஜராவதைத் தவிர்த்துட்டாங்க. இதை ஆளுங்கட்சியும் மத்தவங்களும் தங்களுக்கு சாதகமா வச்சு நல்லா அரசியல் செய்வாங்க. ஆனா, இன்னைக்கு நடக்கப்போற பேட்டியில, அவர் எப்படி இதை கவுண்ட்டர் செய்யப் போறாரு, என்ன புது அரசியல் சரவெடியை வெடிக்கப் போறாருனு ஒட்டுமொத்த தமிழ்நாடும் காத்துக்கிட்டு இருக்கு.”
வைத்தி: “அது சரி அண்ணே, அரசியல் ஒரு பக்கம் இருக்கட்டும்… இணையத்துல புதிய அரசியல் கட்சி தலைவரும், நடிகையை பத்தி ஏதோ புதுசா சர்ச்சை ஓடிக்கிட்டு இருக்காமே? ரெண்டு பேருக்கும் இடையில கருத்து வேறுபாடு, இன்ஸ்டாகிராம்ல அன்ஃபாலோ பண்ணிட்டாங்கனு ஏகப்பட்ட வதந்திகள் உலா வருதே?”
கந்தசாமி: “இதெல்லாம் சுத்த ஹம்பக் வைத்தி! சினிமாக்காரங்க விஷயத்துல இன்னைக்கு ஒரு வதந்தி வரும், நாளைக்கு ஒண்ணு வரும். ஒருத்தரை ஒருத்தர் அன்ஃபாலோ பண்ணிட்டாங்கங்குறதெல்லாம் ஒரு செய்தியா?
ஆனா, உண்மையிலேயே என்ன நடக்குதுனா, விசில் தலைவர் தீவிர அரசியலுக்கு வர்ற இந்த நேரத்துல, அவர் இமேஜை டேமேஜ் பண்ணணும்னு சில ‘ஐடி விங்’காரங்க வேணும்னே இப்படிப்பட்ட தனிப்பட்ட வதந்திகளை கிளப்பி விடுறாங்கனு கோலிவுட் வட்டாரத்துல சொல்ல ஆரம்பிச்சிருக்காங்க. இது ஒரு ‘டீ கப்’ புயல்தான். கொஞ்ச நாள்ல பிஆர்ஓ-க்கள் ரெண்டு அறிக்கை விட்டா தானா அடங்கிப் போய்டும்.”
வைத்தி: “அண்ணே நீ சொல்றதும் வாஸ்தவம்தான். சரி, அந்த தேசிய கட்சி தமிழ்நாட்டில் கொடி நாட்டுறதுல தீவிரம் காட்டி வருதே அதுலே ஏதாச்சம் முன்னேனற்றம் இருக்கா..
கந்தசாமி: “ஓ.. விசிலை பிடிங்கி அவங்க கழுத்துல மாட்டிக்க நினைச்சத சொல்றீயா… அந்த முயற்சியில ஈடுபட்டது என்னமோ உண்மைதான். ஆனா மீன் இன்னும் சிக்கலையே! ‘எங்களுக்கு நாங்கதான் பாஸ்’னு சோலோவா நிக்கிறோம்… ஜெயிக்கிறோம்.. என்ன சொல்றீங்க நண்பா.. நண்பி..ன்னு விரைவில் ஒரு மேடையில் பேசப் போறதா பேசிக்கிறாங்க…
வைத்தி: “இது பெரியண்ணனுக்கு ரொம்ப ஏமாத்தமா இருக்குமே… அவர் பவரை காட்டுவாரே”
கந்தசாமி: நீ என்னப்பா… என்னை விட அட்வான்ஸா.. இருக்கே… உண்மைதான்.. அவரு வேலையை ஆரம்பிச்சுட்டாரு… பாக்கலாம்.. என்ன நடக்குதுன்னு…
வைத்தி: “சரி…. தனித்து நிற்கும் தமிழர் இந்த தேர்தல்ல என்ன பண்ணப் போறாரு?”
கந்தசாமி: “அவர் என்னைக்குமே ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ங்ற ஸ்டைல்தானே! ‘நாம் தமிழர்கள்’ எப்பவும் தனித்துதான் நிற்போம்னு 234 தொகுதியிலயும் ஆட்களை இறக்கி …விவசாயி…. விவசாயி…ன்னு பாட ஆரம்பிச்சிட்டாரா… அது உனக்கு தெரியாதா..?”
