ஞான அக்னி அழிக்கும் காமாக்னி

வெ நாராயணமூர்த்தி

காமாக்னியை அழிக்கும் ஞான அக்னி என்பது உங்களுக்கு புதுமையாக இருக்கிறதல்லவா.. வாருங்கள் இது என்னவென்று பார்க்கலாம்.

ஒரு அக்னியை இன்னொரு அக்னியால்தான் அழிக்க முடியுமா? முடியும்!

ஆம் நண்பர்களே, ஒரு அக்னியைக் கொண்டுதான் இன்னொரு அக்னியை
அழிக்க முடியும். வேதங்கள் இதைத்தான் மிடுக்கோடு எடுத்துச் சொல்கின்றன!

அக்னிக்கு ஏன் முக்கியத்துவம்?

பண்டைய காலத்தில், மனித வாழ்க்கையில் நெருப்புக்கு மிகுந்த
முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

நெருப்பை குறிக்க பல சொற்றொடர்கள் இருந்து வந்துள்ளதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

அந்த காலத்தில், நெருப்பை அதன் பயன்பாட்டின் பல்வேறு தன்மைகளுக்கு ஏற்ப அக்னி, தகன, ஜ்வாலன, சப்தார்சி, பாவக, ஜாதேவேதஸ், ஹுடாசன, வாஹினி போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன.

ரிக் வேதம், அக்னியை ‘ஓம் அக்னிம்லே புரோஹிதம்’ என்று வர்ணிக்கிறது.
‘யக்ஞத்தை நடத்தும் புருஷர்களுக்கு ஹிதமாக இருக்கும் அக்னியே. உனக்கு அளிக்கப்படும் யக்ஞ வஸ்துக்களை இவர்கள் சார்பாக பரமனிடம் கொண்டு சேர்’, என்பதுதான் இதன் பொருள்.

ஸ்ரீமத் பகவத் கீதையில்

ஸ்ரீமத்பகவத் கீதையில் நெருப்புக்கு என்று தனி மரியாதை தரப்படுகிறது.
அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானாக்னி என்று வருணிக்கப்படுகிறது.

இச்சைகளால் உருவாகும் காமாக்னி நம் ஐம்புலன்களால் உருவாவது.

ஆசை, மோகம், ஏக்கம், சிற்றின்பதாகம் போன்றவைகளை உள்ளடக்கியது.  அந்த ‘காமாக்னி’யை அழிக்கவல்ல ஒரே மாற்று ஞானாக்னி என்று கீதை உபதேசிக்கிறது.

ஐம்புலன்களின் வேட்கைகளுக்கு பலியாகும் நபர்களுக்கு காமாக்னி
கொழுந்துவிட்டு எரிக்கிறது.

இதை சாதாரணமாக அணைக்கவோ, தணிக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதை அர்ஜுனனுக்கு விளக்குகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்:

எளிதில் அணைக்க முடியாத அக்னி

ஆவ்ருதம் ஞானமேதென, ஞானினோ நித்யவாரீன

காம ரூபெய கௌண்டேய, துஷ்பூரே அனலேனச

‘காமம் என்கிற அணைக்கமுடியாத, தணிக்கமுடியாத இச்சைகளால் உன்னுடைய உண்மையான ஞானம் மூடி மறைக்கப்பட்டுள்ளது.

உனக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்த காமாக்னிதான் உன் முதல் எதிரி’ என்பது இந்தப் பாடலின் பொருள்.

காம ரூபமாக கொழுந்துவிட்டு எரியும் நெருப்பை ‘அனலம்’ என்கிறது இந்த
ஸ்லோகம்.

அலம் என்றால் ‘போதும்’. அனலம் என்றால் போதாது. எப்போதும்
தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதற்காக தனக்கு வேண்டிய எரிபொருள்
(இச்சைகள்) தேடி அலையும் விசித்திரமான நெருப்புதான் இந்த காமாக்னி.

தணிக்கமுடியாத தாகம் கொண்ட கொடூர அக்னி என்பதைதான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்படி எச்சரிக்கிறார்.

வேதங்கள் உணர்த்தும் தெய்வீகம்

கொக்கின் சொர்க்கம் எது?

காமாக்னி குணம்

‘அனலம்’ என்கிற இந்த வார்த்தை ‘தணியாத, தணிக்க வழிவிடாத நெருப்பை’
வர்ணிக்கும் ஒரு அழகான சொல். கொழுந்து அணைந்தாலும், தன்னுள் எப்போதும்
தணலை தக்கவைத்துக் கொண்டிருக்கும் நெருப்பு இது.

எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்துகொண்டு மீண்டும் எரியக் கூடிய வகையில் எரிபொருளான இச்சைகளை தூண்டி, தன் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் காமாக்னி இது.

நம்முடைய இச்சைகளைப் பற்றி இதை விடக் கடுமையாக எடுத்துச் சொல்ல முடியாது.

எவ்வளவு முறை புலன்வழி இச்சைகளைப் பூர்த்தி செய்துக் கொண்டாலும் மேலும் மேலும் தொடர்ந்து நம்மை இச்சைபடத் தூண்டும் தன்மை கொண்டது காமாக்னி.

ஒருபோதும் திருப்தி தராதது. பழைய இச்சைகள் தீரும் முன்னரே புதிய இச்சைகளை வரிசையில் தயார் நிலையில் நிற்க வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தது.

அறுசுவை உணவை உண்டு பசி என்கிற இச்சையை தற்காலிகமாக தீர்த்துக்
கொண்டாலும், இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் பசி தலை தூக்கி நம்மை உணவை
தேடச் சொல்கிறது அல்லவா?

அதைப் போலத்தான் அனைத்து வகையான இச்சைகளும். ஒரு முறை ஓரளவு தீர்ந்தாலும் மீண்டும் மீண்டும் பல வகையான இச்சைகளை நாடும் எண்ணங்களை தூண்டச் செய்கிறது.

மிகப் பெரிய சவால்

எவ்வளவு முயன்றாலும் காமாக்னியை தற்காலிகமாகவே நாம் திருப்திப்படுத்த
முடிகிறது. அதன் தழல் அடுத்த இச்சைகளைக் கொண்டு தூண்டப்பட்டு மீண்டும் கொழுந்து விட்டு எரியக் காத்திருக்கிறது.

இந்த காமாக்னிக்கு எரிபொருள் தந்து அந்த குறிப்பிட்ட இச்சையை தற்காலிகமாகப் அவ்வப்போது பூர்த்தி செய்துக் கொண்டாலும் இதிலிருந்து விடுதலை பெறுவதே பெரும்பாடு. இது நம் வாழ்கையின் மிகப் பெரிய சவால்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சில அத்தியாவசிய
தேவைகளைப் பூர்த்தி செய்யும் இச்சைகள் வேறு, தற்காலிக சந்தோஷத்துக்காக
ஏற்படுத்திக் கொள்ளும் இச்சைகள் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

முக்கியமில்லாத இச்சைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் பெரிய பிரச்னை ஒன்றும்
ஏற்படுவதில்லை.

ஆனால் முக்கியம் என்று கருதி அது பூர்த்தி செய்யாமல் போகும்போது காமாக்னியில் மறைந்திருக்கும் தழல் உயிர் கொண்டு அந்த இச்சையை மேலும் தூண்டுகிறது. அந்த நேரத்தில் அந்த இச்சைக்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம்.

இந்த அடிமைத்தனத்திலிருந்து எப்படி மீள்வது?

இந்த காமாக்னியை எப்படி அழிப்பது?

சரி, முழுமையாக அழித்துவிடலாம் என்று அதிகமாக பல்வேறு இச்சைகளை எரிபொருளாக அளித்தாலும் தீக்கொழுந்து அதிகமாகி, சிறிது நேரத்தில் அடங்கினாலும், அடித்தளத்தில் சதா விழித்துக்கொண்டிருக்கும் தழல் அடங்குவதில்லையே!

இச்சைகளில் அதிக நாட்டம் இருக்கும் நபர்களுக்கு இந்த நிலை பெரும் பாடாக
அமைவதை நாம் கண்கூடாகக் காண முடிகிறது.

வேதாந்தம் என்ன சொல்கிறது?

இத்தகைய நபர்களுக்கு முக்கியம் என்பதற்கும், சந்தோஷத்துக்கும் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் போகிறது.

தொடர்ந்து அனுபவிக்கும் இச்சைகள் முக்கியமாக இல்லாவிட்டாலும் சிறிது காலத்தில்
முக்கியமாகி’ விடுகிறது. இதுவே நாளடைவில் பழக்காமாகி சதா இச்சைகளை
தொடர்ந்து நாடுகின்றனர் இவர்கள்.

இதைத்தான் ‘போதை’ என்கிறோம். திருப்தி செய்ய முடிவதில்லை. அதை தவிர்க்கவும் முடிவதில்லை.

ஆக, காமாக்னியை அழிக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

முதலில் காம இச்சைகளுக்கு அடிப்படைக் காரணிகளை இனம் கண்டுகொள்ள
வேண்டும்.

அனைத்து இச்சைகளுக்கு ஆதி காரணம் ‘நம்முடைய அடிப்படை இயல்பை தெரிந்துகொள்ளாத அறியாமை’ என்று ஆணித்தரமாக கூறுகிறது வேதாந்தம்.

ஏன் நிறைவு இல்லை?

நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த உடல், மனம், எண்ணங்கள் கொண்ட
கலவை அல்ல நாம்.

இவைகள் அனைத்தையும் உயிர்விக்கும், ஒளிர்விக்கும் நம் அடிப்படை ஸ்வரூபமான தெய்வீகத்தை அடையாளம் கண்டு உணர்வதுதான் நம் வாழ்க்கைத் தத்துவம் என்பது அனைத்து வேதங்களின் சாராம்ஸம்.

முழு நிறைவும், அமைதியும், ஆனந்தமும் கலந்த ஒரு அதிசயக் கலவையை நாம்
சதா தேடி அலைகிறோம்.

இந்த நிலையை உணரும் வரை நமக்குள் நிறைவு இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இந்த நிறைவில்லா நிலையை பூர்த்தி செய்துகொள்ளவே நாம் மேலும் வேண்டும் என்று தேடுகிறோம்.

அமைதி இல்லை என்று நினைக்கும்போது, ‘குறைந்தபட்சம் இச்சைகளையாவது பூர்த்தி செய்துக் கொண்டால் மட்டுமே ஒரு வகை அமைதி, ஆனந்தம்’ என்ற நிலைக்கு நாம்
தள்ளப்படுகிறோம்.

உண்மை சொரூபம் எது?

நம்முடைய இந்தத் தவறான அணுகுமுறைக்குக் காரணம் என்ன?

நிறைவும், அமைதியும் ஆனந்தமும் வெளி உலகில் இருப்பதாக தவறாக
நினைக்கிறோம்.

அதனால் அவைகளை நம் உடல் மனம் எண்ணங்கள் கொண்ட கலவை வழியாக வெளியே தேடுகிறோம்.

உண்மையில் இவை அனைத்தும் கலந்த தெய்வீகக் கலவையே நம் உண்மை சொரூபம் என்பதை உணராமல்!

ஆன்மீகத்தை, தெய்வீகத்தை தேடி அலையும் சாதாரண மனிதப் பிறவிகள் நாம்
என்று நினைத்துக் கொண்டு அதை வெளியில் தேடுகிறோம்.

உண்மையில் தெய்வீக பிறவிகளான நாம் மனித உருவில் நம் உண்மை சொரூபத்தை உணர முடியாமல் காமாக்னிக்கு இரையாகி தொடர்ந்து சிக்கல்களில் சிக்குண்டுத் தவிக்கிறோம்!

ஞானாக்னி

இச்சை என்கிற காமாக்னி, மாயை வடிவில் நம் உண்மை சொரூபத்தை
மறைத்துள்ளது என்கிறது வேதாந்தம்.

நம் உண்மையான சொரூபத்தை புரிந்துகொள்ளும்போது, இந்த மெய்ஞானம், ஞானாக்னியாக உத்பவித்து காம அக்னியை அழிக்கிறது.

தெய்வீக ஜோதியான இந்த ஞான அக்னி, காமாக்னியில் எரிந்துகொண்டிருக்கும் எரிபொருளை முழுமையாக எரித்து அழித்து விடுகிறது. அப்போது காமத் தழலுக்கு இடமே இல்லாமல் போகிறது.

ஆத்ம ஜோதி

காமாக்னி அழியும்போது, மாயை விலகுகிறது. நமக்குள்ளே மறைந்து
இருக்கும் முழு நிறைவு, பூர்ண அமைதி, எல்லையில்லா ஆனந்தம் (சத் சித் ஆனந்தம்)
ஆகிய மூன்றும் கலந்த கலவையே நாம் என்கிற உண்மை நிலையை உணரமுடிகிறது.
இதுவே ஆத்ம ஞானம்.

‘அந்தர்ஜோதிஹி பஹிர்ஜோதிஹி, பிரத்யக்ஷஜோதிஹி பராபரஹ
ஜோதிர்ஜோதிஹி, ஸ்வயம்ஜோதிஹி, ஆத்மஜோதிஹி ஷிவோஸ்யஹம்’


‘ஸ்வயம்ஜோதியாக, ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியாக விளங்கும் ஆத்மஜோதி, நம்
உள்ளே மறைந்திருக்கும் ஜோதியை உத்பவிக்கச் செய்து, அந்த ஞான ஜோதியை
உலகெலாம் பரவச்செய்து பராபரத்துடன் ஒன்றசெய்யும் சிவம் நான்’ என்று ஞான அக்னியைப்பற்றி, ஸ்ரீசங்கரர் தான் எழுதிய ‘பிரம்ம ஞானாவளி’ என்கிற நூலில்
வர்ணித்துள்ளார்.

ப்ரம்ம ஞானஜோதி

நண்பர்களே, இந்த ஞானத் தழலை பரம்பொருளிடம் வரமாகப் பெற்ற
ரிஷிகளும், ஞானிகளும், மஹாசித்தர்களும், இந்த மானுடம் உய்ய, தங்கள் தீட்சை
வழியாக ஞான அக்னியை தங்களிடம் ஆசீர்வாதம் பெரும் ஒவ்வொரிடமும்
உத்பவிக்கின்றனர்.

இதைத்தான் நம் புராணங்கள் சொல்லுகின்றன. இந்த தெய்வீக பரிமாற்றத்தை
அனுபவிக்கும் வெகு சிலரே இதை உணர்கின்றனர்.

இந்த ஞானாக்னிதான் ‘ப்ரம்ம ஞானஜோதி’. 

அனைத்துக்கும் ஆதியான ப்ரம்ம ஸ்வரூபம் என்பதை உணர்தல். இதுவே பிறவிப் பயன். வாழ்வின் மிக உயர்ந்த நிலை.

தைதீரிய உபநிஷத் குறிப்பிடும் ‘ப்ரம்மவித்’, இதுவே ஆத்மஞானக் கல்வி. இதை வரமாகப் பெறுபவன் அடைவதற்கரிய உயர்நிலையை அடைகிறான். (‘ப்ரம்மவித் அப்நோதி பரம்’).

ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியான ப்ரம்மகுருவால் மட்டுமே இத்தகைய
வரத்தை அருளமுடியும். அவரால் மட்டுமே ப்ரம்மஜோதியை உத்பவிக்க முடியும்.

இந்த உண்மைத் தத்துவத்தை விளக்கவே, இந்த உலகின் 13-ஆவது ஜோதிர்லிங்கம்
தமிழ்நாட்டில் சென்னப்பமலையில் உத்பவித்துள்ளது.

காமாக்னியை அழித்து ஞானாக்னியை உணரத் துடிக்கும் அனைவருக்கும் அங்கே அருவநிலையில் ஐக்கியம் கொண்டுள்ள ப்ரம்மகுரு ஒரு கிடைப்பதற்கரிய ஞானப் பொக்கிஷம்.

திருமணத் தடை நீக்கும் ஆடிப் பெருக்கு விழா

செந்தூர் திருமாலன்

ஆடிப் பெருக்கு என்பது தமிழ் மாதமான ஆடி மாதம் 18-ஆம் நாளில் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. ஆடிப் பெருக்கு விழாவை திருமணத் தடை நீக்கும் விழாவாக பெண்கள் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆடிப் பெருக்கை தென்னிந்தியாவில் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் புரிந்தது இந்த ஆடி மாதம் என்பதால்தான்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்

தமிழ் மாதங்களில் ஒன்றான ‘ஆடி’ அம்மனுக்கு உரிய மாதமாகப் போற்றப்படுகிறது. இம்மாதத்தில்தான் உமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தார் என்று புராண நூல்கள் கூறுகின்றன.

இதனால் இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பூமித்தியரேகைக்கு வடக்கில் சூரீயன் பயணம் செய்கிறார்.

அடுத்து அடுத்த ஆறு மாத காலத்திற்கு (ஆடி முதல் மார்கழி வரை) தன் பயணத்தை பூமத்தியரேகைக்கு தெற்கில் தொடங்குகிறார். இக்காலம் தட்சிணாயன புண்ணியகாலம் என்று அழைக்கப்படுகிறது.

ஆடி தபசு

இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் இருந்தது ஆடி மாதத்தில்தான். அதை நினைவுகூரும் விதத்தில் ‘ஆடி தபசு’ நிகழ்ச்சி நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் இன்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

முற்காலத்தில் அரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக பார்வதிதேவி புன்னை வனத்தில் தவம் இருந்தார்.

அவரது தவத்தை பாராட்டி சிவனும், விஷ்ணுவும் ஆடி மாத பௌர்ணமி அன்று சங்கரநாராயணராக காட்சியளித்தனர்.

அம்பிகை தவம் இருந்த இடம் சங்கரன்கோவில். இது திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இங்கு சுவாமி சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணம் செய்து கொண்டார்.

அம்பிகை தவம் இருந்து பலனை அடைந்ததால் மக்கள இங்கு பிரார்த்தனைகளை நிறைவேற்றி நலம் பெறுகின்றனர்.

பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய சிவபெருமான் ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்கட்டும் என்று வரம் கொடுத்தார்.

காற்றும் மழையும் ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். காற்றை காளியம்மனும், மழையை மாரியம்மனும கட்டுப்படுத்துவதாக ஐதீகம்.

இதனால் அம்மன் அருள் வேண்டி ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு நடத்தப்படுகிறது.

திருமணத் தடை நீங்க

திருமணம் ஆகாத பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தங்களுக்கு நல்ல வரண் அமைய வேண்டி கோயிலுக்கு சென்று கூழ் வார்த்து வழிபட்டு வருகின்றனர்.

‘ஆடிச் செவ்வாய் தேடிக்குளி, அரைச்ச மஞ்சள் பூசிக்குளி’ என்பது பழமொழி.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து அரைத்த மஞ்சளை பூசி குளிப்பதால் சுமங்கலி பெண்களின் மாங்கல்யம் பலம்பெறும் என்பது நம்பிக்கை.

ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும் ‘ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா, எங்களுக்கு வழித்துணையாக எம்மை வாழவைக்க வேண்டும் அம்மா சுமங்கலியாக'” என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவியரசர் கண்ணதாசன்.

ஆடிப் பெருக்கு

ஆடிப்பெருக்கன்று காவிரியை பெண்ணாகவும், சமுத்திரராஜனை ஆணாகவும் கருதி காவிரித் தனது கணவரான சமுத்திரராஜனை அடைவதை மங்கலம் பொங்கும் விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

காவிரிக்கரையில் இருமருங்கிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். காவிரியை சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்’ நடந்தாய் வாழி காவிரி’ எனக்கூறி வாழ்த்துவார்.

ஆடி பதினெட்டாம் நாள் காவிரி பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்துக் கொண்டு கொண்டு போய் காவிரி கரையில் வைத்து நோன்பு நோற்பார்கள்.

கணவனை சென்றடையும் காவிரிக்கு மங்கலப் பொருட்களான மஞ்சள், பனைஓலையால் செய்யப்பட்ட காதோலை , கருகுமணி மாலை , வளையல் , அரிசி, வெல்லம் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வது வழக்கத்தில் இருக்கிறது.

புதுமணத் தம்பதியர்

புதுமணத் தம்பதியர் அதிகாலை 4 மணிக்கு எழுந்து காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள்.

பிறகு அவர்கள் அணிந்திருந்த ஆடையை களைந்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள்.

அதைத் தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சந்நதிகளுக்கு சென்று வழிபடுவார்கள்.

மாங்கல்ய பூஜை

பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து புது தாலிகயிறு (மஞசள் சரடு) அணிந்து கொள்வார்கள். சிறுவர்கள் சிறிய அளவிலான மரச் சப்பரம் செய்து இழுத்துச் செல்வார்கள்.

திருச்சி, திருவையாறு, ஒகேனக்கல், மேட்டூர், பவானி, கூடுதுறை, மயிலாடுதுறை போன்ற காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழா மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம்.

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம், நாகபஞ்சமி பண்டிகைகள் இந்த மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது

ஆடி மாதத்தில் கிராம புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் சுடலை மாடன், அய்யனாரப்பன் , மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூசைகளும், விழாக்களும் விமர்சையாக எடுக்கப்பட்டு வருகிறது.

முளைப்பாரி திருவிழா, நையாண்டி மேளம், கரகாட்டம், வில்லுபாட்டு கச்சேரி என்று விழா அமர்க்களப்படும். இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யலாமா?


திருமணம் ,புதுமனை புகுவிழா போன்ற சுபயகாரியங்கள் செய்ய ஆடி மாதம் ஏற்றதல்ல என்று கூறப்படுவதுண்டு.

ஆடி மாதத்தில் திருமணமான பெண்கள் கருத்தரித்தால் பத்தாவது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும்.

அப்போது வெயில் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் ஆடி மாதத்தில் திருமணம் செய்வதை தவிர்த்தனர் .

அதேபோல் ஆடி மாதம் புதுமண தம்பதியினரை பிரித்து வைக்கிறார்கள்.

ஆடி மாதத்தில் பலத்த காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும். அதனால் கிரகப்பிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.

கூழ்வார்க்கும் திருவிழா


தவத்தில் சிறந்து விளங்கிய ஜமதக்னி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரிய அர்ஜுனனின் மகன்கள் கொன்று விடுகிறார்கள்.

இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்க முடியாமல் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

அப்போது இந்திரன் மழையை பெய்து தீயை அணைக்கிறார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன.

வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்து கொள்கிறார்.

ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதன் காரணமாக, அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டபோது, மக்கள் அவருக்கு பச்சரிசி, வெள்ளம், இளநீரை உணவாக அளிக்கிறார்கள்.

இதைக் கொண்டு ரேணுகா தேவி கூழ் தயாரித்து உணவருந்துகிறார். அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகாதேவி முன்பு தோன்றி வரம் தருகிறார்.

உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று ஆசி வழங்குகிறார். .

இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பெண்கள் புதிய தாலிச் சரடை கட்டிக் கொள்வது ஏன்?

ஆடிப்பெருக்கின்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும். காவிரி ஆற்றை பெண்கள் கங்காதேவியாக நினைத்து வணங்குவர்.

ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை போல தங்கள் குடும்பமும் அனைத்து நன்மைகளையும் பெற்று சுபிட்சமாக வாழ வேண்டி பெண்கள் திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்கிறார்கள்.

முன்னதாக பெண்கள், மஞ்சள், குங்குமம், கலப்பரிசி, வெல்லம், அரிசி, தேங்காய் பழம், தாலிசரடு ஆகியவற்றை வைத்து பூஜை செய்கிறார்கள்.

பின்னர் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் புதிய தாலிசரடை கட்டிக் கொள்கிறார்கள்.

புதுமணத் தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரிகரைக்குச் சென்று அங்கு அரசு வேப்ப மரத்தை சுற்றி வலம் வந்து மஞ்சள் நூலை கட்டுகிறார்கள்.

இதற்கு காரணம் அரச மரமும் வேப்ப மரமும் சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்ச ராஜன் என்றும், வேப்பமரத்தை விருட்சராணி என்றும் அழைக்கப்படுகிறது.

சக்தி ரூபமாக திகழும் வேப்பமரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலைக் கட்டுகிறார்கள் இவ்வாறு செய்தால் திருமணத் தடையால் மணமாகாத பெண்களுக்கு திருமணத் தடை நீங்கும், விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்பதும், திருமணமான பெண்களுக்கு சந்தான லட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

உப்பு அதிகமானால் ஆபத்து

பல் டாக்டரின் ஆஃபர்

ஐராவதீஸ்வரர் கோயில் ஒரு கலை பொக்கிஷம்

குடந்தை ப. சரவணன்

நீங்கள் உயிர்துடிப்புள்ள சிற்பங்களைக் காண வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாக கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் செல்ல வேண்டும்.

இந்த மண்ணுலகம் உள்ள வரை எல்லோருடைய நெஞ்சில் நிலைத்திருக்கும் வண்ணம் கலைகளுக்கு உயிரூட்டியவன் இரண்டாம் ராஜராஜ சோழன்.
அவனுடைய ஆட்சிக் காலம் சிற்பங்களுக்கு உயிர் கொடுத்த காலம் என்றுகூட சொல்லலாம்.
இவனுடைய ஆட்சிக் காலத்தில்தான் ஐராவதீஸ்வரர் கோயில் கலைகளின் பொக்கிஷமாக உருவெடுத்தது.
உள்ளூரில் அல்லது தமிழகத்தில் இருக்கும் நமக்குத்தான் நம்முடைய கோயில்களின் கலைநுட்பங்களை ரசிப்பதற்கு நேரமோ அதற்கான ஆர்வமோ இல்லை.
ஆனால், இந்த கோயிலில் உள்ள சிற்பங்களின் கலை வடிவத்தைக் காண இன்றைக்கும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் வருவதை நாம் நேரில் காணலாம்.

தாள ஓசை தரும் படிகள்

இந்த ஆலய நுழைவாயில் பகுதியில் நந்தி தேவர் மண்டபத்துக்கு அருகே அமைந்திருக்கும் பலி பீடத்தில் ஏறுவதற்கு 10 படிக்கட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு படிக்கட்டுகளாக மட்டுமல்ல, தாள ஓசைகளைகளை தருபவைகளாகவும் இருக்கின்றன.
ஆமாம். சொன்னால் நம்ப மாட்டீர்கள்!
இந்த படிகளில் ஒரு கல்லால் தட்டிப் பார்த்தால் ஒவ்வொரு படியிலும் ஒரு தாள ஓசை நம் காதில் தேனாய் பாய்கிறது.


அர்த்தநாரீஸ்வரர் சிற்பம்

ஆலய கொடி மரத்துக்கு அருகே கிழக்கு திசை நோக்கி வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரர் சிற்பம். காணக் கிடைக்காத அரிய சிற்பம்.
சூரிய பிரபையுடன் சிவன் ,விஷ்ணு, பிரம்மா என மூன்று தெய்வங்களின் சிரசுகளுடன் கூடிய எட்டு கரங்களுடன் அமைந்திருக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும்.

1. கைலாய மலையைத் தூக்கிச் செல்லும் ராவணன், 2. தேவாதி தேவர்கள் மற்றும் உயிரினங்கள் பரமனை நோக்கி வேண்டுதல், 3. ஈசன் தனது திருப்பாத பெருவிரலால் கைலாயத்தை அழுத்தும் காட்சி 4. தான் செய்த தவறை உணர்ந்து அடைக்கலம் வேண்டி வணங்கும் இராவணேஸ்வரன். ( படங்கள் ப. சரவணன்)


மெருகூட்டும் மெருகூட்டிய சிலைகள்

ஐராவதீஸ்வரர் கோயில் ராஜகம்பீர மண்டபத்தில் செப்புச் சிலைகளோ என வியக்கும் வண்ணம் கல்லால் ஆன அதிகார நந்தி, கண்ணப்பர், யோக சரஸ்வதி, மகாலட்சுமி, கங்காதேவி என தெய்வத் திருமேனிகள் மற்றொரு பொக்கிஷம்.
ஐராவதீஸ்வரர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் உள்ள தூண்களில் ஒரு அங்குலம் அளவே உடைய நர்த்தன விநாயகர், அம்மையப்பன், வேழம் (யானை), சிம்மம். தட்சிணாமூர்த்தி, பூதகணங்கள், கஜசம்ஹாரமூர்த்தி ஆகிய சிற்பங்களைக் காண கலைக் கண்கள் கோடி வேண்டும்.

குடந்தை முருகன் கோயிலில் சடாரி

ஈசனின் சிற்பங்கள்

பரம்பொருளான ஈசனின் திருவிளையாடல்களை விளக்கும் ஒரு அடி அளவே உடைய சிற்பங்களுக்கும் பஞ்சமில்லை.

மகிஷனை வதம் செய்யும் மகிஷாசூரமர்த்தினி, ராமாயண காவியக் காட்சிகள் காணக் கிடைக்காதவை.
கிருஷ்ணன் மட்டும் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்த நம் கண்கள், இங்கு சிவபெருமானும் புல்லாங்குழல் வாசிப்பதை பார்த்து மயங்கும்.
ஆடு, மாடு, யானை, சிங்கம், பன்றி ஆகிய 5 வகையான மிருகங்களின் உடல் பாகங்களைத் தாங்கிய எட்டு யாளித் தூண்களுடன் தேர் போன்று வடிவில் அமைந்திருக்கும் நூற்றுக்கால் மண்டபமும், அதை இழுத்துச் செல்லும் யானைகள், குதிரைகளின் அற்புத சிற்பங்களும் உங்களை வியக்க வைக்கும்.
திருக்கோயிலின் திருச்சுற்றில் அமைந்திருக்கும் 63 நாயன்மார்கள், 9 தொகையடியார்களின் வரலாற்றுச் சிற்பங்கள், தென்திசை நோக்கி உள்ள உதயாதி சரபர் பகவானை நரசிம்மர், தேவாதிதேவர்கள், பக்த பிரகலாதன் வணங்கும் சிற்பம் ஆகியவையும் காணத்தக்கவை.

வியப்புக்குரிய சிற்பங்கள்

ஒரே கல்லில் அமைந்த, ஒருமுக தோற்றத்தில் இரு மிருகங்களின் உடல் உருவங்கள் அமைந்திருக்கும் குஞ்சாரக் காளை (யானை மற்றும் காளை) சிற்பமும் நம்மை வியக்க வைக்கும்.
வடக்கு பிரகார திருசுற்று திருமாளிகை பத்தி மண்டபத்தில் மிக நுட்பமாக செதுக்கிய சாளரங்கள், ஆண்,, பெண் முகங்களைத் தாங்கிய யாளி சிற்பங்கள் பார்க்க வேண்டியவை.
சிவ ஆகமங்களை பின்பற்றி நெறியுடன் வாழ்ந்த தேவார பாடல்கள் பாடும் நூற்றியெட்டு பிடாரர்களின் திருஉருவங்களையும் இங்கே சிலைகளாக காணலாம்.
இன்றைக்கு ஒரு கோயிலுக்கு நீண்ட குழல் விளக்கு வாங்கித் தந்தாலும் கூட, அந்த குழல் விளக்கு பட்டையில் அன்பளிப்பாளரின் முகம் தவிர வாழ்க்கை குறிப்பையே பறைசாற்றும் விளம்பரத்தை பார்த்து சலிக்கும் நமக்கு ஒரு வியப்பு காத்திருக்கிறது.
ஆமாம்… பரதநாட்டியக் கலையின் 108 கர்ணங்களைப் படம் பிடித்து காட்டும் நடன மங்கையரின் உயிரோட்டமான புடைப்பு சிற்பங்கள் அந்த சிற்பக் கலைஞனின் கைவண்ணத்தை மட்டுமே நமக்கு காட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு வியக்காமல் என்ன செய்வது?

யுனெஸ்கோ அங்கீகாரம்

மேற்கட்டி கூரை விதானத்தில் அமைந்துள்ள சதுரம், செவ்வகம், வட்டம் என பல்வேறு வடிவமைப்புகளில் கற்றளி புடைப்பு சிற்பங்கள் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டிருப்பதும் ஐராவதீஸ்வரர் கோயில் சிறப்புகளில் ஒன்று.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை ஐராவதீஸ்வரர் கோயில் சிற்பங்களைப் பாதுகாத்து பராமரித்து வருகிறது.
மிகவும் பழைமையான , மிக நுட்பமான, சிற்பங்கள் பல தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
ஐராவதீஸ்வரர் கோயில் நிர்வாகம் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த திருக்கோயில் ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே அமைந்திருக்கும் இந்த திருக்கோயில் காலை 7 முதல் பிற்பகல் 12-30 வரையிலும், மாலை 4 முதல் இரவு 8-30 வரையிலும் திறந்திருக்கும்.
படித்தவர்கள் பார்க்கத் தவறாதீர்கள். பார்த்தவர்கள் இதன் பெருமையை மற்றவர்களுக்குச் சொல்லத் தவறாதீர்கள்.

தர்மஸ்தலா மஞ்சுநாதா ஸ்வாமி திருக்கோயில் தரிசனம்

ஐராவதீஸ்வரர் திருக்கோயில் எங்கிருக்கிறது?

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் அமைந்திருக்கும் தாராசுரம் என்ற ஊரில் Airavatheeswarar temple அமைந்திருக்கிறது.

இந்தக் கோயில் எத்தனை ஆண்டுகள் பழைமையானது?

ஐராவதீஸ்வரர் திருக்கோயில் (Airavatheeswarar temple) 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

இத்திருக்கோயில் பற்றி ஏதேனும் விரிவான ஆய்வு நூல்கள் உண்டா?

தாராசுரம் ஐராவதீஸ்வரர் திருக்கோயில் – Airavatheeswarar temple (இராசராசேச்சரம்) என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியண் எழுதியிருக்கிறார்.

குடந்தை முருகன் கோயில் வழிபாட்டில் சடாரி!

கும்பகோணம் என்றாலே காஞ்சிபுரத்தைப் போல ஒரு புகழ்பெற்ற கோயில் நகரம் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இங்குள்ள முருகன் கோயில் தரிசனத்தில் வைணவ ஆலயங்களில் மட்டுமே சாற்றப்படக் கூடிய சடாரி பக்தர்களுக்கு சாற்றப்படுவது விசேஷம்.