அவரோட டார்கெட் இந்த 2 D கட்சிகளும்தான். இந்த முறை புது வாக்காளர்களையும், இளைஞர்களையும் வளைக்க ரொம்ப பலமான டிஜிட்டல் வியூகம் வேற லெவல்ல அமைச்சிருக்காராம். மைக் கிடைச்சா மனுஷன் புலியா சீறுறாரு… ஆனா, வாக்குச்சாவடியில இந்த அனல் பறக்கும் வசனம் எந்த அளவுக்கு ஓட்டா மாறப் போகுதுன்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்!.”
வைத்தி: “எல்லாம் சரி கந்தசாமி அண்ணே, கடைசியா ஒண்ணு கேட்டுக்குறேன்… இந்த அப்பா மகன் சண்டை எந்த அளவுக்கு இப்போ இருக்குது? அது முடிவுக்கு வருமா… வராதா..?”
கந்தசாமி: “அதை ஏன் கேக்குற! திண்டிவனத்துல எப்பவுமே ரெண்டு விதமான காத்து வீசும். இது இப்ப மட்டும் இல்ல.. ரொம்ப நாளாவே… கூட்டணி விவகாரத்துல அப்பா ஒரு ரூட்ல போனா, மகன் இன்னொரு ரூட்ல போவார். இப்ப சனிப் பெயர்ச்சியிலே உச்சம் தொட்டுருக்கு.
மகனே… பெரிசுக்கு உடம்பு முடியலென்னு … அவரை நடைபிணமா மாத்த முயற்சி பண்ணாரு… இவங்க பிரச்னை மே மாதம் ஒரு முடிவுக்கு வந்துடும். அதுவரையும் இந்த சனிப் பெயர்ச்சி ஒரு ஆட்டுதான் ஆட்டி வைக்கும். அதுவரைக்கும் உஷாரா இருக்கனும்னு விசுவாசிகள் பேசிக்கிறாங்க..
பாருங்கள்: விஜய் அரசியலில் எல்லாம் தவறாக நடப்பது ஏன்? – @rrviewsandfacts video
வைத்தி: “மொத்தத்துல, இந்த 2026 தேர்தல் களம் விக்ரம் பட கிளைமேக்ஸ் மாதிரி ரொம்ப கன்ஃபியூஸிங்கா, அதே சமயம் பயங்கர விறுவிறுப்பா இருக்குது போலயே!”
கந்தசாமி: “உண்மைதான்! எந்த நிமிஷம் யார் எந்தப் பக்கம் மாறுவாங்க, யார் யாருக்கு ஆப்பு வைப்பாங்கனு கணிக்கவே முடியாத தேர்தலா இருக்கும்.
சரி, பேசிப் பேசியே தொண்டை தண்ணி வத்திப்போச்சு. டீயும் ஆறிப்போச்சு… குடிச்சிட்டு கிளம்புவோம். நாயரே, இன்னைக்கு டீ கணக்கை வைத்தி கணக்குல எழுதிடுங்க!”
(கரைவேட்டி கந்தசாமி, வாய்ப்பந்தல் வைத்தியின் அரசியல் விவாதம் இன்றைக்கு இத்தோடு முடிந்தது.)
(Disclaimer: இது முழுவதும் கற்பனையான நையாண்டி உரையாடல். எந்தவொரு தனிப்பட்ட நபரையோ, அரசியல் கட்சியையோ புண்படுத்தும் நோக்கத்திலோ, களங்கப்படுத்தும் நோக்கத்திலோ எழுதப்பட்டதல்ல. அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் அணுகும் ஒரு முயற்சி மட்டுமே. இதில் கூறப்பட்டுள்ள அலறும் மாஜிக்கள் உள்ளிட்ட தகவல்கள் பொதுவெளியில் உலா வரும் தகவல்கள் செய்திகளின் அடிப்படையிலானவை. அதனால் இந்த உரையாடல் ரசிக்க மட்டுமே)

மித்திரன் நியூஸ் வாசகர்களின் உற்ற தோழனாகவும், நலம் விரும்பும் உறவாகவும் (பந்து மித்திரன்) அரசியல் களத்தின் உண்மை நிலவரங்களை நாயர் கடை பெஞ்சில் சுடச்சுட அலசும் மூத்த பத்திரிகையாளர்
ஆச்சரியமூட்டும் தகவல்கள், அரசியல் பார்வைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் காண எங்கள் சமூக ஊடகங்களை பின்தொடருங்கள்:
🔗 எங்களது அனைத்து சமூக ஊடகங்கள்