சடாரி என்றால் என்ன?

சடாரி என்பது திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்ட ஒரு கிரீடமாகும். இதை சடகோபம் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த கிரீடத்தின் மேல்புறத்தில் திருமாலின் திருப்பாதம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த சடாரி வைணவ திருக்கோயில்கள் அனைத்திலுமே இருக்கும்.

இறைவனை நாம் தரிசித்த பிறகு நம் தலையில் அதை வைப்பது உண்டு. இது இறைவனின் திருப்பாதங்களை நம் சிரசின் மேல் வைத்து ஆசிபெறுவதற்கு சமமாக கருதப்படுகிறது..

வைணவர்கள் இந்த திருப்பாதத்தை தலையில் வைக்கும்போது பக்தி மேலிட இறைவனை வணங்கி நிற்பதுண்டு.

சடாரிக்கு ஏன் அப்பெயர் வந்தது?

சடகோபன் என்பவர் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடியதால் நம்மாழ்வாராக பக்தி மார்க்கத்தில் அறியப்படும் ஒரு துறவி.
வைணவர்கள் நம்மாழ்வாரே திருமாலின் திருவடியாக இருப்பதாகவும் நம்புகிறார்கள். அதன் இந்த சடாரியை சடகோபம் என்றும் நம்மாழ்வார் பெயரில் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில்
ஒரு முறை வைகுண்டத்தில் மகா விஷ்ணு சயனம் கொள்ள சென்றார். அன்றைக்கு அவர் வழக்கத்துக்கு மாறாக தன்னுடைய பாதுகைகளை அகற்றாமலேயே ஆதிசேஷன் மீது சயனம் மேற்கொண்டார்.
அந்த நேரத்தில் முனிவர்கள் தன்னை பார்க்க காத்திருக்கும் தகவலை அறிந்த பகவான், ஆதிசேஷன் தலையிலேயே பாதுகைகளை மறந்து வைத்து விட்டு அவர்களை பார்க்கச் சென்றார்.
அவர் அந்த இடத்தை விட்டு சென்றதும், ஆதிசேஷன் மீது இருந்த திருமுடியும், சங்கும், சக்கரமும் அந்த பாதுகைகளைத் தூற்றத் தொடங்கின.

பாதுகையை தூற்றிய திருமுடி, சங்கு, சக்கரம்

பகவானின் திருமுடியை அலங்கரிக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். பகவானின் கரங்களை அலங்கரிக்கும் சங்கும், சக்கரமும் கூட தகுதியானவை.

ஆனால் பகவானின் பாதங்களை சுமக்கும் நீ எப்படி ஆதிசேஷன் தலையில் இருக்க முடியும்? என்று திருமுடி தூற்றியது.
ஒருகட்டத்தில் அவர்கள் மூவரின் தூற்றலையும் தாளாது ஆதிசேஷன் தலையில் இருந்து பாதுகைகள் நழுவி விழுந்தன.
இறைவன் திரும்பி வந்தபோது, பாதுகை நிலைகுலைந்து போயிருப்பதைப் பார்த்த பகவான், கர்வத்தால் உனக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அறிவேன்.
எனது பார்வையில் இந்த அண்டத்தில் இருப்பவை அனைத்தும் ஒன்றே. இதை அறியாதவர்களாக சங்கும், சக்கரமும், திருமுடியும் இருப்பதையும் உணர்வேன்.
அதற்கான தண்டனையை பின்னாளில் அவர்கள் அனுபவிப்பார்கள் என்று சொல்லி பாதுகையை சமாதானம் செய்தார்.

ராமாவதாரத்தில் பாதுகை

இறைவனின் இந்த சாபம் காரணமாகவே, திரேதா யுகத்தில் ஸ்ரீராமாவதாரத்தில் சங்கும், சக்கரமும் பரத, சத்ருக்னனாக பிறந்தன. ஆதிசேஷன் இலக்குவணனாக பிறந்தது. அந்த பிறவியிலும் பாதுகை ராமனை தாங்கி நின்றது.
தந்தையின் வார்த்தைகளைக் காப்பாற்ற மரவுரி தரித்து ஸ்ரீராமன் வனவாசம் புறப்படுகிறார்.
அண்ணலுக்கு பணி செய்வதே என் கடன் என்று சீதையும் உடன் புறப்படுகிறாள். அண்ணனுக்கு பணி செய்வதை தன் கடமையாக கருதிய லட்சுமணனும் உடன் செல்கிறான்.
தம்மை நாடி வருவோரின் பாவங்களைத் தீர்க்கும் கங்கை நதியின் கரையை அடைந்த ராமனை வரவேற்க குகன், தன்னுடைய பரிவாரங்களுடன் காத்திருக்கிறான்.
என்றுமே மனதில் சஞ்சலம் புகாத ராமனின் மனதில் ஏதோ குழப்பம் ஏற்படுகிறது. தனக்கு ஏற்பட்ட தர்மசங்கடத்தை எப்படி சமாளிப்பது என்பதுதான் அவனுடைய குழப்பத்துக்கு காரணம்.

அந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது பரதனின் வரவும், கண்ணீர் மல்க அண்ணனின் காலைப் பிடித்து தொழுத நிலையும்தான்.

பாதுகைக்கு கிடைத்த மரியாதை

தன்னுடைய தாயின் சதியால், காட்டுக்கு ராமன் வந்த நிலையில், அயோத்தியை ஆள தனக்கு என்றைக்கும் உரிமை இல்லை.
தமையனுக்கு மட்டுமே அந்த உரிமை இருக்கிறது. எனவே நான் அரியாசனம் ஏற்க விரும்பவில்லை என்று அவனும் ராமன் சென்ற காட்டுப் பகுதிக்கு வருகிறான்.
எண்ணில் கோடி ராமர்கள் என்னிலும் அண்ணல் நின் அருளுக்கு அருகாவரோ என்று கம்பன் வரிகள் கம்ப ராமாயணத்தில் பார்க்க முடிகிறது.
ராமபிரான் நாடு திரும்பி அயோத்தி சிம்மாசனத்தை ஏற்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறான். ஆனால் பரதனின் வேண்டுகோளை ஏற்பது பொருத்தமன்று. அப்படி ஏற்றால், தந்தையின் வாக்கை காப்பாற்ற முடியாது என்பதை பரதனுக்கு புரிய வைக்கிறான்.

குழப்பம் தீர்ந்தது

அதேநேரம் பரதனும் நாடு திரும்ப விரும்பவில்லை. சிக்கலான இந்த நிலையில்தான் ராமன் மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது.
அதற்கு ஒரு தீர்வும் கிடைத்தது. பரதன் ராமபிரானின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டான். தன் தலை மீது வைத்து அயோத்தி எல்லையில் இருந்த நந்தி கிராமத்துக்கு வந்தான்.
ராமன் துறந்த திருமுடியை சிம்மாசனத்தின் மீது வைத்தான். அதன் மேல் ராமபிரானின் பாதுகைகளை வைத்து பட்டாபிஷேகம் செய்தான். ராமனுக்காக அவனின் சேவகனாக அயோத்தியை ஆட்சிபுரியத் தொடங்கினான்.
ஸ்ரீவைகுண்டத்தில், பாதுகைகளை இழிவுபடுத்திய சங்கு, சக்கரம் ராமனின் பிறப்பில் தம் தலையில் சுமக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதுவே பாதுகைகளை திருமுடி மீது வைத்ததற்கு காரணமாக அமைந்தது.

குடந்தை முருகன் கோயிலில் சடாரி

கும்பகோணம் மகாமக குளத்தில் மகாமக தீர்த்தவாரி நடைபெறுவதை ஆன்மிக பக்தர்கள் அறிந்த ஒன்று.
அருள்மிகு ஸ்ரீசோமகலாம்பிகை சமேத ஸ்ரீவியாழ சோமேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் அமைந்திருக்கும் முருகன் சந்நிதிக்கு ஒரு சிறப்பு உண்டு.
வைணவக் கோயில்களில் மட்டுமே பக்தர்கள் தலையில் வைக்கப்படும் சடாரி முருகன் சந்நிதியில் வைக்கப்படுவதுதான் இங்கு விசேஷம்.

இதை உள்ளூர் பக்தர்கள் தவிர மற்றவர்கள் அறிந்திருப்பது மிகக் குறைவே. முருகன் சந்நிதியில் மாதம்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் இந்த சடாரி பக்தர்களுக்கு வைக்கப்படுகிறது.

தமிழகத்திலேயே முருகன் கோயில் ஒன்றில் சடாரி வைக்கப்படுவது இங்கு மட்டுமே. வேறு எந்த முருகன் கோயில்களிலும் இப்படி சவாரி வைக்கப்படுவதில்லை.

மேலும் சில சிவன் கோயில்கள்

இதேபோன்று சடாரி வைக்கப்படும் சிவன் கோயில் தமிழகத்தில் காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திரு நல்லூர் ஆலயங்களில் வைக்கப்படுகின்றன.
தமிழகத்தை ஒட்டியுள்ள ஆந்திர மாநிலத்தில், காளஹஸ்தி திருக்கோயில், சுருட்டப்பள்ளி கோயில் ஆகியவற்றில் சடாரி சாற்றப்படுகிறது.
எல்லா திருக்கோயில்களிலும் விஷ்ணு பகவானின் பாதங்கள் பொறிக்கப்பட்ட சடாரியே வைக்கப்படுகிறது. ஆனால், வானமாமலை திருத்தலத்தில் மட்டும் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது.

சடாரியின் தத்துவம்

ஸ்ரீவைகுண்டத்தில் பகவானின் பாதுகை அவமானப்படுத்தப்பட்டது. அதனால் ராமாவதாரத்தில் அந்த பாதுகை மன்னரின் சிம்மாசனத்தில் வீற்றிருந்தது. இதை நினைவுபடுத்தவே பெருமாள் கோயில்களில் நமக்கு சடாரி வைக்கப்படுகிறது.
இறைவன் முன் அனைவரும் சமம். அவருடைய சந்நிதியில் பணக்காரன், ஏழை, உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற பாகுபாடுகளைக் காட்டக் கூடாது என்ற தத்துவத்தையே இந்த சடாரி போதிக்கிறது.

வியாத கீதை சொல்லும் தத்துவம் என்ன?

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்

வியாத கீதை சொல்வதென்ன?

வெ நாராயணமூர்த்தி

மார்க்கண்டேய முனிவர் மூத்த பாண்டவ இளவரசனான தர்மராஜனுக்கு வியாத கீதையை (vyadha gita) சொன்னதாக ஸ்ரீமத் மஹாபாரத புராணம் கூறுகிறது. வியாத கீதை நமக்கு சொல்லும் கருத்துக்கள் மிக ஆழமானவை என்பதோடு மிக மிக அழுத்தமானவையும் கூட.

வியாத கீதை நமக்கு கதை வடிவில் அமைந்திருந்தாலும், அதை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் நமக்கு ஒரு நம் கடமையை உணர்த்துகிறது.

கௌசிகன் தவம்

குருகுலத்தில் வேதசாஸ்த்ரங்களைப் பயின்ற இளைஞன் கௌசிகன் உயர்நிலை ஞானத்தைத் தேடுவதில் நாட்டம் கொண்டான்.

துறவறம் மேற்கொள்வது என்று முடிவு செய்தான். தன் வயதான பெற்றோர்கள் எவ்வளவோ தடுத்தும், அவர்களின் ஏக்கத்தையும், துக்கத்தையும் அறிவுரைகளையும் கவனத்தில் கொள்ளவில்லை.

பெற்றோர்களுக்குத் தான் ஆற்றவேண்டிய கடமை, பொறுப்புகளையும்
பொருட்படுத்தாது வீட்டை விட்டு அவன் வெளியேறினான்.

நீண்ட பயணத்துக்குப் பின் ஒரு காட்டிற்குச் சென்று கடும் தவம் மேற்கொண்டான். நாட்கள் கடந்தன. தன்னை மறந்தான், இந்த உலகை மறந்தான். எண்ணங்கள் ஒருநிலை
கொள்வதையும் தவத்தின் பயனையும் உணர்ந்தான். மெல்ல சகஜ நிலைக்குத் திரும்பினான்.

தவத்தின் வலிமையை அறிந்த கௌசிகன்

ஒரு நாள் ஒரு பெரிய மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருந்தபோது அவன் தலைக்கு மேல் இருந்த ஒரு கிளையில் ஒரு கொக்கு பறந்து வந்து அமர்ந்தது.

சிறிது நேரத்தில் அந்தப் பறவை எச்சமிட்டது. அது கீழே அமர்ந்திருந்த கௌசிகன் மேல் விழுந்தது. தியானம் கலைந்தது. அண்ணாந்து பார்த்த கௌசிகனுக்கு கோபம் கொப்பளித்தது.

தான் எவ்வளவு பெரிய தவ வலிமைகளைப் பெற்று வருகிறேன்? இந்தப் பறவை என் மீது எச்சமிடுகிறதே என்று எண்ணி அதை உற்றுநோக்கினான் கௌசிகன்.

ஒன்றும் அறியாத அந்தக் கொக்கு எரிந்து சாம்பலானாது. இதைக் கண்ட கௌசிகனுக்கு ஒருபுறம் ஆச்சர்யம், மறுபுறம் பெருமிதம்.

தனக்கு இவ்வளவு பெரிய சக்தி கிடைத்துவிட்டதா? தன் தவ வலிமையால் அந்தப் பறவைக்கு
நல்ல புத்தி புகட்டி விட்டோம் என்ற கர்வம் அவன் தலைக்கேறியது.

பசியால் காத்திருந்த சோகம்

அந்தக் காலத்தில் தவசிகள் தங்கள் அருகில் இருக்கும் கிராமங்களுக்குச் சென்று பிக்க்ஷை எடுத்து, கிடைக்கும் உணவை உண்டு தவத்தைத் தொடர்வது வழக்கம்.

இந்த நிலையில், பசியை உணர்ந்த கௌசிகனும் அருகிலுள்ள கிராமத்துக்கு புறப்பட்டான். ஒரு வீட்டிற்கு எதிரில் நின்று, ‘பவதி, பிக்க்ஷாந்தேஹி’ என்று குரல் கொடுத்தான்.

சிறிது நேரத்தில் அந்த வீட்டுப் பெண்மணி ஒரு பாத்திரத்தில் அன்னம் கொண்டு வருவதைக் கண்டான்.

அந்த நேரம் பார்த்து, அந்தப் பெண்மணியின் கணவனும் களைப்புடன் வீடு திரும்பினான்.

உடனே பெண்மணி கௌசிகனைப் பார்த்து, ‘ஸ்வாமி சிறிது பொறுத்துக் கொள்ளுங்கள். இதோ வருகிறேன்’ என்று சொல்லி விட்டு, தான் கொண்டுவந்த அன்னத்தோடு வீட்டினுள் சென்றுவிட்டாள்.

நேரம் கடந்தது. காத்திருந்த கௌசிகனுக்கோ பசி. பசியால் கோபம். அதோடு சேர்ந்து அந்தப் பெண்ணினால் ஏற்பட்ட அவமானம்.

கோபத்தின் உச்சியில் கௌசிகன்

மீண்டும் குரல் கொடுத்தான் கௌசிகன். பதில் இல்லை. ‘இது என்ன விசித்திரம், இந்தப் பெண் என் தவ வலிமை தெரியாமல் என்னிடம் விளையாடுகிறாளே, இப்படி காக்க வைக்கிறாளே’ என்று பொருமினான். ஆத்திரம் தலைக்கேறியது.

பொறுமை இழந்து, ‘பெண்ணே அன்னம் தரப்போகிறாயா இல்லையா?’ என்று உரக்க கத்தினான். இன்னும் கால தாமதம் ஆனது.

சிறிது நேரம் கழித்து, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்தப் பெண், ‘ஸ்வாமி, இதோ வந்துவிட்டேன்’, என்று அன்னம் கொண்டு வந்தாள்.

அவளை பார்த்ததும் கண்கள் சிவக்க கௌசிகன் – ‘பெண்ணே, கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் இப்படி தவமுனிகளைக் காக்க வைக்கலாமா? உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று கண்களை அகல விரித்து அவளை உற்று நோக்கினான்.

கௌசிகனுக்கு விழுந்த அடி

அந்தப் பெண்ணோ சிறிதும் கலக்கமின்றி, கௌசிகனை பார்த்து ‘என்னை என்ன அந்தக் கொக்கு என்று நினைத்துக் கொண்டீரா முனிவரே, நீங்கள் பார்த்ததும் நான் சாம்பலாக?’ என்றாள் சிரித்துக்கொண்டே.

துணுக்குற்று ஆத்திரத்தில் இருந்து விடுபட்டான் கௌசிகன். காட்டில் நடந்தது இந்தப் பெண்ணுக்கு எப்படி தெரிந்தது? என்று ஆச்சர்யத்துடன் வாயடைத்துப் போய் அந்த பெண்ணை பார்த்தான்.

முதலில் கடமை அதன் பிறகே தர்மம்

‘ஸ்வாமி, களைப்புடன் வீடு திருப்பிய என் கணவனுக்கு ஸ்ரமபரிகாரம் செய்வித்து அவருக்கு உணவளித்து கவனித்துக் கொள்வது என் கடமை. குடும்பமே என் கடவுள்.

பக்தியுடன் நான் செய்யும் பணிவிடையே பத்தினி தர்மம். முதலில் என் கடமை, பொறுப்பு, பிறகுதான் தான தர்மம் எல்லாம்.

என் கணவனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கொஞ்சம் கால தாமதம் ஆகிவிட்டது. ஞான மார்க்கத்தில் இருக்கும் நீர், இது கூட தெரியாமல் கோபப்படுவது எந்த வகையில் நியாயம் என்று நினைத்து பார்த்தாயா?’ என்று அவள் கேட்ட கேள்வி கௌசிகனை உறைந்துபோகச் செய்தது.

தர்மவ்யாதனிடம் சென்று கேள்

தன்னிலை திரும்பிய கௌசிகன், சுதாரித்துக் கொண்டு, ‘சரி பெண்ணே, நீ சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன். எனக்குப் பசியும் தணிந்துவிட்டது. முதலில் இதைச் சொல். நான் பறவையை பஸ்மமாக்கிய சம்பவம் உனக்கு எப்படி தெரிந்தது? என்று பவ்வியமாகக் கேட்டான் கௌசிகன்.

‘அது தெரிய வேண்டுமானால், அருகில் உள்ள மிதிலா நகரத்தில் வசிக்கும் தர்மவ்யாதனிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்’, என்று சொல்லியனுப்பினாள்.

மிதிலை நோக்கி பயணம்

கௌசிகனுக்கு பசி மறந்தது. கோபம் பறந்து போனது. தன்னிலையை உணர்ந்தான். கர்வம் கரைந்தது. யார் இந்த தர்மவ்யாதன்? என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் மேலிட்டது. மிதிலையை நோக்கி பயணமானான்.

சில நாட்கள் பயணித்து, அந்த நகரைச் சென்றடைந்து, தர்மவ்யாதனைப் பற்றி வினவினான். என்ன ஆச்சர்யம், அனைவருக்கும் தெரிந்த நபராக இருந்தார் தர்மவ்யாதன்.

‘இந்த நகரின் ஒதுக்குப் புறமான பகுதியில் அவரின் கடை இருக்கிறது’ என்று மிகுந்த மரியாதையுடன் அடையாளம் சொன்னார்கள். ஒரு வழியாக கண்டுபிடித்து அங்கே சென்றபோது, அது கசாய் கடைகள் நிறைந்த பகுதி என்பதை கண்டு துணுக்குற்றான்.

எங்கு பார்த்தாலும் மாமிசங்கள் குவிந்து கிடந்தது. குமட்டிக்கொண்டு வந்தது கௌசிகனுக்கு.

தர்மவ்யாதன் கடையிலோ கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆனாலும் முனியைப் பார்த்ததும்
நமஸ்கரித்து, ‘ஸ்வாமி, அந்தப் பத்தினி தங்களை இங்கு அனுப்பினாளா?’ என்று
சாதாரணமாக வினவ, கௌசிகன் மலைத்துப் போனான்.

இது எப்படி சாத்தியம்?

‘ஆண்டவா, இது என்ன விந்தை? இது எப்படி சாத்தியம்? ஒரு சாதாரண சாய்க்காரனுக்கு
தன் கதை எப்படி தெரிகிறது?’ என்று குழம்பிப் போனான் கௌசிகன்.

‘முதலில் என் வாடிக்கையாளர்களை கவனித்துவிட்டு பிறகு உங்களிடம் பேசுகிறேன். மாலை வரை காத்திருக்க முடியுமா? என்றான் தர்மவ்யாதன் பவ்யமாக.

உண்மையை தெரிந்துகொள்ளும் வரை எக்காரணம் கொண்டும் கோபப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையாக இருந்த கௌசிகன், சரி என்றான்.

இது என்ன புதுவகையான, தான் கற்றிராத, கேள்விப்படாத ஞானம்? ஒரு சாதாரண பெண் காட்டில் நடந்ததைச் சொல்கிறாள். இந்த கசாய்க்காரான் அவளைப் பற்றி சொல்கிறான். இதில் புதைந்துள்ள உண்மையைத் தெரிந்துகொள்ளாமல் விடப்போவதில்லை என்று மனதில் உறுதியோடு காத்திருக்கத் தொடங்கினான்.

தெய்வீக மகிழ்ச்சி எப்படி?

மாலை வந்தது. தன் பணிகளை முடித்துக் கொண்ட தர்மவ்யாதனுடன் அவன் வீட்டிற்குச் சென்றான கௌசிகன். அங்கேயும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

தர்மவ்யாதன் குளித்துவிட்டு, பூஜைக்காரியங்களை செய்து முடித்தான். அடுத்து தன் பெற்றோரின் தேவைகளை பூர்த்தி செய்தான். மனைவிக்கு சமையல் உதவிகளை செய்தான்.

கடைசியில், தன் குழந்தைகளைக் கொஞ்சிக்கொண்டே வெளியே வந்து கௌசிகனை சந்தித்தான்.

தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இளம் முனியை அறிமுகம் செய்தான். அழகான மனைவி, மக்கள், தாய், தந்தை. மகிழ்ச்சியான குடும்பம்.

அன்பும், பண்பும், அமைதியும் ததும்பும் குடும்பம். சமுதாயத்தில் மிகத் தாழ்ந்த குலமாகக் கருதப்பபடும் கசாய்தொழில் செய்யும் ஒருவன் குடும்பத்தில் இப்படி ஒரு தெய்வீக மகிழ்ச்சியா?

இதை கௌசிகன் தன் கண்களால் நம்பமுடியவில்லை!

கர்ம வினை

உணவு உண்ட பிறகு இருவரும் பேசத் தொடங்கினார்கள். ‘என்னைப் பற்றி முன்பின் தெரியாத உங்களுக்கு என் கதை எப்படி தெரிந்தது? அந்தப் பெண்ணைக் கேட்டால் உங்களைக் கேட்கச் சொல்கிறாள் என்றான் அப்பாவியாக.

இப்போது தர்மவ்யாதன் பேசத் தொடங்கினான்.

முன்னொரு பிறவியில் நீங்கள் ஒரு பழுத்த முனியாக இருந்தீர்கள். எனக்கும், அப்போது என் மனைவியாய் இருந்த, நீங்கள் சந்தித்த அந்தப் பெண்ணிற்கும் நீங்கள் சாபமிட்டீர்கள்.

அதனால் நான் இந்தப் பிறவியில் இந்த குலத்தில் பிறந்தேன். அவள் இன்னொரு குடும்பத்தில் பிறந்தாள். இது என் கர்ம வினை. ஆனாலும் நான் முற்பிறவியில் செய்த புண்ய பலனால் நல்ல பெற்றோர்களையும், மனைவி மக்களையும் அடைந்திருக்கிறேன்.

கடமைகள் முக்கியம்

இந்தப் பிறவியில் மாமிச வியாபாரம் என் குலத் தொழில். நானாக விலங்குகளை
அழிப்பதில்லை, நானும் என் குடும்பத்தாரும் மாமிசம் உண்ணுவதும் இல்லை.

இதில் நான் தொழில் தர்மத்தை கடைப்பிடிக்கிறேன். யாரையும் ஏமாற்றுவதில்லை. அதிக லாபத்தையும் நாடுவதில்லை.

சம்பாதிப்பதில் நிறைய தானம் செய்கிறேன். எப்போதும் உண்மையையே பேசுகிறேன். சதா நல்லவைகளையே நினைக்கிறேன், செய்கிறேன்.

பெற்றோர்களுக்கும், மனைவி மக்களுக்கும் ஆற்றவேண்டிய கடமைகளிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் ஒரு போதும் நான் தவறுவதில்லை.

செய்யும் தொழிலே எனக்கு தர்மம். என் வாடிக்கையாளர்களையும், மற்றவர்களையும் நான் கடவுளாகவேப் பார்க்கிறேன், வணங்குகிறேன்.

ஸ்வதர்மம்

அவர்களுக்குச் சேவை செய்கிறேன். இது ஷிவக்யான ஜீவ சேவை. அனைத்து ஜீவன்களையும் நானாகவும், என்னுள் இருக்கும் கடவுளாகவே ஆராதிக்கிறேன். இது என் தர்மம். என் தவம்.

இந்த நிலையிலேயே ஒன்றிப்போனதனால் அனைத்தையும் என்னால் உணர முடிகிறது. நடந்தது, நடப்பது, நடக்கப்போவது எல்லாவற்றையும் அறிய முடிகிறது. எனக்குக் கிடைத்த வரப்ரசாதம்.

என்னைப் போலவே, நீங்கள் ஏற்கெனவே பார்த்த அந்தப் பத்தினியும் இந்தப் பிறவியில் தன் குடும்பத்தில் தர்ம நெறி தவறாது வாழ்க்கை நியதிகளைக் கடைப்பிடிக்கிறாள்.

அதனால் அவளால் எல்லாவற்றையும் உணர முடிகிறது. நீங்கள் இட்ட சாபத்துக்கு பரிகாரமாக, எங்கள் இருவரிடமும் நீங்கள் இந்தப் பிறவியில் இப்போது தீட்க்ஷை பெறவேண்டியுள்ளது. இதுவே ஸ்வதர்மம். இது எழுதப்பட்ட விதி.

தர்மமே தானம்

எந்தக் குலமும், எந்தப் பிறப்பும், எந்தத் தொழிலும் கேவலமுமில்லை, கொடூரமுமில்லை,
அசிங்கமுமில்லை. நாம் அணுகும் விதத்தைப் பொறுத்து அது பவித்ரமடைகிறது.

நீங்கள் கடைப்பிடிக்கும் தர்ம மார்க்கமே உமக்கு வழிகாட்டும் ஞானம். தர்மமே ஞானம். ஞானமே இறைநிலையை உணரும் தூண்டுகோல். இதை உணர்ந்தால் அனைத்தையும் உணரலாம்.
உலகத்தை துறக்கத் தேவையில்லை. காட்டுக்கும் போகத் தேவை இல்லை. தவமும் தேவை இல்லை.

உலகைவிட்டு விலகி தேடிப் போவதல்ல ஞானம், உலகத்தையே சத்யமாக, ஞானமாக,
தர்மமாக, இறையருளாக உணருவது, என்று அமைதியாக போதித்தான் தர்மவ்யாதன்.

பெற்றோரிடம் திரும்பிச் சென்ற கௌசிகன்

தெளிவடைந்த கௌசிகன் தன் வீட்டிற்குத் திரும்பி, தன் பெற்றோர்களை கண்ணும்
கருத்துமாய் பேணத் தொடங்கினான்.

கடமையையும், பொறுப்பையும் ஸ்ரத்தையோடு செய்வதே தர்மம், ஸ்வதர்மமே மெய்ப்பொருள், இதுவே தான் தேடிய ஞானம் என்பதை உணர்ந்தான்.

வியாத கீதை

வியாத கீதை என இந்த உபதேசத்திற்கு பெயர் வைத்திருப்பதற்கும் ஒரு காரணம். வியாதன் என்றால் கசாய்கடைக்காரன் என்று அர்த்தம். அதனால்தான் வியாத கீதை என்று பெயர் பெற்றது.

தான் ஒரு கசாய்கடைக்காரனிடம் பெற்ற ஞானத்தை, வியாத கீதை என்ற பெயரில் ஒரா காவியமாக கௌசிகன் படைத்தான்.

வியாத கீதையை வ்யாத கீதை என்றும் அழைப்பதுண்டு. வியாத கீதை நல்லுபதேசங்கள் நம்முடைய கடமையும், பொறுப்பையும் செய்தால் தானாகவே ஞானம் வந்தடையும் என்பதை வலியுறுத்துகின்றன.

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

வெ நாராயணமூர்த்தி 

மிகப் பழைமையானவை என்றாலும் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் இன்றைய தலைமுறைக்கும் பொருந்தும். ஒழுக்கநெறி பண்புகள் இன்றைய நவீன வாழ்க்கைக்கு அவசியம் தேவைப்படுகிறது.

செல்வத்தை மட்டுமே குறியாகத் தேடும் கலாசாரத்தை ஏற்று உலகமே வேகமாக மாறிவரும் நிலையில், இன்றைய இளைய தலைமுறையை பாதுகாப்பது எதுவாக இருக்கும் என்பது பலரும் கேட்கும் கேள்விகளில் ஒன்று.

இதைத்தான் என்னிடம் ஒரு இளம் நண்பர், வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை பண்புகள் இந்த நவீன காலத்துக்கு எப்படி பொருந்தும்? என்று என்னைக் கேட்டார்.

இது நான் மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறையினர் எழுப்பும் கேள்வி’ என்றார் அவர். 

இளையத் தலைமுறை கேள்விக்கு என்ன பதில்

முக்கியமான கேள்வி. பதில் சொல்கிறேன், கவனமாகக் கேள், என்றேன்.

காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி பயனடைந்து வந்த வேத சாஸ்திரங்களுக்கு, இந்த பாரம்பரிய கலாசார வழிகாட்டிகளுக்கு, ‘இக்கால நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி விட்டார்கள்.

அவைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ நம் இளையத் தலைமுறையினர் தயங்குகிறார்கள்.

அனைத்து கலாசாரங்களும் சங்கமித்து ‘உலகமயமாகி’ வரும் இந்தக் காலத்தில் வேதமாவது, பண்டைய கலாசாரமாவது! என்று அவர்கள் எள்ளி நகையாடுவது நம் கண்கூடாகக் காணும் ஒரு சோக நிகழ்வு.

துரதிஷ்டம்

உலகத்துக்கே ஆன்மீக வாழ்வியல் தத்துவத்தை பறைசாட்டிய இந்த மண்ணில், வேகத்தையும், சுயநலத்தையும் பொருளாதார உயர்வை மட்டுமே மையமாகக் கொண்ட போக்கு காணப்படுகிறது.

தனிமனித-சமுதாய தர்ம ஒழுக்கநெறிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் இந்த நவீன வாழ்வியல் மாய தத்துவத்தை, நம்  இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டது துரதிருஷ்டம்.

இந்த நிலைக்கு நாம் அனைவரும் ஒருவகையில் காரணம் என்று நினைக்கிறேன். உண்மையான ஆன்மீகக் கல்வியையும், வாழ்வியல் பண்புகளையும் அவைகளுக்குள்ள நெறிமுறை மேம்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தரும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர தவறிவிட்டோம்.

பெற்றோர்கள் என்ற வகையில் நாமும் தெரிந்து கொள்ளும் வாய்பை இழந்து விட்டோம்.
இப்போதாவது இந்தத் தவறை உணர்ந்து இந்த நிலைமையை சரி செய்ய முயல்வது நாம் அனைவரின் சமுதாயக் கடமையாகும்.

தெரிந்துகொள்வோம்

முதலில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். வேதங்கள் சூத்திரங்களாலும், கவிநயம் கொண்ட பாடல்களாலும், செய்யுள் நடைகளாலும் ஆனவை.

காலங்களைக் கடந்தது. இந்த உலகைப் படைத்த பரம்பொருள் அருளியது. தனிமனித, சமுதாய வாழ்வியல் தத்துவக் களஞ்சியம் இவை. வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம் அற்புதமானவை.

எப்போது அருளினார்? உயிரினங்கள் தோன்றியபோது! 

அது எப்போது? விவரிக்கமுடியாத ஒரு காலத்தில்! மனிதன் யோசிக்கத்தொடங்கும் முன்!! பல ‘யுகங்களுக்கு’ முன்னால் என்று சொல்லலாம்.

காலப்போக்கில் பல அழிந்தன

அக்காலத்தில் வந்த ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் வேதங்களை உணர்ந்து, உள்வாங்கி அவைகளுக்கு விளக்கம் அளிக்க எளிய நடையில் பாசுரங்களை (உபநிஷத்துக்கள்) எழுதினர்.

அவைகளில் ஒரு பகுதி  குருகுல (குரு-சிஷ்ய பாரம்பரிய) வழியில் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இன்றும் நம்மிடையே வலம் வந்துகொண்டிருக்கிறது.

பெரும்பாலானவை பாதுகாக்கப்பட முடியவில்லை. காலப்போக்கில் அழிந்துபோனது. 

வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்

வேதங்களின் சாராம்சம் வேதாந்தம். இது என்ன? நாம் அனைவரும் தெய்வத்தால்
படைக்கப்பட்டவர்கள். தெய்வீகமானவர்கள்.

‘நம் வாழ்வின் பயனே இந்த தெய்வீகத்தை உணர்வதுதான்’. அதே போல மற்ற உயிர்களில் உள்ள அதே தெய்வீகத்தையும் உணர்வது.

நம்மை உணர்ந்தால், உலகையும் அதன் பின்னணி உண்மையையும் உணரலாம். நம்மைப் படைத்த பரமனை உணரலாம். பிறவிப் பயனை அடையலாம். இந்த உன்னத நிலையை உணர்வதற்கான வழிமுறைகளைத்தான் வேதாந்தம் சொல்கிறது. இதுதான் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

மூன்று நிலைகள் எவை?

நம் ஐந்து புலன்கள் வழியாக நமக்கு ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த உலகை தெரிந்து கொள்ளும் வழி ஆரம்ப நிலை (பிரதிக்க்ஷை அனுபவம்).

ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நம் புத்தியைப் பயன்படுத்தி சில அனுபவங்களைப் பகுத்தறிவது அடுத்த நிலை (பரோக்க்ஷ அனுபவம்).

இந்த இரண்டு அனுபவ நிலைகளும் இல்லாமல், இந்த இரண்டு நிலைகளையும் தாண்டி சில அனுபவங்களை (ஐம்புலன்களையும், புத்தியையும் பயன்படுத்தாமல்) நேரடியாக உணர்வது மூன்றாம் நிலை (அபரோக்க்ஷ அனுபவம்).

இந்த மூன்று நிலைகளும் நம்மையும், நம்மை சுற்றி நடக்கும் இந்த உலகைப் பற்றியும் அதையும் கடந்து நம் எல்லோரையும் இயக்கும் மஹா சக்தியை உணரக்கூடிய வழிகள் என்று வேதாந்தம் கூறுகிறது.

தேடலுக்கான சில வழிகள் எவை?

அத்வைதம், விசிஷ்ட அத்வைதம், த்வைதம் ஆகிய மூன்று சித்தாந்த வழிமுறைகளில்
உணரலாம் என்பது பிற்காலத்தில் வேதங்களுக்கு விளக்கம் அளித்த குருமார்கள் சொன்னார்கள்.

ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வர் ஆகியோரது கருத்து. இதைத்தான் உண்மையான ஆன்மிகம் என்று வகைப்படுத்தினாலும் இது நம்மையும் நம்மைப் படைத்தவனையும் தேடும்  உண்மையான ‘தேடல்’.

தவம், பக்தி, மந்த்ரங்கள், ஜபம், யோகம், யாகம், ஹோமம், பூஜைகள், குரு சேவை
போன்றவை இந்தத் தேடலுக்கான சில வழிகள்.  ஆனால் இது எளிதல்ல. இங்கேதான் பிரச்னை தொடங்குகிறது.

உலகை அடையாளம் காட்டுவது எது?

நாம் பார்க்கும், உணரும் இந்த உடல் வெறும் தசையாலும், எலும்பாலும், ரத்தாலும் மட்டுமே ஆனது அல்ல.

இதற்குள்ளே இன்னும் நான்கு கூடுகள் (கோஷங்கள்) உள்ளன. இந்த உடல்
‘அன்னமய கோஷம்’. உணவால் ஆனது.

அடுத்த அடுக்குகளாக உடலை இயக்கக்கூடிய ப்ராணமய கோஷம், எண்ணங்களையும் உணர்வுகளைக் கொண்ட ‘மனோமய கோஷம்’, தேவை-தேவை இல்லாதவைகளை முடிவு செய்யும் (புத்தி) ‘விஞ்ஞானமய  கோஷம்’. இவைகளுக்கும் உள்ளே ஆதியாக, அமைதியும் ஆனந்தமும் தாண்டவமாடும் ‘ஆனந்தமய கோஷம்’.

இந்த ஐந்து கூடுகளையும் விட்டு விலகி, இவைகளின் நடவடிக்கைகளை ஒளிர்வித்து, இந்த ஐந்து கோஷங்களின் வழியாக உலக அனுபவங்களை அடையாளம் காட்டுவது சதா ஸ்வயப்பிரகாசமாக  ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆத்மன்.

நொடியில் உணர எது தேவை?

இதுவே களங்கமில்லாத, அழிவில்லாத, நம் உண்மையான சொரூபம்-பரப்ரம்மம். இது வேதங்கள் சொல்வது. இந்த உன்னத நிலையை உணர, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்து உணர்பவர்களும் உள்ளனர்.

ஒரு ப்ரம்ம குருவின் உதவியுடன் ஒரே நொடியுள் உணர்ந்தவர்களும் உள்ளனர். பரப்ரம்ம சொரூபத்தை உணர வேதாந்தம் பல நெறிமுறைகளை, ஒழுக்கப் பண்புகளை, வாழ்வியல் தத்துவங்களை பட்டியல் போட்டு காட்டுகிறது. இதுதான் வேதங்கள் சொல்லும் வாழ்க்கை ரகசியம்.

அவைகளில் முற்றும் உணர்ந்த ஒரு குருவின் துணையோடு இந்த ஆன்மீகத் தேடலை மேற்கொள்வதே எளிமையான வழி.

சாத்தியமானதா?

யோசித்துப் பாருங்கள். நாமே வேத சாராம்ஸங்களை கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு உணர்ந்து தெளிவடைவது என்பது இந்தப் பிறப்பில் சாத்தியமா என்று கூட நமக்குத் தெரியாது. 
இப்படி கஷ்டப்பட்டு எதற்கு உணரவேண்டும்? நமக்குள் மறைந்து இருக்கும் இறைநிலையை
உணருவதால் என்ன பயன்? இத்தகைய வேத நெறிமுறைகள் எளிமையானவை அல்ல. நம் மேல்
நம்மைப் படைத்தவனுக்கு அக்கறை இருந்தால், இந்த உணர்வை அவரே தரட்டுமே? நாம் ஏன்
தேடிப்போகவேண்டும்?

மேலும் தற்போது இவைகளை கற்றுத்தரவோ யாரும் இல்லை, கற்றுக்கொள்ளும் பக்குவமும்  நேரமும்  நமக்கு இல்லை.

அதையும் தாண்டி, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் இவை எப்படி பயனளிக்கும் என்பதுதான் இப்போதுள்ள இளையதலைமுறையின் கேள்வி.

எது நிலைத்தடுமாற வைக்கிறது?

 ஏன் அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள்? எதார்த்தம் என்று நினைத்து குதர்க்கவாதிகளாகி
தங்களை கெடுத்துக்கொண்டு வருகின்றனர்.

காரணம் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இன்றைய ‘கல்வி’ அவர்களை நிலை தடுமாற வைத்துள்ளது.

இயல்பான தார்மீக சிந்தனைகள் திசை திருப்பப்பட்டு, தாங்கள் யார் என்று
தெரிந்துகொள்ளவோ தங்களுக்குள் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதோ அவர்களுக்கு
அவசியம் இல்லை என்று அவர்களை நினைக்கத் தூண்டுகிறது.

இந்த நவீனக் கல்வியும் தவறான தொழில்நுட்பத் தகவல் சாதனங்களும் அவர்களுக்கு வேகத்தையும், சுயநலத்தையும், பொருளீட்டுவதை மட்டுமே சொல்லித் தருகிறது.

இதற்காக மட்டுமே அவர்களைத் தயார் செய்கிறது. அவர்களில் புதைந்துள்ள தெய்வீகச் சிந்தனைகளை, அஹிம்சை தத்துவங்களை சிதைக்கிறது.

அல்ப சந்தோஷம்

இதற்கு ஒத்தாசையாக இங்கே நிலவும் அரசியல் அமைப்புகள் இந்த நிலைமையை மேலும்
சீரழிக்கின்றன.

இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடை, உடை, பாவனைகளையும், கலாசார கண்ணியங்களையும் மறந்து விட்டனர்.

தங்களின் இயல்பான தார்மீகச் சிந்தனைகளையும் துறந்து தங்களை ஹிம்ஸித்துக் கொள்வதோடு மற்றவர்களை ஹிம்ஸிப்பதிலும் தவறில்லை என்று போக்கில் வளர்கின்றனர்.

இவர்கள் தங்களை முட்டாள்களாகவும், முரடர்களாகவும் வளர்த்துக் கொள்கின்றனர். இதில் வறட்டு கௌரவத்தையும், அந்தஸ்தையும், சுயமரியாதையையும் கலந்துக் கொண்டு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர்.

அதர்ம பண்புகள் போதிப்பு

தெளிவான ஆன்மிக சிந்தனைக்கு தங்களை தயார் செய்துகொள்ளும் நிலை தவறி, முன்னோர்கள் விட்டுச்சென்ற தார்மீக வாழ்க்கை நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத கோழைகளாக வலம் வருகின்றனர்.

இந்த நவீன கல்வி முறை, காலம் காலமாக கட்டிக் காத்துவந்த சமுதாய, கலாசார  தார்மீக
நெறிமுறைகளில் இருந்து விலக்கி, ஒரு செயற்கையான, அதர்ம பண்புகளை போதிக்கிறது.

மாறி வரும் குடும்ப சூழல், சமுதாய மாற்றங்கள், இலக்கை அடைய எதையும் செய்யலாம் என்ற மேலைநாட்டு கலாசார தத்துவங்கள் அவர்களைத் தவறான வழியில் செல்லத் தூண்டுகிறது.

தார்மீக சிந்தனைகள் இழப்பு

குழம்பி நிற்கும் அவர்களைத் தங்கள் கலாசாரத்தையே, தங்கள் இயல்பான நற்குணங்களையே, பண்புகளையே மறக்கச் செய்தவிட்டன.

தங்களையும், இந்த சமூகத்தையுமே  எதிர்க்கும் அசட்டு தைரியத்தையும், வரட்டு ஆணவத்தையும் தந்து அவர்களை சுயநலப் பேதைகளாக்கியுள்ளது.

அவர்கள் தன்னம்பிக்கையையும், தார்மீக சிந்தைகளையும் இழந்து, உண்மையை
ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர்.

கோவில்களிலும் தெய்வ நம்பிக்கையையும் தவிர்த்து தங்களுக்குள்ளேயே அல்லல் படுகின்றனர். இந்த நிலை அவர்களை தங்களையும் தங்களைச் சுற்றி உள்ள அனைத்தையுமே சந்தேகிக்க வைக்கிறது.

ஆன்மிகம் தேவையில்லாததா?

சுயநலமே பிரதானமாகி மற்றவர் நலன் அவர்களுக்குத் தேவையில்லாத ஒன்றாக ஆக்கிவிட்டது.

காலங்காலமாக கட்டிக் காத்த குடும்ப உறவுமுறை கலாசாரம் அவர்களுக்கு மரியாதை இல்லாத சுமையாகிவிட்டது.

ஆன்மீகத்தை விட்டும் தங்களை விட்டுமே  வெகு தூரம் விலகிப் போய்விட்ட
இவர்கள் ‘ஆன்மிகம் என்பது தமக்குச் சம்பந்தமில்லாதது, தேவையில்லாதது, இந்தக்
காலத்துக்குப் பொருந்தாதது’ என்ற முடிவுக்கு வருவதற்கு இதுதான் காரணம்.

வாழ்வியல் பண்புகள்

அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட வேண்டும்.

ஆணித்தரமான ஆன்மிகம் கலந்த நன்னெறி போதனைகளைகளை எளிமையாக்கிக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

தங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். உண்மையான வாழ்வியல் பண்புகளோடும் ஒழுக்க நெறிமுறைகளால் மட்டுமே  அவர்களால் தங்களையும், இயல்பு நிலையான தெய்வீகத்தையும் உணர முடியும் என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

தெய்வீகத்தை உணரலாம்

அப்போதுதான் அவர்கள் அனைத்து உயிர்களிடமும் தெய்வீகத்தை உணர முடியும்.

தன்னுள் இருப்பவனே அனைத்து உயிர்களிலும் இருக்கிறான் என்று உணர்வு வரும்போது அனைவரும் ‘தானே’ என்றல்லவா  நினைக்க முடியும்?

இங்கே எப்படி ஏற்றத் தாழ்வு வரும்? சுயநலம் எங்கிருந்து வரும்? மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கவோ அதில் ஈடுபடவோ எப்படி இயலும்?

இதுவல்லவோ உண்மையான சமத்துவம்? மனிதநேயம்? இதுவல்லவோ  உண்மையான உயர்நிலை வாழ்வியல்?

மனிதகுல வழிகாட்டிகள்

வேதங்களில் சொல்லியுள்ள தார்மீக வழி முறைகளையும், உண்மையான மனித
கலாசாரத்தையும், ஒன்பது வகையான ஒழுக்கப் பண்புகளையும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்.

அமைதியையும் ஆனந்தத்தையும், எண்ண ஸ்வதந்த்ரத்தையும் பெற வாய்ப்பு பெறலாம் என்ற கருத்தை அவர்கள் உணரச் செய்வதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி.

 ‘வேதங்கள் காலத்தைக் கடந்தவை. எந்தக் காலத்திற்கும் பொருந்தும் மனிதகுல வழிகாட்டிகள்.
நவீன காலத்துக்கும் ஏற்ற உண்மையான வாழ்க்கைத் தத்துவங்களை வேதங்களால் மட்டுமே தர முடியும்’ என்ற கருத்து அவர்கள் மனதில் ஆழமாக பதியவேண்டும்.

நல்வழி தத்துவம்

‘நாம் ஒழுக்கப் பாதையில் செல்லும்போது மட்டுமே நமக்கு பாதுகாப்பும், நிம்மதியும், குறையற்ற மன நிறைவும், ஆரோக்யமும் ஐஸ்வரியமும், அமைதியும் உண்மையான ஆனந்தமும், ஸ்வதந்த்ரமும் கிடைக்கிறது.

இந்த நிலை மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். ‘என் ஒழுக்கப்
பாதை மற்றவர்களையும் நல்வழிப் படுத்தும்’ என்ற தத்துவம் அவர்கள்
தெரிந்துகொள்ள வேண்டும்.

‘இந்த உலகத்துக்கு தேவையானது தன்னையும் தெய்வத்தையும் புரிந்துகொள்ளும் ஆன்மிக வழி.
அது ஒன்றுதான் உண்மையான செல்வத்தையும், அமைதியையும், ஆனந்தத்தையும்,
பாதுகாப்பையும், வளர்ச்சியையும் தனி மனிதனுக்கு மட்டுமல்லாது உலக சமுதாயத்துக்குமே அளிக்கவல்லது.

இது ஆன்மீகத்தால் மட்டுமே சாத்தியம்’  என்ற மகத்தான உண்மையை உணரவைக்க வேண்டும்.

அவித்ய காம கர்ம’ என்பது தவறான கல்வி, விவேகமில்லாத இச்சைகளிலும் கர்ம வினைகளிலும் அவர்களை மேலும் சிக்க வைக்கும் என்ற உண்மையை
அவர்கள் உணரச்செய்ய வேண்டும். 
தாங்களாகவே அழிவைத் தேடி தங்கள் வாழ்க்கையை வேகமாக கரைத்துக்கொண்டு வரும் இந்த இளைய சமுதாயத்தின் மீது அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் உண்மையான ஆன்மீகச் சொரூபத்தை உணரச் செய்வது நம் பொறுப்பு.

ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள்

இன்றிலிருந்து நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் குழந்தைகளிடம் இக்கருத்துகளை பற்றி பேச ஆரம்பிக்க வேண்டும். கோவில்கள், புண்ணியஸ்தலங்கள், குரு ஆசிரமங்கள் போன்ற நம்பிக்கை நிறுவனங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல ஒவ்வொரு வாய்ப்பையும்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

குருவருளின் முக்கியத்துவத்தையும் வேத சாஸ்திர நற்பண்புகளை பற்றியும் தொடர்ந்து அவர்களைக் கேட்கச் செய்ய வேண்டும்.

வேத சாஸ்திரங்கள் அருளியுள்ள ஆன்மிகம் மட்டுமே அவர்களைச் செம்மை படுத்தக்கூடிய ஒரு அருமருந்து.

இதனால் மட்டுமே தனிமனித ஒழுக்கமும், சமுதாய அமைதியும் வளர்ச்சியும் கிடைக்கும். குற்றங்கள் இல்லாமல் போகும்.  உண்மையான பேரானந்தத்தை இன்றைக்கும் என்றைக்கும் அனைவரும் உணர முடியும்.

ஆத்ம போதனை

இதற்கு முதலில் நம்மை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் புதைந்துள்ள பரப்ரம்ம சொரூபத்தை உணரவேண்டும்.

அதன் பலனை நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் குறிப்பாக இளையவர்கள் தெரிந்து கொள்ள ஒரு பெரிய இயக்கத்தைத் துவங்க வேண்டும்.

அதன் வழியாக ஆன்மிக கலாசாரத்தின் மஹிமையை, அதில் பெறப்படும் பரவாசத்தை, பாதுகாப்பை, நிம்மதியை, ஆழ்ந்த அமைதி நிலையை, ஆத்ம போதனையை, ஸம்ஸார சக்கரத்திலிருந்து பெறப்போகும் விடுதலையை உணரச் செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் அவர்களை இந்த நவீன மாய சித்தாந்தங்களிலிருந்து காப்பது கடினம். இந்த
இளைஞர்களின்  உதவியோடுதான் அடுத்தப் பல தலைமுறைகள் பண்பட வாய்ப்புள்ளது! இந்த தேசம் முன்னேற வாய்ப்புள்ளது!

தான் கேட்ட விஷயங்களை அசை போடும் வகையில் இளம் நண்பர் ஆழந்த யோசனையில் மூழ்கிவிட்டார்.

வாழ்க்கை பாடத்தில் நாம் எதைக் கற்றோம்!

ஆயிரம் கண்ணுடையாள் பெயர் மாரியம்மனுக்கு ஏன் வந்தது?

குடந்தை ப. சரவணன்

கிராமப்புறங்களில், மாரியம்மன் வழிபாடு முக்கியத்துவமாக கருதப்படும் கடவுளர் வழிபாடுகளில் ஒன்று. இந்நிலையில் மாரியம்மனுக்கு ஆயிரம் கண்ணுடையாள் பெயர் எப்படி வந்தது என்பது பற்றிய கட்டுரைத்தான் இது.

முதல் கடவுள் அக்னி

நம் முன்னோர்கள் சூரியனை முதல் கடவுளாகவும், நிலம், நீர், விருட்சம் ஆகியவற்றை பிற கடவுளராகவும் வழிபாடு செய்து வாழ்ந்து வந்தது ஆதி வரலாறு.
உயிர்களின் மூலக்கூறாய் தொலை தூரத்தில் இருந்து ஒளிக்கதிர்களை வீசி காத்து வருவது அக்னி கடவுளான சூரியன்.
இந்த மண்ணில் ஒரு செல் உயிரி தோன்றி மனிதன் வரை பரிணாம வளர்ச்சி கண்டாலும், ஆதிகாலத்தில் தோன்றிய மரங்களும், செடிகளும் இந்த பூமியில் நிலை மாறாமல் நமக்கு பல்வேறு வகையிலும் உதவி வருகின்றன.

அரச மரமும் வேப்ப மரமும்

இவற்றில் முதன்மையானது அரசமரம் – இதை ஆணாக பாவிப்பதுண்டு. வேப்பமரம் – இதை பெண்ணாக பாவிப்பதுண்டு.
இந்த இரு மரங்களும் பல இடங்களில் ஒன்றாக இணைந்து வளரும். அப்படி வளர்ந்த மரங்களுக்கு விருட்சக விவாகம் என அழைக்கப்படும் திருமணம் செய்வது பண்டைகால பழக்க வழக்கங்களில் ஒன்று.
ஏன் இந்த விருட்சங்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். நம்பிக்கைதான் காரணம்.
அரசும், வேம்பும் இணைந்து வளர்ந்திருக்கும் கிராமங்களில் இந்த மரங்களுக்கு கிராம மக்கள் திரண்டு திருமணம் செய்து வைப்பது இன்னமும் வழக்கத்தில் இருக்கிறது.
அப்படி திருமணம் செய்து வைத்தால், இளைஞர்கள், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும் என்பதுதான் அந்த நம்பிக்கை.

ஆயிரம் கண்ணுடையாள்

வேப்ப மரம் கிராமத்து தேவதை ஸ்ரீமகா மாரியம்மனின் மறு உருவமாகக் கருதி தமிழர்கள் தொன்றுதொட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
கிராமம்தோறும் கோயில்கள் இருந்து வரும் சூழலில் அவை பெரும்பாலும் மாரியம்மனின் பெயரை தாங்கியதாகத்தான் அமைந்திருக்கும்.
இப்படி வழிபாடு நடத்தப்படும் அம்மன் ஒரு பெயர்தான் ஆயிரம் கண்ணுடையாள் என்பதாகும்.
கிராமப்புறங்களில் வளரும் வேப்ப மரங்களில் இருந்து உதிரும் வேப்பம் பழங்களில் இருந்து வெளிவரும் விதைகள் எல்லாம் மரத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான கன்றுகளாக வளரத் தொடங்கும்.
இதனால்தான் வேப்ப மரத்தை முன்னோர்கள் ஆயிரம் கண்ணுடையாள் என்று பெயர் வைத்து மாரியம்மனாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

ஆதாரங்கள் கிடைக்கவில்லை

வேப்ப மர இலைகளுக்கு நோய்க் கிருமிகளை அழிக்கும் சக்தி உண்டு. கடந்த நூற்றாண்டு வரை மனித சமுதாயத்தை பரவலாக அச்சப்படுத்தி வந்த அம்மை நோய்க்கு அருமருந்தாக இந்த வேப்பிலையைத் தான் பயன்படுத்தினார்கள்.
உடல் முழுவதும் முத்து முத்தாக அம்மை பரவியிருக்கும் சூழலில் இந்த வேப்பிலைதான் அந்த புண்களை ஆற்றும் வல்லமைப் படைத்ததாக இருந்து வருகிறது.
ஆனால் இடைப்பட்ட ஆண்டுகளில் ஆயிரம் கண்ணுடையாள் என்பது ஆயிரம் கண்களை உடையவள் என உருவகப்படுத்தி சித்திரங்களை வரைந்து வழிபடும் வழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

படங்கள் குடந்தை ப. சரவணன்

இதனால் ஆயிரம் கண்ணுடையாள் என்ற உடல் முழுவதும் ஆயிரம் கண்களை உடையவர் என்ற ரீதியில் இப்போதெல்லாம் மாரியம்மன் கோயில்களில் வெள்ளிக் கவசங்கள் மற்றும் அலங்காரங்கள் கண்கள் நிறைந்தவையாக இடம்பெறுகின்றன.

ஆனால் பல நூற்றாண்டுகளாக கடவுளர் சிலைகளையும், சிற்பங்களையும் தாங்கி நிற்கும் திருக்கோயில்களில் மாரியம்மனுக்கு உடல் முழுவதும் கண்கள் இருப்பதுபோன்ற சித்தரிப்பு காட்சிகள் நமக்கு இதுவரை ஆதாரங்களாக கிடைக்கவில்லை.

கடவுளரின் புராண வரலாறுகள் பல செவிவழியாய் காலம் காலமாக இருந்து வரும் சூழலில், ஆயிரம் கண்ணுடையாள் என்பதற்கான புராண வரலாறுகளும் இல்லை.

வாழ்க்கை பாடம்: நாம் எதைத் தேடுகிறோம்

வெ நாராயணமூர்த்தி 

நாம் வாழ்நாள் முழுதும் எதைத் தேடி அலைகிறோம்? யோசித்துப் பாருங்கள், எது நமது அடிப்படை, அத்தியாவசியத் தேவை என்று நினைக்கிறோம்? நாம் இப்போது அறிந்துகொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் (life lesson) இது.

வசதியான வாழ்க்கை

வசதியான வாழ்க்கை, நல்ல குடும்பம், அமைதி, கை நிறையப் பணம், நல்ல ஆரோக்கியம், நல்ல உறவுகள்.

சில நேரங்களில் வளமான சமுதாயம், உலக அமைதி இத்யாதி என இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இவற்றில் சில பொதுநலத் தேவை, சில தனிமனிதத்
தேவைகள்.
ஆனால் நம் தேவைகளை உற்று நோக்கும்போது அடிப்படையில் நாம் தேடி அலைவதெல்லாம் நிலையான சுகம், திருப்தி, மன நிறைவு. இவைகளையே ‘சந்தோஷம்’ என்று பெயரிடுகிறோம்.
பட்டியலில் கண்ட கனவுகளை அடைந்தால் நமக்கு நிரந்தர சந்தோஷம் கிடைக்கும் என்ற நப்பாசை.

பிறப்பின் இயல்பு

சந்தோஷத்தை அடைவதற்காக பல விதமான தடங்கல்களை, கஷ்டங்களை,
சோகங்களைச் சந்தித்தாலும் சந்தோஷத்தை தேடுவதை மட்டும் நிறுத்துவதில்லை.
ஏன் சந்தோஷத்தை தேடி அலைகிறோம்? ஏனென்றால் துக்கங்களை நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்கு மாற்று மருந்தாக, நிவர்த்தியாக சந்தோஷத்தைத் தேடுகிறோம். இதுதான் நம் பிறப்பின் அடிப்படை இயல்பு. 

ஆனால் இந்த சந்தோஷத் தேடலில் எவ்வளவு பேர் வெற்றி அடைய முடிகிறது? உலகிலேயே அதிகமாக உழைத்து பணம் சம்பாதித்த செல்வந்தர்களாலோ, அதீத கல்வி, அதி உயர்ந்த பதவியால் புகழ் பெற்றவர்களோ, அதிக மனைவிகள், குழந்தைகளைக் கொண்டவர்கள் கூட அவர்கள் சந்தோஷமாக இருப்பதாகவோ அல்லது தங்கள் சந்தோஷத் தேடல் முடிந்து விட்டதாகவோ உறுதியாக சொல்லமுடியவில்லையே. ஏன்?

இதற்கு நாம் சரியான வாழ்க்கை பாடம் எது என்பதை அறியாமல் போனதுதான் காரணம். விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் வளர்ந்தாலும்,  காலம்காலமாக மனிதன் தான் அனுபவிக்கும் துக்கங்களை களைய முடியவில்லை,

இதுதான் ஆனந்தம்

நிலையான சந்தோஷத்தையும் அடைய முடியவில்லை. ஆனாலும் இந்தத் தேடலை விடவும் முடிவதில்லை! ஏன் தெரியுமா?
நாம் சந்தோஷத்தை எப்போதுமே வெளிஉலகில் தேடிக் கொண்டிருக்கிறோம். அது வெளியில் இல்லை, நமக்குள் இருக்கிறது. நாமேதான் அது. நாம் நிரந்தரமற்ற அற்ப சந்தோஷம் அல்ல.
நிரந்தரமான பேரானந்தம் என்கிறது வேதாந்தம். வேட்கைகளிலிருந்து விடுதலை பெறுவது. நிலையான உண்மையை, ஆத்மனை உணர்வது. அதிலேயே திளைத்து இருப்பது. இதுதான் ஆனந்தம்.

நாம் சந்தோஷம் என்று எதை உண்மையில் நாடுகிறோம்?


‘விஷய இந்த்ரீய சங் யோகா’ என்று விளக்கம் அளிக்கிறது யோக சாஸ்த்ரம். நம் புலன்களும் நாம் இச்சைபடும் பொருள்களும் இணையும் போது உணரும் சுகத்தை சந்தோஷம் என்று நினைத்துக்கொள்கிறோம்.

இத்தகைய சுகத்தை ‘காம, காஞ்சன’ என்ற இரண்டு பாதைகளில் தேடுகிறோம் என்று நம் முன்னோர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

‘காம’ என்பது இச்சை, பிரேமை, சுகம், கேளிக்கை, மோகம், ஆசை. ‘காஞ்சன’ என்பது செல்வம், குடும்பம், பதவி, அந்தஸ்து, புகழ், மரியாதை இத்யாதிகள்.
காம காஞ்சன பாதையில் மிக எளிதில் நமக்கு சந்தோஷம் கிடைப்பதாக எண்ணி, தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். இந்த வேட்கை போதையாக மாறுகிறது.

தாகமும், தேடலும்

இந்த இரண்டு பாதைகளும் நிச்சயமாக நம்மைத் தவறான இடத்துக்கு அழைத்து செல்வது மட்டுமல்லாது மேலும் பல இச்சைகளைத் தூண்டுகின்றன.

தாகம் அதிகமாகிறது. தேடல் தீவிரமாகிறது. சிக்கல்களும் அதிகமாகிறது. நம் வாழ்க்கை அனுபவங்களே இதற்கு ஆதாரம்.  
இந்த வழிகளில் நம் எதிர்பார்ப்பு நிறைவேறுவதாகத் தெரிவதில்லை என்பதை வெகுவிரைவில் உணர்கிறோம். நாம் சேர்த்த அத்தனை செல்வங்களும், அனுபவித்த சுகங்களும் நிலையற்றவை. இதுவும் வாழ்க்கை பாடம் சொல்லித் தருவதுதான்.

சந்தோஷ தாகத்தை தீர்க்கமுடியாதவை, நமக்கு பயன்படாதவை என்பதை காலம் கடந்தாவது நம்மில் ஒரு சிலர் புரிந்துகொள்கிறோம்.

மிஞ்சி நிற்பது என்னவோ ஏமாற்றம், சோகம், துக்கம், ரோகம், அமைதியின்மை, ஆதங்கம், பயம், பாதுகாப்பின்மை. இவைகளிலிருந்து விடுதலை பெற மீண்டும் விடை தேடி அலைகிறோம். 

சுழலும் சக்கரம்

அதில் மேலும் தவறுகளை செய்கிறோம், இன்னும் பெரிய பிரச்சனைகளில் சிக்குகிறோம். இந்தச் சக்கரம் சுழன்றுக் கொண்டே இருக்கிறது. சரி, சந்தோஷமோ, ஆனந்தமோ எவ்வளவு இருந்தால் திருப்தி? இதுவும் பலருக்கு வாழ்க்கை பாடம்தான்.

தங்கள் அறியாமையால் மனிதர்கள் தேடி அலையும் உலக சந்தோஷத்துக்கும், தேடி உணரவேண்டிய உண்மையான ஆனந்தத்துக்கும் உள்ள வித்தியாசத்தை தைதீரீய உபநிஷத்து அழகாக படம் பிடித்து காட்டுகிறது.
இளம் வயது, அழகான தோற்றம், பலம் பொருந்திய உடல்வாகு, மிக உயர்ந்த கல்வி, சர்வகலா ஞானம், ஆசையான குடும்பம், அளவுக்கு மீறிய செல்வம், மிகப் பெரிய பதவி, அதிகாரம், சமுதாய அந்தஸ்து, புகழ் ஆகியவை கொண்டு ஒரு இளைஞன் அனுபவிக்கும் சந்தோஷத்தை எண்ணிப் பாருங்கள்.

சந்தோஷத்தின் அளவீடு

இதை நமக்குத் தெரியாத, இதுவரை உணராத ஆனந்தத்தின் ஒரு அளவீடு என்று வைத்துக் கொள்வோம். 
இதைப் போல நூறு மடங்கு சந்தோஷத்தை மனுஷ கந்தர்வ லோகத்தில் (சில மானுடர்கள் தங்களின் நல்ல கர்ம உபாசனைகளின் பலன்களை அனுபவிக்க கந்தர்வளாகி இந்த லோகத்துக்கு செல்கின்றனர்) வாழ்பவர்களால் அனுபவிக்க முடியும்.

அதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவ கந்தர்வ லோகத்தில் வாழ்பவர்கள் அனுபவிக்கமுடியும்.

இதைவிட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை பித்ரு லோகத்தில் (நம் முன்னோர்கள் வாழும் லோகம்) வாழ்பவர்கள் அனுபவிக்க முடியும்.

நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை இதைவிட கர்ம தேவ லோகத்தில் (வேததர்ம கர்மங்களில் சிறந்தவர்கள் இங்கே செல்கின்றனர்) வாழ்பவர்கள் அனுபவிக்க முடியும்.

அதையும்விட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவர்களின் மந்த்ரிகளால்
(வசுக்கள், ருத்ரர்கள், அதித்யர்கள்) அனுபவிக்க முடியும்.

இதையும்விட நூறு மடங்கு அதிக சந்தோஷத்தை தேவர்களின் தலைவன் இந்திரனால் அனுபவிக்கமுடியும்.

இவற்றைக் காட்டிலும் நூறு மடங்கு சந்தோஷத்தை தேவகுருவான ப்ருஹஸ்பதியால் அனுபவிக்கமுடியும்.

இவை எல்லாவற்றையும் விட நூறுமடங்கு சந்தோஷத்தை ஸ்ருஷ்டிகளின் தலைவனான ப்ரஜாபதியால் அனுபவிக்க முடியும்.

அப்பப்பா… இத்தனையும் தாண்டிய நூறு மடங்கு சந்தோஷத்தை சிருஷ்டி செய்யும் பிரம்மதேவனால் அனுபவிக்க முடியும். இதுவும் ஒரு வாழ்க்கை பாடம் தான்.

பிரம்மானந்தம்

ஆக, அனைத்து வகையான, மிக உயர்ந்த ஆனந்தங்களின் அளவிடக்கூடிய அளவீடு இது. ஆனால், இவையெல்லாவற்றையும் காட்டிலும், பல மடங்கு அளவிடமுடியாத பிரம்மானந்தமே.

பேரானந்தமேதான் நம் உண்மை சொரூபமான ஆத்மன் என்று நமக்கு இன்ப அதிர்ச்சியைத் தருகிறது வேதங்கள். இதுதான் நமக்கு உண்மையான வாழ்க்கை பாடம்.

எது நிஜம்

இந்தப் பேரானந்த கடலே நாமாக இருக்கும்போது, இதை உணராமல் ஒரு
சிறு துளி அளவுக்கு நம் உடல், மனம், எண்ணம் அணுகும் உலக சந்தோஷத்தைப் பெரிதாக
நினைத்து அதில் நாட்டம் கொண்டு, அவைகளை அடைவதிலேயே நம் வாழ்க்கையை வீணடித்து வருகிறோம் என்றும் நம்மை பார்த்து வேதனைப்படுகின்றன வேதங்கள்.

இரவில் ஓடும் நீரில் காணும் சந்திர பிம்பத்தை நிஜவிளக்கு என்று எண்ணி அதைத் துரத்தி விளையாடும் மீன்கள்போல, நாமும் சந்தோஷங்களை நிஜம் என்று கற்பனை செய்துக் கொண்டு துரத்திக்கொண்டே இருக்கிறோம். அலுப்பில்லாமல்! இது பலரும் சந்திக்கும் வாழ்க்கை பாடம்.

நம்ப வைக்கும் உலகம்

வேதாந்தம் நம் தவறை சுட்டிக் காட்டுவதோடு நிற்கவில்லை. இதற்கான தீர்வையும்,
வழிமுறைகளையும் சொல்கிறது.

அடிப்படையில் நாம் மிகப் பெரிய தவறை தொடர்ந்து செய்து வருகிறோம். இது நம் உண்மை இயல்பைப் பற்றி நாம் தவறாக எண்ணிக்கொண்டிருப்பது.
இந்தப் பொருள் என்னுடையது, அது என்னுடையது, இந்த உடல் என்னுடையது என்று  நம்
இளம் வயதிலிருந்தே நம் மனதில் இந்த நிலைப்பாடு ஆரம்பிக்கிறது.

இந்த உடல், உள்ளம், எண்ணம், புத்தி சேர்ந்த சிறிய மனித உருவமே ‘நாம்’ என்று நினைத்துக் கொண்டு இந்த உலகை அணுகுகிறோம்.

இதற்கு முக்கிய காரணம் நம் புலன்கள் அனைத்தும் வெளி உலகை நோக்கிப்
பாயும் தன்மை கொண்டவை. அதனால் நம் உலகம் வெளியே என்று நம்மை நம்ப வைக்கின்றன. இதுவும் நமக்கு ஒரு வாழ்க்கை பாடம் தான்.

இன்னொரு உலகம் உண்டு

நமக்குள்ளே இன்னொரு உலகம், நம் உண்மையான உலகம் இருக்கிறது என்பதை நாம்
ஒருபோதும் யோசிப்பதில்லை. பழகியப் போக்கை விட்டு, நம் உண்மையான இயல்பு என்ன என்பதை ஆராய முயல்வதில்லை.

நாம் உண்மையில் யார்? நமக்கும் நாம் பார்க்கும் இந்த உலகிற்கும் என்ன தொடர்பு? இந்த அடிப்படையான, உண்மையான இயல்பை உணர்வதற்கான உள்நோக்கிப் பயணித்து நம்மைப் பற்றிய உண்மையை உணருவதே ‘ஆத்மஞானம்’. இந்த வாழ்கை பாடம் பலருக்கு புரிவதில்லை.

இந்த உயர்நிலை ஞானத்தைப் பெற நமக்கு துணை புரிகிறது வேதாந்தம்.  இது மிகப் பெரிய ரகசியம், நம் உண்மை இயல்பு நமக்குள் புதைந்து கிடக்கும் தேவரகசியம்.
உண்மையில் இந்த ரகசியத்தின் விடையைத் தேடித்தான், இதைத்தான் தேடுகிறோம் என்றுகூட தெரியாமல், சந்தோஷம் என்றோ அல்லது துக்கத்துக்கான நிவாரணமாகவோ தேடிக் கொண்டிருக்கிறோம்.
தெரிந்துகொண்டு விடை தேடுவது வேதாந்தம். தெரியாமல் தேடிக்கொண்டிருப்பது ஸம்சாரம்.
கரடுமுரடான நம் வாழ்க்கைப் பயணம். ஒரு சிலரால் மட்டுமே இந்த ரகசியத்துக்கான விடையை அறிய முடிகிறது. இதுதான் வாழ்க்கை பாடம் என்பதின் முதல்படி.

ஆனந்த ஸ்வரூபம்

அவர்கள் ஞானிகளாகி பெரும்பாலும் மனித சமுதாயத்தை விட்டு விலகிச்
சென்று விடுகின்றனர்.  நம் அடிப்படை இயல்பே ஆனந்த ஸ்வரூபம்தான் என்று வேதாந்தம் ஆணித்தரமாகக் கூறுகிறது.
அளவிடமுடியாத, எல்லையேயில்லாத, உணர்வுகளுக்கெல்லாம் உணர்வான, நிலையான, அனைத்தையும் கடந்த பேரானந்த ஸ்வரூபம்தான் உண்மையான ‘நாம்’. 

ஆத்மன். சத் சித் ஆனந்தம். தெய்வீகம். இது ஒன்றே இந்த உலகில் உண்மையானது, நிலையானது.

நம் உடல் புலன்கள் வழியாக நாம் அனுபவிக்கும் இந்த உலகம் (நம் உடலும் சேர்த்து) அவ்வப்போது தோன்றி மறையும் வெறும் தோற்றமே. கண்களால் பார்க்கும் இந்த உலகம் கண்களை மூடிக்கொண்டால் காணாமல் போகிறது. 

திரையில் பார்க்கும் உருவங்கள்

ஒரு சினிமா பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். திரையில் நாம் பார்க்கும் உருவங்கள் அனைத்தும் நிஜமாகவேத் தோன்றுகிறது. அவைகளை வெறும் ஒளிபிம்பங்கள் என்று எண்ணுவதில்லை.

பிம்பங்களே உண்மையான மனிதர்கள் என்று அவர்களை நாமாகவே பார்க்கிறோம். அவர்கள் சிரித்தால் சிரிக்கிறோம், அழுதால் அழுகிறோம், அடித்தால்
கைதட்டுகிறோம். காட்சி முடிந்ததும் எல்லாம் மறைந்துபோகிறது.

திரை ஒன்றே நிஜமாக நிற்கிறது. காட்சி தெரியும்போது திரை தெரிவதில்லை, திரையை உணரும்போது காட்சி வெறும் பிம்பங்களே என்ற உண்மை புரிகிறது.

பிம்பங்கள் திரையைச் சார்ந்தே உள்ளன. ஆனால் பிம்பங்களால் திரைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அது போல நாம் காணும் இந்த உலகம் நம் மனத்திரையில் தெரியும் அனுபவ பிம்பங்கள்.

எது ஆன்மிகம்

ஆனால் நம் புலன்கள் இந்த அனுபவத் தோற்றங்களை நிஜம் என்று தவறாக நினைத்து, அவைகளிலேயே நாட்டம் கொள்கிறது. 
தூக்கத்தில் நம் மனத்திரையில் நாம் காணும் காட்சிகள் எப்படி விழிப்பு ஏற்பட்டதும் காணாமல் போகிறதோ அதுபோல விழித்திருக்கும் நிலையிலும் நாம் காணும் தோற்றங்கள், தூங்கும்போது காணாமல் போகிறது. நம் அனுபவங்களில் மறைந்துள்ள இந்த சூட்சும உண்மையை உணரும் தன்மையை வளர்த்துக் கொள்வதே ஆன்மிகம்.

ஒரு அன்னப்பட்சி எப்படி பாலையும் நீரையும் பிரித்து பாலைமட்டும் பருகிறதோ அதுபோல நாம் நம் புலன்கள் வழியாகப் பெரும் அனைத்து அனுபவங்களையும் பகுத்து, திரை வேறு, பிம்பங்கள் வேறு என்ற உண்மையை உணருவதே வேதாந்தம் சொல்லும் வழி. இதுதான் நம்மை வழிப்படுத்தும் வாழ்க்கை பாடம்.

அறியாமை

இது உலகைத் துறப்பதல்ல. வாழ்க்கையை விட்டு விலகி நிற்பதல்ல. உலகம் நம் திரையில் நாம் காணும் காட்சி. நமக்கும் காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
காட்சி பிம்பங்களோடு ஒன்றிப்போகாமல், வெறுமனே கேளிக்கை தரும் காட்சியாகவே 
ரசிக்கப்படும்போது அவை நம்மை பாதிப்பதில்லை.
இதனால் என்ன பலன்? தற்போது நம்முடைய அறியாமையால், கற்பனையால், தோற்றங்களை நிஜம் என்று தவறாக நினத்துக்கொண்டு, புலன்கள் வழியாக இந்த உடல் அனுபவிக்கும் அனைத்து சுக துக்கங்களையும் ‘நம்முடையது’ என்று ஏற்றுக்கொண்டு அவதியுறுகிறோம்.
கடோபநிஷத்து இந்த உடலை ஒரு ரதமாகவும், உண்மையான நாம் (ஆத்மன்) அதில் பயணிக்கும் ஒரு பயணி என்றும் வருணிக்கிறது. இது நாம் அறிந்துகொள்ள வாழ்க்கை பாடம்.

ஆத்மனை உணராதபோது பயணியும் ரதமும் ஒன்றே என்று எண்ணி, ரதம் சந்திக்கும் சுக, துக்க அனுபவங்கள் அனைத்தும் பயணியுடையது என்று ஏற்றுக்கொண்டு கலங்குகிறோம்.

குழப்பம் ஏன்

ரதம் வேறு, பயணிக்கும் உண்மையான நாம் வேறு என்று உணரும்போது, ஒரு பெரிய பாரம் நம்மை விட்டு விலகுகிறது. 
சுகங்களும் துக்கங்களும் இந்த உலகப் பாதையில் ரதம் சந்திக்கும் பிரச்சனைகள். அவைகளைப் பற்றிக் கவலை கொள்ளக்கூடாது என்று சொல்ல வரவில்லை.

நாம் பயன்படுத்தும் வாகனங்கள் பழுது அடைந்துவிட்டால் அதை சரி செய்கிறோம். எதற்காக? அவை நமக்கு உதவி செய்யும் கருவிகள். பாராமரிப்பு, சீர் செய்யாவிட்டால் நமக்கு தேவையான சமயத்தில் உபயோகப்படாமல் போகலாம்.

அதற்காக இந்த கருவிகளே நாம்தான் என்று எப்போதாவது நாம் ஏற்றுக்கொள்கிறோமா?

ஆனால் நாம் பயன்படுத்தும் உடல், உள்ளம், எண்ணக் கலவையான இந்தக் கருவியை
மாத்திரம்தான் குழப்பத்துடன் அணுகுகிறோம். சில நேரங்களில் என்னுடைய உடல் என்கிறோம், இதற்கு காரணம் உண்மையான வாழ்க்கை பாடம் நமக்கு புரிவதில்லை.

சில நேரங்களில் இந்த உடலே நான்தான் என்கிறோம். இந்த அடிப்படைக் குழப்பம் தீரும்போது, கருவி எது, எஜமானன் யார் வித்தியாசம் தெரியும்.

கருவியின் பிரச்னைகளை எஜமானன் ஏன் ஏற்றுக் கொண்டு அவதியுற வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். 
இந்தத் தெளிவே அனைத்து துக்கங்களிலிருந்தும், சந்தோஷங்களிலிருந்தும்  நம்மை விலகி நிற்கச் செய்யும். இந்த அறியாமையிலிருந்து விடுதலை அடையும்போது, பரப்ரம்ம ஸ்வரூபமான, சதா ப்ரம்மானந்த நிலையில் சஞ்சரிக்கும் தெய்வப் பிறவியே நாம் என்பதை உணரமுடியும்.

எது ஆனந்தம்

பிறப்பு, இறப்பை அனுபவிப்பது உடல். ஆனால் ஆத்மனுக்கு அழிவே இல்லை. இந்த நிலையை வேதாந்தம் ‘மோட்சம்’, ‘ஜீவன் முக்தி’ என்கிறது. வாழும்போதே புலன் அனுபவ தொல்லைகளிலிருந்து விடுதலை. ஜென்ம ஸாபல்யம்.
அடிப்படையில் மனித உருவில், அருவமாக சஞ்சரிக்கும் தெய்வீகப் பிறவிகள் நாம். ஆனால் நாமோ சாதாரண மனிதர்களாக நம்மை கற்பனை செய்துகொண்டு, தெய்வீகத்தை வெளியே தேடி அலைகிறோம் என்கிற நம் தவறு புரியும். இது நாம் உணரும் வாழ்க்கை பாடம்.

இந்த தெய்வீக நிலையை சதா உணர்வதே ஆனந்தம். பேரானந்தம். முடிவு இல்லாதது (அனந்தம்). பரந்து விரிந்தது. எல்லையில்லாதது.  இந்த பேரானந்தத்தை சதா உணர்ந்து அதிலேயே திளைக்கும் திவ்யநிலையே, சத் சித் ஆனந்த நிலை. இந்த வாழ்க்கை பாடம் பலருக்கு கிட்டுவதில்லை.

பேரானந்த நிலை

இதுவே அனந்த நிலை, ‘கோடி’ நிலை. ‘தத் த்வம் அஸி’ (எதைத் தேடுகிறாயோ நீயே அது) என்ற வேத உண்மையை பிரகடனப்படுத்தும் நிலை. அற்ப சந்தோஷங்களை தேடி அல்லல்படுவதை விடுத்து உண்மையான எல்லையில்லாத ஆனந்தத்தை உணர்ந்து இறப்பை வெல்வதே நம் பிறப்பின் காரணமாக இருக்க வேண்டும். 
சந்தோஷத்தை தேடுவதை விட்டு விலகி, தெய்வீக நிலையான பேரானந்தத்தை உணருவதற்கான உண்மையான வாழ்க்கை பாடம் தொடர்பான பயிற்சிகளை அளிக்க முன் காலத்தில் ரிஷிகள், குருமார்கள் இருந்தனர்.

ஆஸ்ரமங்கள், குருகுலங்கள், வேத வித்யாலயங்கள் இருந்தன. காலப்போக்கில் அவை மறைந்துவிட்டன.
தற்போது சொல்லிதரவும் குருமார்கள் இல்லை. கற்றுக்கொள்ளவும் நமக்கு ஆர்வமோ நேரமோ இல்லை. ஆனால் ஸாஸ்த்ரங்களும், வேதஞானமும் என்றும் நிலைத்து நிற்பவை. காலத்தால் அழிவதில்லை.

உண்மையுடன், நம்பிக்கையுடன், பக்தி ஸ்ரத்தையுடன், முனைப்புடன் இந்தத்
தேடலில் முயல்வோருக்கு ஒரு ப்ரம்ம குருவின் அடையாளமும், அவரை அடையும் வழியும் கிடைக்கும் என்று நம் ஸாத்ரங்கள் ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றன.

இதை உணர்ந்து முனைப்புடன் தேடுவோருக்கு நிச்சயமாக மனிதப் பிறவிக்கான வாழ்க்கை பாடம் கிடைக்கும்.

குரங்கணி முத்துமாலை அம்மன்: பாவ விமோசனம் தரும் அன்னை

செந்தூர் திருமாலன்

அந்த பாவங்களைப் போக்கி அவர்களுக்கு பாவ விமோசனம் தரும் ஆற்றல்மிக்க அன்னையாக குரங்கணி முத்துமாலை அம்மன் விளங்குகிறாள்.
“பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமே” என்கிறார் பட்டினத்தார். அதாவது ஒருவர் இந்தப் பிறவியில் செய்த புண்ணியங்களும் பாவங்களும் அவரது அடுத்தடுத்த பிறவிகளிலும் தொடர்ந்துவரும் என்பதுதான் இதன் பொருள்.
ஒருவர் தெரிந்தோ,தெரியாமலோ பாவங்கள் செய்திருந்தால் அதன் பலனை அனுபவித்தே தீர வேண்டும்.


முத்துமாலை அம்மன் கோயில்

தூத்துக்குடி மாவட்டம் குரங்கணியில் தாமிரபரணி ஆற்றங்கரையோரம் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த அன்னையின் திருத்தல வரலாறு ராமாயணத்துடன் தொடர்புடையது. ராமாயண காலத்தில் சீதா தேவியை ராவணன் சிறைப் பிடித்து சென்றான்.
அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட ராமனுக்கு வானரங்கள் உதவின. இலங்கைக்கு செல்ல ராமபிரான் தன் வானர சேனையை அணிவகுத்து நிற்க செய்த இடம் குரங்கணியாகும்.
குரங்குகள் அணிவகுத்து நின்றதால் இவ்வூர் குரங்கணி என பெயர் பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது.


முத்து மாலையை வீசிய சீதாதேவி


ராவணன் சீதாதேவியை புஷ்பக விமானத்தில் கடத்திச் சென்றபோது சீதாதேவி ராமனுக்கு அடையாளம் காட்ட தன் கழுத்தில் கிடந்த முத்துமாலையை கழற்றி கீழே வீசினாள்.
அப்படி வீசப்பட்ட முத்துமாலை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள குரங்கணியில் விழுந்தது. தரையில் விழுந்த முத்துமாலையில் இருந்து ஜோதியாக ஒளி வீசியது.
அப்போது அந்த வழியாக வந்த பனையடியான் என்பவர் முத்துமாரியின் ஒளி வீச்சைக் காணமுடியாமல் கண்கள்கூசின.


சீதை வழிபாடு


அருகில் கிடந்த மண்சட்டியை எடுத்து அந்த முத்துமாலையை மூடினார். பின்பு ஊர்மக்கள் கூடி முத்துமாலை கிடந்த இடத்தில் சீதாதேவியின் பெயரால் வழிபாடு நடத்தத் தொடங்கினார்கள்.
முத்துமாலை கிடந்த இடமானதால் இங்கு சீதாதேவி தங்கியிருப்பதாக நினைத்து அதற்காக முத்துமாரியம்மன் என்று பெயரிட்டனர்.
செவிவழி செய்தியாக காலம் காலமாக சொல்லப்பட்டு வரும் இச்சம்பவம் அம்மனின் மகிமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.


அம்மனை நம்பாத அதிகாரி


குரங்கணி பகுதியை நவாப் ஆட்சி செய்த காலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையை நேராக அமைக்க எண்ணினார்.
அதற்கு கோவிலின் சுற்றுச்சூழல் இடையூறாக இருப்பதாக நினைத்த அவர், அதிகாரி ஒருவரை அனுப்பி கோவில் சுற்றுச் சுவரை அகற்ற உத்தரவிட்டார்.
அதன்படி ஒரு அதிகாரி குதிரையில் வந்தார். அவருடைய செயலை அந்த ஊரைச் சேர்ந்த 4 சகோதரர்கள் வம்சாவழியினர் தடுத்தனர்.


அம்மன் அசரரீ


அப்போது அந்த அதிகாரி இந்த அம்மனுக்கு சக்தி இருக்குமானால் நான் அம்மன் பெயரைச் சொல்லி கூப்பிடுகிறேன்.
அதற்கு அம்மன் பதிலளிக்குமா என ஆணவத்துடன் கேட்கிறார். அதற்கு வம்சாவழியினர் நிச்சயம் அம்பாள் பதிலளிப்பாள் என்றனர்.
அதையும்தான் பார்ப்போமே என்று கூறியபடியேஅந்த அதிகாரி முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன், முத்துமாலை அம்மன் என்று மூன்று முறை அழைத்தார்.
அப்போது கோவில் கருவறையின் உள்ளே இருந்து என்ன? என்ற சத்தம் இடி முழக்கம் போல் கேட்டது.
அந்த சத்தத்தைக் கேட்ட அதிகாரி அதிர்ச்சியில் உறைந்து போய் மயங்கி கீழே விழுந்தார். அவர் பயணித்து வந்த குதிரையும் கீழே சாய்ந்தது.


மன்னிப்பு கேட்ட அதிகாரி


உடனே கூடியிருந்தவர்கள் பயபக்தியுடன் அம்மனை வணங்கி, தாயே! தவறை பொறுத்தருள வேண்டும் என மனமுருகி வேண்டிக் கொண்டனர்.
பின்னர் அம்மன் தீர்த்தத்தை எடுத்து அதிகாரி மீதும், குதிரை மீதும் தெளித்தனர். சிறிது நேரத்தில் சுய உணர்வு வரப் பெற்று அதிகாரி எழுந்தார். குதிரையும் எழுந்தது.
ஆத்தாளின் பரிபூரண கருணையை உணர்ந்த அந்த அதிகாரி நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து அம்மனை வணங்கி தாயே! “நான் தெரியாமல் செய்த குற்றத்தை பொறுத்தருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார்.
பின்னர் கோயிலை இடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு இரண்டு மண் குதிரைகளை செய்து கோவிலில் வைக்க உத்தரவிட்டார்.
அந்தக் குதிரைகளை இன்றும் கோவிலில் உள்ள பெரிய சுவாமி சன்னதியில் காணலாம்.


கோயிலில் பூஜைகள்


பழங்காலத்தில் திருக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடை திறக்கப்பட்டு மதியம் மற்றும் இரவு பூஜை நடந்து வந்தது.
அப்போது அம்மனுடைய மண்ஓட்டு திருமேனிக்கு அபிஷேகம் மற்றும் நைவேத்தியங்கள் இல்லாமல் இருந்தது.
இலங்கையில் சிறைவைக்கப்பட்டிருந்த சீதாதேவி உண்ணாமல் தவம் இருந்ததை நினைவுகூரும் வண்ணம் இவ்வாறு முன்னோர்கள் தீபதூபம் மட்டும் காட்டி வழிபட்டு வந்தார்களாம்.


புத்துயிர் பெற்ற கோயில்


1957-ஆம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடந்தபோது அம்மனின் முத்துமாலையை மூடியிருந்த ஒட்டு சீலை விலக்கப்பட்டு கல்லினால் திருமேனி சிலா சாசனம் செய்யப்பட்டது .
அன்று முதல் தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு குடமுழுக்கு அபிஷேகம், மற்றும் நைவேத்தியங்கள் படைக்கப்பட்டு பகல் இரவு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
முத்துமாலை அம்மன் சன்னதியின் இடது புறமும், வலதுபுறமும், பரிவாரமூர்த்திகளின் சன்னதிகள் புடைசூழ அமைந்திருக்கின்றன.
இதில் அம்மனுக்கு இடப்புறம் நாராயணர் ஸ்ரீதேவி பூதேவி தாயார்களின் கோபுரத்துடன் கூடிய சன்னதி உள்ளது.


ராமன் தேடிய சீதை


சீதாதேவியை காணாமல் இராமரும் லட்சுமணனும் காட்டில் தேடி அலைந்தார்கள். அப்போது வெட்டுப்பட்டு கிடந்த ஜடாயு பறவை ராவணன் சீதாதேவியை கடத்தி சென்றான் எனக் கூறியது. அனுமனுடன் வானரப் படைகள் சீதா தேவியை தேடிச் சென்றபோது ஒரு இடத்தில் ஏதோ மினுமினுப்பாக மிளிர்ந்தது.
அனுமன் அதன் அருகே சென்றுபார்த்தபோது அது சீதை தூக்கி எறிந்த முத்துமாலை என ராமர் கூறினார். அந்த முத்துமாலையை ராமன் கிழக்கே நின்று மேற்கு முகமாக பார்த்ததால், இங்கு நாராயணர் கோவில் மேற்கு முகமாக இருக்கிறது.


தனித் தனி சன்னதிகள்


முப்பிடாதி அம்மன், சப்த கன்னிகள், பார்வதி அம்மன், பிரம்மசக்தி மாரியம்மன், சந்தனமாரியம்மன், பைரவர், வீரபத்திரர் முதலியோருக்கு இங்கு தனிதனி சன்னதிகள் உள்ளன .
மேலும் விநாயகர் காசிநாதர் விசாலாட்சி நவக்கிரகங்கள் அருள் பாலிக்க, மூலவர் முத்து மாரியம்ன் கிழக்கு முகமாக அமர்ந்தபடி அருளாட்சி புரிந்து வருகிறாள்.


திருவிழாக்கள்


குரங்கணி முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆனித் திருவிழா, தைத்திரு மாலை பூஜை விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுவதுண்டு.
கோவிலின் முக்கியமான விழா ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை நடைபெறும்.
அப்போது முத்துமாரி அம்மனுக்கு தங்கத்தால் திருமேனி அலங்காரம் செய்யப்படும். ஆனித் திருவிழாவிற்கு 15 நாள்களுக்கு முன்னால் திருக்கால் நாட்டு வைபவம் நடைபெறும்.
முத்துமாலை அம்மன் சன்னதியின் தென்புறம் முப்புடாதி அம்மன் முன்னிலையில் அன்று மதியம் அம்மன் மற்றும் பரிவாரமூர்த்தங்களுக்கு மகாஅபிஷேகம் நடைபெறும்.
அலங்காரம், தீபாராதனை நடத்தி கால் நடப்படும். அப்போது வானில் கருடன் வட்டமிடும். இந்த அதிசய காட்சி இன்றும் நடைபெற்று வருகிறது.

நோன்போ நோன்பு


ஆனி மாதம் விழாவையொட்டி திருக்கால் நடப்படும். அன்று இரவு அம்மன் கோவில் பணியாளர் ஒருவர் ஊருக்குள் செல்வார். அவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு சென்று 15-ஆம் நாள் அம்மன்கொடை”நோன்போ நோன்பு” என கூறிக்கொண்டு செல்வார்.
அந்த 15 நாட்கள் கோயிலில் பக்தர்கள் பக்தியுடன் விரதம் இருப்பர். விழாவுக்கு 8 நாள்கள் முன்பாக ஆண்கள் பெரியசாமிக்கு கயிறு சுற்றி ஆடி நேர்த்திக்கடன் செலுத்துவர்.


அம்மன் திருநடை திறப்பு


பெண்கள் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து கோவிலை சுற்றி வருவர். ஆனி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமைக்கு முன் திங்கள்கிழமை மாலையில் அம்மன் தங்க ரதத்தில் அலங்கார ஆபரணங்களுடன் எடுத்துச் சென்று அம்மன் திருநடை திறப்பு வைபவம் நடைபெறும்.
அம்மனுக்கு மகாபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். இரவு ஸ்ரீநாராயணர் சப்பரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, தாயர்களுடன் அம்மன் கோட்டை வலம் வந்து வீதி உலா வருவார்.
ஆனித் திருவிழா முடிந்து எட்டாம் நாள் தீர்த்தவாரி நடைபெறும். அன்று உற்சவர்கள் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரிக்கு எழுந்து அருள்வர்.


மாட்டு வண்டி கட்டிக்கிட்டு…!


ஆனி திருவிழாவில் பக்கத்து கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டு வண்டிகளில் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து, ஆடுவெட்டிபொங்கல் இட்டு வழிபாடு செய்வர்.
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான ஆடுகள் வெட்டப்படுவதும் பொங்கல் வைத்து வழிபாடு செய்வதையும் இங்கே பார்க்கலாம்.


ஆற்றில் மிதந்து வந்த பெரியசாமி!


குரங்கணி முத்துமாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு தென்புறம் வடக்கு நோக்கி பெரியசாமி சன்னதி உள்ளது . இந்த சன்னதி அமைய தனி காரணமுண்டு.
கோவில் பூசாரி மற்றும் இவ்வூரைச் சேர்ந்த நான்கு சகோதரர்கள் கனவில் முத்துமாலை அம்மன் தோன்றி, கேரளாவில் இருந்து எனது காவல்வீரன் பெரியசாமி நாளை தாமிரபரணி வெள்ளப் பெருக்கில் சிலைவடிவில் மிதந்து வருகிறான்.
அவனை வரவேற்று எனது கோட்டைக்குள் எனக்கு வலதுபுறம் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில் அவனது திருவுருவை அமைத்து வையுங்கள் என அருளினர்.
அம்மன் அருளாணைப்படி, தாமிரபரணி வெள்ளத்தில் வந்த பெரியசாமியை வரவேற்று கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். பெரியசாமி காவல் தெய்வமாக விளங்கி வருகிறார்.


வியாதியை குணப்படுத்தும் சாம்பார் சாதம்!


குரங்கணி குரங்கணி முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் ஒரு வீடு உள்ளது. இதனை கோயில் வீடு என்று அழைப்பர் இங்கு செவ்வாய்க்கிழமைதோறும் தாமிரபரணி ஆற்றில் தீர்த்தம் எடுத்து வருவார்கள்.
பெரியசாமிக்கு பூஜை முடிந்த பிறகு கோவில் வளாகத்தில் பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கூடியிருப்பார்கள். அவர்கள் மீது பூசாரி தீர்த்தத்தை தெளிப்பார்.
அன்று மதியம் சாம்பார் சாதம் தயார் செய்து அதை பனைமர ஓலைகளில் செய்த பட்டையில் படைப்பார்கள். இவ்வாறு படைக்கப்பட்ட சாம்பார் சாதத்தை உடல்நலம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் உடற்பிணி நீங்கி குணமடைவதாக ஐதீகம்.
இந்த சாம்பார் சாதத்தை பெறுவதற்காக எப்போதும் செவ்வாய்க்கிழமைதோறும் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள்.


உடல் உறுப்புகள் நேர்த்திக் கடன்!


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் கை,கால் போன்ற மனித உடல் உறுப்புகளை மரக்கட்டையால் செய்து கோயிலில் நேர்த்திக்கடனாக செலுத்துவது விசேஷம்.
வாத நோயினால் கைகால் முடக்கப்பட்டு படுக்கையாக இருப்பவர்கள் நோய் குணமாக வேண்டி அவர்களுடைய உறவினர்கள் அம்மனிடம் வேண்டிக் கொள்வார்கள்.
நோய் குணமானதும் கை, கால், பாதம்,போன்ற உடல் உறுப்புகளை மரக்கட்டையால் செய்து அதை கோவிலுக்கு வந்து காணிக்கையாகசெலுத்துவதாக வேண்டிக் கொள்வார்கள்.
அதன்படி நோய் குணமானதும் கோயிலுக்கு வந்து செலுத்துவார்கள். அவ்வாறு நேர்த்திக் கடனாக செலுத்தப்படும் மரக்கட்டையால் ஆன உடல் உறுப்புகள் கோயில் வளாகத்தில் மலைபோல் குவித்து வைக்கப்பட்டு இருப்பதை காணலாம்.


தரிசன நேரம்!


இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் பகல் 1.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும்.


வழியும்- தூரமும்


தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது குரங்கணி முத்துமாரியம்மன் கோயில்.
திருநெல்வேலி திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள தென் திருப்பேரை என்ற ஊரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்றாலும் கோவிலை அடையலாம்.

ஆஷாட குப்த நவராத்திரி வடமாநிலங்களில் தொடக்கம்

சென்னை: வட மாநிலங்களில் மிக விமர்சையாக வழிபாடு நடத்தப்படும் ஆஷாட குப்த நவராத்திரி (Gupt Navratri 2024) இன்று (6 july 2024) தொடங்கியது.
இது துர்கா தேவியின் பல்வேறு வடிவங்களை வழிபடும் புனிதமான காலமாக கருதப்படுகிறது.
இக்காலத்தில், ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் ஒரு வடிவத்தை பக்தர்கள் வழிபட்டு பூஜை செய்வார்கள். தேவியின் 9 உருவங்களும் நவ துர்கா என அழைக்கப்படுகிறது.
குப்த் என்றால் மறைந்திருக்கும் எனப் பொருள். மறைந்திருக்கும் அறிவைப் பெறுவதற்காக இதை கொண்டாடுகிறார்கள்.

துர்கா தேவி வழிபாடு

துர்கா தேவியை இக்காலத்தில் பூஜித்தால், மா அம்பையின் ஆசீர்வாதத்தைப் பெறுவதோடு, மா அம்பை அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றுவாள் என்பது நம்பிக்கை.
இந்துமத நாள்காட்டியின்படி இது 4 புனித மாதங்களில் இவ்வாண்டு வருகிறது. அவை மாக், சைத்ரா, ஆஷாடா, அஷ்வின் ஆகியவை ஆகும். தற்போது தொடங்கியுள்ளதற்கு ஆஷாடா குப்த நவராத்திரி என்று பெயர்.

ஆஷாடா, மாக்

சைத்ரா மாதத்தில் வரும் நவராத்திரியை பசந்த என்றும், அஷ்வின் மாத நவராத்திரியை ஷார்திய என்றும் அழைப்பார்கள்.
இவ்விரு பண்டிகைகளுக்கும் இடையே 6 மாதங்கள் உள்ளன. ஆஷாடா மற்றும் மாக் மாதங்களில் மீதமுள்ள இரண்டும் குப்த என அழைக்கப்படுகிறது. தந்திர மந்திரத்தை கற்று பயிற்சி பெற்றவர்கள் குப்த நவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறார்கள்.
துர்காதேவி இந்த 9 நாள்களிலும் ஒவ்வொரு நாள் ஒரு உருவத்தில் காட்சியளிக்கிறாள். முதல் நாள் மா ஷைல்புத்ரியாக காட்சி அளிக்கிறாள்.
அடுத்து பிரம்மச்சாரிணி, சந்திரகாண்டா, குஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயனி, கல்ராத்ரி, மஹாகௌரி, சித்திதாத்ரி என்ற உருவங்களோடு பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

மகா வித்யாக்கள் வழிபாடு

அத்துடன், தாரா, திரிபுர சுந்தரி, புவனேஸ்வரி, சின்னமஸ்தா, காளி, பைரவி, தூமாவதி, பக்லாமுகி, மாதங்கி மற்றும் கமலா ஆகிய 10 மகா வித்யாக்களின் வழிபாடும் அடங்கும். காலையிலும், மாலையிலும் துர்கா சப்தகதியை பாராயணம் செய்வது முக்கியமானதாகும்.

விரதம் இருந்து பூஜை

ஆஷாடா குப்த விழாக் காலங்களில் 9 நாள்களும் விரதமிருந்து வழிபடுவார்கள். இவ்வாண்டு, குப்த கால வழிபாடு வரும் ஜூலை 16-ஆம் தேதி வரையிலான 10 நாள்கள் நடைபெறுகிறது.

10 நாள் துர்கா தேவி வழிபாடு

ஜூலை 6-ஆம் தேதியான இன்று ஷைலபுத்ரிதேவியை வழிபாடு செய்தார்கள். 7-இல் பிரம்மச்சாரிணிதேவி பூஜையும், 8-இல் சந்திரகாண்டாதேவிக்கு சிறப்பு ஆராதனை நடத்தப்படுகிறது.

கூஷ்மாண்டா தேவிக்கு சடங்கு ஜூலை 9-இல் நடத்தப்படுகிறது. அதைத் தொடர்ந்து மறுநாள் சதுர்த்தி திதியையொட்டி தேவிக்கு சிறப்பு பூஜை நடத்தப்படவுள்ளது.

11-ஆம் தேதி ஸ்கந்தமாதாதேவிக்கும், 12-இல் காத்யாயனிதேவிக்கும், 13-இல் கல்ராத்ரிதேவிக்கும் பூஜை நடைபெறுகிறது.

அஷ்டமி திதியான ஜூலை 14-இல் மகாகௌரி தேவி வழிபாடும், மறுநாள் இறுதியாக சித்திதாத்ரி தேவி வழிபாட்டுடன் நவராத்திரி பூஜை நிறைவு பெறுகிறது.